“இன்னும் ரெண்டு வாரத்திற்குள்ளே பணத்தை எண்ணிக் கீழே வைக்கலே, நீ, உன்னோட அம்மா அப்பா எல்லாரும் கம்பி எண்ண வேண்டியதுதான்” நான்கு பேர் சேர்ந்தார்போல் சத்தம் போட்டவுடன், மாதவி கலங்கிப்போனாள்.
நான்கே குடும்பங்கள் மட்டும் வசிக்கும் விதமாய் கட்டப்பட்டிருந்த ப்ளாட் என்றாலும், மற்ற மூன்று குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தபோது, துக்கமும், அவமானமும், கோபமும், இயலாமையும் சேர்ந்து அழுத்தியது.
இருபத்தைந்து வயதுப் பெண்ணை நான்கு பேர் கதவைத் தட்டிக் கூப்பிட்டு இரண்டு வாரம் தவணை கொடுப்பதாய் சொடக்குப்போட்டு சொல்லிவிட்டுப் போகிறார்களே, யார் இவர்கள்? மாதவி என்ற இருபத்தைந்து வயதுப் பெண்ணை அவள் பெற்றோர்களுடன் இருக்கும் வீட்டில் வந்து மிரட்டிவிட்டுப் போகும் காரணம் என்ன? அவள் மட்டும் இன்றி அவள் பெறோர்களும் எச்சரிக்கைக்கு ஆளாக்கப்பட்டது ஏன்?
மாதவி ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். பிஏ பொருளாதாரம் படிக்கும்போதே சகலவிதமான வேலைக்கும் மனுப் போட்டாள். சரி-தவறு என்ற விடைகளைக் குறிப்பதில் வேகத்தையும், விவேகத்தையும் வளர்த்துக்கொள்ள பயிற்சி செய்தாள். பரிட்சை எழுதியதும் பிரபல பாங்க் ஒன்றில் வேலை கிடைத்தது.
பாங்கில் ஒரு வருடகாலம் கெட்டிக்காரத்தனமாக வேலை செய்து நல்ல பெயர் எடுத்தாள். அப்போதுதான் மாதவியைப் பெண் கேட்டு ராஜேஷ் குடும்பத்தார் வந்தனர். தங்கள் மகன் பிரபல கம்பெனி ஒன்றில் சேல்ஸ் எக்ஸ்ஸிகியூடிவ் உத்தியோகம் பார்ப்பதாய் சொல்லிப் பெருமைப்பட்டனர். மாதம் எண்பதாயிரம் சம்பளம் என்றும், அதைத் தவிர போனஸ், இன்சென்டிவ் என்று வருடத்திற்கு பன்னிரண்டு லட்சத்திற்கு மேல் வரும் என்றும் தெரிவித்தனர்.
மாப்பிள்ளை வீட்டாரே விரும்பிவந்து பெண் கேட்கிறார்களே என்றவுடன், மாதவியின் பெற்றோர்களுக்கு தலைகால் புரியவில்லை. உடனே சம்மதம் சொன்னார்கள். திருமணம் முடிந்து ஏழு எட்டு மாதங்கள் வரை எவ்விதச் சிக்கலும் இன்றி குடும்பம் சுகமாய் இருந்தது.
விதவிதமான டையும், பாலீஷ் போடப்பட்ட ஷூவும், மடிப்பு கலையாத சட்டையுமாய் வேலைக்குப் போய்வரும் தன் கணவன் ராஜேஷைப் பார்த்து மாதவி பெருமைப் பட்டுக்கொண்டாள். எண்பதாயிரம் என்று சொல்லப்பட்ட சம்பளப் பணத்தில், முப்பதாயிரம் மட்டுமே தன் கணவன் கொண்டு வருவதை ஏன் என்று மாதவி யோசிக்கவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து ‘வீடு கட்ட சீட்டு பிடிக்கிறேன்’ என்று சொன்னபோது அவனை கர்வமும் பெருமையுமாய் பார்த்தாள்.
வாழ்க்கை செளகரியமாய் போகிறதே என்று தோன்றிய அளவிற்கு, அது சரியாய் போகிறதா என்று அவளுக்குச் சிந்தித்துப் பார்க்கத் தெரியவில்லை. ராஜேஷைப் பற்றிய கம்பீரத்திலும், கர்வத்திலும் இருந்தாள். ராஜேஷ் அவளிடம் வேலையை விடப்போவதாய் ஒருநாள் சொன்னான். தன் கம்பெனிக்கு, தான் செய்யும் வேலையை தனியாய் செய்தால், பலமடங்கு லாபம் கிடைக்கும் என்றான். நல்ல வேலையை விடுவதா என்று பயந்தாலும், ராஜேஷின் வார்த்தையில் மாதவி மயங்கிப்போனாள்.
ஒண்ணரை வருடத்திற்குள் தாங்கள் வாங்கப்போவதாய் ராஜேஷ் சொன்ன பென்ஸ் காரிலும், பங்களா வீட்டிலும் கனவுகண்டு மாய்ந்து போனாள். ‘உங்கள் இஷ்டம்’ என்றாள். வேலையை விட்டதாய் சொன்ன ராஜேஷ் முதல் முறையாய் மாதவியிடம் வங்கியில் ஐந்துலட்சம் ரூபாய் லோன் போட்டுத் தரும்படி கேட்டான். ஆறு மாதத்திற்குள் அதைத் திரும்பிக் கட்டிவிட முடியும் என்று அடித்துச் சொன்னான். அவன் வார்த்தைகளை நம்பிய மாதவி, உடனே பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தாள். இரண்டு மாதங்கள் கழித்து ‘முதல் போதவில்லை’ என்ற காரணத்தால், மாதவியின் நகைகள் அடமானம் வைக்கப்பட்டது. அதிலும் மாதவியே அடமானம் வைப்பதாய் கையெழுத்துப் போட்டாள்.
‘பிஸ்னஸ் பிரமாதமாய் நடக்கிறது மாதவி! எல்லாம் உன் ராசி’ என்று முதல் ஆறு மாதங்கள் ராஜேஷ் அடிக்கடி பணம் ஏராளமாகக் கொடுத்தபோது, மாதவி மகிழ்ந்து போனாள். இப்படிச் சுகமாய் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த போதுதான் ‘வேலை விஷயமாய் கல்கத்தா போய்வருகிறேன்’ என்று சென்ற ராஜேஷ், பத்து நாட்களாகியும் திரும்ப வரவில்லை. மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதட்டத்துடன் ராஜேஷின் பெற்றோர் வீட்டில் போய்க் கேட்டபோது அவர்களும் விவரம் தெரியாது விழித்தார்கள்.
இரண்டு மாதங்களாகியும் ராஜேஷ் பற்றிய தகவல் கிடைக்காதபோது, போலீஸில் புகார் கொடுப்பது தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர். புகாரும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மாதவி தன் வீட்டைப் பூட்டிக்கொண்டு தன்னுடைய பெற்றோரோடு வந்து தங்கினாள். தங்கிய சில நாட்களில் வீடுதேடி வந்து ஆட்கள் சத்தம் போட்டார்கள், மிரட்டினார்கள். ‘எல்லாம் தெரிஞ்சிகிட்டே ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறா பாரு’ என்று ஏகவசனத்தில் பேசினார்கள்.
வேலை வாங்கித் தருவதாய் சொல்லி வாங்கப்பட்ட பணம்; போலி ஷேர்களைப் பெற்றுக்கொண்டு ஏமாந்தவர்கள் கொடுத்த பணம்; நிலம் வாங்கித் தருவதாய் பெற்ற பணம்… இப்படி இன்னும் பல காரணங்களோடு அறிமுகமில்லாதவர்கள் வீடுதேடி வந்து மிரட்டியபோதுதான் ராஜேஷின் யோக்கியதை புரிந்தது. பெற்றோர்கள் என்று அவனுடன் வந்தவர்கள், காணாமல் போனார்கள்.
அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட வேண்டியதை உணர்ந்து போய்ப் பார்த்தபோது அவைகள் ஏற்கனவே மீட்கப்பட்டு ராஜேஷால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது புரிந்தது. ஆக ஐந்து லட்சரூபாய் கடன்; இழந்த நகைகள்; ஏமாந்த வாழ்க்கை; வீட்டின்முன் அன்றாட மிரட்டல்கள் கூச்சல்கள்… இவற்றிற்கு நடுவில் மாதவி மழையில் நனைந்த பூனையைப்போல் ஒடுங்கிப் போனாள்.
“பேங்க்ல போய்ச் சொன்னா உன்னை உடனே சஸ்பெண்ட் பண்ணி விசாரணை நடத்துவாங்க தெரியுமில்ல?” என்று கடைசியாய் வந்த ஒருவன் மிரட்டவும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “என்னை எதுக்காக சஸ்பெண்ட் பண்ணனும்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டபோது, மாதவியின் கையெழுத்துப் போட்ட செக்கை எடுத்துக் காட்டினான். ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட செக். அதன் கீழே துல்லியமாய் போடப்பட்ட மாதவியின் கையெழுத்து! ஓடிப்போய் தன் கைப் பையை எடுத்துத் தேடியபொழுதுதான், செக் புக் காணாத விஷயம் உணர்ந்தாள். அதிர்ந்தாள்.
வேலையிடத்தில் வரப்போகும் பிரச்னை; வீட்டில் வந்து சத்தம் போடும் மனிதர்கள்; ஓடிப்போய்விட்ட கணவன்… இதில் எதற்குத் தீர்வு காண்பது? எப்படித் தீர்வு காண்பது? மாதவி கவலையுடன் யோசித்தாள். இரண்டு நாட்களுக்குள் காக்கி உடையணிந்த கான்ஸ்டபிள்கள் தேடிவரவும் பிரச்னையின் கனம் மாதவியை பைத்தியமாக்கியது.
மாதவி தவறு செய்தவளா? முப்பதாயிரம் சம்பளத்தை மட்டுமே கொடுத்த கணவன், பாக்கி சம்பளத்தை என்ன செய்கிறான் என்று யோசித்துப் பார்க்காதது பிழை; வீடுகட்ட சீட்டு பிடிக்கிறேன் என்று சொன்னவுடன், கொஞ்சம் நயமாய் பேசி, ‘பணம் கட்டும் ரசீது எல்லாம் பத்திரமாய் இருக்கணும், கொடுங்கள் எல்லாவற்றையும், நான் அடுக்கிவைக்கிறேன்’ என்று சொல்லாதது குறை; என்ன தொழில், என்ன விவரம் எனத் தெரியாமல் லோன் வாங்கிக் கொடுத்தது சாமர்த்தியமின்மை; கேட்டதும் நகைகள் அனைத்தும் அடமானம் வைக்கக் கொடுத்தது அசட்டுத்தனம்; அக்கறையாய் படித்திருந்தும், செக் புக்கில் தேவையின்றி கையழுத்துப் போட்டு வைத்தது அலட்சியப் போக்கு; எல்லாவற்றிற்கும் மேல் இத்தனையையும் தன் பெற்றோர்களிடம் சொல்லாமல் தானே செயலாற்றியது அதிகப்பிரசங்கம்.
இப்படி ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு சூழலிலும் கவனக் குறைவாய், மேம்போக்காய் மாதவி தவறு செய்தாள். ‘சரி-தவறு’ என்று பரீட்சைக்குத் தயார்செய்து வேகத்தையும், விவேகத்தையும் வளர்த்துக்கொள்ளத் தெரிந்தவளுக்கு, வாழ்க்கையிலும் அவ்விதமே பயிற்சி செய்து பழக வேண்டும் என்னும் சூத்திரம் புரியவில்லை. திருமணம் ஆவதற்கு முன் கணவனைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை என்றாலும், அதற்குப்பின் அவனைத் தெரிந்துகொள்ளும் முயற்சியாவது இருக்க வேண்டாமா?
அடிக்கடி பணம் தரும்போது இது எப்படி என்று கேள்வி கேட்டிருக்க வேண்டாமா? நிறுவனமாய் இருக்கும் இயக்கத்திலிருந்து பிரிந்துவந்து இத்தனை சுலபமாய், இத்தனை எளிதாய் வேலையும் செய்து, பணமும் கிடைக்கிறதே, எவ்விதம் என்று யோசிக்கவேண்டாமா? மூலதனத்தில் குறைகிறது என்று அதிகப்பணம் கேட்டபோது, சின்னதாய் ‘இது ஏன்? என்ன?’ என்று கேள்வி வரவேண்டாமா? அப்படி வரவில்லையெனில் மாதவி பிஏ படித்ததற்கும், பாங்க் உத்தியோகம் பார்ப்பதற்கும் என்ன பயன்? கல்வி என்பது காசு சம்பாதிக்கும் கருவி மட்டும் என்று நினைக்கும் சராசரி எண்ணம், நம்மைச் சறுக்கி விடாதா?
கல்வி என்பது நம்முடைய அறிவையும், அனுபவத்தையும் வளர்த்துவிடும் துணையில்லையா? ஏன், எதற்கு, எப்படி என்று முறையாய் அணுகி, ஒவ்வொரு செய்தியையும் நுணுக்கமாய் தெரிந்துகொள்ள முயற்சி செய்வது நம் பணியில்லையா? முயற்சி செய்வதென்றால், தெரிந்து கொள்வதென்றால் அதற்கு அடிப்படையாய் ஒரு கேள்வி பிறக்கிறது. அது எதன் பொருட்டு முயற்சி, எதனைத் தெரிந்துகொள்ளும் முயற்சி? சூழலைச் சுற்றி இருப்பவரை. அவ்வாறு சுற்றி இருப்பவரை என்றால், அதில் கணவனும் அடக்கமா? கணவன் அடக்கம் எனில், நம்பிக்கையின் அடிப்படையில் தொடங்கி, தொடரும் உறவு முறையில் தெரிந்து கொள்ளுதல் என்று ஆரம்பமாகும் விஷயம் சந்தேகித்தல் என்பதில் போய் முடியாதா? சந்தேகம் உறவை முறிப்பதில் போய் நிற்காதா? இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தெரிந்துகொள், அறிந்துகொள், அலட்சியமாய் இருக்காதே என்றால் பின் எப்படி இருப்பது? மாதவி இல்லை, மாதவியைப் போன்ற பலரும் கேட்கும் கேள்வி இது.
பெண்களே! உங்களுக்கு ஒருவிடைதான் உண்டு. நம்பிக்கையாய் இருங்கள் – சற்று நைச்சியமாகவும் இருங்கள். காதலாய் இருங்கள் – அதோடு கவனமாய் இருங்கள். அன்பாய் இருங்கள் – அதோடு அறிவாய் இருங்கள். சுகமாய் இருங்கள் – அதோடு சூட்சுமமாய் இருங்கள். உணர்வு பூர்வமான உறவிலும் சற்று புத்தி பூர்வமாய் இருங்கள்.
நல்லவன் நல்லவன் என்று நான்கு நாட்களுக்குள், ஐந்து சம்பவங்களுக்குள் முடிவுக்கு வராதீர்கள். கணவனாய் இருந்தாலும் அறிந்துகொள்ளும் வரை அவசரப்படாதீர்கள். இது பெண்ணுரிமை என்னும் வீராப்பில் சொல்லப்படும் விஷயமில்லை. மனிதாபிமானத்தோடு சொல்லப்படும் வார்த்தைகள். மாதவியைப் போல் ஏமாந்து போகாதீர்கள் என்று நேசத்தோடு சொல்லும் எச்சரிக்கை!
மாதவியை போலீஸ் புரிந்து கொள்ளுமோ இல்லையோ, மாதவி மூலம் உங்களை நீங்கள் புரிந்துகொள்வது நலம்…