கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,759 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு அப்பா அம்மாவைத் தெரியாது. நான் பிறந்தவுட னேயே அம்மா போய் விட்டார். கொஞ்சக் காலத்துக்குப் பின்பு என் அப்பாவும் காலமாகி விட்டார். ஆனால் அவர்களில்லையே என்று நான் தவிக்கவில்லை. என் பாட்டி – அது தான் அம்மாவின் அம்மா – தான் என்னை வளர்த்து வந்தா, இதெல்லாம் பழைய கதை இப்போது மறந்து விட்டவை. நான் படித்து வளர்ந்து பெரியவனாகி ஒரு உத்தியோகமும் பெற்று விட்டேன். உத்தி யோகமாகி கொழும்புக்கு வந்ததிலிருந்து என் மாமாவுடனேயே இருக்கிறேன். என் மாமாவென்றால் அம்மாவின் தம்பி. எனக்கு ஒரு மாமா தான். அவர் பிரம்மச்சாரி, எனக்கு மேற்பார்வையா யுள்ள ஒரு ஆண் அவர்தான். மற்றது தான் என்னை வளர்த்த பாட்டி, அவவும் செத்து இப்போது நாலைந்து வருஷமாகிறது. எனக்கு ஊருக்குப் போக வேண்டிய தேவையேயில்லை. என் மாமா மட்டும் நில புலன்களை இடையிடை போய்ப் பார்த்து விட்டு வருவார்.

அன்றொருநாள் ஒரு நடன நிகழ்ச்சி ஒன்றுக்குப் போனேன். என் மாமாவுக்கு இதெல்லாம். பிடிக்காது. ஆனால் எங்கள் கந்தோர் ஊழியர்களின் நலவுரிமைச் சங்கத்தின் நிதிவளர்ச்சிக்காக நடந்த நாட்டியக் கச்சேரி அது. கட்டாயமாக என் மீது ஒரு நுழைவுச் சீட்டு திணிக்கப்பட்டது. அது “காட்டிலை போகாமல்” வீணாக்காமல் இது என் பாட்டியிடமிருந்து எனக்கு ஊறிய குணம். கச்சேரி பார்க்கப் போனேன். போன இடத்தில் தான் அந்தச் சம்பவம் நடந்தது. அன்று நல்ல மழை. நான் குடையோடு மண்டப வாயிலில் நின்றேன். ஒரு கார் வந்து நின்றது. அதில் வந்தவள் தான் அன்று நாட்டியமாடிய பெண். வீட்டிலேயே ‘மேக் -அப்’ எல்லாம் செய்து கொண்டு வந்தாள். கதவைத் திறந்ததும் நான் விரித்த குடையுடன் காருக்குப் பக்கத்தில் நின்றேன். பிறருக்கு உதவுகின்ற சுபாவமும் என் பாட்டியின் ரத்தத்திலிருந்தே ஊறியது. ஏற்பாடு செய்தவர்கள் அங்குமிங்கும் அலுவலாக இருந்தவர்கள் ஓட்டமாய் வந்தார்கள்.

அதற்கிடையில் காரிலிருந்தும் மண்டபம் வரை – பத்து அடிதூரமிருக்காது – என் குடையின் கீழ் வந்தாள். அந்தப் பத்து அடியும், அவளுடைய உடையின் சரசரப்பும் அவளுடைய உடலில், முகத்தில், தலையில் தடவியிருந்த வாசனைத் திரவி யங்களின் வாசனையும் என்னைத் திணறடித்தன. அப்புறம் நான் சபையின் ஒரு மூலையில். அவள் ஒளி விளக்குகளின் மத்தியில். மேடையின் நடுவில் பார்த்தவர் கண்ணுள், இதயத்துள். ஆட்டம் முடிந்தது. வீட்டுக்குப் போனேன். “மழையில் என்ன நடனம்?” என்று பேச்சு வாங்கினேன்.

மறுநாள் என் நண்பன் ஒருவனை ஊருக்குப் போகிற ரயிலில் சந்திக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு பெட்டியாக தலையை நீட்டிக் துழாவிப் பார்த்துக் கொண்டே போனேன். ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அவள். “நீங்கள்”…என்றாள்.

“ஆம், நான்….” என்றேன். புரிந்து கொண்டேன். குடை பிடித்த விஷயத்தைத் தவிர வேறென்ன இருந்தது நமக்குள்ளே? “அப்புறம் நீங்கள் முழு ஆட்டத்தையும் பார்த்தீர்களா? எப்படி யிருந்தது?” என்றாள். நரைக் கீறல்களுடன் ஒரு முதியவர் என்னை நிமிர்ந்து என்ன சொல்லப் போகிறனென்று பார்த்தார். தகப்பனாராயிருக்க வேண்டும்.

“இல்லை, ஏன்? நன்றாயிருந்தது….?” என்றேன்.

“இது தான் கொழும்பில் முதல் தடவை. அது தான் கேட் டேன்” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள். அவளுடைய பற்களின் வெண்மையும் கன்னத்தில் விழுத்த குழிகளும் என்னை உற்றுப் பார்க்கச் செய்தன.

“நான் புரொபெஷனல்” என்றாள். எனக்கு பொருள் சரியாகப் புரியவில்லை . “அமெச்சூர், புரொபெஷனல்” என்ற பதங்களையெல்லாம் நன்கு கேள்விப்பட்டிருக்கிறேன். இவள் குறிப்பிடுவது… தொழிலாய் கொண்டு விட்டேன். நன்றாயிருந் தால் தானே இனிமேலும் “சான்ஸ்” வரும் என்பதையா? இருக்கலாம்.

நான் என் நண்பனைக் காணவில்லை. புகையிரதம் நிலை யத்தை விட்டு இரையும் போது நான் அவளுக்கு கைகளை உயர்த்தி ஆட்டிக் காட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு காதல் அப்படி, இப்படியென்றொரு வியாதியிருக்கவுமில்லை. அப்போது ஏற்படவுமில்லை. கல்யாணத்தைப் பற்றிதான் முன்பு சிந்தித் திருக்கிறேன். பின்னேயென்ன? எல்லாருக்கும் என்றோ நடக்க வேண்டியதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில் தவறென்ன? இதில் ஒளிப்பு மறைப்பு எதற்கு!

எனக்கு வருகிறவள் லட்சணமாய், சிக்கனமாய் குடும்பத்தை நடத்தத் தெரிந்தவளாய் இருந்தால் போதும்…. இதற்கு மேலே யோசிக்க எனக்கு நேரமிருப்பதில்லை. இந்த யந்திர வாழ்க்கையில், வேகம், அவசரம் என்று ஆலாய்ப் பறக்கையில் யார் யோசிக் கிறார்கள்? எதைப் பற்றி? ஏன்? எந்த நேரமும் எந்த மனிதனும் காதல் கலியாணம் என்று கனவு கண்டபடியே இருக்கிறானா. என்ன?

அன்று வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருக்கையில் மாமாவிடம் “ஊரில் உங்களுக்கு வடிவேலு என்றொருவரைத் தெரியுமா?” என்று கேட்டேன். ரயிலடியில் முழு விபரமும் சேகரித்து விட்டேனே?

“எந்த வடிவேலு”

“அவருக்கு ஒரு மகள் “டான்ஸ்” ஆடுகிறாளே?”

“சீ, சீ! விட்டுத்தள்ளு. மேனி மினுக்கியவள், தேவடியாச் சாதி…”

ஏதோ தொடக்கூடாத அழுக்கைப் போல, மிகவும் அசிங்க மான பொருள் போல முகத்தைச் சுளித்து வெறுப்பைக் காட்டினார் மாமா, மேலே நான் பேசவில்லை.

வெகுநாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டு வழியாகப் போனாள், அந்த மோகன சுந்தரி. நம்புவது கஷ்டமாகத்தானிருக் கும். ஆனால் அப்படித்தான் நடந்தது. கொழும்புக்கு ஒரு நாடக கோஷ்டியுடன் சேர்ந்து நடிப்பதற்காக வந்திருந்தாள். ஒத்திகை களுக்காக சில தினங்களுக்கு முன்பாகவே வந்துவிட்ட அவள் எங்கள் வீட்டுக்கு அப்பால் ஒரு வீட்டில்தான் தங்கியிருக்கிறாளாம். மாமா இல்லாத வேளையில் அவளைக் கண்டேனா?

வெளியே பேச்சுக் குரல் கேட்டு மாமாவே வந்துவிட்டார். அதுவும் பெண் குரல். மருமகனைக் கண்காணிக்க வந்துவிட்டார். அவருடைய முகமே இதுயார் என்று கேட்டது. அவளுடைய பூர்வீகத்தைச் சொல்ல எனக்குப் பைத்தியமா? “வந்து …இவ…என்…” என்று நான் தடுமாறுகையில் சிவகாமி…

அவள்தான் அந்தச் சுந்தரி, “நான் இரண்டு வீடு தள்ளியிருக்கிறேன். எங்க ஊரவர் போல இருந்ததும் விசாரிக்கலாம் என்று பார்த்தேன்” என்று என்னைப் பிணையெடுத்தாள்.

“வா… வா”

யார் என் மாமாவா இப்படிச் சொல்கிறார்? என்னால் நம்பவே முடியவில்லை. நான் ‘மாமா” என்பதைப் பார்த்து அவளும் “மாமா” என்று குழைந்தாள். அவள் கூத்தாடிச்சி என்று தெரிந்தால்…துடைப்பக்கட்டு கண்களுக்குத் தெரியக்கூடிய இடத்தில்தான் கிடந்தது.

அப்புறம் அடிக்கடி அவளைக் கண்டேன். நான் இல்லாத வேளையிலும் வந்து விசாரித்துவிட்டுப் போகிறாள் போலிருக் கிறது. மாமாவோ இப்போது வீட்டை விட்டு அதிகம் வெளியே போவதில்லை. “என்னை மேய்க்க “வேண்டுமல்லவா?” என்று எண்ணினேன்.

நாடக நாள் வந்தது. போனேன், முதல் சீட்டில் மாமா இருந்தார், திகைத்துப் போனேன்.

இப்போது அவர் பிரமச்சாரியாயில்லை. அந்தத் “தேவடியாள்” என் மாமி, அவளை நான் வையவில்லை, எப்போதாவது நான் வாய் திறந்து சொன்னேனா “நான் காதலிக்கிறேன்” என்று? காதலித்தேனா நான்? எனக்கே நிச்சயமாய்த் தெரியவில்லை. சமவயதுள்ள என்னை அவள் ஏன் விரும்பப் போகிறாள்? அவள் எனக்கு மாமிக்குத் தான் சரி, “இந்தப் பழம் புளிக்கும்” என்கிற நியாயமல்ல, உண்மைதான்.

என் பாட்டியிருந்த இடத்தில் இப்போது என் மாமி மாஜ கிக்கா…இல்லையில்லை..என் மாமி, மாமி, மாமி…

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *