மரவல்லி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 2,142 
 
 

‘இன்னும் ஒரு ஆ…வாங்கிக்க கண்ணு.’

‘வேண்டாம்’ என்று இடமும் வலமுமாகத் தலையை பலமாக ஆட்டினாள் குழந்தை. ‘இப்ப காக்கா வந்து ஆ… வாங்கிக்குமாம், என்று சரசு கண்ணை மூடிக்கொள்ளப் பூஞ்சிட்டாய் வாய் திறக்கும் குழந்தை. உதட்டோரம் வழியும் சாதத்தை சரசுவின் தோளில் உரசித் துடைக்கும் குழந்தை. மேனி சிலிர்க்கிறது. மதியம் சாதத்தை மோர் விட்டுக் குழையப் பிசைந்து இரண்டு சொட்டு வற்றல் குழம்பு கலந்த கலவை. அப்படி இப்படி போக்குக் காட்டி சாதம் ஊட்டிவிட்டாள்.

கோடையின் புழுக்கம் உள்ளே உட்கார முடியவில்லை. மங்களூர் ஓட்டின் தாக்கம். மதியம் தகித்த வெய்யிலை உள் வாங்கி இரவில் மெல்லமெல்ல வெளியிடும் வெளிப்பாடு. ஓர் இலை கூட அசையவில்லை.

பனியில் நனைந்த ரோஜாவாய் குழந்தையின் முகத்தில் வியர்வைத் துளிகள். முந்தானையால் மெல்ல ஒற்றி எடுக்கிறாள். மடியிலேயே குழந்தை உறங்கி விட்டாள். நாளையைப் பற்றிய கவலை இல்லாத நிம்மதியான உறக்கம். சாதம் ஊட்டிய கை காய்ந்துவிட்டது. உள்ளே போய்விட்டால் குழந்தை புழுக்கம் தாங்கமாட்டாள். அவசியம் என் செல்லக்குட்டிக்கு ஃபேன் வாங்கணும். எண்ணியபடியே குழந்தையைக் கீழே கிடத்தினாள்.

மரத்துப் போன கால்களை மாற்றிப் போட்டு அமர்ந்து வானத்தையே வெறித்தாள். கோடைகால வானம் நிர்மலமாக, துடைத்து விட்ட மொசைக் தரையாக… இடையிடையே வாரிச் சுருட்டிக்கொண்டு விரையும் வெண்மேகங்கள், எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த ஓட்டம். இலக்கில்லாமல் விரையும் மேகங்கள். எத்தனை எத்தனை உருவங்கள். யானை, மாடு, தேர், மலை பற்பல உருவெடுக்கும் மேகங்கள். பின்னர் பழைய உருவங்கள் சிதைந்து புதிய வடிவெடுக்கும் மேகங்கள். ஒரு துணுக்கில் இருந்து பிரிந்து இன்னொரு துணுக்கில் இணையும் அதிசயம். அவள் வாழ்வைப் போல.

குப்பென்று ஒரு வாசம். மல்லிகையா? இல்லை முல்லையா? இல்லை இரண்டும் கலந்த கலவையா? அனுமானிக்க முடியாத அற்புத வாசம். மெல்லமெல்லத் தவழ்ந்து வந்து நெஞ்சை நிறைக்கும் வாசம். எங்கிருந்து இந்த மணம்? கண்கள் அலை பாய்ந்தது, தெருவிளக்கின் வெளிச்சத்தில். ஆங்… கண்டுபிடிச்சுட்டேன்.. மனதில் உற்சாகத்துள்ளல்.

முதல் முதலாய்ப்பூத்துக் குலுங்கும் மரமல்லிகை. வெள்ளை நிற சீரியல் பல்புகளைச் செண்டாய்ச் கட்டியது போல கொத்தாய் தொங்கும் பூங்கொத்து. கையகலக் கொத்து. சற்றே நெகிழ்ந்த மொட்டில் இருந்து கசியும் மணம். அவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே மெல்ல மெல்ல இதழ்விரிந்துச் சிரிக்கும் அதிசயம். கண்ணைச் சுருக்கி கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கிறாள் சரசு. கிளையெங்கும் மொட்டுகள் நன்கு படர்ந்த கிளையில் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடும் மொட்டுகள். இதை இத்தனை நாட்கள் கவனிக்கவே இல்லையே. அதிசயிக்கிறாள்.

இந்த மரமல்லிகைக்கு ஒரு தனிச் சிறப்பு. விதைபோட வேண்டாம். கிளை ஊன்ற வேண்டாம். வேரில் தலை நீட்டும் குருத்துகள் தானாகவே தளதளவென வளர்ந்து பூத்துக் குலுங்கும் அதிசயம். இந்தமரம் மூணாவது வீட்டு மரத்தின் வேரில் முளைத்த மரம். அடுத்த வீட்டில் புகுந்து என் வீட்டில் தலை நீட்டி இரண்டு வருடம் ஆகி இருக்குமா? கண்களை மூடித் தூணில் சரிந்தாள். கை அனிச்சையாய் மடியில் இருக்கும் லட்சுமியைத் தட்டிக்கொடுக்க மனது பத்து ஆண்டுகளுக்கு முன்னே பாய்ந்து ஓடி நின்றது.

அப்பா பிரபல கொத்தனார். சின்ன வயதிலேயே அம்மா போய்ச் சேர்த்துவிட அப்பா மறுமணம் செய்து கொள்ளவில்லை. மகளுக்காகவே வாழ்ந்த அப்பா. சரசு ஒரே மகள். பேரழகி இல்லைவிட்டாலும் அவலட்சணமும் இல்லை. மாநிறம். மாறாத புன்னகை. அளவான உடல்வாகு. வீட்டுக் காரியங்களைச் சுத்தமாகச் செய்யும் சுறுசுறுப்பு. தாயில்லாப் பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஏங்கி நின்ற அப்பாவுக்கு, உடன் வேலை செய்யும் சரவணனை மிகவும் பிடித்துப்போய் விட்டது. சரசுவுக்கும் தான். வாட்டசாட்டமான உருவம். சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாதுர்யம். சரசுவுக்கு உலகே தன் காலடியில் என்று நெஞ்சு கொள்ளாத பெருமை. சொல்லிக் கொள்வது போல் உறவு ஏதும் இல்லை என்றதால் சரவணன் வீட்டோடு மாப்பிள்ளை ஆனான்.

அப்பாவுக்கு கழுத்தில் தலைநிற்காத பெருமை, தன்னைப் போலவே மருமகனும் கொத்தனார், அத்தோ வீட்டோடு மாப்பிள்ளை, எனவே மகள் பிரிவு இல்லை என்று போவோர் வருவோரிடம் பீற்றிக்கொள்வார். அத்துடன் மகள் மூன்ரு மாத கர்ப்பம் என்றதும் ஆகாசத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளக் குதித்த அப்பா. அந்தப் பூரிப்புடனே படுத்தவர், எழுந்திருக்காமல் தூக்கத்திலேயே மரணித்த அப்பா. ஒருவாறாக ஜீரணித்துத் தெளிந்தவளுக்குப் பேரிடி. சரவணன் கூட வேலை செய்யும் பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பது தெரிந்தது. கேட்டவளுக்கு அடி உதை. அத்தோடு வீட்டைத் தன் பேரில் எழுதிக்கொடு பேங்கில் லோன்போட்டு மாடி வீடு கட்டப்போகிறேன், என்று அவளை நெருக்க ஆரம்பித்தான். அதற்கும் சரி என்று தலை ஆட்டிவைத்தாள்.

பின்னர் தான் உண்மை தெரிந்தது. இடத்தை யாருக்கோ விலைபேசி அட்வான்ஸ் வாங்கி சின்ன வீட்டுக்குச் செலவு செய்து இருப்பது. கையெழுத்து போட மறுத்தவளை அடித்து ஓங்கி வயிற்றில் உதைந்து தாலியையும் பறித்துச் சென்றவன் தான். அந்த உதையில் கரு கலைய உறைந்து உடைந்து நின்றவளுக்கு ஒரே ஆதரவு, புதிதாக எதிர் வீட்டுக்குக் குடிவந்த பேங்க்காரங்க வீட்டு விஜயா அம்மா.

சிண்டும் சிமிழுமாக மூன்று குழந்தைகள். ஆபீஸ் செல்லும் கணவன். ஙை,ஙை என்று அழும் கைக்குழந்தையுடன் திண்டாடிய விஜயாம்மா. கருவும் கலைந்து கணவனும் பிரிந்த சரசு; இருவரையும் இணைத்த இறைவனின் கருணை. சரசுவுக்குப் புதியதோர் உலகம் தெரிய ஆரம்பித்தது. அவர் வீட்டில் ஒருத்தி ஆனாள். புதியவர்கள் வந்தால் உறவா? என்று கேட்கும்படி ஒன்றிவிட்டாள். குழந்தைகளைக் கவனித்து, துணி துவைத்து, பாத்திரம் தேய்த்து கடைக்குப் போய் வந்து அனைத்தும் சரசு தான். மூன்று வேளை சாப்பாடு, பண்டிகைக்குப் புதுப்புடவை, அவ்வப்போது பழம் புடவை வேறு என்ன வேண்டும். எனவே சம்பளம் இருநூறு ரூபாயை வாங்குவதே இல்லை.

ஒண்டிக்கட்டை. ஒண்டிக்கொள்ளச் சொந்தக்குடிசை. எனவே செலவுக்கு என்ன வேலை. அப்படியே அவள் பெயரில் வங்கியில் போட்டு வைத்தார்கள். பத்தாண்டுகள் ஓடிவிட்டன.

குழந்தைகள் பெரியவர்கள் ஆகி டவுனுக்குப் போய் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வேலைகள் வெகுவாகக் குறைந்தன. விஜயாம்மாவுக்குப் பேச்சுத்துணையாக சினேகிதியாக நின்றவளின் மனதில் எதுவோ நிரடல். ஒரு வெறுமை. ஐந்தாம் வகுப்பு படித்த அவளுக்கு அம்மா வீட்டில் வாங்கும் புத்தகம் எல்லாம் அத்துபடி. படித்ததை அம்மாவுடன் அசைபோடுவது இருவருக்குமே பேரானந்தம்.

இதற்குள் சரவணன் பழையவளை விட்டு விலகி புதியவள் ஒருத்தியுடன் வாழ்வதாகக் கேள்வி. கணவனை இழந்த கைக்குழந்தைக்காரியாம். விஜயாம்மாதான் சொன்னார்.

‘பக்கத்து டவுனல தான் உன் புருஷன் குடித்தனம் நடத்துறானாம். ஐயா நேத்துப் பார்த்தாராம். போய் என்னன்னு கேளுடி. பள்ளிக் கூடம் புதுசாக் கட்டுறாங்கயில்ல, அங்கதான் வேலை செய்யுறானாம். இப்படி எத்தனை நாளைக்குத் தனி மரமாவே நிப்ப. உனக்குன்னு ஒரு குழந்தை குடும்பம்னு பிடிப்பு வேணாமா?’

கோபமாக வெடித்தார் விஜயாம்மா.

அவசரமாக இடைமறித்தாள் சரசு.

‘வேணாம்மா. முன்ன என்ன பாவம் செஞ்சேனோ இந்த மனுஷன் வாச்சு இருக்கார். கொடுமைக்கார புருஷனா ஆனாலும் ஒரு விதவைக்கு வாழ்வு தந்து இருக்கார். அதைக் கெடுக்க விரும்பலைம்மா. அன்னிக்குப் படிச்சோமே பாரதிதாசன் கவிதைகள். வேரில் பழுத்த பலா ஒண்ணு கோரிக்கையற்றுக் கிடக்குதுன்னு.அந்தப் பலாவைக் கோரி பெற்றுக்கிட்டார் அவர். அதை தட்டிப்பறித்து நான் வாழவிரும்பல.’

படபடவென்று கைதட்டல். பேங்க் ஐயாதான்.

‘சூப்பர்மா அசத்திட்ட, இருந்தாலும் உனக்கு கடைசி காலத்துல வயசான காலத்துல ஆதரவு? பொருளாதாரம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அதனால் பேங்க்ல இருக்கும் உன் சம்பளம் பணத்துல ஒரு கறவைமாடு வாங்கு. நாங்களே பாலை வாங்கிக்கிறோம். அக்கம் பக்கத்துல வாடிக்கை புடிச்சுத் தாரேன். அதோட எங்க பேங்க இருக்கும் சைக்கிள் ஷெட்டை ஓட்டுக்கட்டடமாக மாத்தப் போறாங்க. பழைய ஓட்டுக் கூரையை காண்ட்ராக்ட் காரரிடம் சொல்லி குறைஞ்ச விலையில் உனக்கு வாங்கித்தரேன். கூரையை ஓடா மாத்திடலாம். பணம் பத்தலனா பேங்ல லோன் போட்டுத்தர்றேன். மாட்டை இன்ஷீர் பண்ணித்தர்றேன். என்ன சரியா?’

தலையாட்டினாள்.

கனவு போல இருக்கிறது. கூரை வீடு ஓட்டு வீடாச்சு. ஒரு மாடு இரண்டு மாடு ஆச்சு. கடனும் அடைச்சாச்சு. மெதுவாக நிம்மதிப் பெருமூச்சு விடலானாள். அந்த நிம்மதியும் கலைந்தது.

அன்று தான் இந்த மரமல்லிக் கன்றை அடையாளம் கண்டாள் சரசு. விஜயாம்மா தான் கூறினார். மூணாவது வீட்டு மரத்தில் கிளைத்த வேரில் இருந்து வெடித்த குருத்து இது என்று. சீமக் கருவேல முட்களை வெட்டிச் செடியின் சுற்றிலும் நட்டுவைத்தாள். ஒரு செம்பு தண்ணீரும் ஊற்றி நிமிரும் போது.

‘இங்க சரசுங்கறது?’

கேள்வியுடன் வந்தவர் போலீஸ்கார். ‘நான் தாங்க!’ என்று கூறுவதற்குள் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

‘வேறு ஒருத்தரும் இல்லையா?’

அவர் கேட்கும் போதே அவளுக்குக் குலை நடுங்கியது. ஓடிப்போய் பேங்க் ஐயாவை அழைத்துவந்தாள்.

விஷயம் இதுதான். குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடித்திருக்கிறான் சரவணன். அம்மிக் கல்லில் தலைமோதி அங்கேயே மண்டையைப் போட்டுவிட்டாள் மகராசி. லாக்கப்பில் சரவணன். விலாசம் தேடி சேதி சொல்ல வந்திருக்கும் காக்கி. பேங்க் ஐயாவுடன் ஓடினாள் சரசு. லாக்கப்பில் கைகட்டி குத்திட்டு விட்டத்தை வெறித்தபடியே, சரவணன். கண்களில் வழியும் கண்ணீர் துடைக்கவும் தோன்றாத பரப்பிரம்மமாய்.

‘தூக்கோ ஆயுளோ உறுதி. கேஸ் வலுவா இருக்கு!’ இன்ஸ்பெக்டர் கூற விக்கித்து நின்றாள் சரசு. சரவணனிடம் எந்தவிதச் சலனமும் இல்லை, இவளைக் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.

‘அப்புறம் அந்தக் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுகிறோம்.’

இன்ஸ்பெக்டர் கூறிக்கொண்டே போகத் திடுக்கிட்டாள் சரசு. பெண் போலீஸ் தந்த பாலை பாட்டிலில் உறிஞ்சியபடியே திகில் உறைந்த விழிகளுடன் அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. கலைந்த தலை. கண்ணும் மூக்கும் வழிந்து காய்ந்த முகத்திலும் ஒரு களை. அந்த வண்டுக் கண்கள் அவளிடம் ஏதோ கூறுவது போல் ஒரு பிரமை. வராந்தாவிலேயே உட்கார்ந்து கிடந்தாள் சரசு. அனாதை ஆரமத்திலிருந்து உரியவர்கள் வர ஒப்படைத்தார்கள் குழந்தையை. போக மறுத்து அடம் பிடித்து அழுது புரண்டாள் குழந்தை. அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. சரசுவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பிரவாகம் ஊற்றாகப் பீறிட்டது. சட்டென பேங்க் ஐயாவிடம் தன் கோரிக்கையை வைத்தாள். இது சாத்திரத்தால முடியாததை, சத்தியமா நான் இதைச் சாதித்துக் காட்டுறேன் ஐயா, நீங்க தான் ஏற்பாடு செய்யணும் என்று கண்ணீருடன் கை குவித்தாள். அந்தப் பிஞ்சு தன் அழுகையை மறந்து இவளையே கண்கொட்டாமல் கவனித்தது.

ஆச்சு யார் யாரிடமோ பேசினார் பேங்க் ஐயா. முறைப்படி சட்டப்படி குழந்தை சரசுவிடம் தத்து கொடுக்கப்பட்டது. மௌனமாகக் கைகுவித்தான் சரவணன். குழந்தையை ஐயா அம்மா இருவர் காலடியிலும் கிடத்தி தானும் விழுந்தவளைத் தாங்கிப்பிடித்தாள் விஜயா அம்மா. ஆதரவாகத் தோளில் சாய்ந்தாள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் சரசுவின் காலிடுக்கில் குழந்தை ஒடுங்கி நின்றாள்.

‘சரசு! நீ சாதாரணப் பெண் அல்ல தெய்வம். வசதி படைச்சவங்களுக்குத் தோணாத தைரியம் உனக்கு வாய்ச்சிருக்கு. புள்ளையை நல்லாப் படிக்க வைச்சு ஆளாக்கு’.

‘பேர் என்ன கண்ணு?’ என்று கேட்க லட்சுமி என்றது மழலையில். பகபகவென சரித்தாள் சரசு.

‘என்னடி சிரிப்பு உனக்கு இந்த நிலைமையிலும்?’

தொண்டையடைக்கக் கேட்டார் விஜயா அம்மா.

‘இல்ம்மா படிக்காத என் பெயர் சரசு. அப்பன் ஆத்தா இல்லாத அடுத்த வேளை பாலுக்கு வழியில்லாத இவள் பெயர் லட்சுமி. அதான் சிரிப்புவந்துட்டு’.

‘இப்பவாவது சரின்னு சொல்லு. கணவனால் கைவிடப்பட்டவள்ன்னு உனக்கு அரசு உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணட்டுமா? என்ற பேங்க் ஐயாவை அவசரமாக இடைமறித்தாள் சரசு.

‘வேண்டாம்யா. புருஷனே தாலிய அறுத்துக்கிட்டு உறவையும் அறுத்துக்கிட்டுப் போனவர்தானே. அவரைக் காட்டிப் பென்ஷன் எதுக்குய்யா? உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு. அதோட இந்தப் பிஞ்சு பொக்கிஷமாக் கிடைச்சிருக்கு. இது போறும்யா. என் புருஷனாலதான் இந்தப் பிஞ்சு பெத்தவளை இழந்து நிர்க்கதியா நிக்குது. என்புருஷன் செஞ்ச பாவத்துக்கு இது கூட நான் செய்யலன்னா நானும் என் புருஷன் மாதிரி ஒரு மிருகம் தான். அப்புறம் என் புருஷனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கூடப் பொறந்த பொறப்பா நீங்களும் அம்மாவும்!

பேசிக் கொண்டே போனவளை கண்ணீர்கசிய ஏறிட்டனர்பேங்க் ஐயாவும் அம்மாவும்.

‘ஐயா வந்து… வந்து ஒரு உதவி. உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்க? அதனாலதான் திரும்பத் திரும்ப உங்களையே உதவி கேட்குறேன்.’

தொண்டையடைக்கக் கேவினாள்.

சொல்லும்மா என்ன செய்யணும். உன் அளவு எங்களுக்குப் பரந்த மனசு இல்லாட்டாலும், உனக்கு உதவியாக நிற்க நாங்கதான் குடுத்து வைச்சிருக்கணும். எதா இருந்தாலும் தைரியமாகக் கேளு ஊக்கப்படுத்தினார்.

‘ஐயா உங்க பேங்கில கூட்டிப் பெருக்குற ஆயா பிள்ளை ஊட்டோட அடுத்தமாசம் பட்டணத்துக்குப் போவுதாம். அந்த வேலையை எனக்கு…

இழுத்தவளை இடைமறித்தார் ஐயா.

‘சரி. உனக்குத் தான் அந்தவேலை’.

‘அப்புறம் உங்க பேங்ல ஒரு இருவது பேர் வேலை பாக்கிறாங்கல்ல, ஆமாம். அவுங்க எல்லாம் ரெண்டு வேளையும் டீயும், வடையும் சாப்புடுவாங்கல்ல? அதை நானே செஞ்சு குடுக்குறேன்யா. சாப்புட்டுப் பார்க்கட்டும். புடிச்சா வாங்கிகிடட்டும். கட்டாயமில்லையா…’என்றாள் கைகளைப் பிசைந்தவாறே.

‘கட்டாயம் வாங்குவாங்க, உன் கைமணம்தான் எனக்குத் தெரியுமே? எனக்குக் கூட இது தோணலபாரு. சரசுகிட்ட சரஸ்வதியே குடியேறி ஐடியாகக் குடுக்கிறான்னு நினைக்கிறேன்’

விஜயாம்மா கூற உனக்கு கூட ஐடியா தோணுதே என்று ஐயா கிண்டலடிக்க. சரசு இப்ப செம பிசி.

கறவை மாடு கவனித்து இரண்டு வேளையும் சுடச்சுட டீயும் பஜ்ஜியும் வடையும் போண்டாவுமாக அசத்துகிறாள். அதைச் சாப்பிடுவதற்காகவே யாரும் லீவு போடுவதில்லை என்று ஐயா சொல்வார். வசூல் பணத்தை ஐயாவே லட்சுமியின் பெயரில் பேங்கில் போட்டு விடுவார். கூட்டிப் பெருக்கும் சம்பளம் ஐயா வீட்டு சம்பளம் இரண்டையும் சேர்த்து அம்மாவே மொத்தமா மளிகைச் சாமான் வாங்கித்தர பம்பரமாய்ச் சூழலும் சரசு, நித்தியப்படி வண்டி ஓடுவது வழக்கம் போல் ஐயாவீட்டு சாப்பாட்டில். குழந்தைக்குத் துணி எடுப்பது அம்மாவேதான். அவருடைய சொந்தச் செலவில்.

டாண்டாண் என எதிர்வீட்டுக் கடிகாரம் பத்துமுறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பத்து மணி ஆச்சா? காலையில் நிறையவேலை இருக்கு, என் செல்லத்தைப் பள்ளியில் சேர்க்கணும் பக்கத்துத் தெரு மில் தொழிலாளிகள் பத்துபேருக்கு மதியம் சாம்பார்சாதம் தயிர்சாதம் செய்து தரணும்; இது புது வாடிக்கை. என் புள்ளய கலெக்டருக்குப் படிக்க வைக்கணும், அதற்கு இப்பவே நிறைய உழைக்கணும். கணிசமாக் காசு சேர்க்கணும்…. வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மலடாய் நின்ற வெண்மேகங்கள் கருக்கொண்டு கருமேகமாய்ச் சூழ பளீரென மின்னல் வெட்டியது. கொட்டும் முரசாய் இடி.

சத்தம் கேட்டு நடுங்கும் லட்சுமியை மார்போடு அணைத்து உள்ளேசென்று பாய்விரித்துக் கிடத்தினாள். சாப்பிடத் தோன்றாது கை அலம்பி லட்சுமியின் அருகே படுத்தாள்.

பனியில் நனைந்த ரோஜாவாய் சில்லிட்ட பட்டுப்பாதங்களைக் கண்ணில் ஒற்றிகொண்டாள். அவள் களைப்புப் பறந்தது. சின்னத் தூறலாய் ஆரம்பித்த மழைச் சாரலோடு மரமல்லியின் மணம் வீட்டுக்குள்ளேயும் ஜன்னல் வழிவந்து நாசியில் நுழைந்து இதயத்தை நிறைத்தது.

உறங்கும் லட்சுமியை மார்போடு அணைத்துக் கொண்டாள் சரசு. இரண்டு அனாதைகளை இணைத்து உறவுப்பாலம் அமைத்த இறைவனுக்கு நன்றி கூறி நிம்மதியாய்க் கண் மூடினாள். மரமல்லிகையின் மணமும் நித்ராதேவியும் ஒரு சேரத் தழவினர் சரசுவை.

– வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற கதை

வயது 62  புதுவை யூனியன்  பிரதேசத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு தடா. உடன் திருமண பொடா. பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர்  கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில்.தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் 'அஞ்சல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *