மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 9,632 
 
 

திருமணம் முடிந்த கையோடு , சூர்யா தன் தாயார் சிவகாமி அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான் .

”இல்லேப்பா ,இங்க வீட்டை போட்டுட்டு எப்படி வர்றது ?சும்மா கிடந்தா வீடு வீணாய் போயிடும்லே ”என்றாள் .

”அம்மா ,உங்களுக்கு வயசாயிட்டு ,இனிமேலும் நீங்கள் தனியா கிடந்தது ஏன் கஷ்டப்படணும்?இனிமே உங்களை உட்காரவைச்சு கீர்த்தனா சமைச்சு போடுவாள் ,எல்லா வேலைகளையும் அவள் பார்த்துக்குவாள் .”

”நானும் உங்ககூட வந்துட்டா இந்த வீட்டை என்னப்பா செய்யறது ?”

”வித்துட வேண்டியதுதான் ”

மகன் இப்படி சொன்னதுமே ,அந்த முதிய பெண்மணியின் முகம் சுருங்கி போனது .

”வேண்டாம்பா —-இது உங்கப்பா வாழ்ந்த வீடு . விற்கல்லாம் கூடாது என் உயிர் இந்த

வீட்லதான் போகணும் .என் காலத்துக்குப்பின் நீ என்னவேணா செய்துக்கோ நான் வேண்டாங்களே ”கண்ணீர் மல்க கூறினாள் .

சூர்யா மனம் உருகி போனான்ஆனாலும் அம்மாவை தனியாக விட்டுப்போக விருப்பமில்லை அவனுக்கு .

”அப்படின்னா ஒரு மூணு மாசத்துக்காகவது எங்களோட சென்னையில் வந்து தங்கிட்டு திரும்ப இங்க வந்துடும்மா பிளீஸ் ”

சூரியாவின் பிளீஸ் அந்த தாய் உள்ளத்தை அசைத்தது .கீர்த்தனாவும் சூர்யாவுடன் சேர்ந்துகொண்டு கெஞ்சினாள் .

”அத்தை ,நானும் நம்ம வீட்டுக்கு புதுசு ,நம்ம வீட்டோட பழக்க வழக்கம் ,சம்பிரதாயம்

எனக்குத்தெரியாது நீங்கதான் கூட இருந்து நல்லது கெட்டதை சொல்லித்தரனும் –நீங்க எங்களோட கிளம்பி கண்டிப்பா வர்றீங்க ”

அவளின் சொல்லை தட்ட முடியாமல் சம்மதித்தாள் .சிவகாமி ,உப்புமாரவை,.சாம்பார் பொடி ,இட்லிப்பொடி ,முறுக்கு சீடை என்று பம்பரமாக சுழன்று தயார் செய்தாள்.

”எங்கம்மா இப்படித்தான் கொஞ்சநேரங்கூட சு ம்மாவே இருக்கமாட்டாங்க .ஏதாவது வேலை செஞ்சுகிட்டேஇருப்பாங்க ,எழுபது வயசு ஆனாலும் இருபது வயசு மாதிரி அவ்வளவு சுறு சுறுப்பு

பார்த்தியா கீர்த்தனா ?”

”இப்படியெல்லாம் ஓவரா வேலை செய்யக்கூடாது ,அப்புறம் இடுப்பு எலும்பு கழுத்து எலும்பு தேஞ்சுடும் , யப்பா இந்த வயசுக்கு எவ்வளவு வேலை செய்யறாங்க நானெல்லாம் சான்சே இல்லப்பா தோள்களை குலுக்கிக்கொண்டாள் கீர்த்தனா .

சென்னை வந்து இறங்கியதுமே சிவகாமி அம்மாள் மனதில் கவலை ஏற்பட்டுவிட்டது .கிராமத்தில் அவள் வீடு மூன்று கட்டு வீடு —அதில் வேலை செய்த உடம்பு –இத்தனை சிறிய வீட்டில் எப்படி இருக்கப்போகிறேனோ ?என்று கவலை யாகிவிட்டது அவளுக்கு . அதனால் புது மருமகளை ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லாவற்றையும் செய்தாள் .கீர்த்தனா வேலைக்கு போய்விட்டு வீடு திரும்ப

தாமதமாவதால் ,அவளுக்கும் அது வசதியாகவே இருந்தது ,அவளது வேலையிலும்

அதிகம் கவனம் செலுத்தமுடிந்தது .

அதோடு ,கீர்த்தனாவிற்கு பெருமை தாங்க வில்லை எத்தனை பேருக்கு இப்படி கொடுத்து வைக்கும் ? பக்கத்து வீட்டுக்காரி சுமதியிடம் பேசும்போதெல்லாம் சொல்லி சந்தோஷித்தாள்

வழக்கம்போல் அன்றும் அவளிடம் “சுமதியக்கா இன்னிக்கு அத்தை எனக்கு ரொம்ப பிடிச்ச தேங்காய் மிட்டாய் செஞ்சு கொடுத்தாங்க இந்தாங்க அக்கா ” என்று கொண்டு வந்து கொடுக்க உள்ளுக்குள் பொருமி தீர்த்தாள் சுமதி .

“ம் ஹும் ! நமக்கும் மாமியார்னு வந்து வாய்ச்சுதே ஒண்ணு …. நல்லா படுத்துகிட்டு உத்தரவு போடுமே தவிர ஒரு பைசா பிரயோஜனமில்லை. போதாதற்கு சண்டைவேறே !

அவரையும் டென்ஷன் பண்ணி அவர்கிட்டே எதையாவது போட்டுகொடுத்து…. வீட்டுக்குள்ள பிரச்சனையை உண்டாக்கி….. ச்சே ! இவ மட்டும் ஜாலியா இருக்காளே

என்று யோசிக்கும் போதே, அந்த சந்தோஷத்திற்கு ஒரு அதிர்வெடியையும் யோசித்தது அவளது குறுக்கு புத்தி!

அன்று ஞாயிற்றுகிழமை !

வழக்கம்போல் சுமதி வீட்டுக்கு வந்த கீர்த்தனா, ” சுமதியக்க…. அத்தை இனிமே ஊருக்கு போகலையாம். எங்களோடவே இருக்கிறதா சொல்லிட்டாங்க…. ரொம்பவே சந்தோஷமா இருக்குதுக்கா” என்று சொல்ல, எரிச்சலை காட்டிகொள்ளாமல், மெல்ல ஆரம்பித்தாள் ….

” கீர்த்தனா, உன்னைய நம்ம தெருவே தப்பாபேசுதே ” என்று திரியை பற்றவைத்தாள் .

“என்ன அக்கா சொல்றே?” பதறிப்போய் கேட்டாள் .

“ஆமா கீர்த்தி…. நம்ம காலனியே உன்னை திட்டிதீர்க்குது , வயசான மாமியாரை வேலை வாங்கிறியாம் …. உனக்கு ஈவு இரக்கமே இல்லையாம். ஜாடைமாடையா வம்பு பேசுறாங்க எல்லாம் பொறாமைதான், எல்லார்வீட்டுலேயும் இதே கிசு கிசுவா வலம்வருது , உன் காதுலே விழலையா? நீ வேலை வாங்குறது மாதிரி பேசுறாங்க அவர்களுக்கு இது எப்படி தெரியும்? சம்பந்தபட்டவங்க……எப்பா புரளி பேசுறதுன்னா நம்ம பெண்களுக்கு கேட்கவா வேண்டும். சரி அதை விடு கீர்த்தி, சாப்பிட்டாச்சா ?” பற்றவைத்து விட்டு பதறாமல் பேசினாள் சுமதி.

அவ்வளவுதான்! கீர்த்தனாவுக்கு எதுவுமே ஓடலை, வீட்டுக்கு வந்ததும் வராததுமா கொட்டி தீர்த்தாள் சூர்யாவிடம். ” கோபப்படாதே … இது சாதாரண விஷயம்! அம்மா கிட்டே நான் பேசுறேன்” அவளை அமைதி படுத்தின சூர்யா, அம்மாவின் அறைக்கு வந்தான்……

” அம்மா , இத்தனை நாள் நீ வேலை செய்ததை பார்த்து கீர்த்தனா நல்லா கத்துகிட்டா, இனிமே நீ எந்த வேலையையும் செய்யகூடாது. எல்லாத்தையும் கீர்த்தனா பார்த்துப்பா. நீ நல்லா சாப்பிட்டுட்டு ராமா, கிருஷ்ணான்னு உட்கார்ந்திருந்தா அதுவே போதும்” என்று அவன் சொல்ல அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் சிவகாமி அம்மாள்!

“என்ன சூர்யா…. என்னாச்சு… ஏன் திடீர்னு இப்படி சொல்லுறே? நான் என்ன புதுசாவா வேலை செய்யிறேன் ஏன் இப்படி கண்டிச்சு பேசுறே? ” என்ற தாயின் கம்மிய குரல் அவனை இளக்கியது.

” இல்லேம்மா… கீர்த்தனாவை உக்கார வச்சு நீ வேலை செய்யுறதால அக்கம் பக்கம் உள்ளவங்க தப்பா பேசுறாங்க அம்மா, இந்த தள்ளாத வயசிலே, உன்னை வேலை செய்ய சொல்லி கொடுமைபடுத்தறதா சொல்லுறாங்க;. கீர்த்தனா ரொம்ப நொந்து போயிருக்கிறா !~ ” என்று சொல்ல ” இவ்வளவுதானா விஷயம்” என்பதாக பார்த்த அந்த அம்மாள் மகனிடம் சொன்னாள் .

“சூர்யா, அவதான் அறியா பொண்ணு, அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க பேசுறத எல்லாம் மனசுலே எடுத்துகிறா … நீயாவது அவளுக்கு எடுத்து சொல்லகூடாதா?”

கீர்த்தனா வேலைக்குப்போற பொண்ணு. காலையிலே சாப்பிட்டும் , சாப்பிடாம, உன்னோட கிளம்பி வர்றவ, சாயங்காலம் அலுத்து, சலித்து வீட்டுக்கு வரும் போது பார்க்கவே பரிதாபமா இருக்குப்பா. அதான் காபி போட்டு அவ கையிலே கொடுக்கிறேன். எனக்கு ஒரு மக இருந்தா செய்யமாட்டேனா?”

அதோட இந்த உடம்பு ஓடி ஆடி உழைச்சு வளர்ந்த உடம்பு சும்மா உட்கார்ந்திருக்க தெரியாது. அது மட்டுமில்லையப்பா வயசான காலத்தில் சும்மா உட்கார்ந்து இருக்கிறதே பெரிய நோயப்பா. அப்படி உட்கார்ந்தா மனசு தேவையில்லாம பலதையும் நினைச்சு உழலும் வசதிக்குபழகிடுச்சுன்னா உடம்பு அசதியிலே விழுந்திடும் நடக்க முடியாது உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது பிறகு எல்லா நோயும் உடம்புல குடி கொண்டிடும் .உங்க இரண்டு பேருக்கும் பெரிய சுமையா மாறி ப்போயிடுவேன் .உடம்பும் ஒரு யந்திரம்தாம்ப்பா – ஓடிகிட்டே இருந்தாத்தான் நல்லது உட்கார்ந்தா துருபிடிச்சுடும்.

பொறாமை பிடிச்சவங்க எதையாவது சொன்னா அதை கேட்கிறதா ?உங்க இரண்டு பேருக்கும் நான் வேலை செய்யறது பிடிக்கலையின்னா சொல்லுங்க .நான் ஊருக்கே போயிடறேன் என்னால மருமகளுக்கு கெட்ட பெயர் வேண்டாம் ”கண்களில் நீர் தளும்ப சிவகாமி அம்மாள் பேசியதை அத்தனை நேரம் வெளியிலிருந்து கேட்ட கீ ர்த்தனா

ஓடி வந்து காலில் வீழ்ந்தாள் .

”அத்தே -என்னை மன்னிச்சுடுங்க சுமதிக்கு என்னைக்கண்டாலே பொறாமை ,அதான்

அவளாகற்பனை பண்ணி கலகத்தை உண்டு பண்ணுறா இனி மத்தவங்களை ப்பற்றி எனக்கு கவலையில்லை அத்தே நீங்க சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தா போதும் .வழக்கம் போல நீங்களே எல்லாம் பாருங்க ,,,,”சொன்னபடியே ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட மதியத்தூக்கத்திற்கு விரைந்தாள் கீர்த்தனா .

தேவதையின் கொலுசு ——செப்டெம்பர் -2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *