கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 3,141 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்படித்தான் ஒரு பேய் மழை முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் அடாவடியாகக் கொட்டிக்கொண்டிருந்தது.

நீர் வடிந்தோட இத்தனை ஒழுங்கான தெருக்களோ, கால்வாய்களோ அப்போது இல்லை.

மழையை அலட்சியப்படுத்த முடியாத காலம் அது.

ஒரு பெரு மழை பெய்தால் போதும். வெள்ளம் வந்துவிடும். எங்கும் நகர முடியாது. சாக்குப் பைகளாலும் பலகை களாலும் வீட்டு வாசலை அடைத்து, தண்ணீர் உள்ளே வராமல் காவல் காக்கவே நேரம் சரியாக இருக்கும்.

அன்றைக்கும் அடை மழை. நிலவில்லை, நட்சத்திரங் களில்லை.

“இன்றைக்குத்தான் சந்திரனில் இறங்குகிறார்களாம். ரேடியோவும் சரியாகக் கேட்க மாட்டேங்குது…” திடுக்கிட வைத்தார் அப்பா.

அப்பாவா… நிலவுக்கு போகும் நீல் ஆம்ஸ்டோரோங் பற்றிப் பேசுவது…

“என் அப்பா” என்று அறிமுகப்படுத்தவே நான் கூச்சப்படும், கூட நடந்து செல்ல வெட்கப்படும், இவருக்குபோய் மகளாய் பிறந்தேனே என்று தினமும் நான் வேதனைப்படும் அப்பாவா… அப்பா ரேடியோ கேட்பாரா… அவருக்கு உலக நடப்புகள் தெரியுமா… நம்பவே முடியவில்லை.

எனக்குத் தெரிந்தவரை, தாவா ரொட்டி- தேத்தண்ணி, அல்லது பீர் பாட்டில் அல்லது புகையிலை இவை தவிர அப்பாவுக்கு வேறு எதிலும் நாட்டமிருந்ததில்லை. கக்கூஸ் போவதுபோல குந்திக்கொண்டு, ஒரு டப்பா தாவா ரொட்டியை யும் பெரிய கோப்பை நிறைய தேநீரையும் அவர் உள்ளே தள்ளுவதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பக்கத்துக் கம்பத்தில் திரியும் அழுக்கு நிற பன்றிகள்தான் நினைவுக்கு வரும்.

அப்பாவின் சட்டை தூய்மையாக இருந்து நான் பார்த்த தில்லை. கழுத்தைச் சுற்றி காலரில் எப்போதும் படிந்திருக்கும், எப்படித் துவைத்தாலும் போவதில்லை என அம்மா சலித்துக்கொள்ளும் அழுக்கு, அப்பாவின் உடலெங்கும் கெட்டியாகப் படிந்திருப்பதைப் போன்று பிரமை உண்டாகி அருவருப்பை ஏற்படுத்தும். அந்தச் சமயங்களில் என் சட்டையைக் கையால் நீவி விட்டு, அம்மாவின் ரசமிழந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொள்வேன்.

வேலை முடிந்து மண் மண்டிய காலோடு நேரே வீட்டுக்குள் வருவார். காலைக்கூட கழுவ மாட்டார். வியர்த்துக் காய்ந்திருந்த உடம்பின் நெடி குப்பென்று அடிக்கும். இதில் அம்மாவோடு சண்டை ஆரம்பித்தால் வீடே நாசமாகிவிடும். பீர் பாட்டில் உடையும்… சோற்றுப் பானை உருளும்… அன்றைக்கு பக்கத்து வீட்டில்தான் தூங்க வேண்டும்.

வீட்டின் வெளிப் பலகையில், வாசலில், குளியலறையில், கக்கூசில்… கோடு கோடாய் காய்ந்து தொங்கும் அப்பாவின் புகையிலைக் குதப்பல்கள் எவர் பார்வையிலாவது படும் போதெல்லாம் எனக்கு உடம்பெங்கும் கூசும்.

“நீங்க கொடுத்து வைச்சவங்க. உங்க காலத்தில சந்திரனுக்குக் குடிபோனாலும் போயிடுவீங்க… உங்க காலம் எப்படி எல்லாமோ இருக்கும். இப்படி மழை பெஞ்சா வேலையில்லை, வெயில் எரிச்சா வேலையில்லன்னு இருக்காது. வானம் முழுக்க கூரை போட்டாலும் போடுவாங்க. அப்ப நான் உயிரோட இருப்பனோ இல்லையே எல்லாத்தையும் நீ பார்ப்ப…” பீர் குடித்துக்கொண்டே அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அப்பா என்னிடம் இதுபோல் பேசியதே இல்லை.

உலகம் முழுக்க அன்றைய செய்தியாக இருந்த சந்திரப் பயணம் பற்றி பேச ஆளில்லாது, நண்பர்களோடு தொடர்பு கொள்ள வழியில்லாது தவித்துக்கொண்டிருந்தபோது, திடீரென தோன்றினார், அதுவரை நான் அறிந்திராத அப்பா.

வாசல் கதவை மெல்லத் திறந்தேன். உள்ளே வீசிய சாரலையும் பொருட்படுத்தாமல் மேலே பார்த்தேன். நிலவு தெரியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. நிலவைக் காணவில்லையே… வானத்திலும் இருட்டாகத்தான் இருக்குமோ, எப்படி வழி கண்டு பிடித்து சந்திரனுக்குப் போவார்கள் என்று யோசித்தேன்.

மூன்று பீர் பாட்டில்களைக் காலி செய்துவிட்டு, அப்பா எழுந்து வந்தார். கதவை வேகமாகச் சாத்தினேன். மழைத் தண்ணீர் உள்ளே வந்திருந்தது. அப்பா திட்டப்போகிறார் என்ற பயம் எழுந்தது. சாக்குத்துணியால் ஈரத்தை மறைக்க முயற்சி செய்தேன். என் உடலெங்கும் கன்றியிருந்த பிரம்பு வடுக்கள் தனிச்சையாக நடுங்கத் தொடங்கின.

“என்னம்மா” தோள்களைத் தொட்டார்.

“ஏன் நடுங்குது… இந்தக் குளிருக்குப் பயந்தா… பிறகு நீ எப்படி அமெரிக்காவெல்லாம் போவ…”

மூக்குச் சிந்திய அழுக்குத் துண்டை என் மேல் போர்த்தினார். துண்டையும் அவர் கையையும் லாவகமாக நழுவ விட்டபடி சன்னலோரமாக நகர்ந்தேன். சன்னல் கதவைத் திறந்து மழை நீரில் கைகளைக் கழுவ வேண்டும்போல் இருந்தது. அப்பா பார்க்கிறாரே என பயமாகவும் இருந்தது. ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சன்னல் திரையில் அப்பாவின் துண்டு பட்ட இடங்களை அழுந்தத் துடைத்தேன்.

அப்பா அன்று நிறையப் பேசினார். மற்ற நேரமாக இருந்தால் வெளியை வெறித்தபடி அப்பாவைத் தவிர்த்திருப்பேன். சன்னல், வாசல் கதவு எல்லாமே மூடி இருந்ததால் அன்றைக்கு செவி முழுக்க அப்பாவை நிறைத்தேன். நொய் அரிசிக் கஞ்சியையும் கீரைக் குழம்பையும் அந்த ஜன்னல் ஓரத்துக்கே அம்மாவை எடுத்து வரச் சொன்னார். நினைவு தெரிந்து நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது அன்றைக்குத்தான். அந்த மழையோடு அந்த அன்பான அப்பா மறைந்து போனார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள். பீர், தோட்ட வேலை, புகையிலையோடு பழைய அப்பாதான்.

என்றைக்காவது மின்னலாய்த் தோன்றி மறையும் அன்பையும் அடுத்த நொடியில் நொறுங்கச் செய்துவிடும் செய்கைகளோடு மாற்ற முடியாத அப்பாவாக இருந்தவர், ஒருநாள் திடீரென மீண்டும் தோன்றினார்.

அப்போது நாங்கள் அடுக்குமாடி வீட்டுக்கு மாறியிருந்தோம். அன்று இப்படி மழையில்லை. தெளிவாக விடிந்திருந்தது. வழக்கம்போல் முன்னறையில் பேப்பர் படித்துக்கொண்டிருந் தேன். அறையில் இருந்து வந்த அப்பா, அமைதியாக எதிரில் அமர்ந்தார். தலை கலைந்திருந்தது. கண் ஓரத்தில் பீளையும் வாய்க்கோடியில் எச்சிலும் காய்ந்திருந்தன. புத்தகத்தை மடக்கி, நாற்காலியை பின்னுக்குத் தள்ளி, எழ முயற்சித்தேன்.

“உட்காரு. பேசோணும்.”

சாய்ந்து உட்காருவது அசௌகர்யமாக இருந்தது. தள்ளிய நாற்காலியைத் திரும்பவும் இழுத்துக் கொள்ளாமல், நுனி யிலேயே இருந்தேன்.

“இந்தா படி.”

எதுவும் பேசாமல் அவர் கொடுத்த கடித்ததைப் பிரித் தேன். தப்புத் தப்பான தமிழில் அம்மா எழுதியிருந்தார். நீட்டல் முழக்கலோடு இருந்த கடிதத்தின் சுருக்கம், “நான் வீட்டை வீட்டுப் போகிறேன், என்னைத் தேட வேண்டாம்.”

கடிதத்தை மேசையில் போட்டுவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். விட்ட இடத்தில் பேப்பரைத் தொடர்ந்தேன். சுருண்டு எழுந்த புகை மண்டலத்தில் அப்பாவின் முகம் மறைந்தது. நாற்காலியை பின்னுக்குத் தள்ளி காலை நீட்டி வசதியாக உட்கார்ந்தேன்.

“இப்படித் தொடர்ந்து ஊதினா உடம்பு என்னத்துக்கு ஆகும். அதுவும் பொம்பிளப் பிள்ளை சிகரெட் குடிக்கலாமா…”

அவர் குரலில் அக்கறை இருந்ததா தெரியவில்லை. நிச்சயம் கண்டிப்பு இல்லை. எடுத்துச் சென்று இரண்டு குவளைகளில் கோப்பி கலக்கி வந்தார். குவளைகளைக் கழுவி இருப்பாரா என யோசித்தபடியே மேசை மேல் அப்பா வைத்த கோப்பியை இருந்த இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தேன். அப்பாவின் அழுக்கு அதில் திட்டுத் திட்டாய் மிதப்பதுபோலிருந்தது.

“எனக்கு ஏன் கோப்பி கலக்கினீங்க? நான் குடிச்சாச்சு.”

“நான் கலக்கினா நீ குடிக்க மாட்டேன்னு தெரியும். ஆனா காலையிலேருந்து வெறும் வயித்தோட இருக்கிற. அதான் கலக்கினேன். அவ வேலுச்சாமியோடதான் போயிருக் கணும்.”

சட்டென்று கண் கலங்கியது, அப்பாவை நினைத்து. பேப்பரை முகத்தின்மேல் போட்டுக்கொண்டு தூங்க முயற்சி செய்தேன்.

வீடு அமைதியடைந்திருந்தது. அன்று முழுக்க அப்பா வீட்டிலேயே இருந்தார். நானும் வெளியில் போக வில்லை. சமைத்தோம். சாப்பிட்டோம். டிவி பார்த்தோம். பீர் குடித் தோம். படுக்கப்போகும்போது, என் தோளில் கை போட்டு, “என்ன விட உசரமாக வளர்ந்திருக்கே,” என்றார்.

“இப்பதான் கண் தெரியுது,” என்றேன்.

“பாத்திருக்கேன். சொல்ல பயம். உன் வாயில அப்பான்னு வர்றதேயில்ல.”

“அம்மான்னும்தான் வர்றது இல்ல.”

அப்பா சிரித்தார். நானும் சிரித்தேன். சில நிமிடங்கள் மனம் விட்டுச் சிரித்தோம். பாதி எரிந்திருந்த சிகரெட்டைத் தூர வீசினேன்.

அதன் பிறகு இந்த 16 ஆண்டுகளில் அம்மா பற்றி அப்பா பேசியதே இல்லை. அவருக்குள் அம்மா குறித்த ஏக்கம் இருக்குமா என்றும் தெரியவில்லை. அப்பாவுக்கு அம்மா மேல் உண்மையிலே அன்பு இருந்திருக்குமா என்பது குறித்த கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு. ஆனால் புகையிலைக் கறையும் அழுக்குச் சட்டையும் பீர் நாற்றமுமாக இருக்கும் அப்பாவோடு இப்போதும் என்னால் கைகோர்த்து நடக்க முடிவதில்லை.

விளக்கை எரியவிட்டு, தண்ணியை ஓடவிட்டு அப்பா ஏற்படுத்தும் அநாவசிய செலவுகளைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. தாத்தா, தாத்தா என்று அவரது அழுக்கோடு ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளை என் கணவர் விலக்கும் போது தடுக்க இயலவில்லை. ஆனால் அவர் எப்போதும் போலவேதான் இருக்கிறார். எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் எழுந்து வருவார். “சாப்பிட்டியா” என்பார்.

அவரை நான் கிளினிக் அழைத்துப்போக வேண்டும் என்று பல தடவை கேட்டுவிட்டார். ஆனால் எனக்கு ஒரு போதும் நேரம் இருந்ததில்லை. இன்றைக்காவது அவரை கிளினிக் கூட்டிப்போகலாம் என்றுதான் சீக்கிரமாக வீட்டுக்கு வந்தேன். மழை பிடித்துவிட்டது. அதற்கு முன்பே என் கணவர் பொரியத் தொடங்கிவிட்டார்.

“உன் அப்பா செய்யிறத இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது. குடிச்சு குடிச்சு குடல் எரிஞ்சு போச்சு. இன்னிக்கு மருந்து செலவு என்ன தெரியுமா… 350 வெள்ளி… அவரால போன மாசம் தண்ணி பில்லும் கரண்டு பில்லும் எவ்வளவு ஆச்சு பாரு… பாத்ரூம்ல ஹீட்டர உடைச்சிட்டாரு, அயன் பாக்ச ரிப்பேர் ஆக்கிட்டாரு. இவர யாரு பிள்ளங்க துணிய அயன் போடச் சொன்னா. இவரால ஒட்டிக்கு ரெட்டி வேல, ஒண்ணுக்கு பத்து செலவு. இதில இவருக்குக் கைக்காசு வேற கொடுக்கணும்… எல்லாம் என் தலையெழுத்து.”

போன வாரம் முழுக்க உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் ஓவர்டைம் செய்ததில் ஏற்பட்ட முதுகுவலி சுளீரென்று உறைத்தது. அந்த அதிகப்படி வருமானத்தைத் தாண்டிய செலவுகள். எரிச்சல் மூளைக்கு ஏறியது.

கைகளில் எதையோ மறைத்துக்கொண்டு என்னிடம் காட்ட பிள்ளைகள் ஆசையாக வந்தார்கள்…

“அம்மா நாங்க தாத்தாவோட சேர்ந்து…” அவர்கள் பேச்சைக் கேட்கக்கூடப் பொறுமையில்லாமல் எரிந்து விழுந்தேன். அதே வேகத்தோடு அப்பாவின் அறைக்குப் போனேன்.

டிவி, வீடியோ, ரேடியோ, குளிர்சாதன வசதி எல்லாம் நிறைந்த அறை. சுத்தமான மெத்தையில் அதே அழுக்கு அப்பா. என் வார்த்தையில் அடிபட்ட பிள்ளைகள் அவர் மடியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

“என்னம்மா, இன்னிக்கு சீக்கிரம் வந்திட்டே…. இன்னிக்கு பாதர்ஸ் டேயாம். அவங்க அப்பாவுக்கு பிள்ளங்க கார்டு செஞ்சிருக்குங்க பாரு…” என்று கார்டுகளை என்னிடம் தந்து விட்டு பிள்ளைகளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தார்…

“முப்பது வருஷம் முன்னாடி ஒருநாள் இப்படி மழை பெய்த போதுதான் நிலவுக்கு அப்போலோ போச்சுது…”

– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.

– 1999, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.

லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய நான் கொலை செய்த பெண்கள் என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *