நான் சொன்னது நடந்து விட்டது. கரு நாக்குப் பலித்து விட்டது. எனக்கே அதிர்ச்சி. !
என் முன்னே கண்களில் நீர் வழிய…தாடியும் மீசையுமாய் ஒடுங்கி, ஓடாகி நின்றான் பாலசுந்தரம்.
அவன் நான் அவனைப் பரிதாபமாகப் பார்த்தேன்.
இவன் இருந்த இருப்பென்ன..? இப்போதிருக்கும் நிலையென்ன..? – எனக்குள் மனம் அனிச்சையாக முணுமுணுத்தது.
சேகர், சிவா, கணேஷ்… ஆகிய என் உயிர் நண்பர்களில் ஒருவன்தான் இந்த பாலசுந்தரம்.
இவன்தான் எங்கள் எல்லோரையும் விட பெரிய பணக்காரன். வசதி படைத்தவன்.
எல்லாம் பாட்டன் பூட்டன் சொத்து. அதில்லாமல் அப்பன் சம்பாதித்தது என்று வங்கிகளின் கணக்குகளில் கோடிக்கு மேல்.
மேலும் அம்மா பங்கிற்கு விட்டுப்போன அசையா சொத்துக்கள் என்று இந்த நகரத்தில் நல்ல வியாபார இடங்களில் நான்கு வீடுகள், ஐந்து கடைகள். அது இல்லாமல் புதுச்சேரி, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற நகரங்களில் நான்கைந்து வீடுகள். எல்லாம் சும்மா இல்லாமல் வாடகை என்று எல்லாமே பணம்காய்ச்சி மரங்கள். இவை அத்தனைக்கும் பாலசுந்தரம் மட்டுமே வாரிசு. !
பணம் வங்கிகளில் வட்டிக்கு மேல் வட்டியாக குட்டிகள் போதிக்கின்றது. அசையா சொத்துக்கள் வீடு, கடைகள் மூலம் பணம் வாடகையை குவிகிறது. நிலங்களிருந்து நெல், உளுந்து, பயிறு என்று விளைந்து கொட்டுகிறது. ராஜாவாக வாழ வேண்டியவன்.
வாழவில்லை. கஞ்சன் !
அனாவசியமாக சல்லிக்காசு எடுக்க மாட்டான். நண்பர்களான எங்களுக்கும் செல்வு செய்யமாட்டான். மனைவியிடமாவது கொடுத்து தாராளமாக செலவு செய்ய சொல்வானா என்றால்…. மாட்டான். அவள் கேட்டால் அரிதாக எண்ணிக் கொடுப்பான். இன்னும் சுருக்கமாக சொல்லாப்போனால் சாவிக்கொத்து இவன் கையில்.
இவன் எங்களை போல் பாட்டப் படிப்பு படித்தவன். அரசாங்க வேலையிலும் மாத சம்பளம் வாங்குபவன்.
இவன்…. தகுதி, தராதரம், அந்தஸ்த்திற்கு தினம் மழ மழவென்று முகச்சவரம் செய்து, வேலைக்கொன்றாய் விதவிதமாய்த் துணிமணிகள் உடுத்தி, ஆடிக்கார் வாங்கி உல்லாசமாக இருக்கலாம்.மாறாக….
கஞ்சத்தனம் மனிதனைக் கட்டுப் பெட்டியாக்கிவிட்டது.
முகச் சவரமென்பது மனைவி ….
“ஐயோ ! அசிங்கமா இருக்கு. எடுத்துத் தொலைங்கோ…! “என்று பத்து தடவைகளுக்கு மேல் கத்தினாலொழிய போகாது. அலுவலகத்திற்கு எங்களைப் மடிப்பு கலையாத சட்டையுடன் , போட்டவர்களை மறுநாள் போடாமல் அழகாக செல்வது கிடையாது. ஒரு வாரத்திற்கு ஒரு பேண்ட், சட்டை. அதுவும் அடுக்குப் பானையில் வைத்தது போல் கசங்கி சுருங்கி இருக்கும். அலுவலகத்திற்குச் செல்வதே இப்படி என்றால். வீட்டில்….?
நீர்க்காவி ஏறிய அழுக்கு லுங்கி, பனியன். அது பத்து தடவைகள் சலவைக்குப் போட்டால்கூட நிறம் மாறாது. அந்த துணிகளில்தான் இருப்பான். அப்படி தன் மூன்றடுக்கு பெரிய வீட்டின் முன் உள்ள வராண்டாவில் நின்றானென்றால் சத்தியமாக இவனை இந்த வீட்டு சொந்தக்காரன் என்று யார் சொன்னாலும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு கேவலமாக இருப்பான்.
அனாவசியமாக தொலைபேசியைத் தொடமாட்டான். அவன் மனைவியே பேச நினைத்தாலும் பேச விடமாட்டான். எங்களை அழைப்பதென்றால் கூட… கை பேசியில் ‘ மிஸ்சுடு கால்’ கொடுப்பான்.
அதே சமயம் எங்கள் வீட்டிற்கு வந்தால் எங்கள் வீட்டு தொலைபேசியைத் தாராளமாக உபயோகப்படுத்துவான். தேவைப் பட்டவர்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு சேதி சொல்லுவான். இதில் அனாவசிய பேச்சுகளும் இருக்கும். அப்படியே எங்கள் கை பேசிகளும் அவன் கைக்குப் போகக் கூடாது. கொடுக்கவில்லை என்றாலும் பிடுங்கி பேசுவான்.
“ஏன்டா இப்படி இருக்கே…? “என்று நண்பர்கள் மத்தியில் ஒரு நாள் கேட்டே விட்டேன்.
“எப்படி இருக்கேன்..? “அவன் திருப்பிக் கேட்டான்.
“கஞ்சாப் பிசினாரித்தனமா…?”
“ஓ.. அதைச் சொல்றீயா…? பாட்டன் பூட்டன் அளவுக்கு என்னால சேர்க்க முடியலேன்னாலும் அதில் சிறு பங்காவது நான் சேர்க்க வேணாமா…?”
“அதைத்தான் பண்றீயே. உன் மாச சம்பளத்துல குடித்தனம் நடத்தி மிச்சம் பிடிக்கிறே.அந்தப் பணத்தை வட்டிக்கு லட்சம் லட்சமா விடுறீயே..!”
“இதெல்லாம் தூசு. நாளைக்கு என் மனைவி, மக்களுக்கு ஒரு நோய் நொடின்னா பறந்துடும் !”
என்ன சொல்ல…?
இவனுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள். எங்களைப் போல் இவர்களுக்குப் பெரும்பாலும் மாமன்காரன்தான் துணி எடுத்துக் கொடுப்பான்.
மனைவி சாதாரண வாயில் புடவையே உடுத்துவாள். பட்டுப் புடவை என்றால்… இவளுக்குத் திருமணத்தில் தாய் வீட்டில் எடுத்ததாக இருக்கும். அந்த நாலைந்து பட்டுப் புடவைகளையே மகராசி எங்கள் எல்லோர் வீட்டு விழாக்களுக்கும் உடுத்தி வருவாள்.
கணவன், மனைவிக்குத்தான் பிறந்த நாள், திருமணம் நாள் கிடையாது என்றால் பிள்ளைகளுக்கும் பிறந்தா நாள் கொண்டாட்டங்கள் கிடையாது.
“டேய் பாலா ! உன் காசையெல்லாம் உன் மகன் அனுபவிக்கப் போறதா தெரியல. விதர்னை இல்லே. உன் மகள் கெட்டிக்காரி. மருமகன் அனுபவிச்சு உன்னை ஓட்டாண்டியாய் ஆக்கப்போறான் ! “நான் அடிக்கடி சொல்லி விளையாட்டாக அவனை வெறி ஏற்றுவேன்.
அந்த வாக்குப் பலித்து விட்டது. !!
தன் தகுதிக்கு வரன் பார்த்து, அவர்கள் நிர்பந்தத்தின் மேல் திருமணத்தித் தடபுடலாக நடத்தினான். ஒவ்வொன்றிற்கும் பணத்தைக் கத்தையாக எடுத்து செலவு செய்யும் போது… இவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது வேறு விசயம்.
அதோடு முடிந்து விட்டது என்று எண்ணி நிம்மதி மூச்சு விட்டவனுக்கு அடுத்தடுத்து இடி.
பெண் வீடு கட்ட வேண்டுமென்று முதலில் வந்தாள். இரண்டாவதாக…
மாப்பிள்ளை…. ‘வியாபாரம் ‘ செய்ய வேண்டுமென்று ஒரு பெருந்தொகை பெற்றுச் சென்றாள்.
அப்புறம்….’ இன்னோவா ‘ வேண்டுமென்று வந்தாள்.
இவன் முகம் சுளிக்க….
“எங்களுக்குச் செய்யாம எதுக்கு வச்சிருக்கே..? செய்ய முடியாட்டி… எங்க பங்கு பாகத்தைப் பிரிச்சிக் கொடு. பாட்டன் பூட்டன் சொத்தெல்லாம் சட்டப்படி பேரன், பேத்திகளுக்குத்தான் சொந்தம். ஞாபகமிருக்கட்டும் ! “எச்சரித்தாள்.
அப்புறமென்ன…. அவள் கேட்க கேட்க…. இவன் கொடுத்து கொடுத்து நொந்து நூடுல்ஸாகி… இதோ..!
“என்ன பாலசுந்தரம்…? “ஏறிட்டேன்.
“இப்போ அவளுக்கு நான் இருக்கிற வீடு வேணுமாம்..”சொன்னான். தொண்டை கரகரத்தது.
“யாருக்கு…?”
”என் மாப்பிள்ளைக்கு..!”
“ஏன்..?”
“வியாபாரத்துல நஷ்டமாம். அதை நிமிர்த்தனுமாம் !”
“அதுக்கு உன் வீடா…? இது ரொம்ப அதிகம் ! “சொன்னேன்.
“அதான் அங்கே இங்கேன்னு ஆயிரம் வீடு இருக்கே. கொடு . சொல்றாள்.”
”…………………….”
“ஆமாம்டா தினேஷ். என் மனைவி இடிஞ்சி போயிருக்காள். தப்பு பண்ணிட்டேன். நீங்களெல்லாம் சொன்ன மாதிரி நான் ஆண்டு அனுபவிச்சிருக்கனும். இப்போ உண்ணாம தின்னாம ஒருத்தன்கிட்டே கொடுக்கிறதை நினைக்கும்போது மனம் உலைச்சலாய் இருக்கு. நம்ம பொண்ணுக்குத்தானே கொடுக்கிறோம்ன்னு மனசு சமாதானம் ஆனாலும் ஆகமாட்டேன்குது.
அடுத்து பையன் வளர்ந்து நிக்கிறான். படிப்பு சரியா ஏறலை. ‘ பொண்ணு பொண்ணுன்னு எல்லாத்தையும் அவளுக்குக் கொட்டிக் கொடுத்துட்டா எனக்கு என்ன மிச்சம் வைக்கப் போறேன்..? ‘ னு இப்பவே கேள்வி கேட்கிறான். படிப்பு ஏறலைன்னாலும் அவனுக்கு ஒரு பொண்ணோட பழக்கம். காதல்! முட்டாள் பயல்களைப் பார்த்தும் பொண்ணுங்க மயங்கிறாள்ங்க. ஒருவேளை இவன் வசதியைப் பார்த்து காதலோ என்ன எழவோ தெரியல.
எனக்கொரு வழி காட்டுன்னு சொல்லி.. இவனும் வியாபாரம் அது இதுன்னு பெரும் லெவல்ல இறங்கி என்னை என்ன பாடு படுத்தப் போறானோன்னு நினைக்கும்போதே கதி கலங்குது.
ஒரு பொண்ணு பொறந்து என்னைப் பேயாய் ஆட்டுறாள். மருமகன் வந்து என்னை திருவோடு எடுக்க வைக்கிறான்.பையன் என்ன பண்ணப் போறானோ புரியலடா ! “புலம்பினான்.
உண்ணாமல் தின்னாமல் இருந்தால் இப்படித்தான்.! தன் கை காசு கெட்டி..! அடுத்தவன் காசு தாராளம் ! என்றால் இதுதான். நினைத்தாலும் எனக்கே அவன் புலம்பல் கஷ்டமாக இருந்தது.
“இதுக்கு மேல் என்னால் பொறுக்க முடியாது தினேஷ். நான் மீள ஏதாவது ஒரு வழி சொல்..? “பரிதாபமாகச் சொல்லி பாவமாகப் பார்த்தான் .
ஒரு நிமிடம் யோசித்த நான்…
“மதுரைக்குப் பொய்… ஏன் மாப்பிள்ளை இப்பயெல்லாம் பண்றீங்கன்னு பேசவா…? “மனதில் பட்டதைச் சொன்னேன்.
“பேசி…? “நிறுத்தி கேள்வி குறியாக என்னைப் பார்த்தான்.
“தடுக்கத்தான் !”
“மாப்பிள்ளை மனசு மாறுமா..?”
“மாறினால் நல்லதுதானே !”
“மாறாவிட்டால்…?”
“மவனேன்னு மாப்பிள்ளை கழுத்தைப் பிடிச்சி… உனக்குப் பொழைக்கத் துப்பில்லாம என் நண்பன் என்ன தொக்கான்னு பாய்ஞ்சுடுறேன் ! “எனக்கு முன் கோபம் முரட்டுக் குணம் கொஞ்சம் அதிகம். குறிப்பிட்டேன்.
“வேணாம் ! அப்படி செய்து என் பொண்ணு வாழ்க்கையில் மண்ணையள்ளிப் போட்டுடாதே ! “பாலசுந்தரம் பதறினான் .
“அப்படின்னா… மாப்பிள்ளை ஆட்டத்துக்குப் பணிஞ்சு போ. எல்லாத்தையும் கொடுத்து வாரி இறைச்சுட்டு பிச்சைக்காரனாய் நில்லு..! “கோபப் பட்டேன்.
பாலசுந்தரம் பேச முடியாமல் கண்ணீர் விட்டான்.
“அழாதே ! அழுது ஒன்னும் ஆகப்போறதில்லே.”
”…………………………..”
“இதெல்லாம் மயிலே மயிலேன்னா இறகு போடாது. அதிரடியாய் ஏதாவது செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான் வழிக்கு வரும். நான் நேரடியாய் மோதினால் உன் பொண்ணு வாழ்க்கைக்குப் பாதிப்பு வரும் சொல்றே. சரி. வேற வழி பண்ணலாம். முகம் தெரியாத ஆளை விட்டு… உன் மாமன் வீட்டு காசை கொடுக்க என்ன வலின்னு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நாலு தட்டு தட்டச் சொல்றேன் . “என்றேன்.
பாலசுந்தரம் பயந்து போனான்.
மிரட்சியாய்….
“வேணாம் தினேஷ் வேணாம். நான் எதுக்கோ வழி கேட்டா… நீ எதுக்கோ வழி சொல்றே. மாப்பிள்ளை கையைக் காலை உடைச்சி பொண்ணு வாழ்க்கைப் பாழாக்குறதுக்கு வழி காட்டறே. நான் உன்கிட்ட யோசனை கேட்டு வந்ததே தப்பு ! “நடுக்கத்துடன் சொல்லி எழுந்தான்.
நடந்தான்.
“நில்லுடா பாலா ! முடிவு…?”
”ஆண்டவன் விட்ட வழி..! “மேலே பேசமுடியாமல் நடந்தான்.
‘ அவசரப்பட்டு விட்டோமோ..? ! ‘ மனம் வருந்தியது.
இதற்கு முற்றுப் புள்ளி..? – யோசனையும் வந்தது.
மறுநாள்.
ஒரு முடிவுடன் மதுரையை நோக்கிப் பயணப்பட்டேன்.
மாப்பிள்ளையின் பிரமாண்டமான வீடு. திருமணத்தின் போது பார்த்தது அப்படியே இருந்தது.
“அடடே ! வாங்க சார். “என் தலையைக் கண்டதுமே கூடத்து சோபாவில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை ஆகாஷ் ஓடி வந்து வரவேற்றான்.
“வாங்க மாமா.. ! “முகமெல்லாம் மலர்ச்சியாக கணவன் அருகில் இருந்த சீதாவும் வரவேற்றாள்.
பெண் மலர்ச்சியாக இருக்கிறாள். மாப்பிள்ளை முகத்திலும் வாட்டமில்லை. ஆக இருவரும் பாலசுந்தரத்தின் பணத்தைக் கொள்ளையடித்து வந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். புரிந்தது.
“என்ன சார்..! சொல்லாம கொள்ளாம திடீர் வருகை…? “கேட்டான்.
“ஒண்ணுமில்லே மாப்பிள்ளே…! “என்று ஆரம்பித்து வந்த விஷயத்தைச் சொன்னேன். பாலசுந்தரம் புலம்பலையும் விலாவாரியாக சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட ஆகாஷ்….
மந்தகாசமாக சிரித்தான்.
“ஒன்னும் கவலைப்படாதீங்க சார். மாமா கஞ்சத்தனத்தை மாற்ற… நானும் சீதாவும் சேர்ந்து போட்ட திட்டம். அப்புறம்… பொறுப்பில்லாம சுத்தும் இவள் தம்பியையும் நான் இப்படின்னு மிரட்ட அடக்க ஆசை. . அதனால…. அப்படி இப்படின்னு கேட்டு அங்கிருந்து வாங்கி வந்த பணத்தையெல்லாம் பத்தரமா வச்சிருக்கேன். நானே கார்,வீடெல்லாம் வாங்கி மாமா பணத்துல வாங்கினதா சொல்லி அதுவும் பத்திரமா இருக்கு.
இதெல்லாம் ஏன்..?
மாமா..! பணத்தை எண்ணி அடுக்கி அழகு பாருக்கிறதுல இல்லே மதிப்பு , மரியாதை, சந்தோசம்.! செலவு செய்து அழகா வாழறதுலதான் இருக்கு அதன் மதிப்பு, மரியாதை.!! என்கிறதை உணர்த்தத்தான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவரிடம் பணம் பறிப்பு, சொத்து கேட்பு எல்லாம். இப்போ அவர் இதை உணர்ந்திருப்பார்ன்னு நினைக்கிறேன். உணர்ந்திருக்கார் அதையும் உங்ககிட்ட சொல்லி இருக்கார் என்கிறதை நினைக்கும்போது சந்தோசமா இருக்கு.
சார் ..! நீங்க இங்கே வந்த விஷயத்தைச் சொல்லாம, எங்க திட்டத்தை மூச்சு விடாம….. நீயே கார் அது இந்துன்னு வாங்கி சந்தோசமா இருடா. பொண்ணு , மாப்பிள்ளே பணம் வந்து கேட்டா… இருந்தாதான் கொடுக்கிறதுக்குன்னு நான் கார் வாங்கினேன், அது வாங்கினேன், இது வாங்கினேன்னு கையை விரி . சத்தமில்லாம போவாங்கன்னு புத்தி சொல்லுங்க. அப்படியாவது அவர் நல்லவிதாமா செலவு செய்து தன் தகுதி தராதரத்துக்குத் தகுந்த மாதிரி நல்லா வாழட்டும் ! “சொன்னான்.
“ஆமாம் மாமா ! “சீதாவும் தலையாட்டினாள்.
என்ன சொல்ல…?
மாப்பிள்ளை, மகளின் மனசு புரிய…..சந்தோசமாக இருந்தது. அதேசமயம் பாலசுந்தரம் மாறுவான் என்ற நம்பிக்கையும் வந்தது.