கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 3,172 
 
 

“அவர் வாழ்வைத் தந்தார்
அவரே வாழ்வை எடுத்தார்”

பாதிரியாரின் குரல் அமைதியினூடே வலிமையுடன் ஒலிக்கின்றது. வாழ்வின் அந்தியக் கனவுகளின் பிடிகளிலிருந்து விடுபட்டு அமைதியுடன் மரண நித்திரையுள் ஆழ்ந்து கிடக்கிறாள், ரோஸலின்.

தன் தாயின் தலைமாட்டிலே சிலையாகிச் செயலற்றிருக் கிறான் அல்பிரட். கண்களிற் சுரக்கும் நீர் எவ்வித தடை யுமின்றிக் கன்னங்களில் வழிந்து முழங்காலில் தெறித்துச் சுடுகின்றது.

ரோஸலினின் தலை மாட்டின் இரு புறங்களிலும் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கின்றது. அந்த மெழுகு வர்த்திகளின் நடுவே ஒரு சிலுவை வைக்கப்பட்டிருக்கிறது. அல்பிரெட் தன் தாயின் முகத்தைப் பார்க்கின்றான். அமைதியான ஆழ்ந்த நித்திரையில் அவள் லயித்துவிட்டாள். நெஞ்சம் விம்மாமலே அவள் மற்றவர் நெஞ்சில் நின்று விம்முகிறாள்.

மணிக்கூட்டு ஒலி அமைதியைக் கீறி அழிக்கின்றது. “அல்பிரெட் இங்கே வாடா!”

அல்பிரெட் தன் உடலை மண்ணில் வைத்து விட்டுக் குரல் வந்த திக்கை நோக்கி ஓடுகிறான்.

அந்த மென் குரல் அவன் மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் பேரிரைச்சலோடு ஒலிக்கிறது. அவன் கால்கள் மின்னலாய்த் தாவுகின்றன.

“தம்பி! என்றுமே அக்காளோடு சண்டை போடாதே”

மீண்டும் அதே குரல்தான். அல்பிரெட்டிற்கு நெஞ்சினுள் அக்கினி குமுறுகிறது. நெஞ்சு அவன் உயிரையே ஈட்டியாற் குத்துகிறது.

“ஐயோ அம்மா !”

அவன் மயங்கி விழுகிறான்.

***

மெழுதிரி ஒளியைச் சிந்திக்கொண்டே அழிகின்றது.

துயரம், அல்பிரெட்டை நினைவுப்பாதையின் சுவடுகளின் மீது மீண்டும் நடக்க வைக்கிறது.

“தம்பி …”

லில்லி அவனை அழைக்கிறாள்.

“என்ன ?”

“எனக்குக் கடையில் ஒரு றிபன் வாங்கவேணும்”

“என்னாலை முடியாது!”

“ஐயோ …. நல்லபிள்ளை …”

“முடியாது என்றால் முடியாது!”

அல்பிரெட் எழுந்து செல்கிறான்.

லில்லி கண்களிற் கண்ணீர் ததும்ப நிற்கிறாள்.

லில்லியின் பின்னால் அவள் தாய் ரோஸலின் நிற்கிறாள்; அவளை அறியாமலே ரோஸலின் பெருமூச்சொன்றை விடுகிறாள்.

“லில்லி …. என்னம்மா வாங்கவேணும்?”

லில்லி திகைத்துத் திரும்புகிறாள்.

“சொல்லு, லில்லி?”

“றிபன் வாங்கவேணுமம்மா!”

“என்ன நிறத்திலை…?”

லில்லியின் கண்களிற் கண்ணீர் துளும்புகிறது; அவள் விம்முகிறாள்.”அம்மா! ஏனம்மா என்னோடை தம்பி அன்பாயிருப்பதில்லை? எனக்கு… எனக்கு… அவன் என்றுமே விலகிப் போகிறானம்மா…!”

அவள் பேசமுடியாமல் விக்குகிறாள்; குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

“அம்மா! என்னோடு தம்பி அன்பாயிருக்க விரும்புவதில்லை, அம்மா… எனக்கு ஏனம்மா அவன் விலகிப் போகிறான்…?”

ரோஸலினுக்கு நெஞ்சு வெடிக்கிறது. ஒரே செடியில் மலர்ந்த இரு மலர்கள். அவற்றினிடையே மாறுபட்ட பண்பா? மணத்தினிற் பேதமா?

ரோஸலின் வாஞ்சையோடு லில்லியை அணைத்துவருடுகிறாள்.

“அம்மா!”

ரோஸலின் வாயிற்படியைப் பார்க்கிறாள். வாசலில் நிற்பவன் அபிரெட். எவ்வளவு நேரம் அப்படி நின்றாறோ?

“என்ன?”

“என்ரை சட்டை கிழிஞ்சுபோச்சு.. தைக்கவேனும்..”

“இங்கே தா… தம்பி ….”

லில்லி லாஞ்சையான குரலில் அவனோடு பேசுகிறாள். அவன் சேட்டை எறிந்துவிட்டு வெளியே போகிறான்.

ரோஸலின் இரக்கமாகச் சிரிக்கிறாள். மெழுகுதிரி வெளிச்சம் அணைகிறது.

அல்பிரெட் நினைவு, மண்ணிற்கு வர விம்மியழுகிறான். அன்று இரக்கமாகச் சிரித்த அவனது தாய் இனிச் சிரிக்க மாட்டாள்.

“தம்பி…அழாதே!” அவனை, அவனது தந்தை வாஞ்சையுடன் உள்ளே அழைத்துச் செல்கிறார்.

அவன் கட்டிலிற்போய் தொப்பென வீழ்கின்றான்.

***

“அவர் வாழ்வைத் தந்தார்
அவரே வாழ்வை எடுத்தார்”

அந்தக்குரல் ஓயாமல் ஒலிக்கிறது. வாழ்வெல்லாம் பழங்கதையாகிவிட்டபோதும் ரோஸலின் சிரித்துக்கொண்டே தூங்குகிறாள்.

அல்பிரெட் கட்டிலிற் புரள்கிறான்.

“அல்பிரட்!”

பிரக்ஞைக்கும் பிரக்ஞையற்ற நிலைக்கும் இடையே அவன் நடந்துசெல்வதுபோன்ற பிரமை.

கதவைத் திறக்கிறான்.

“பத்திரமாய் போய்வா ….”

அவன் தாய்க்குக் கைகாட்டி விட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறான். நெஞ்சம் எல்லாம் ஏதோ வலி; இதயம் இனந்தெரியாத துன்பத்துள் வீழ்ந்துபொசுங்குகிறது.

அவனுக்கு யாரிலும் விருப்பமில்லை. தனியே சிந்தித்துக்கொண்டு, தனியே ஏதோ எண்ணங்கனின் முனைவில் அவன் வாழ்ந்து வந்தான், வாழ்வில் எல்லாவற்றினையும் இழந்துவிட்ட ஓர் அபாக்கியவான் என அவன் தன்னை மதிப்பீடு செய்கிறான்.

“லில்லிக்கு வீட்டில் எவ்வளவு செல்லம்! அவளுக்கு எவவளவு அழகிய சட்டைகள் …… ரிபன்கள் ….. அதைப் போல அவனுக்கு இல்லை.”

லில்லிக்கு இரண்டு வயதாகுமுன் அவன் பிறந்தான். ஆனால் லில்லிக்குக் கொடுபட்ட செல்வம் அவனுக்கு இல்லை. எந்த நேரமும் அவனது அம்மா அவளோடேயே கொஞ்சுவாள். அவளோடேயே படுப்பாள். அவள் அப்பாவும் அப்படித்தான்.

“அம்மாவும்… அப்பாவும்! நான் யாருக்குமே பிள்ளையில்லையா? நான் யாருக்குமே பிள்ளையில்லையா!”

அல்பிரெட்டிற்குச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே இதே கவலை. அவனுக்கு எல்லோரிலும் வெறுப்பு.

அன்றைக்குக் கிறிஸ்மஸ்.

வீட்டில் ஒரே கொண்டாட்டம்.

அல்பிரெட், வீட்டு மூலையொன்றில் சிந்தனையில் அமிழ்ந்திக் கிடக்கின்றான். அவனை யாருமே கவனிக்கவில்லை. லில்லியோடு எல்லோரும் குதிக்கிறார்கள்.

“அவன் மீது யாருக்கும் அன்பில்லை! அவனை யாரும் நேசிக்கவில்லை! அவனுக்கு யாரும் துணையில்லை!”

நாடிக்கு ஆதாரமாகக் கைகளைக் கொடுத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவன் முதுகில் பட்ட வாஞ்சையான தடவலில் பின்னே திரும்புகிறான். பின் னாலே அவன் சின்னம்மா மேரி நிற்கிறாள். மேரியின் குழி விழும் கன்னங்களிலே அவனுக்குத் தனிவாஞ்சை. அவள் புன் முறுவலிலே அவன் நெஞ்சம் நனைகிறது.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்?”

மேரி , அவன் கன்னத்தைச் செல்லமாக நிமிண்டுகிறாள்.

“சின்னம்மா! நான் ஒன்று கேட்கட்டுமா?”

மேரி, கண்கள் ஆச்சரித்தால் அகன்று விரியத் தலையசைக்கிறாள்.

அவன் வெடிக்கும் நெஞ்சிலிருந்து வார்த்தைகள் உருக்க கீதமாய் ஒலிக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் இள மனதின், வெடித்த இதயத்தின் துன்ப நினைவுகள் ……

“சின்னம்மா! சின்னம்மா! என்னை யாரும் நேசிப்பதில்லை…என்மீது யாரும் அன்பில்லை… என்னை அம்மா பெறவில்லையா…. சின்…னம்…..மா…!”

அவன் விக்கலூடே கதறுகிறான். மேரிக்கு இதயம் வெடித்தது.

அவர்களின் பின்னால் நின்ற ரோஸலினுக்கு அவள் துடித்துப் பதறி அல்பிரெட்டை அணைத்துக் கொண்டு அலறினாள் : “டே…டே… நீயடா தம்பி, என்ரை பிள்ளை …!”

ஒரு பிள்ளையைச் செல்வமாமாய் வளர்த்து மற்றப் பிள்ளையின் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்ட அந்தத் தாய் துடி துடித்தாள்.

இளம் மனதில் விழுந்த அந்தக் கருமை அதன் நெஞ்சிலே தீராத வடுவைக் கொடுத்து, அதன் உணர்வுகளை அழித்து வாழ்வின் ஆசைகளையே கொன்றுவிட்டது.

அந்தத் தாய் ரோஸலின் –

அல்பிரெட்டின் நினைவு நடுங்கியது.

அவன் விம்மி அழுதான்.

“தம்பி… நான் உன்ரை அம்மா …. ஆசை அம்மா …! நீ ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறாய் ….?”

அல்பிரெட் ஒன்றுமே பேசவில்லை.

அவனுக்கு, அடுத்த வீட்டுப் பிலிப் சிரித்துச் சிரித்துக் கொண்டு காலையிற் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன: “டே, தம்பி! உன்னை உன்னுடைய அம்மா ஒரு பிச்சைக்காரியிடம் விலை கொடுத்து வாங்கினாவடா…!”

அதைக் கேட்டதும் அல்பிரெட்டிற்கு நெஞ்சுள் இடி விழுந்தது. அதை அவன் மனப் பாரத்துடன் தலையைக் குனிந்து கொண்டு சென்று தன் தந்தையிடம் கேட்டபொழுது அவரும் தலையை அசைத்துச் சிரித்தார்.

அல்பிரெட் அதைப்பற்றி நீண்ட நாட்கள் தனிமையாயிருந்துகொண்டே யோசித்தான். அது உண்மையென அவனுக்குப்பட்டது. அல்லாவிடின் அவன்மீது மற்றவர்கள் அன்பு வைக்காமல் ஏன் லில்லி மீது அன்பு வைக்கின்றனர்? சதா ஏன் லில்லியையே எல்லோரும் புகழ்கின்றனர்?

ஏன் லில்லியையே எல்லோரும் அம்மாவைப்போலப் பிள்ளை என்று சொல்லுகிறார்கள்?

பன்னிரெண்டு ஆண்டுகளாக மனதுக்குள் கிடந்த இந்தப் பிரச்சினையினின்று அவன் சென்ற மாதம் தான் விடுபட்டான்.

அல்பிரெட் வீதியாற் போய்க்கொண்டிருக்கிறான்.

அவனுடைய தாய் மீது இப்பொழுது அவனுக்குப் பாசம் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. அவள் அவனை வாஞ்சையுடன் தடவுவாள். புத்திமதி சொல்வாள்: “தம்பி உன்னைப்போலவே உன் அயலவனையும் நேசி!” எனறு அடிக்கடி சொல்வாள். அவனும் அதை அடிக்கடி நினைத்துக்கொள்வான். ஆனால் லில்லியை மட்டும் அவனால் நேசிக்கமுடியவில்லை. “லில்லியாவது சல்லியாவது! அவன் தாய் ரோஸலின் அவன் மீது அன்புகாட்டத் தடையாயிருந்தது அவள் தானே!”

சிந்தனை மூட்டத்துள் அமிழ்ந்திச் சென்றுகொண்டிருந்த அல்பிரெட், குழந்தையொனறின வீரிட்டலறும் ஓசை கேட்டதும் திடுக்கிட்டான். அவன் முன்னே ஒரு குழந்தை கார் ஓன்றின் முன்னே நின்று வீரிட்டது. அவன் யோசிக்கவில்லை, பாய்ந்தான். அதற்குப்பின் என்ன நடந்தது என்பது அவனுக்குத் தெரியாது.

மயக்கம் தெளிந்த நிலையிலே அவன் இருந்தபொழுது அவன் தாய் அவனை அழைத்துக்கொண்டு மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள்: “தம்பி ….. நீ என்ரை பிள்ளையடா! நீ ஒரு சீவனைக்காப்பாற்றியவனடா! சீ சாதாரண மானவனில்லை’ பெரியவனடா! கர்த்தர் உனைக் காப்பார்! ஆசீர்வதிப்பார். நீ பெரியனாவதை நான் கண் குளிரப் பார்ப்பனடா! என்ரை ராசா!”

அவள் அவனை மாறி மாறி முத்தமிட்டாள். அவனோ அவளின் தாய்மைப் பேரன்பில் – இதுவரை கிடைக்காது இப்பொழுது கிடைத்த பேரின்பத்தில் மூழ்கி, அவளின் அணைப்பில் தன்னையே இழந்து, தன்னிலிருந்து வேறாகி மனமோகனமான மானசீகமான கனவிற் பறந்தான்.

ஆனால் –

இன்று ?

“அம்மா, என்னை விட்டிட்டுப் போட்டீங்களா?”

அல்பிரெட் அலறிக்கொண்டு கட்டிலில் இருந்து வீழ்ந்தான்.

***

சென்ற மாதம் அவனை அணைத்து, அவன் உடலையும் உணர்வுகளையும் அன்புப் பிடிக்குள் சிறையிட்ட அந்தக் கரங்கள் இன்று செயலற்றுக் கிடக்கின்றன. கையுறையால் அவை மூடப்பட்டன. அருள் பொழியும் விழிகளும், அன்புமொழி சொரியும் வாயும் மூடுண்டன. இனி அவை அவனுக்காக மலரவே மாட்டா. அவனுக்கு எல்லாம் பொய்யாய், கனவாய், பழங்கதையாய் ஆயின.

“இனி அவனுக்கு வாழ்வு ஏன்? அவனுக்கு யார் துணை?”

கட்டிலில் இருந்து மீண்டும் அவன் விம்முகிறான்: அவன் காலடியில் ஒரு தேம்பல் ஒலி. அப்படித் தேம்புவது யார்?

நீர்த்திரையினூடே லில்லி சோகத்தின் உருவமாய் அமர்ந்து கதறுகிறாள். “டே தம்பி! என்னைத் தாவணி கட்டிப்பார்க்க அம்மா ஆசைப்பட்டாவடா! நான் ஐயோ! நான் அதற்கு மறுத்தேனே! அம்… அம்மா … ஐயோ … உன்ரை ஆசைக்கு இல்லாததை எனக்கு வேண்டாமம்மா …!”

அவள் அலறினாள்; அவன் முழங்காலுள் முகத்தைப் புதைத்துத் தேம்பினான்.

அல்பிரெட்டின் உள்மனம் திடீரென ஹூங்காரமிட்டது. அந்த வேகத்திலே மனம் இருகூறாய்ப் பிரிந்தது. மனப்போராட்டம். “லில்லியாவது சல்லியாவது அவள் தான் எனக்கு அம்மாவின் அன்பு கிடைக்காமற் செய்தாள்…! அவள் தான் எங்களுக்குக் குறுக்கே நின்றாள்!”

மூடி வைத்த முரட்டுத்தனம் கிளர்ந்தெழுந்து எரிந்தது.

அடிமனத்தின் கிளர்வுகள் இரக்கத்தைக் கொன்றன.

அவன் அவளை முரட்டுத்தனமாய்த் தள்ளிவிட்டுச் சென்றான்.

***

அமைதி.

பிரேத ஊர்வலம் துன்பநினைவுகளை அள்ளி வீசிக் கொண்டு செல்கிறது. அது வாழ்வின் கடைசி.

அநித்தியத்தின் உருவங்கள், அநித்தியமாகிய ஒன்றின் பின் செல்கின்றன.

அல்பிரெட்?

அவன் தாய் – அவனை இதுவரை காத்து வளர்த்த தாய், இனி வீட்டிற்கு வராமலே செல்கிறாள்.

வீட்டின் உள்ளே அவள் கிடந்த பிரேதப் பெட்டியைச் சுற்றி எத்தனை மலர் வளையங்கள் இருந்தன. அந்த மலர்கள் கமழ்ந்த வாசனை காற்றோடு சங்கமமாகி விட்டது. அவை அவன் தாயைப்போல இனிமை தந்து காற்றோடு கலந்து அழிந்தன.

“அல்பிரெட்டும் இன்று அப்படித்தான் அழியப்போகிறான் ”

அவன் வீட்டிற்குப் பக்கத்தில் ஒருவர் ஒரு சொட்டுச் சிவப்பு நஞ்சைக் குடித்துச் செத்த நிகழ்ச்சி அவன் மனதில் அழியாது பதிந்து குமுறுகிறது.

அல்பிரெட் கையுள் பொத்தியிருந்த சிறிய போத்தலைப் பார்க்கிறான். பயங்கரமான மண்டையோட்டுப் படமும்… சிவப்பு எழுத்தும் ….

“மயானத்தை விட்டு மற்றவர்கள் போனதும், தாமதம் இல்லாமல் அதைக் குடித்துவிட்டு அம்மாவிற்குப் பக்கத்தில் போய்ப் படுப்பேன்!”

அல்பிரெட்டின் சிந்தனைகள் பிரேதம் செல்லும் வழியைப்போல நீள்கின்றன.

அவனது தந்தை பிரேதப்பெட்டி, வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பொழுது அலறிய அலறல் அவன் நெஞ்சுள் இப்பொழுதும் கேட்கிறது: “ஐயோ! என்னோடை என்றுமே ஒன்றாய் வந்தவள் என்னை விட்டிட்டுப் போகிறாளே!”

அல்பிரெட்டிற்குக் கண்கள் கலங்குகின்றன. ஆனால் அவனில் யார் இப்படி அன்பு வைத்திருக்கிறார்கள்? அவனிற்காக யார் இப்படி வருந்தப்போகிறார்கள்?

திடீரென்று ஒரு அலறல். “என்னை விடுங்கோ …. நான் அம்மாவோடை போறன்…!”

அது லில்லியின் குரல்.

அவனுக்கு இதயம் கிழிந்தது.

மனதுள் இரக்கம் அழுது குமுறுகிறது.

அவன் திரும்பிப் பார்த்தான்.

லில்லி நெற்றியில் இரத்தம் வடிய ஒடிவந்தாள்.

அவள் லில்லியா? அல்லது வாழ்வில் எல்லாவற்றையும் இழந்த அனாதையா?

***

பிரேதப்பெட்டி குழியுள் வைக்கப்பட்டது.

அவள் மேல் மூன்று பிடி மண் ….

“ஐயோ! எங்கடை அம்மா மேல் மண் போடுறாங்க ளடா தம்பி….!

அவளின் ஒலி இதயங்களைக் கிழித்து ஊடுருவியது.

அவள் அவன் கரங்களை இழுத்துக்கொண்டு குறுக்கே ஓடினாள்.

அந்த வேகத்தில் அவன் கையிலிருந்த நஞ்சுப் போத்தல் எங்கோ பறந்தது.

“எங்கள் அம்மாவிலை மண்போட நாங்கள் விடோம்!”

ஒருவரும் அசையவில்லை.

சவுக்கமரம் காற்றோடு சேர்ந்து கதறியது.

“என்னையும் ….. தம்பியையும் ஐயாவையும் விட்டிட்டு எங்கடை அம்மா போகவில்லை! நீங்கள் போங்கள்! டே, தம்பி …. எங்கடை அம்மா எங்களை விட்டுப் போகல்லையடா!”

அல்பிரெட் அவள் முன் சிறு தூசானான்.

அவன் இதயம், அவள் அன்பு அலைகளாற் புரட்டி எறியப்பட்டுப் பரிசுத்தப்படுத்தப்பட்டது.

அவன் நெஞ்சு குமுற, அவன் கண்கள் குமுற, அவன் உடல் குமுற, அவன் அலறினான்: “அக்கா”

பன்னிரெண்டு ஆண்டில் இன்று தான் பாசம்நெஞ்சில் சுடரிட்டது!

அவன் உணர்ச்சியில் உருகிவழிந்தான்.

“டே தம்பி! எங்கடை அம்மா எங்களை விட்டுப் போ கேல்லையடா!”

“டே, தம்பி எங்கடை …!”

அவள் குரல் ஓயவில்லை .

அவன் மனம் பரிதாபத்துடனும், கழிவிரக்கத்துடனும் அலறியது:

“லில்லி என்ரை அக்கா! அவளை விட்டிட்டு நான் நஞ்சு குடித்துச் சாவதா?”

“அக்கா ! அக்கா ? அக்…கா!!”

உணர்ச்சிப் பிழம்பாய் நின்று அலறினான். அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். உள்ளத்தின் வலுவெல்லாம் சேர்ந்து குரலாய் ஒலித்து மயானத்தில் சோகத்தைச் சிந்தியது.

***

மண் மூடியாய்வீட்டது.

மழைபொழிந்து வெளித்த நிர்மலமான வானம்போல அல்பிரெட்டிற்கு நெஞ்சம் இலேசாகியது. தன் தமக்மையின் நெற்றியில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டு, அவளை ஆதாரமாக அணைத்துக்கொண்டு புதைகுழிக்குப் பக்கத்தில் சென்றான்.

இருவரும் மௌனமாகத் தலைகுனிந்து நின்றனர்.

இதயத்துள் ஒரு நிறைவு.

அழிவின் முடிவில்தான் சிருஷ்டியும் உதயமாகிறதோ?

பாதிரியாரின் குரல் ஒலித்தது.

“….இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன்…”

– கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

செ. யோகநாதன்: (மலர்கள்) யாழ்ப்பாணம், சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேரா தனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் நடாத்திய சிறு கதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தையும், கவிதைப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுப் புத்தகப் பரிசிலையும் பெற்றவர்; துறு துறுப்பான இவ்விளைஞரின் கவிதை, சிறுகதை என் பன வீரகேசரி, கலைச்செல்வி என்பனவற்றில் வெளிவந் துள்ளன. இவரது குறுநாவல் -”மலர்ந்தது நெடுநிலா…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *