ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 12,655 
 

திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான கல்லூரி அது ஆண் வாடையே கிடையாது பழகிப் பார்க்கும் முகங்களெல்லாம் பெண் முகங்கள் தாம் அவர்களோடு புதிதாய் அறிமுகமாக வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு இது வரை மாறுபட்ட படிப்புச் சூழலிலேயே பழகி வந்திருப்பதால் தான் எதிர் கொள்ளப் போகும் பெண்கள் உலகம் குறித்து ஒரு கனவுமயமான பயத்திற்கு அவள் ஆளாக நேர்ந்தது வாழ்க்கை மாயமான நினைப்புகளைத் தவிர உள்ளார்ந்த பெருமைகளான அகவிழிபுணர்வேயில்லாத சாதாரண வரட்டு ஜென்மங்களான அவர்களில் ஒருத்தியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு அவளின் கடை நிலை கழிந்து போன அறிவின் பிரசன்ன வெளிப்பாடு அவ்வளவு கூர்மையாக ஒளி கொண்டு துலங்கிற்று

ஆரம்பத்தில் அவள் கிராமத்துப் பாடசாலை ஒன்றில் தான் படித்தாள்

சைவம் வளர்ப்பதற்காக முன்பு வாழ்ந்த பெரியார் ஒருவரால் நிறுவி நிலை நிறுத்தப்பட்ட அந்தச் சைவப் பள்ளிக்கூடத்தில் தான் பாலர்வகுப்பு முதற் கொண்டு மூன்றாம் வகுப்பு வரை படித்த ஞாபகம் ஒரு நிழற் புள்ளி போல ஆழ் மன ஓட்டத்தில் கரைந்து போகாமல் அவ்வப்போது உயிர் கொண்டு எழும் பசுமை குன்றாத பழைய சிரஞ்சீவி ஞாபங்களிலேயே மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகின்ற கறைகள் கடந்த மனப் பக்குவம் அவளுடையது அதற்குப் பிறகு ஆறாம் வகுப்பு வரை அப்பா ஆசிரியராக இருக்கும் மல்லாகம் பள்ளிக்கூடத்தில் தான் படித்தாள் அது ஒரு கலவன் பாடசாலை தான் டீன் ஏஜ் பருவம் தொடங்குகிற நேரம் பதினொரு வயதிலேயே நல்ல வளர்த்தி அவள். பால் குடித்தே வளர்ந்த உடம்பில் பருவம் களை கட்டி நிற்கிற ஒரு குட்டித் தேவதை மாதிரி அவள் தோன்றினாள் அவளோடு படிக்கும் சக மாணவப் பையன்களுக்கு வலிய அவளைச் சீண்டிப் பார்த்து வம்புக்கு இழுப்பதே ஒரு சுவையான பொழுது போக்கு. அதிலிருந்து அவளை மீட்பதற்காகாகவே வீட்டிலே எல்லோருமாகக் கலந்தாலோசித்தது அந்த மகளிர் கல்லூரிக்கு இடம் மாற்றி அனுப்பிய நிலையில் முற்றிலும் புதியதான ஒரு சூழ்நிலைக்கு கஷ்டப்பட்டு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது

மிகவும் மாறுபட்ட அந்தக் கல்லூரி மண்ணில் கால் வைத்ததுமே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல அவளுடைய இரண்டும் கெட்டான் நிலைமை இருந்தது எந்நேரமும் சந்தோஷ முகத்தோடு சிரிப்பும் கதையுமாய் இந்த உலக நினைப்பே அடியோடு மறந்து போய் சிறகு முளைத்து வானில் பறக்கும் குட்டித் தேவதைகளான அம் மாணவப் பெண்கள் நடுவே தான் தனித்து நிற்கிற மாதிரி ஒரு காட்சிப் பிரமையில் சிக்குண்டு அவள் வெகுவாக மனம் நொந்து போனாள் அதிலும் புதுச் செருப்பு வேறு காலைக் கடித்தது எல்லாம் பெரிய அண்ணன் செய்த வேலை அவருடைய ஆலோசனைப்படி தான் இப்படியாக வந்து சேர்ந்த எதிர்மறை மாற்றங்களெல்லாம்/ செருப்பு வாங்கித் தந்து இப்படி அவஸ்தைப்பட வைத்து விட்டாரே. செருப்பு இல்லையென்று யார் அழுதார்கள்? செருப்பில்லாமலே வாழ்ந்து பழகிய நடை அவளுடையது மல்லாகம் பள்ளிக்கூடம் போகும் போது கூடச் செருப்பில்லாத வெறுங்காலோடுதான் அவ்வளவு தூர நடைப் பயணத்தையும் அவள் கடந்திருக்கிறாள் இப்போது மட்டும் யாருக்குக் காட்ட இந்தச் செருப்பு நடை? இது பெரிய கல்லூரி என்பதாலா?இந்தக் கல்லூரி வாழ்க்கை வேணுமென்று நான் ஒன்று அழவில்லையே “

எனக்கு எப்பவும் அந்தக் கிராம வாழ்க்கை தான் மனதில் ஒட்டும் நகரமயமான இந்தக் கல்லூரிச் சூழல் பிடிபடாத நிலையில் படிப்பு எப்படி வரும் எனக்கு? நான் படிச்சுக் கிழிச்ச மாதிரித் தான் படிச்சால் தான் நீ பெரிய ஆளாய் வர முடியுமென்று அம்மா அடிக்கடி சொல்வது இப்போது ஏனோ அவளின் ஞாபகத்துக்கு வந்தது விழுந்து விழுந்து படிச்சு முன்னுக்கு வந்தவையெல்லாம் அப்படி என்ன பெரிசாய் சாதிச்சுப் போட்டினம்? கடைசி வரை தங்களுக்கான ஓட்டம் தான் பரந்த அளவில் உலகத்தை நேசிக்கத் தெரிந்தவன் தான் உண்மையான மனிதன் என்று அந்த வயதிலேயே அவளுக்கு ஞானம் வந்தது

ஆகவே படிப்பு அவளுக்கு இரண்டாம் பட்சமாகத் தான் இருந்தது. வீட்டிலேயே தினமும் ஆசிரிய திலகமான அப்பாவின் காலடியில் பாடம் கேட்டு வளர்ந்த தனது வாழ்க்கை ஞானத்துக்கு நிகராகப் படிப்பால் தனக்கு ஒன்றும் வரப் போவதில்லை என்று அவள் நம்பினாள். இந்த மாறுபட்ட மனோநிலையோடு அந்தக் கல்லூரி வாழ்க்கை அவளுக்குப் பெரும் சவாலாகவே தோன்றியது அழகையே உலகமாக நம்பி சிலசமயம் படிப்புக் கூட மறந்து போய் தங்களுக்கிடையே அதைப் பற்றிச் சிலாகித்து மண்டையைக் குழப்பித் தர்க்கம் புரிந்து பொழுதைக் கழிக்கிற தரம் கெட்ட மாணவிகள் நடுவே குடத்திலிட்ட விளக்கு மாதிரி அவள் எதுவும் பேச வராமல் கரை ஒதுங்கிப் போனது எடுபடவில்லை அவளை யாரும் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை அவர்கள் உலகம் வேறு. அந்த உடல் மாயமான அழகு ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்கள் மத்தியில் பேசு பொருளாக எடுபட்டதில்லை அவள் தனது அழகைப் பற்றி மனதளவில் அதையே பொருளாகக் கொண்டு காட்சி உலகில் தன்னையல்ல தனது உடல் மாயமான அழகுப் பிரக்ஞை மறந்து போகாத புறத் தோற்றமான மேனியழகைப் பெரிதுபடுத்தி வாழ்ந்து கழிக்கிற மனோநிலைக்கு என்றைக்குமே அவள் உணர்ச்சி முட்டி மயங்கிச் சரிந்து போனதில்லை பருவம் கண் திறக்காத வெள்ளை மனம் கொண்ட அந்தச் சிறு வயதிலேயும் அவள் நிலை அதுவாகவே இருந்தது

அவள் படிக்க வந்த அந்தக் கல்லூரியில் பெரிய வகுப்புகளுக்கு மாத்திரம் தான் சீமெந்துக் கட்டத்தில் வகுப்புகளை நிர்மாணித்திருந்தார்கள் அப்படி வரிசையாக நிற்கிற நீளமான வகுப்பறைகளைக் கடந்து தான் அவள் படிப்பதற்காக வந்து சேர்ந்திருந்த ஓலைக் கூரைகளிலான வகுப்பறைகளுக்குப் போக வேண்டும் அவற்றுக்கு வெறும் அரைச் சுவர்கள் மட்டும் தான்.. உள்ளே இருந்து பார்க்கும் போது பரந்த வெளி மைதானமாக உலகம் விரியும் ஏழாம் வகுப்பு ஏ கிளாஸில் அவளுக்கு ராஜலட்சுமி அக்கா தான் டீச்சராக இருந்தார் டீச்சர்மாரை அங்கு அக்கா என்றே கூப்பிடுவது வழக்கம் ராஜலட்சுமியக்கா பார்ப்பதற்கு கலைவாணியே காட்சி பிரசன்னமாக நேரில் தோன்றுவது போல அவ்வளவு தெய்வீக அழகு அவர் பால் வெள்ளையாகக் கடைந்தெடுத்த தேவதை மாதிரிக் கண்களில் அமானுஷ்யக் களை வீச வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும் வகுப்பறை முழுவதுமே அவர் காலடியில் சரணாகதியாகிப் போன நிலையில் மெளனம் கொலுவிருக்கும் தவச் சாலையாக அவ் வகுப்பு முழுவதுமே களை கட்டி நிற்கும் அவர் மென்மையாக இனிமை வடியும் குரலில் பாடம் போதிப்பதே ஒரு காவியமாக மாணவியர் மனதில் நிலைத்து நிற்கும். அவரோடு மனம் கலந்து உறவாடும் மிக நெருங்கிய தோழமையுணர்வுடன் அபூர்வமாகச் சில மாணவச் சிநேகிதிகளும் அவருக்குண்டு அந்த வகுப்புக்கு மொனிட்டராகப் பவனி வரும் ராஜேஸ்வரி அப்படியானவர்களில் ஒருத்தி தான் கல்லூரி முடியும் தறுவாயில் வாசலுக்கு வந்து ராஜலட்சுமி அக்காவை பணிவுடன் மனம் நெகிழ்ந்து அவள் வழியனுப்பி வைக்கும் காட்சி ஒளி கண்டு உருகாத மனமேயில்லை

படிப்புலகத்தையே மறந்து வெறும் உடல் அழகு மயமான கனவு உலகத்திலேயே நித்திய சஞ்சாரம் செய்கின்ற புஷ்பராணி போன்ற மாணவிகளை அறிவுலகில் இருந்தவாறே எதிர்கொள்ளும் போதெல்லாம் ராஜலட்சுமியக்கா மிகவும் கரிசனையோடு அவர்களை இழுத்து வைத்துத் தர்மபோதனை செய்யவும் தவறுவதில்லை இதைத் திலகாவே பலமுறை கண்டிருக்கிறாள் அவளுக்கு ஆரம்பத்திலே அவர் மீது ஒரு சின்ன மன வருத்தம் அவளை முதன் முதலாக எதிர் கொண்ட போது அவர் போட்ட ஓர் அன்புக் கட்டளை பன்னிரண்டு வயதேயாகிப் பருவம் களை கட்டுகிற மாதிரி முன் தள்ளிக் கொண்டு நிற்கும் மார்புடன் அவள் தசை வளர்ச்சியைப் பார்த்து விட்டு அவர் சொன்னார்

“தில்கா நீர் இனி அரைத் தாவணி போட்டுக் கொண்டு தான் வகுப்புக்கு வர வேணும்”

அவளுக்கு அது பெரும் அவமானமாக இருந்தது .அரைத் தாவணியோ முழுத் தாவணியோ? சாமத்தியப்படுமுன்பே இப்ப எதுக்கு இந்த மறைப்புத் திரை? மேலும் அவள் அந்த அரைத் தாவணியைக் கண்டதே அங்கு தான் ,முழங்காலுக்கு மேலே தொங்கும் அத் தாவணியைப் பின்னால் கொசுவம் வைத்து ஒரு சுற்றுச் சுற்றி அதன் தலைப்பைப் பின்னால் செருகிக் கட்டினால் தான் அது அரைத் தாவணி பெரியக்காவின் தாவணியை அப்படிக் கட்டிக் கொண்டு கல்லூரி வரும் போது தான் பெரிய மனிஷியாகிவிட்டதாக அவள் மிகவும் நொந்து போனாள் ஆனால் ராஜலட்சுமியக்காவை இதற்காகக் கோபிக்க ஏனோ அவளுக்கு மனம் வரவில்லை அவர் எதைச் செய்தாலும் நல்லதையே செய்யக் கூடிய பெரும் பண்பாளர் என்று அவள் மிகவும் நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தாள் அதுவே கடைசி வரை தொடர்ந்தது

பாடம் நடக்காத நேரங்களில் ஒரே அரட்டை தான் அவள் அதற்கு விதி விலக்கு அவர்கள் பேச்சின் மையப் பொருள் பெரும்பாலும் அழகு பற்றியதாகவே இருக்கும் தங்கள் வகுப்பில் யார் முதல் அழகி என்று அவர்களுக்குள் பெரிய வாதப் பிரதிவாதங்களெல்லம் செய்து வாய்த்தர்க்கம் புரிந்து பெரிய கூச்சல் போட்டு அந்த அழகு ராணித் தேர்வு படு அமர்க்களமாக நடந்தேறும் கடைசியில் அவர்கள் தீர்ப்பின்படி புஷ்பராணியே முதல் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கீரீடம் சூட்டிக் கெளரவித்து வழிபாடு செய்யாத குறையாக அந்த வகுப்பு முழுவதும் அது களை கட்டி அரங்கேறும் போது அதில் ஒன்று கலந்து ஆரவாரித்து மகிழ்ச்சி கொண்டாட முடியாமல் போன தனிமையில் உறைந்து போய் அவள் அமர்ந்திருப்பதே ஒரு காட்சி வெறுமையாய்க் கண்களை இருள வைக்கும்

வகுப்பறையெங்கும் ஒரு தன்னிகரில்லாத பிறவிப் பெருமையாய் எல்லோராலும் புகழ் மாலை சூட்டப்பட்டு தனித்துவமான பெருமையுடன் ஒளி கொண்டு மிளிர்கின்ற புஷ்பராணியின் அழகைப் பற்றி ராஜலட்சுமியக்காவும் ஒரு முறை வாயார மனம் திறந்து புகழ்ந்து சொன்னது திலகாவுக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது

“புஷ்பா நீர் ரோகிணி நட்சத்திரமென்றபடியால் தான் இவ்வளவு அழகு அது தான் சந்திரனுக்கும் ரோகிணி மீது அளவு கடந்த காதல்”

அதைக் கேட்டு வகுப்பறை முழுவதும் கரகோஷம் செய்தது ஒரு மயக்க மூட்டும் கனவு போல திலகாவை நிலை தடுமாற வைத்தது படிப்பையே மறந்து விட்டு அழகுக்காக உயிரையே விடும் அளவுக்கு நிலையற்ற அழகில் மயக்கம் கொண்டு அலையும் இவ்வாறான இளம் பெண்களை எந்த நேரத்திலும் தடம் புரண்டு போகாமல் காப்பாற்றி வாழ வைத்துச் சாதனை புரிவதற்காக பெற்றோர்கள் விழித்திருந்து தான் தவம் செய்ய வேண்டுமென்று அப்பா அடிக்கடி சொல்லிக் காட்டுகின்ற தாரக மந்திரம் தான் ஏனோ அவளின் ஞாபத்துக்கு வந்தது

ராஜலட்சுமியக்கா என்ன முகூர்த்தத்தில் புஷ்பாவின் அழகுக்குப் பச்சைக் கொடி கொடி காட்டித் தலை மேல் தூக்கி வைத்துப் புகழ்ந்து தள்ளினாரோ தெரியவில்லை அந்த அழகே நஞ்சாகப் போகுமளவுக்கு புஷ்பராணி படிப்பிலல்ல வாழ்க்கைப் பாதையில் கறை பூசிக் கொண்டு தடம் புரண்டு போன விபரீத நிகழ்ச்சி புனிதமான அக் கல்லூரியின் மாசற்ற பெருமைகளுக்குக் களங்கம் சேர்ப்பதற்கென்றே அங்கு ஒரு நாள் விடியும் சமயம் களை கட்டி அரங்கேறியது

அவளின் சொந்த இடம் சாவகச்சேரியென்பதால் அவள் விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தாள் அவள் அங்கிருந்து பஸ்ஸில் கல்லூரி வருவதென்றால் நீண்ட தூரப் பயணம் அது தான் இந்த விடுதி வாழ்க்கை அவளுக்கு அவளுக்குப் பதினான்கு வயதாகிறது அன்று ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வயிற்றைப் பிடித்துக் கொண்டு விடுதியில் வலி தாங்காமல் அவள் கத்திக் குழறிய சத்தம் கேட்டு விடுதித் தலைவி உட்பட விடுதி முழுவதும் ஒன்று கூடி அவளை ஆசுபத்திரிக்குக் கூட்டிச் செல்லத் தீர்மானித்த போது அவர்கள் கண் முன்னாலேயே அவள் ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் கேவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் வேறு வழியின்றி திரை போட்டு மறைத்து அவளுக்குப் பிரசவம் பார்த்து மீண்ட களைப்பையும் மீறி எழுந்த சகதி குளித்துத் தலை குனிய நேர்ந்த நெஞ்சில் கனக்கும் அவமானச் சுமையுடன் விடுதித் தலைவி தன் அறைக்குத் திரும்பிப் போவதையே வெறித்துப் பார்த்த வண்ணம் விடுதி மாணவிகள் அனைவரும் வராந்தாவில் ஒன்று கூடி நிற்கும் போது மணி எட்டாகி விட்டிருந்தது கல்லூரி வாசலிலிருந்து மாணவிகள் மாத்திரமல்ல ஆசிரியப் பெருந்தகைகளும் கல்வி சார்ந்த பெருமைக் களை வீசக் கைகளை வீசி தலை நிமிர்ந்த போக்கில் நடந்து வருவது கறைகளை எரிக்கும் ஓர் ஒளிக் காட்சி வியாபகமாய் கல்லூரிச் சாலையெங்கும் நிரம்பி வழிகிற போது திலகாவும் வந்து சேர்ந்தாள்

போகிற வழியில் ஒரு குரல் கேட்டது

“கொஞ்சம் நில் திலகா எங்கை ஓடுகிறாய் பாத்து கறை குளிச்சால் உனக்கும் தான் அசிங்கம்”

அவளோடு ஒன்றாகக் கூடப் படிக்கும் சுலோசனா தான் இந்த வேதத்தைச் சொன்னவள்

திலகாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது மிகவும் புனிதமான இந்தக் கல்லூரி மண்ணில் கறை சேர்ந்ததென்றால் அது எப்படி வந்ததென்று புரியாத மயக்கம் அவளுக்கு தலைக்கேறிய அந்த மயக்கம் கண்ணை இருட்ட அவள் தடுமாற்றமாகக் கேட்டாள்

“சுலோ இதென்ன புதுக் கதை விளையாடுறியே?”

“நான் உன்னோடு விளையாட வரேலை சத்தியமாய்ச் சொல்லுறன் இஞ்சை புஷ்பாவுக்கல்லே குழந்தை பிறந்திருக்கு நம்பாவிட்டால் நீயே போய்ப் பார் அழகான ஆம்பிளைப் பிள்ளையோடு அவள் கிடக்கிற லட்சணத்தை ஊரே சிரிக்குது”

“திலகாவுக்கு இடி விழுந்த மாதிரி அதைக் கேட்ட கணத்தில் அப்படியே நொறுங்கிப் போனாள் இவ்வளவு நாளும் இந்த வயிறை எங்கை மறைச்சு வைச்சு இந்தக் கேவலம் ? ஆரிட்டைப் போய் வாங்கி வந்த வரம் இது? அதுவும் இந்தச் சின்ன வயதில் இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போனவளுக்கு வாழ்க்கை இனித் திரும்புமா? அவள் போகட்டும் பெரிய அழகு தேவதையாம் அவள் அப்படிச் சொன்ன ராஜலட்சுமியக்காவின்ரை வாய்க்குச் சக்கரை தான் போட வேணும் அதெல்லாம் போகட்டும் இந்தக் கல்லூரியின் பெயருக்கே இது பெரிய களங்கம் “

அக் கல்லூரியில் கற்புக்கரசிகளின் பெயர்களோடு நான்கு விடுதிச் சாலைகள் அதில் ஒன்றிலேதான் பஷ்பாவின் ஒழுக்கம் பறி போன இந்த ஈனச் செயல் பகிரங்கமாக அரங்கேறிக் கறை குடித்து நிற்கிறது அந்த விடுதியைக் கடந்து தான் திலகாவுக்குத் தன் வகுப்புக்குப் போக வேண்டிய தலை விதி அதற்கு முன்னால் வேடிக்கை பார்க்கக் கூடி நிற்கின்ற கூட்டத்தைக் கண் கொண்டு நிமிர்ந்து பார்க்கவே அவள் மனம் கூசினாள் அழகின் கறை குடித்து மீண்டு வருவதற்கே அவர்களுக்கு இது நேர்ந்திருப்பதாக அவள் மிகவும் மனம் நொந்து போய் நினைவு கூர்ந்தாள்

அவளுக்கு வகுப்புக்குப் போகவே மனம் வரவில்லை பேசாமல் திரும்பிப் போனாலென்ன என்று கூட யோசனை வந்தது புஷ்பாவோடு கூடப் படித்த பாவம் தன்னையும் எரிக்கும் என்று அவள் கவலை கொண்டாள் மனம் நொந்து போய் வகுப்புக்கு வரும் போது அமைதி கனத்த வகுப்பின் முகம் கூட மறைந்து போய் எங்கும் வியாபித்திருந்த ராஜலட்சுயக்காவின் நிழல் தோற்றமே கண்ணில் இடறியது மேஜைக்கு முன்னால் தலை குனிந்து அவர் பலத்த யோசனையில் ஆழ்ந்திருப்பது ஒரு காட்சி வெறுமையாய்க் கண்களை எரிக்க உயிர் ஒழிந்து போன வெறும் நிழலாக அவளும் மனம் மரத்துப் போய் அமரும் போது ராஜலட்சுமியக்கா தலை நிமிர்ந்து ஏதோ வேதம் சொல்வது கேட்டது

“இனியாவது நீங்கள் படிப்பிலை மட்டும் கவனம் செலுத்துங்கோ இந்த அழகு வர்ணணைகளைப் பிறகு பாத்துக் கொள்ளலாம் என்று கூட நான் சொல்ல விரும்பேலை அதை மறந்திடுங்கோ “

இதைக் கேட்டு விட்டுத் திலகா மயக்கம் தெளிந்து கேட்டாள்

“அப்ப நீங்கள் சொன்னது?

“அதை நான் வாபஸ் வாங்குகி/றன் “

“அது போதும் டீச்சர் “

என்று இதைத் திலகா வெளியே வாய் திறந்து சொல்லாவிட்டாலும் தனக்குள் ஒரு மாறாத சத்திய வேதமாகக் கூறிக் கொண்டாள் அதன் பிறகு கிரீடம் பறி போன நிலையில் புஷ்பாவின் முகம் அவளுக்கு அடியோடு மறந்து போனது அழகு மயக்கம் விடுபட்ட சுகத்தில் மூழ்கிப் போனது இப்போது அவள் மட்டுமல்ல அழகு பற்றிப் பேச வாய் திறக்காத மெளனத் திரைக்குள் மறைந்து போனது அந்த வகுப்பறை முழுவதும் தான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *