மாற்றி யோசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 6,191 
 
 

மங்களத்திற்கு ஒரே எரிச்சல், கோபம். யார் மேல் காட்டுவது. வீட்டில் யாரும் இல்லை. பாத்திரத்தை நங் என்று வைத்தாள். ஜன்னலை அடித்து சாத்தினாள். கொசு வந்து விடும். இந்த கொசு கூட நம்மை தான் கடிக்கிறது என்று எண்ணி ஆத்திரமாக வந்தது. எங்கேயோ படித்திருக்கிறாள், O இரத்த வகையை சார்ந்தவரை தான் கொசு அதிகமாக கடிக்குமாம்.

ராகவன் அருகில் உள்ள கோயிலுக்கு போயிருக்கிறார். வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகிறது. பணியில் இருக்கும் போதே சர்க்கரை, பிபி எல்லாம் சொத்து சேர்த்து கொண்டாகி விட்டது.

இன்று இரவு டின்னருக்கு பூரி மசாலா தான் வேண்டும் என்ற விவாதத்தில் தான் ஆரம்பித்தது வினை. இரவு எண்ணெயில் பொரித்தது வேண்டாம் என்று கூறியது கோபம் வந்து விட்டது. நேற்று மாலை வேறு வெங்காய பகோடா சாப்பிட்டாகி விட்டது.

உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகி விட்டது. எனக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாச்சு என்று கத்தி விட்டு வெளியில் சென்றுள்ளார். என்ன ஒரு ஈகோ. எனக்கு மட்டும் ஈகோவே இருக்க கூடாதா.

மங்களத்திற்கு தான் தப்பு செய்து விட்டோம் என தோன்றியது. இவர் பாவம், ஓய்வு பெற்ற பின் வீட்டில் தனியாக இருக்கிறாரே என நினைத்து தன்னுடைய மத்திய அரசு பணியிலிருந்து நான்கு வருடங்கள் சர்வீஸ் இருக்கும் போதே விஆர்எஸ் பெற்றிருக்க கூடாது.

இப்போது கூட என்ன, ஏதாவது senior citizens home ல் போய் நமக்கு கிடைத்த settlement பணத்தை வைத்து நிம்மதியாக இருக்கலாம். இந்த மனுஷன் தனியாக சாப்பாட்டுக்கு கஷ்ட படட்டும் (senior citizens home ராகவனுக்கு பிடிக்காது) என்று நினைத்தாள். க்கும். இப்படியே 32 வருஷம் போயாச்சு. மனது இடித்தது.

மனது என்னென்னவோ யோசித்தாலும் கை பரபரவென்று வேலை பண்ணி கொண்டிருந்தது.

மணி மாலை ஆறு. கீதா இன்று காலை நடந்ததை நினைத்து நினைத்து நாள் முழுவதும் மனதுள் குமைந்து கொண்டிருந்தாள். அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. என்ன ஒரு திமிரு. மெனக்கெட்டு bread toast பண்ணி, horlicks கலந்து டேபிளில் வைத்தால், எனக்கு meeting இருக்கிறது. Breakfast வேண்டாம். தீபக்கை நீயே daycare ல் விட்டு விடு என்று கூறிவிட்டு பதிலை எதிர் பாராமல் ஓடுவான் அந்த சுரேஷ்.

இருக்கட்டும். மாலை நான் வீட்டுக்கு வந்தாதானே. தீபக்கை pickup பண்ணி, இரவு டின்னர் செய்து, குழந்தைக்கு பால் கொடுத்து, தூங்க வைத்து எல்லாவற்றையும் தனியாகவே செய்யட்டும். அப்போது தான் புத்தி வரும் என்று கருவினாள். மொபைலை எடுத்து, இரவு வீட்டுக்கு வரமுடியாது என்று மட்டும் சுருக்கமாக ஒரு செய்தியை அனுப்பினாள்.

ராகவன் கோயிலிருந்து வந்து, கைகால் அலம்பி, news பார்த்து விட்டு, நேராக dining table ல் வந்து அமர்ந்தார். இன்னும் முகம் கடுகடுவென்றே இருந்தது.

அடுக்களையிலிருந்து வேர்த்து விறுவிறுத்து கையில் டிபன் தட்டோடு வந்த மங்களம், வாயிலில் காலிங்பெல் சத்தம் கேட்டவுடன், கையில் இருந்த தட்டை டம் என்று ராகவன் முன் வைத்து விட்டு கதவை திறக்க சென்றாள்.

கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராகவன் தன் முன்னே இருந்த பூரி மசாலாவையும், தான் இங்கு வந்த காரணத்தை கூறிய தன் மகள் கீதாவையும் மாறி மாறி பார்த்து ஙே என்று விழித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *