மலையில் பெய்த மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 3,254 
 
 

நீல்கிரி மலையின் ஊட்டி நகரையும் தாண்டி மைசூரை நோக்கி செல்லும் மலைத்தொடரில் அமைந்துள்ள ‘பெங்கிட்டி’ கிராமம்.

நேரம் காலை 5.30 மழை மெல்லிய தூறலாய்..

ஏய்யா இன்னைக்காவது கரண்டு ஆபிசு போய் கரண்டு கனெக்க்ஷன் கொடுக்கறதுக்கு வழி பண்ணிவியா, பொன்னாச்சி கணவன் திம்மனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இன்னைக்கு என்னவானாலும் சரி கரண்டு ஆபிசு போய் என் வேலைய முடிச்சுட்டுத்தான் வேலைக்கு போகப்போறேன். திம்மன் உறுதியாய் மனைவியிடம் சொன்னான்.

நேரம் காலை 8.30 மழை கொஞ்சம் வலுத்த தூறலாய்.

கரண்ட் ஆபிசில் திம்மனின் உறவுப்பையன்.

திம்மண்ணே அப்ளிகேசன் எல்லாம் ரெடி, நீங்க கட்டுன வீட்டுக்கு சொத்து வரி இரசீது வைக்க சொல்லுவாங்க, அதை மட்டும் ஏற்பாடு பண்ணி கொண்டாங்க..சேர்த்து கொடுத்துடலாம். இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள ஏற்பாடு பண்ணிடலாம்

நேரம் காலை 10.30 மழை சாரலாய் பெய்ய ஆரம்பித்திருந்தது.

பெங்கிட்டி பஞ்சாயத்து அலுவலகம்.

ஏன் சார் இவ்வளவு நேரம் பண்ணறீங்க, மழை வேற தூறி கிட்டே இருக்கு, சீக்கிரமா பஞ்சாயத்து வீட்டு வரி கட்டுன இரசீதை கொடுத்தீங்கன்னா கரண்ட் ஆபிசுல கொடுத்து வீட்டுக்கு கரண்ட் கொடுக்க அப்ளிகேசனை கொடுத்திடுவேன்.

இவனது அவசரம் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாதது மாதிரி, கொஞ்சம் இரு, மெதுவாக அந்த சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டா.கிளார்க் ஆறுமுகம்.

திம்மா எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டை கட்டி முடிச்சுட்டே. இருந்தாலும் தனியா இருக்கேப்பா, அந்த காட்டுக்குள்ளே அடிவாரத்துல கட்டியிருக்கறயே, பயமாயில்லையா?

கூலிக்கு மாரடிக்கறவனுக்கு கிடைச்ச இடம் சொர்க்கந்தானுங்களே, எனக்கு கரண்டு மட்டும் கிடைச்சுடுச்சுன்னா, என்னைய மாதிரி நிறைய ஆளுங்க அங்க வந்திடுவாங்க.

சரி..சரி.இத்தனை நாள் பொறுத்தியாமா? இப்ப என்ன அவசரப்படறே, இந்தா இரசீது

ஆமாங்க, இந்த ஒரு வீட்டை கட்டி முடிக்கறதுக்கே எனக்கு ஊர் முழுக்க கடனாயிப்போச்சு, அப்புறம் கரண்டுக்குக்கு பணம் கட்ட வழியில்லாம இத்தனை நாள் காத்திருக்க வேண்டியதா போச்சு,

இப்ப மட்டும் பணம் எப்படி புரட்டுனியாமா?

அந்த வயிதெறிச்சலை ஏன் கேக்கறீங்க, நீ வேற இந்த மலை ஓரத்துல வீட்டை கட்டி வச்சுட்டு எங்களை கொண்டு வந்து வச்சிருக்கே, கரண்டும் இல்லாமல், எப்படி இருக்கறது, கைக் குழந்தைய இருட்டுல படுக்க வைக்க முடியலை, பூச்சி புழு எல்லாம் வருது அப்படீன்னு என் வீட்டுக்காரி அழுது அழுது கடைசியா காதுல போட்டிருந்த கம்மலை கழட்டி கொடுத்தா, அதைய வச்சு, வீட்டு வரிக்கும், கரண்டுக்கும் பணம் ரெடி பண்ணிட்டு வந்துட்டேன். நீங்க இரசீதை கையில் கொடுத்துட்டா கரண்டு ஆபிசுல என் சொந்தக்கார பையன் இருக்கான், சீக்கிரம் வாங்க ரெடி பண்ணி தர்ரேன்னு சொன்னான் பேசிக்கொண்டே விரைவாக கரண்டு ஆபிசுக்கு நடக்கிறான்.

நேரம் 11.30 மழை மெல்ல அதிகரிக்கிறது.

அப்ளிகேசன் எழுதிட்டீங்கல்ல, அது கூட போஸ்டல் ஆர்டர் வைக்கணும், என்னது கொண்டு வரலையா, கொஞ்சம் இருங்க, இருநூறு ரூபாய் கொடுங்க, கரண்டு அலுவலகத்தில் இருந்த சொந்தக்கார பையன் வாங்கிக்கொண்டு போஸ்ட் ஆபிசுக்கு அந்த மழையில் ஓடுகிறான்..

நேரம் 11.45 மழை தொடர் மழையாக பெய்ய ஆரம்பிக்கிறது

போஸ்டல் ஆர்டரை வாங்கி வந்தவன் அப்ளிகேசன் கூட இதைய வைங்க, இது கூட வீட்டு வரி இரசீதை வையுங்க, ஒவ்வொன்றாய் எடுத்து ஒன்றாய் “பின்”செய்து கொடுத்தவன், சரி இதை அந்த அந்த டேபிள்ல உட்கார்ந்திருக்கறவர்கிட்டே கொடுத்துட்டு போங்க

திம்மன் மரியாதையாய் கொண்டு போய் அவரிடம் எல்லாவற்ரையும் கொடுக்க, வாங்கி பார்த்தவர், புரட்டி பார்த்து சரி எல்லாம் வச்சுட்டியா…… எல்லாம் இருக்கா..

ஏற்கனவே பையன் சொல்லிக்கொடுத்திருந்தான், அதன்படி பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்தான். சரி..இன்னைக்கே வரச்சொல்றேன். ரொம்ப நன்றிங்க..அவசரமாய் வெளியே வர அவருக்காக காத்திருந்த அந்த பையன், சரிண்ணே, நீங்க போங்க, நான் இன்னைக்கே ‘லைன்மேனை’ கூட்டிகிட்டு வந்து போட்டுட்டு போறேன், மழை வேற இப்படி ஊத்துது. பார்க்கலாம் மழை கொஞ்சம் வெறிக்கட்டும், வீட்டுக்குள்ள போற லைன் எல்லாம் கரெக்டா பாக்ஸ்சுக்குள் கொண்டு வந்து வச்சுட்டீங்கில்லை.

எல்லாம் கரெக்டா வச்சுட்டேன், நீங்க வந்து ‘கரண்டு கம்பத்துல’ இருந்து வீட்டுக்கு கொடுக்கணும். என்ன கமபம் கொஞ்சம் தள்ளி இருக்கு.

அதற்கு அந்த பையன் ஆமா உங்க வீடு தள்ளியிருக்கே, பாக்கலாம், கரண்டு கம்பம் ஒரு அளவுக்கு பக்கத்துல இருந்தாத்தான் கனெக்சன் கொடுப்பாங்க, வந்து பாக்கறேன்.

எப்படியோ பண்ணி கொடு தம்பி, முடிஞ்சா அந்த கம்பத்துல தெரு விளக்கு ஒண்ணு போட்டு கொடுங்க, இராத்திரியானா அந்த இடத்துல பூச்சி பொட்டு அலையுதுங்க. எங்களால இருட்டுல இருக்க முடியலை. அந்த மழையிலும் நனைந்து கொண்டே வீடு நோக்கி விரைகிறான்.

நேரம் 12.30 மணி.

பொன்னாசி, கரண்டு ஆபிசுல போய் எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்துட்டேன், சாப்பாடு போடு சாப்பிட்டுட்டு மதியம் நான் வேலைக்கு கிளம்பறேன், நீ வீட்டுலயே இரு. வேலைக்கு போயிடாதே, கரண்டு ஆபிசுல இருந்து ஆளுங்க வந்தா நீ இருக்கணும், புரிய்தா?

நேரம் 1.30 மணி. மழை வலுவாக பெய்கிறது

என்னய்யா காலையில ஆளை காணோம், இப்படி சொல்லாம கொள்ளாம லீவு போட்டியின்னா உன் வேலையை செய்யறது யாரு..

சார் கோபிச்சுக்காதீங்க, கரண்டு ஆபிசு வரைக்கும் கொஞ்சம் வேலை இருந்துச்சு, முடிச்சுட்டு வந்தேன்.

கரண்டு கனென்சன் வாங்கிட்டியா? இல்லீங்க, இன்னைக்கு சாயங்காலத்துக்குல்ல வந்து போட்டுடறேன்னு சொன்னாங்க.

இந்த மழையில எப்படி வந்து போடுவாங்க?

எனக்கும் அதுதான் டவுட்டுங்க, பாக்கலாம், நான் வேலைய பாக்கறேன்.

நேரம் மாலை 5.30 மணி. மழையின் வலு குறையவேயில்லை.

வீட்டில் லைட் எரியும் என்கிற கனவுகளுடனே வந்த திம்மன், யாரும் அங்கு வராத்தை கண்டு என்ன பொன்னாச்சி, கரண்டுக்காரங்க வரலையா?

இப்பத்தான் வந்து பாத்துட்டு, மழையில கம்பம் வழுக்குது, காலையில வந்து போட்டுடறேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.அப்படியே அந்த கம்பத்துக்கும் தெருவிளக்கு கொண்டு வந்து போட்டுடறேன்னு சொல்லிட்டு போனாங்க,

சே..இன்னைக்கு லைட் எரியும்னு எவ்வளவு ஆசையா வந்தேன், நீ அவங்களை இன்னைக்கே கொண்டு வந்து போட சொல்லியிருக்க வேண்டியதுதானே.

இரவு 8.30.

சீக்கிரம் சாப்பிட்டுட்டு படுக்கலாம், காலையில புடிச்ச மழை, கரண்டாவது இன்னைக்கு வந்திருக்கலாம், அவங்களை இப்பவே போட்டுட்டு போன்னு சொல்லியிருக்கணும்

பொன்னாச்சி வெடித்தாள் அறிவு இருக்கா உனக்கு, இந்த மழையில அவங்க எப்படி கம்பம் எறி போட முடியும், இவ்வளவு நாள் பொறுத்தியே, இன்னைக்கு ஒரு இராத்திரி ஏறி குதிக்கறே?

அவளின் அறிவு இருக்கா? என்ற கேள்வி இவனை உசுப்ப, மரியாதையா பேசு என்ன அறிவிருக்கான்னு கேக்கறே? உங்கப்பனா அறிவை கொடுத்தான்

எங்க அப்பனை இழுத்தியின்னா உன் மருவாதை கெட்டிடும்..அவள் பேச அவனுக்கு வந்த கோபம் கண்ணு மண்ணு தெரியாமல் வர கன்னத்தில் விட்டான் ஒரு அறை..

அவ்வளவுதான்.. பத்ரகாளியாகி விட்டாள் பொன்னாச்சி, போடா நீயும் உன்ற வீடும். சட்டென்று தொட்டியில் தூங்கிய குழந்தையை எடுத்துக்கொண்டு கதவை திறந்தவள் அந்த மழைக்கு சற்று மிரண்டாலும் விறு விறுவென அந்த ஒற்றை பாதையில் அப்பன் வீட்டை பார்த்து நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அடித்தவுடன் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டான்..நானா அடித்தேன்? அதுவும் பொன்னாசியையா? எனக்கு எதற்கு இப்படி ஒரு கோபம் வந்தது, ஐந்து நிமிடங்கள் யோசித்தவன் திடீரென திறந்திருந்த கதவை நிமிர்ந்து பார்த்தவன் ஐயோ..இந்த மழையில இருட்டுக்குள்ள குழந்தைய தூக்கிட்டு போயிருக்காளே, அவ அப்பன் வீடு ஒரு கிலோ மீட்டர் போகணுமே.. அவ்வளவுதான், அவனும் வெளியே ஓடி வந்தான்.

அந்த கடுமையான மழையிலும் இருட்டிலும் அவள் எங்கு சென்றாள் என்றே கண்களுக்கு தெரியவில்லை, இருந்தாலும் அந்த ஒற்றை பாதை வழியாக பொன்னாச்சி..பொன்னாச்சி..கத்திக்கொண்டே ஓடினான்…..

ஐந்து நிமிடத்தில் அவன் கண்களுக்கு அவள் வேகு வேகு என்று அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு நடப்பது மங்கலாக தெரிய ஓடினான்.பொன்னாச்சி…பொன்னாச்சி நில்லு…

விடுய்யா..என்னை..விடுய்யா..அவள் முரண்டு பண்ண, பொன்னாச்சி, குழந்தை நனையுது பாரு தயவு செய்து வீட்டுக்கு வா..என்னைய மன்னிச்சுடு,, அவளை அணைத்துக் கொண்டு குழந்தை மேல் தண்ணீர் விழுகாமல் மறைத்துக் கொண்டு இழுத்தான்.

இவர்கள் இப்படி இழுபறியாய் இழுத்துக்கொண்டு இருக்க “டொம்’’டொம்’’என்ற பெரும் வெடிச்சத்தம்…அப்படியே இருவரும் மரம் போல் அதிர்ச்சியாய் நின்று விட்டார்கள். திடீரென விழிப்பு வந்தவனாய்..பொன்னாச்சி சத்தம் நம்ம வீட்டுகிட்டதான். அவளையும் இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்தான்.

அங்கே ! மலை சரிவிலிருந்து சரிந்திருந்த பெரும் மண் சரிவு அவர்கள் வீட்டை முழுவதும் மூடியிருந்தது. ‘ஐயோ’ என்ற சத்தம் மட்டுமே இருவர் வாயிலிருந்தும் வந்தது.

மறு நாள் கரண்டு கனெக்சன் கொடுக்க வந்தவர்கள் வீட்டையே காணாமல் அதிர்ச்சியாகி நின்று கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *