மறுமலர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 9,991 
 

அன்று மாலைக் கதிரவன் தனது செங்கீற்றுக்களை அடிவானத்தில் பரப்பிக்கொண்டிருந்த வேளையது.

ஹிஷாம் ‘ஷொபிங் பேக்’ ஒன்றில் மரக்கறிகளுடன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

அடர்ந்து வளர்ந்துள்ள வாழைத் தோட்டத்து நடுவே காணப்படும் அச்சிறிய மண் வீடு வாசற் படியில் நின்றுகொண்டிருந்த அஸ்ரா, தம்பி ஹிஷாம் கையில் சுமந்துகொண்டு வரும் ஷொப்பிங் பேக்கை உற்று நோக்கியவாறு;

‘தம்பி இன்டக்கி சரி சம்பளக் காசி கெடச்சா?’ என்று கேள்வி எழுப்பினாள்.

‘இல்ல தாத்தா! தொர என்ன ஏமாத்திகிட்டே இருக்காரு! கடையில சேர்ந்து மூனுமாசத்துக்கும் ஐநூறு ரூபாதான் தந்திருக்காரு! இத யாருகிட்ட சொல்லி அழுவது?’ என்று பெருமூச்சுடன் வீட்டினுள் நுளைந்தான் ஹிஷாம்.

அவ்வீட்டின் ஒரு மூலையில் வயது முதிர்ந்த உம்மும்மாவும் அம ர்ந்துகொண்டு பேரப்பிள் ளைகளின் உரையாடலை செவிமடுத்துக்கொண்டி ருந்தாள்.

ஹிஷாம் தனது முகத்தில் வடிந்துகொண் டிருந்த வியர்வைத் துளிகளை கையால் துடைத்து உதரிவிட்டு அங்கிருந்த சிறிய மேசை மீது அஸ்ரா கொண்டு வந்து வைத்த சூடான தேனீரை அருந்தினான்.

கடந்த சில வருடங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ள அனர்த்தத்தின் போது தமது பெற்றோர் அவசர தேவையொன்றின் நிமித்தம் உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் பரிதாபகரமாக அவ்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

அல்லாஹ்வின் உதவியால், அஸ்ராவும் ஹிஷாமும் உம்மும்மாவோடு வீட்டிலேயே இருந்ததினால் உயிர் தப்பிவிட்டார்கள்.

என்றாலும், பெற்றோரின் இழப்பினால் துயருற்றிருந்த இருவரும் உம்மும்மாவையும் கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கடும் மழை காரணமாக குடியிருந்த வீடும் இன்றோ நாளையோ விழுந்துவிடும் போலிருந்தது.

அதனால் மூவருமாக சேர்ந்து பல மாதங்கள் சரியான ஊண், குடிப்பு, இல்லாத நிலையில் உறவினரின் வீடுகளில் அங்கொரு நாள் இங்கொரு நாள் என்று காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள்.

இக்கட்டான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களைப் பற்றி கேள்வியுற்ற ஊர் மக்களில் ஒருவர் தனது சிறிய மண் வீடுடொன்றை கொடுத்து உதவினார்.

இக்கால கட்டத்தில் தான் சிறு வயதையுடைய ஹிஷாம் கடையொன்றில் சேர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டான். பக்கத்து பஜாரிலுள்ள மூஸா ஹாஜியாரின் பலசரக்குக் கடையில்தான் ஹிஷாம் மூன்று மாத காலமாக வேலை செய்து (வருகின்றான்) கொண்டிருந்தான்.

என்றாலும் வேலைக்கேற்ற ஒரு சிறு சம்பளமாவது ஒழுங்காகக் கொடுத்தபாடில்லை.

இவைகளையெல்லாம் மனதில் போட்டுக்கொண்டு அன்றிரவு முழுவதும் சிந்தித்தவாறே உறங்கிவிட்டார்கள்.

மறு நாட் காலையில் எழுந்து கடைக்குச் செல்வதற்காக முன் வாசலுக்கு வந்தான் ஹிஷாம்.

அந்த நேரத்தில் வீட்டின் முன்னால் வளைந்து செல்லும் அச்சிறிய பாதையினூடாக ‘ஆட்டோ’ ஒன்று அசைந்தசைந்து வருவதை அவதானித்த ஹிஷாம்,

‘தாத்தா, தாத்தா, ஓடி வாயேன்!’ என்று அவசரக் குரலில் அழைக்க; அடுப்பங்கரையில் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்த அஸ்ரா திடுக்கிட்டவள் போல் முன் வாசலுக்கு வந்து நின்று ஆச்சரியமடைந்த நிலையில்,

‘தம்பி! நம்ம மூஸா ஹாஜியார் வர்ர மாதிரி இருக்கு, முன்னுக்குப் போய் பேசுடா!’

‘அஸ்ஸலாமு அலைக்கும்! வாங்க தொர!’ என்று கூறி முடிப்பதற்குள், ‘வஅலைக்கும் சலாம்!’ என்று கூறிக்கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கிய மூஸா ஹாஜியார் சில (சாமான்) உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளையும், பண நோட்டுக்களைக் கொண்ட ‘என்விலப்’ ஒன்றையும் கையில் கொடுத்துவிட்டு, புன்முறுவலுடன்,

‘ஹிஷாம்! நான் இந்த நேரத்துல இதையெல்லாம் தூக்கிட்டு வர்ரப்போ, நீ கண்டு ஆச்சரியப்பட்டிருப்பாயல்ல?’

“ஆமா! தொர, என்ன விஷயம்?”

‘அதெல்லாம் இப்போது சொல்ல நேரம் இல்லப்பா! வருமான வரிக்காரங்க பக்கத்து கடகள்ள செக் பண்ணிக்கிட்டிருக்காங்க. நாம தவறா நடக்காவிட்டாலும் பக்கத்துல இருக்கிறவங்க ஏதோ இல்லாதத பொல்லாதத சொல்லி மாட்டி வச்சிடுவாங்க என்று எண்ணி, இத அல்லாஹ்ட பேரால ஒனக்கு ‘ஸதகா’ செஞ்சிட்டு போகலாமுன்னு வந்தேன், துஆ செஞ்சிக்கப்பா! நான் வர்ரேன்!’ என்று விடைபெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டும் நகர்ந்தார் மூஸா ஹாஜியார்.

இவற்றையெல்லாம் திரைமறைவிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த அஸ்ரா, ‘அல்ஹம்துலில்லாஹ்!’ என்று அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு, நாள வரப்போகும் ஹஜ்ஜுப்பெருநாள கொண்டாட அல்லாஹ் எல்லா வசதிகளையும் செஞ்சி தந்துட்டான்!’ என்று மனம் பூரிப்படைந்த நிலையில் ‘நாளைக்கு எமக்கும் ஹஜ்ஜுப் பெருநாள்!’ என்று கூறிக்கொண்டே இருவரும் வீட்டினுள் நுளைந்திட, பக்கத்திலுள்ள தோட்டத்து பள்ளியில், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,

லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்,

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்த் என்று பெருநாள் தக்பீர் ஒலித்துக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *