அகிலாவுக்கு வந்த ஜாதகங்களில் இரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தன.
ஒருவர் ரவி, மற்றவர் ரூபன்.
ரவி ‘ப்ளஸ் டூ’, ரூபன் ‘எம் பி ஏ.’
இருவரும் இருவேறு கடைகளில் ‘சேல்ஸ் மேன்’ வேலை பார்க்கிறார்கள்.
“ரெண்டு பேர் புகைப்படங்களையும் பாத்துட்டு முடிவு சொல்றியா?”
கேட்டார் அப்பா.
புகைப்படங்களைப் பாத்தாள், மனதில் நிறுத்திக் கொண்டாள்..
“கொஞ்சம் அவசரமா வெளீல போகணும்ப்ப்பா, வந்து சொல்றேனே..” என்று சொன்னவள்
தன் தம்பியோடு அவெஞ்சரில் அவசரமாகப் பயணித்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தாள்,
“அப்பா ப்ளஸ் டூ படிச்ச ரவியையே பார்த்துடுங்கப்பா..” என்றாள்.
“எம் ஏ’ படிச்ச உனக்கு ‘எம் பி ஏ’ படிச்சவர் பொருத்தமா இருப்பாரேடீ..” கருத்து சொன்னாள் அம்மா.
“படிப்பு முக்கியமில்லைம்மா. பண்புதான் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியம். தம்பியோட, இரண்டு பேர் வேலை பார்க்கற கடைக்கும் போனேன்ப்பா.!.”
“…”
“அதை எடுங்க.. இதை எடுங்கனு.. படுத்தி எடுத்தேன். இது சரியா வருமா? இது ஒரிஜினலா? இது போலியா..? புது ஸ்டாக்கா..? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு தொந்தரவு பண்ணினேன்.”
“பொருள் வாங்க வந்தீங்களா? பொழுது போக்க வந்தீங்களானு” கடுப்படிச்சிது எம் பி ஏ.
எல்லாத்துக்கும் பொறுப்பாவும், பொறுமையாவும் மலர்ந்த முகத்தோடும் பதில் சொல்லியது ப்ளஸ் டூ.
மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்பதை சொல்லிச் சொல்லி வளர்த்த அகிலாவின் முடிவை எண்ணி முகம் மலர்ந்தனர் பெற்றோர்களும்.
(ஆனந்த விகடன் 13.06.2022)
அருமையான சிறுகதை நன்றி….