கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 3,150 
 
 

“அதையேன் கேக்கற? அம்மாக்கு ஒண்ணுமே நெனவுல இல்லை..சம்பந்தா சம்பந்தமில்லாம உளற்றா….ஏதோ அப்பப்போ என் பேரு வாயில வரது.

என்ன?? சாப்பாடா..?? ஏதோ நாம பாத்து குடுத்தா உண்டு….பசிக்கறதுன்னு சொல்லத் தெரியல….

தூக்கமா…? பாதி நாளக்கி சிவராத்திரிதான்…! இன்னும் எத்தன நாளைக்கு இந்த கஷ்ட்டத்தையெல்லாம் அனுபவிக்கணும்னு தலையில எழுதியிருக்கோ தெரியலையே..!

புவனா பேரு ஒண்ணுதான் வாயத்தொறந்தா வரது.! பெத்த பொண்ணு , பிள்ளையெல்லாம் அப்பறந்தான்….! சரி ! உனக்கும் ஆயிரத்தெட்டு வேல இருக்கும்….வச்சுடறேன்…! முடிஞ்சா ஒரு நட வந்துட்டு போ!”

விஜயா குரல் எட்டூருக்கு கேக்கும்….பக்கத்து ரூம்ல படுத்துண்டு இருக்கிற எனக்கு கேக்காதா…?? எனக்கு காதெல்லாம் நன்னாவே கேக்கறது…! கண்ணும் சுமாரா தெரியும்..

நடக்கத்தான் முடியல….இடுப்பு விழுந்துடுத்து போல இருக்கு….!

விஜயா யாரண்ட பேசிட்டு இருக்கான்னு எனக்குத் தெரியாதா…?? மதுரையில இருக்கற தங்கைக்காரி உமாவோடதான்..! என்னோட அரும கடைக்குட்டி…! ஒரு காலத்துல அம்மா அம்மான்னு எப்பிடி உருகுவா…! அவளோட பேசி மாசக்கணக்காச்சே..!

அதான் அக்காக்காரி சொல்லிட்டாளே…! நான் பேசறது ஒண்ணுமே புரியலயாமே…!

அவ சொல்றதும் சரிதான்.. இன்னும் எத்தன நாளைக்கு அவாளும் கஷ்டத்தை அனுபவிக்கணும்னு இருக்கோ , ஒண்ணுமே புரியல….

நான் எப்போ இவாளுக்கு பாரமா தோண ஆரம்பிச்சேன்..?? எனக்கே எம்மேல வெறுப்பா இருக்கு…!

இவா சொல்றமாதிரியெல்லாம் எனக்கு எதுவும் மறக்கல…. பேரெல்லாந்தான் மறக்கறதேயொழிய , சில சம்பவமெல்லாம் இன்னைக்கு நடந்த மாதிரி இருக்கு…‌ நான் சொல்றதெல்லாம் சரிதானான்னு விஜயாவண்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கோ…..

என் பேரு சங்கரி… ஆத்துக்காரர் பேரு நாராயணன்..இப்போ இல்ல….போய்ச்சேந்து எட்டு வருஷமாச்சு….

பெத்தது அஞ்சு……ரெண்டு பையன்…மூணு பொண்ணு…..எல்லாமே தங்கக் கட்டிகள்தான். படிப்பிலேயும்சரி…குணத்திலேயும் சரி…அப்பா அம்மா பெருமப்படறாமாதிரிதான்….. எல்லாம் இருபது வயசு வரைக்குந்தான்…

ஆனாலும் இதெல்லாம் இப்போ பழங்கதயாயிடுத்து…

இருபதுவயசுக்கப்புறம் அவாவா ரெக்க முளச்சு பறக்க ஆரம்பிச்சுட்டா..

மூத்தவன் எல்லாரவிட கெட்டிக்காரன்.. உண்மையாவே அவன் பேரு மறந்தே போச்சு..! நான் ஏன் மறந்தேன்னு நான் சொல்றத கேட்டா உங்களுக்கே சரின்னு தோணும்…

மேல படிக்க அமெரிக்கா போனவன் அங்கியே வெளிநாட்டு பொண்ண கல்யாணம் பண்ணிண்டு ஒரு வருஷம் கழிச்சுத்தான் சொன்னான்.அவபேரு சாராவோ தாராவோ…!
அவள நான் பாத்ததுகூட கிடையாது..

அவன் மட்டும் ஒரே ஒரு தடவை வந்தான்..எனக்கு அவன் பேருதான் மறந்து போச்சே தவிர எப்பவாவது ‘சாரா’ ன்னு சொல்லியிருப்பேன் போல இருக்கு.

”அம்மாவைப் பாரேன்.. விழுந்து விழுந்து பாத்துக்கறவாளெல்லாம் விட்டா…சாராவாம் சாரா….!”

அவாளுக்கு ஒண்ணு புரியல.. சிலசமயம் எப்படி நமக்கு பிடிச்சவா பேரு நெனவுல இருக்குமோ அதே மாதிரி பிடிக்காதவா பேரும் அடிமனசுல ஆழமா பதிஞ்சு போய்டும்..

சாரவ நான் பாத்தது கூட இல்ல.. ஆனாலும் என் பையன் என்ன மறந்து போனதுக்கு அவளும் ஒரு காரணம்னு நானே தீர்மானம் பண்ணிண்டு அவ மேல வெறுப்ப வளத்துண்டு இருக்கேனே…! அவ பேரும் உள்ளுக்குள்ள உறஞ்சு போயிருக்கு….என்ன பண்றது….??

அவன் பேரே மறந்து போச்சே! அவன் குழந்தைகள் பேரா நெனவுல இருக்கும்….??

அவன் என்ன மறந்தானா?? இல்ல நான் அவன மறந்தேனா….??சொல்லுங்கோ….!

மொத்தம் அஞ்சு பசங்கன்னு சொன்னேனில்லயா…. வரிசை மறந்து போச்சு.. பேரும் மறந்து போச்சு…. கடைக்குட்டி உமா பேரு மட்டும் மறக்கல..என்ன கூட வச்சிண்டிருக்காளே விஐயா அவ பேரும் அடிக்கடி வாயில வரும்…

ஆனா அவா சொல்ற மாதிரி எங்கூடவே இருந்து பாத்துக்கற புவனாவத்தானே நொடிக்கு நூறு தடவை கூப்பிட வேண்டி இருக்கு.அவ முகத்துலதானே முழிக்கறேன்…அவ பேரச் சொன்னா இவாளுக்கு ஏன் கோபம் பொத்துண்டு வரது..??

அதவிடுங்கோ…!

படிப்புல எல்லாருமே கெட்டிக்காரான்னு சொன்னேனில்லையா.. அதில ஒருத்தி பெரிசா படிச்சுட்டு வெளியூர்ல வேலைக்கு போனா….. கொஞ்ச நாளைக்கு வந்து போனவ திடீர்னு ஆளையே காணம்…

போன இடத்தில எல்லாம் விசாரிச்சா.போலீஸ் கம்ளெயின்ட் குடுத்தா….கண்டுபிடிக்கவே முடியல… நாங்க ஒடிஞ்சு போய்ட்டோம்…

அவருக்கு ஸ்ட்ரோக் வந்து ஒரு வருஷம் தான் இருந்தார்…அப்போ விழுந்தவதான்… யாரும் அவளைப் பத்தி பேசறதில்ல…. அப்பறம் எனக்கு எப்படி அவ பேரோ ஊரோ தெரியும்…?

”அம்மா ! உனக்கு அவள நெனச்சு கவலையா இருக்கான்னு ஒரு ஜீவன் கேக்கணுமே…?? நான் உள்ளுக்குள்ள குமுறி குமுறி செத்துண்டிருக்கேன்….

திடீர்னு அவ நேர்ல வர மாதிரி இருக்கும்…” வாடி..என் கண்ணே ‘ ன்னு கூப்பிட்டா இவாளுக்கெல்லாம் சிரிப்பா இருக்கும்…உங்களுக்குப் புரியறதா…? என்னால அவள மறக்க முடியுமா??


குழந்தைகள் படிப்பு , வேலைன்னு வெளியூர்ல இருக்கும்போது நானும் இவரும் கொஞ்ச நாள் தனியாத்தான் இருந்தோம்..

வேலை பார்த்த காலத்திலேயே இவருக்கு வீட்ல இருக்கவே பிடிக்காது…

பரபரன்னு காலம்பற ஏழு மணிக்கே புறப்பட்டு போறவர் சாயரட்ச ஏழு மணிக்கு மேல ஆகும் வரதுக்கு… எட்டுமணிக்கு சாப்பிட்டார்னா பேப்பர் , டி.வி.நியூஸ்…தூக்கம்…

நானும் அவரும் உக்காந்து பேசறதே அபூர்வம்…. சிலநாள் எனக்கு நாம ஊமையாய்ட்டோமோன்னு கூட தோணும்..

ஆத்துக்கு யாரையும் அதிகமா கூப்பிட்டாலும் பிடிக்காது… சரி .. கோவில், குளம் , வெளியூர்..ஊகும்….நாலு சுவத்துக்குள்ள நாராயணான்னு ஜபிச்சுண்டே பொழுத கழிக்க வேண்டியதுதான்….

ஆனா இரண்டு பேரும் சேந்து இருந்தப்போ ஏதோ ஒரு தைரியம்… அவர் இருக்கும்போ என்னமோ ஒரு கூட்டுல சிறையிருந்தமாதிரி தோணித்து…ஆனா அவர் போனதும்தான் தெரிஞ்சுது அந்த சிறையே தேவலைன்னு…. கொஞ்சம் காத்தாவது வந்தது..இப்போ மூச்சு முட்ற மாதிரி…..


”அம்மா..! நீ இனிமே தனியா இருக்க வேண்டாம்…என்னோட வந்துடு…குழந்தைகள பாத்துண்டு ஹாய்யா இருக்கலாம்..நன்னா பொழுது போகும்…!”

உமா எல்லாரையும் முந்திண்டு சத்தமா சொல்றா…!

”ஏன் எங்குழந்தைகள் கூடத்தான் பாட்டி..பாட்டின்னு உயிர விடறுதுகள்…அவளுக்கும் இப்போ ஒரு வருஷம் சிங்கப்பூர்ல போஸ்ட்டிங்..அம்மாவ நான் கூட்டிட்டு போறதா ஏற்கனவே தீர்மானம் பண்ணிட்டோம்…”

என் பையனா என்ன வரச்சொல்றான்…? ஒரு தடவகூட குழந்தைகளை கூட்டிட்டு வந்ததில்லை.. அவளைப் பத்தி சொல்லவே வேண்டாம்…

இவன் வந்தாலும் ஸ்டார் ஹோட்டல்ல தங்கிண்டு ”அம்மா காலம்பற பிரேக் ஃபாஸ்ட் உன் கையாலதான்…எனக்கு பிடிச்ச அடையும் பருப்புருண்ட மோர்க்குழம்பும் பண்ணிவை…”

ஒருமணி நேர முக தரிசனத்துக்காக ஒரு வருஷம் தவமிருப்பேன்..

”எங்க மாமியாருக்கும் தள்ளல….அம்மா கூட இருந்தா ஒத்தாசையா இருக்கும்னு பாத்தேன்…பரக்க பரக்க பண்ணிவச்சுட்டு ஆபீசுக்கு ஒரு நாளப்போல லேட்டாறது..”

விஜயா குரல் எல்லாரையும் அடக்கிடுமே!

பம்பரமா சொழண்ட்டு சொழண்ட்டு வேலை செய்யறவரைக்கும் தாங்கினவாதான்….முடியாம போனதும் ‘நீ வச்சுக்கோ‘ ‘ நீ வச்சுக்கோன்னு ‘ ப்ளேட்டையே திருப்பிப் போட்டுட்டாளே…!

கடைசில விஜயா கிட்ட நிரந்தரமா தங்கிட்டேன்.. அவளும் தனிமரமா நின்னதால எல்லோருக்கும் அது சரின்னு பட்டது. பசங்க பணம் அனுப்பிக்கறா போலருக்கு…


ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் எனக்கு சாப்பாடு குடுத்துட்டு பக்கத்துல உக்காந்து புவனா எங்கூட பேசிண்டிருப்பா…இல்லைனா டி.வி.ல ஏதாவது நாடகம் பாப்பா… சிலசமயம் அந்தக் கதய எனக்கு சொல்லுவா…சிரிக்க சிரிக்க பேசுவா….

புவனா அடிக்கடி சொல்லுவா…!

”அம்மா…உங்க கூட இருக்கற நேரந்தான் நான் கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கேன்…உங்க கிட்ட இருந்து நிறையவே கத்துக்கிட்டேன்..படுத்துகிட்டே இருந்தாலும் ஒரு நாளைக்கு கூட சுடுசொல் பேசி கேட்டதில்ல… ரொம்ப நிறஞ்ச மனசும்மா உங்களுக்கு…”

நாலஞ்சு வருஷம் பழகின புவனாக்கு என்னப்பத்தி தெரிஞ்ச,புரிஞ்ச அளவுக்கு ஏன் என் குழந்தைகளுக்கு என்ன புரிஞ்சுக்க முடியல…? இரண்டு மூணு நாளாக சாப்பிட்டப் புறம் புவனாவோட குரலே கேக்கல..

”புவனா..! புவனா…”

சத்தமா கூப்பிடக்கூட முடியல..ஒரே இருட்டா இருந்தது..

”எதுக்கு புவனா..?? சாப்பாடெல்லாம் ஆயிடுத்தே… அவளுக்கு அப்புறம் வேலையே இல்ல.சும்மா டி.வி.பாத்துண்டு. கரண்ட் வேஸ்ட்.. ஆத்துக்கு அனுப்பிச்சுட்டேன்….! உன்னோட தூக்கத்தையும் கெடுத்துண்டு..!”

விஜயா கொரல்ல ஒரு நிஷ்ட்டூரம்…..

வேலையில்லன்னு யார் சொன்னது…? எனக்கு பேச்சுத்தொணையா இருக்கறது கூட ஒரு வேலைதான்..முடியறதா உங்களால….?? ஏழு மணிக்கு சாப்பிட்டுட்டு போர்வைய போத்தி விட்டா உடனே தூக்கம் வருமா….?? இருக்கற ஒரு கதவையும் அடச்சுட்டாளே..! மருந்து மாத்தர தராத பலம் மனுஷா கூட இருந்தா வரும்னு சொல்லுவா….

கண்ணுல தண்ணி வந்தாக் கூட விஜயாவுக்கு கோபம் பொத்துண்டுவரும்..

”இப்போ என்ன அழுக..?? ஒரு கொறையும் இல்லாம பாத்துக்கும்போதே இப்படி இருக்கு….! ஒவ்வொருத்தராத்துல போய் பாரு…! ஏன்னு கேக்க நாதியத்து கெடக்கா….!”

இதெல்லாம் கேக்கவேண்டாம்னுதான் வர துக்கத்தையெல்லாம் அடக்கிக்கறேன்….! இன்னும் எத்தன நாளைக்கோ தெரியலயே…


நான் தனியானப்புறம் உமாகிட்டத்தான் நிறைய நாள் இருந்திருக்கேன்..மூணு கொழந்தைகள வச்சுண்டு சிரமப்படறது ஒரு பக்கம்… இரண்டு பேரும் வேலைக்கு போனதால குழந்தைகளுக்கு தொண வேணும்னு எனக்கு தோணித்து..

குழந்தைகள் ஸ்கூல் விட்டதும் ‘ பாட்டி ‘ ‘ பாட்டின்னு ‘ ஓடி வந்து கட்டிக்கும்போ இதுக்கு மேல சொர்க்கம் ஏதுன்னு தோணும்…. உமாவுக்கு ஒரு வேல வைக்காம அத்தனையும் செஞ்சு முடிச்சு தூங்கும்போ உடம்புதான் வலிக்குமே தவிர மனசு முழுக்க சந்தோஷம்தான்…..

எனக்கு முடியாம போனதும் அவளுக்கு என்னையும் சேர்த்து பாத்துக்க சிரமமாயிருந்தது போல இருக்கு.. குழந்தைகளும் வளந்துட்டா…

அதிலேயும் பேரனுக்கு நான்னா உசிரு… என்ன கட்டிண்டு அழுதான் பாருங்கோ..அவன மறக்க முடியுமா…?? மறக்கடிச்சுட்டாளே….!

விஜயாவுக்கு குழந்தையில்ல… அவரும் போனப்புறம் ஒண்டியா இருக்க வேண்டாம்னு என்ன கூப்பிட்டு. வச்சுண்டுட்டா….புவனாவையும் தொணைக்கு வச்சுட்டு ஊர் ஊரா கிளம்பிடுவா மகராஜி…

மூணு மாசத்துக்கு ஒரு தடவை தவறாம வந்துண்டுதான் இருந்தா உமா…

”அம்மா பாட்டிகிட்ட படுத்துக்கறேன்… கதையெல்லாம் சொல்லுவா…”

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..பாட்டிக்கு எல்லாமே மறந்து போச்சு…”

”அப்படின்னா நான் பாட்டிக்கு சொல்றேனேம்மா…”

என்ன அறிவு என் பேரனுக்கு…!

”பாட்டிக்கு நீ சொன்னாலும் புரியாதுடா…நம்பளலெல்லாம் அடையாளம் கூட தெரியாது..”

”இல்லையேம்மா….வாடா மாதவா ‘ ன்னு பேர் சொல்லி கூப்ட்டாளேம்மா…”

”சும்மா ஏட்டிக்குப் போட்டி பேசாத…பேசாமா போய் வெளையாடுங்கோ….பாட்டி தூங்கிண்டிருக்கா…..”

நான் என்ன அறுபது நாழியும் தூங்கிண்டா இருப்பேன்..??யாருமில்லைனா கண்ண மூடிண்டு குருட்டு யோஜனலதான் பொழுத கழிக்க வேண்டியிருக்கு….!

அவா பேசறது தெள்ளத் தெளிவா என் காதுல விழறது…

‘உமா..உமான்னு’ கூப்பிட்டா காதுல விழுந்தாத்தானே…’

ஆனாலும் அம்மா இல்லாத நேரத்துல ஓடி வந்து கட்டிப்பான்…

அடுத்தடுத்த தடவ வரும்போ குழந்தைகள விட்டுட்டு வந்துட்டா… பரீட்சை, உடம்பு சரியில்ல .. எதோ சாக்கு போக்கு….!

இப்போ எவ்வளவு மூளைய கசக்கினாலும். ஒருத்தர் பேரும் நெனவுக்கு வருவேனாங்கறது….!

பாட்டிக்கு எல்லாமே மறந்து போச்சுன்னு முத்திர குத்திட்டாளே….!


இப்பல்லாம் அப்பா ஞாபகம் தான் அடிக்கடி வருது…
‘சங்கரி குட்டி..வா..வா..’ ன்னு கூப்பிடறா….அக்கா ஞானமும் , அண்ணா சுப்புவும் மாறி மாறி கண்ணுமுன்னாடி…நிஜமா. ? கனவா தெரியலையே..!

விஜயா ஃபோன்ல பேசறா….!

”நீங்க வரதப் பத்தி ஆட்சேபனை ஒண்ணும் இல்ல…எப்ப வேணா வரலாம்..ஆனா அம்மாக்கு எங்களையே மறந்து போச்சு..உங்களயெல்லாம் கண்டிப்பா நினவுல இருக்கும்னு தோணல…பேச்சு கூட கொறஞ்சு போச்சு…அத்தன தூரத்திலேந்து வந்து யாருன்னு கேட்டா உங்க மனசு வருத்தப்படுமேன்னுதான்…”

இதுக்கப்புறம் வரதுக்கு அவாளுக்கு தோணுமா..??

விஜயாட்ட கேக்கணும்..

”சரி.. எனக்குத்தான் மறதி…அவாளுக்கு என்ன நெனவு இருக்கிறாதாலத் தானே என்னப் பாக்க ஆசப்படறா…இதக்கூட புரிஞ்சுக்காம என்ன ஜன்மமோ…

‘அப்பா… அப்பா…’

என் வாய் முணுமுணுக்கறது விஜயா காதுல விழுந்துடுத்து…

”என்ன ? அப்பா ஞாபகம் வந்துடுத்தா…மேல போனவாளையெல்லாம் நன்னா நெனவு வச்சிண்டிருக்கியே….!”

அவ கேட்டதுல தப்பேயில்ல…

அப்பாவும், அக்காவும் என்ன மறக்கல.. நானும் அவாள மறக்கல…என்ன கூப்பிட்டுண்டே இருக்கா…அங்க நிச்சயமாக எனக்கு நிம்மதி கிடைக்கும்னு தோண்றது..

அங்க எனக்காக எத்தன பேர் காத்துண்டு இருக்கா…. அதைவிட்டுட்டு இங்க கெடந்து பூமிக்கு பாரமா எதுக்கு நாளக் கடத்தணும்….??

காத்துண்டிருக்கேன்…இவாளுக்கு புரிஞ்சா சரி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *