கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 8,102 
 
 

“அங்கிள் அங்கிள்….” ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால் திரும்பியவன் அந்த மழலை பெண்ணை கண்டதும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். எதை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்தான் அச்சிறு பெண்ணின் கொஞ்சும் முகபாவங்களில். அதே நேரம் அக்குழந்தையின் முகம் பரிச்சயமானதாய் நன்கு பழகிய உணர்வும் அவனுக்குள்

பிஞ்சு விரல்களை அவன்முன் ஆட்டி தன்னிடம் அவள் வர சொல்ல அவனும் அவளது கட்டளைக்கு இணங்கி அவளின் உயரத்திற்கு தன்னை தாழ்த்தி அவள்முன் அமர்ந்தான்.

“என்ன மா…..” அவள் மிருதுவான கன்னங்களை செல்லமாய் கிள்ளியபடி கேட்டான்.

“என்ன… கொஞ்சம் தூக்குங்கலே….. நான் மீன் பாக்கணும்…… ப்ளிஸ்ஸ்ஸ்….” ஒரு கண்ணை மட்டும் இறுக்கமாய் மூடிக்கொண்டு வாயை குவித்து தலை சாய்த்து தத்தி தத்தி கெஞ்சிய அந்த சிறு பிள்ளை மீன் பார்க்கும் ஆசையை வெளிபடுத்தியது அவனிடம்.

அவ்வளவு நேரம் அந்த மீன்தொட்டியின் முன்பு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற யோசனை எழுந்தாலும் அந்த மழலையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவனது யோசனையை தள்ளிவைத்து அப்பெண்ணை தூக்கி தன்னோடு அணைத்துகொண்டான்.

மீன்தொட்டியின் பக்கம் அவளை தூக்கிக்கொண்டு திரும்பியவன் சிறிது ஸ்தம்பித்தும் போனான். பெரிய மீன் போன்று அமைந்திருந்த கல் தொட்டி மிகுந்த பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது போன்ற ஒரு தொட்டி மீன்களுக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டிருக்கிறது என்று நினைக்கும்போதே பிரம்மிப்பாய் இருந்தது.

தொட்டியின் ஓரங்களில் வண்ண விளக்குகள் மீன்களுக்கும் அதை பார்க்க வரும் மனிதர்களுக்கும் வெளிச்சம் தந்த வண்ணம் அழகாய் மின்னி மின்னி அதன் வண்ணத்தை வினாடிகளில் மாற்றி கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தது. தொட்டியின் சுவர்கள் சிறு சிறு நீல வண்ண டைல்ஸ்களால் பதிக்கபட்டிருந்த விதம் அதனை வடிவமைத்தவனின் ரசனையை அவ்வளவு அற்புதமானது என்பதை ஊர்ஜிதம் செய்தது. ஒரு நீல வண்ண திமிங்கலம் ஒரு சாய்த்து படுத்திருப்பது போல் ஒரு தோற்றத்தை அந்த தடாகம் தந்தது.

எண்ணிக்கையில் அடங்கா வண்ண வண்ண மீன்கள் அந்த தொட்டி முழுவதும் வானின் நட்சத்திர கூட்டங்கள் வண்ணங்களால் நிரப்பியது போன்ற மலைப்பை ஏற்படுத்தியது. அதை சுற்றி இருந்த மக்கள் கூட்டம் மீன்களுக்கு பொறிகளை தூவி அவைகள் அதற்காக சண்டையிட்டு உண்பதை கண்டு மகிழ்ச்சி கொண்டனர். மீன்களின் அழகை கண்டு பெருமையாய் பேசுவதிலும் சிலரின் சிரிப்பொலிகளிலும் இவளை போன்றே பல மழலைகளின் குழைதலிலும் அதன் மீது நாட்டமே இல்லாமல் அங்கு வந்து சிலர் குடும்ப பிரச்சனைகளை விவாதித்து கொண்டிருந்ததிலும் அந்த இடமே மீன் சந்தை போல கூச்சலாய் இருந்தது. மீன்கள் மாண்டாலும் வாழ்ந்தாலும் அங்கு கூச்சலுக்கு குறைவில்லை என்று மேதாவித்தனமாய் மீன் விற்கும் சந்தையை ஒப்பிட்ட ஒரு சிந்தனை கூட அந்நேரத்தில் அவனுக்கு உதித்தது.

“அங்கிள் அந்த கோல்ட் பிஷ் எவ்வளவு அழகா இருக்கு பாருங்க…. என்னோட ப்ரெண்ட் அங்கிள் அது…. பேரு மோஜோ” அவ்வளவு கூட்டத்தில் ஒரு பெரிய தங்க மீனை மட்டும் காட்டி அவளது நண்பனாய் அறிமுகம் செய்தது வேடிக்கையாய் தெரிந்தாலும் ரசிக்கும் விதமாய் இருந்தது. அதற்கு பெயர் கூட அவள் சுட்டியிருப்பதை நினைத்து சிறுநகைப்பும் அவன் இதழ்களில் இருந்து வெளிப்பட்டது.

“அங்கிள் நீங்க நம்பல இல்ல…. இப்போ பாருங்க……. ஹாய்…… மோஜோ….” என அவள் கைகாட்டி அழைக்க மற்ற மீன்களுடன் உணவுக்கு சண்டை போட்டுக்கொண்டிருந்த அவளது நண்பன் அதை விடுத்து அவர்கள் நின்றிருந்த பக்கம் நீந்தி வந்ததை பார்த்த அவனின் புருவங்கள் உயர்ந்தன. தனது வாலை தண்ணீரின் மேலே உயர்த்தி அவளுக்கு பதில் அளிப்பதை போல் அசைத்ததை கண்டவன் ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றான்.

“இப்போ நம்புறிங்களா….” தான் நிருபித்துவிட்டதை தன் சிறு விரலை அவன் மூன் உயர்த்தி ஆட்டியபடியே கேட்டதிற்கு பதில் ஏதும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றான்.

“மோஜோ இனிமே இந்த அங்கிளும் நம்ம ப்ரெண்ட் ஒகே வா…..” அவளது நண்பனுக்கு அவனை அறிமுகம் செய்து தன் நட்பு வட்டத்திற்குள் அவனையும் ஒரு அங்கம் ஆக்கினாள். மோஜோவும் அதற்கு ஆமோதிப்பதை போல் தலையை ஆட்டி அவனுக்கு தன் வாலால் ஹாய் சொல்லியது. அவனது வலது கைவிரல்கள் அவனறியாமல் உயர்ந்து மீனை நோக்கி அசைத்தது.

“நம்ம புது ப்ரெண்டுக்கு உங்க க்ருப் சேர்ந்து ஒரு டான்ஸ் பண்ணுங்க…. பாப்போம்” மோஜோவிற்கு மழலை கட்டளை இட்டாள்.

மோஜோ தன் நண்பர்களை செதில் ரேக்கைகளை தண்ணீரில் வேகமாக அடித்து ஒருவித ஒலி எழுப்பி அழைத்தது. அந்த சத்தத்தின் அறிகுறியாய் சில மீன்கள் மோஜோ மூன் வந்தன. மோஜோ செதில்களை ஆட்டி அவர்களிடம் எதோ சொல்ல சிறு நேரத்தில் அணைத்து மீன்களும் ஒரு வரிசையாய் அணிவகுத்தன. இன்னும் சிலவை அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் போல் நின்றன.

மோஜோ செதில் ரெக்கைகளை தன இடுப்பில் பிடித்துக்கொண்டு வாள்களை அங்கும் இங்கும் மெதுவாக ஆட்டியது. அதை தொடர்ந்தார் போல் மற்ற மீன்களும் நடனத்தை தொடங்க பாதுகாப்பு வளைய மீன்கள் செதில்களை கொண்டு தண்ணீரில் சத்தம் எழுப்பி இசையாக்கியது. அந்த இசைக்கு தகுர்ந்தார் போல் மோஜோ குழுவினரின் நடனத்திலும் வேகம் பிடித்தது. சுற்றி இருந்த விளக்குகள் மின்னி மின்னி எரிந்துகொண்டிருந்ததால் அது ஒரு நடன மேடை போலவே காட்சியளித்தது.

மழலையின் ஆரவாரமும் சிரிப்பும் மொஜோ குழுவினரின் நடனத்திற்கு ஊக்கம் கொடுத்தது. அதனால் அவர்களின் ஆட்டம் நம்மூர் ப்ரபுதேவாவையே மிஞ்சுவதை போல் ஒரு மாயையையும் மீன்கள் குழு அமைத்து நடனம் அமைக்குமா, ஒரு குழந்தையின் சொல் கேட்குமா என்ற குழப்பத்துடனும் ஆச்சர்யத்துடனும் அந்த நடனத்தில் லயித்துபோனான் அவன்.

இவ்வாறாக மோஜோ தன் மீன் நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் நடன அரங்கேற்றம் செய்து கொண்டிருந்ததில் அவனது மணி நேரங்கள் வினாடிகளாய் கரைந்து கொண்டிருந்தது. அந்த சிறு பிள்ளையின் கொஞ்சும் தமிழும் செல்ல முகபாவங்களும் அவனை சிறிது சிறிதாய் மழலையாய் மாற்றிகொண்டிருந்தது.

“சிந்து….. சிந்து…..” அந்த பெண்ணின் குரல் மோஜோ குழுவினரின் நடனத்தையும் அவனது கவனத்தையும் சிதறடித்தது.

குரல் வந்த திசை நோக்கி அவன் திரும்ப உள்ளே இருந்த மீன்கள் கூட ஒன்று சேர்ந்தார் போல் தலை தூக்கி குரல் வந்த திசை நோக்கியது.

“அங்கிள்…. எங்க அம்மா தான் என்ன தேடிற்றுகாங்க…. என்ன எறக்கி விடுங்க…. ஓகே மோஜோ நாளைக்கு பாப்போம் பாய்…..” அவசர அவசரமாய் தன்னை கீழிறக்க சொல்லியவள் மோஜோவிற்கு தன் பிரிவிடை தெரிவித்தாள்.

நடனம் ஆடிக்கொண்டிருந்த மீன்கள் அனைத்தும் கவலையுடன் களைந்து செல்ல மோஜோவின் முகத்தில் இருந்த மீசை அவள் செல்வதை விரும்பவில்லை என்பதற்கு அறிகுறியாய் தரை தாழ்த்தியது. முகத்தில் சோகத்தின் சாயல் தெரிந்தது. சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த மோஜோ அவன் அவளை இறக்க எத்தனிக்கையில் தொட்டி உயரத்திற்கு தண்ணீரை கிழித்துக்கொண்டு துள்ளி அவளுக்கு பிரியாவிடை அளித்தது இம்முறை அந்தரத்தில் வாலுடன் உடலையும் சேர்த்து அசைத்தபடி.

“சரி முடிஞ்சா நாளைக்கு பாப்போம்… அங்கிள்” என கூறி அவன் கன்னங்களில் அந்த பிஞ்சு உள்ளம் ஒரு முத்தம் விதைத்தாள். இவனும் அவளுக்கு சிறு முத்தம் அளித்து அவளுக்கு கைகள் ஆட்டி விடை கொடுத்தான். மோஜோவின் நிலைக்கு அவன் அறியாமல் தள்ளப்பட்டான்.

குரல் வந்த திசை நோக்கி ஓடியவள் எதிரே இருந்த ஆலமரத்தின் ஊடே வந்த அவள் தாயின் குரல் நோக்கி பயணித்தாள். தத்தி தத்தி ஆலமர இலை சருகுகள் மீது அவள் ஓடியதால் சரசரக்கும் சத்தங்கள் எழுப்பின. அதை பார்த்து கொண்டே இருந்தவன் அவள் ஆலமரம் தாண்டி மறைந்தும் அவள் போன திசையையே பார்த்து கொண்டிருந்தான்.

மனதிற்குள் ஏனோ ஏமாற்றம் தொற்றிக்கொள்ள மனசுமையுடன் எழுந்து திரும்பியவன் உறைந்துபோனான். காரணம் சிறு நேரத்திற்கு முன் அந்த சிறு குழந்தையுடன் நேரம் கழித்த மோஜோ, அதன் குடியிருப்பான மீன் தொட்டி, மீன்சந்தை கூச்சல்கள், அதற்கு காரணமான மனிதர்கள் எவரும் அங்கு இல்லை மாறாக நிசப்தமே நிறைந்திருந்தது. எங்கே போயின இவை அனைத்தும் என்ற நினைப்பில் குழம்பியவன் அந்த பெண் போன திசை நோக்கி வேகமாய் திரும்பினான்.

இன்னும் அதிர்ச்சி அவனுக்குள். திறந்த வெளியாய் இருந்தது அவள் போன பாதை. சருகுகள் கிடந்த இடத்தில் பாலைவன மண் குவிந்திருந்தது. ஆழமரம் இருந்த சுவடு கூட இல்லாமல் எதிரே வானத்தில் பகலவன் சிரித்துக்கொண்டிருந்தான். சுற்றிலும் மணல் நிறைந்த பாலைவனத்தில் இருந்தவனுக்கு என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க கூட முடியவில்லை. ஒன்றும் புரியாமல் பேயறைந்தவன் போல் எங்கே போனது அந்த மீன்களும் மனிதர்களும் ஆலமரமும் அதன் சருகுகளும் என்பதற்கு விடை தெரியாமல் மீன் குளம் மறைந்த இடத்தை பார்த்தவாறு அவ்வாறே சிலையானான். அங்கேயே வெகுநேரம் உறைந்தும் போனான்.

மெல்ல மெல்ல பகலவனின் சிரிப்பு அதிகமானதால் வெப்பத்தின் சூட்டில் வியர்வையால் நனைந்தான். ஓரிடத்தில் உறைந்திருந்த அவனது நிலை வெப்பத்தால் களையப்பட்டது. கண்கள் எரிச்சல் கொண்டன. கால்கள் ஏதோ தீக்குள் விட்டதை போல் எரிந்தது. நிழல் எங்காவது கிடைத்து விடாதா என்று இப்போது அவனது எரியும் கால்கள் ஓட்டம் கண்டன. ஒரே இடத்தில் ஓடுவதை போன்ற பிரம்மை தான் ஏற்படுத்தியது சீரான ஒரே நிலையில் இருந்த அப்பாலைவனம்.

சிறு நேரத்தில் அவனது கால்கள் சூட்டிற்கு பழக்கப்பட்டது. ஆனால் ஓடி ஓடி தனது சக்தி முழுதும் இழந்திருந்த நிலையில் இப்போது இன்னொரு தேவை அவனுக்கு மிகவும் அவசியமாய் பட்டது. நாக்கு முழுதும் வறண்டு அவனது கண்கள் தேடும் தண்ணீர். பாலைவனத்தில் எந்த திசை நோக்கி நடந்தாலும் கானல் நீர் தூரத்தே தெரிந்ததே ஒழிய தாகத்திற்கு தேவையான நீர் மட்டும் எங்கும் கிட்டவில்லை.

வெப்பத்தின் வீரியம் அதிகமாக தண்ணீரின் தேவை அதைவிட அதிகமாக தலை பாரம் ஆனது. கண்கள் கிறக்கம் கண்டன. அந்த சூடும் மணலில் இனிமேல் தன்னால் எதுவும் முடியாது என்பதற்கு அறிகுறியாய் மண்டியிட்டான். கைகள் உயர்த்தி தன் தலை மேல் கூப்பினான்.

“கடவுளே…. ஏன்…. எதற்கு இந்த சோதனை எனக்கு…. ” ஒரு சிறு குழந்தை அனுப்பி சந்தோஷம் தந்த நீ… சிறிது நேரத்தில் அதையும் பறித்து இப்போது இந்த கொதிக்கும் சூட்டில் என்னை ஏன் வதைக்கிறாய்… இதற்கு பேசாமல் என்னை கொன்றுவிடு…. என் உயிர் பறித்து இந்த நரகத்தில் இருந்து என்னை காப்பாற்று….” அவனது கதறல் மரண ஓலமாய் ஒலித்தது. தனது மீதம் இருந்த சக்தியெல்லாம் திரட்டி கத்தியவன் அந்த ஆள்அரவமற்ற பாலைவனத்தில் கைகள் கூப்பியவாறே மயங்கி சுழன்று விழுந்தான். பாலைவன மணல் அவனை தாங்கி கொண்டது.

எத்தனை நேரம் அங்கேயே இருந்தான் என்று சொல்ல முடியவில்லை. மயக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்தவன் சவுக்குமர காடுகளுக்கு இடையில் நின்றிருந்தான். சூரியனின் ஒழி கீற்றல்கள் மரத்தின் ஊடே புகுந்து தரை தொட்டு தங்க நிறம் எழுப்பியது. அசையாது படர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு இடையில் அவனும் மரமாய் நின்றான்.

மறைந்த மீன்கள், ஆலமரம், அதன் சருகுகள், குழந்தை இவ்வனைத்தும் அவன் ஞாபகத்தில் இருந்தும் மறைந்திருந்தது. ஏன் பாலைவனத்து பகலவன், அதன் வீரியம் கலந்த சிரிப்பு, கிடைக்காத தண்ணீர், அதனால் ஏற்பட்ட அவதி, கடவுளுடன் அவனுடைய வேண்டுதல் இவை எல்லாம் கூட மறந்திருந்தான். அந்த சவுக்கு காடுகளுக்கு இடையில் எப்படி வந்தோம் என்ற நினைப்பு கூட அவனுக்குள் அந்நேரம் எழவில்லை. எங்கும் அசையாமல் தான் இருக்கும் நிலை குறித்தும் அறியாமல் தூரத்தே எங்கோ தன் பார்வையை படர விட்டு வேறு எதை பற்றியோ தீவிரமாய் சிந்திக்கும் வேளையில்…..

“அங்கிள் அங்கிள்….” ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால் திரும்பியவன் அந்த மழலை பெண்ணை கண்டதும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். எதை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்தான் அச்சிறு பெண்ணின் கொஞ்சும் முகபாவங்களில். அதே நேரம் அக்குழந்தையின் முகம் பரிச்சயமானதாய் நன்கு பழகிய உணர்வும் அவனுக்குள்.

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *