மயில்சாமியின் தேவை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 3,384 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மயில்சாமி வந்திருந்தான்!”

“மயில்சாமியா! எப்ப? மாடியிலே வத்தல், ஊறுகாய் ஏதாவது உலத்திருக்கியா? எடுத்துவையி, மளை வறப்போவுது”

“அதுக்கா? மயில்சாமி என்ன வாத்தியாரா? சனி, ஞாயிறு சதுர்த்தி, அம்மாசி, மாசிமகம்னு நினச்சப்பல்லாம் லீவுமேலே இடறி உளறதுக்கு! மூணு மாசமாச்சாம், ஒரு மணி நேரம் சேந்தாப்பல தூங்கி!”

“சோனியன் கண்ணு சும்மா முளிக்குதா? ஒரு எமைகொட்டுக்கு நூறு ரூபா மேனிக்கில்ல பாங்கியிலே ஏறது”.

“வாரிக் கொடுத்திருப்பான், போன ஜன்மத்துலெ. இப்ப வருது. யாரு தடுக்க முடியும்?”

“இப்ப யார் தடுத்தாங்க?…என்னாத்துக்கு வந்தான்?”

“சும்மாத்தான் அண்ணின்னான். அரை மணி போல் இருந்தான். அப்புறம் அவசரமாப் போகணும், ஒம்பது மணிக்கு ‘ஷூட்டிங்’னு போயிட்டான். காபி கலந்து கொடுத்தேன், சாப்பிட்டான். எல்லாம் சொன்னான். அப்புறம் அண்ணியைக் காரிலே ஏத்திக்கிட்டு மார்க்கட்டு வரைக்கும் கொண்டு போய் விட்டான்…போனான்”

“கார் சவாரியும் ஆயிடிச்சா!”

“புதுக் காராம். நீங்க வந்தாத்தான் ஆச்சுன்னான், என்ன செய்யறது?”

“புதுக் காரா?”

“பெரிசு இவன் வைச்சிட்டிருக்கானாம்.”

“பெஞ்சாதிக்கு ஒண்ணு வாங்கினான். அதுவும் புதுசுதான்.”

“அதையும் விக்கலே. சின்ன துரையைப் பள்ளிக்கூடத்திலே போட்டிருக்கான்லே, அது வந்து நான் சின்னக் காராயிருக் தாத்தான் பள்ளிக்கூடம் போவேன்னு அடம் பண்ணிச்சாம். அதுக்காக வாங்கிப்புட்டானாம். அதைத்தான் அண்ணன் கிட்ட காமிக்கணும்னு வந்தானாம்.”

“பலேடாய்யா! மூணு மாசத்துக்கு மூணு காராச்சு, செஞ்சியிலேருந்து ஒரு பசு மாடு வாங்கியிருக்கிறான். அதுக்கு வைக்கல், பருத்திக் கொட்டை, புண்ணாக்கு வாங்கியாற அடுத்த மாசம் ஒரு லாரி வாங்கிடுவான்.”

“ஏன் நிறுத்திப்பிட்டீங்க?”

“எல்லாம் சொன்னான்னு சொன்னியே, என்ன சொல்லியிருப்பான்னு ஊகிச்சுக்கிட்டிருந்தேன்.”

“உங்களைப் போன தடவை பாத்தப்புறம் இன்னும் நாற்பது படத்துக்குக் கையெழுத்துப் போட்டிருக்கானாம். இப்ப நூறாவது, படமாம்! இன்னிக்குக்

காலமே லட்ச ரூபாய்க்கு ஒரு படத்துக்குக் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் வாங்கினானாம். அதையும் அண்ணன் கிட்ட சொல்லணும்னு வந்தானாம். முதத் தடவையா லக்ஷ ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டிருக்கான்ல!”

“சரி, அப்புறம் என்ன சொன்னான்?”

“நாலாம் மாடியிலே சுபுத்தினி கட்டி வைச்சிருக்கேன். நேத்துத்தான் முடிஞ்சுது. அதையும் பாக்கறதுக்குத்தான் அண்ணனைக் கூப்பிட்டுப் போகலாம்னு வந்தேன்னான்.”

“என்னது! சுபுத்தினியகமே பண்ணி வைச்சிருக்கானா?”

“ஆமாம். நாலாம் மாடியிலே தூரத்திலேருந்து பாக்கறப்பவே தெரியுமாம்.”

“ஈசன் விளையாட்டு!”

“ஸ்புட்னிக், ஸ்புட்னிக்” என்று கூறுவது என்ன என்று நான் இப்போது சொல்ல ஆரம்பித்தால் என்னய்யா, உன் வாத்தியார்தனத்தை எங்களிடமும் ஆரம்பித்து விட்டீரா என்று கேட்பீர்கள். அந்த ஸ்புட்னிக் முதன் முதலாகப் பறந்த அன்றுதான் மயில்சாமி நடித்த முதல் படமும் வெளியாயிற்று.

மயில்சாமி கவலைப்படாத நாளில்லை. “மொதல் படம், எப்படி யிருக்க போவுதோ!” என்று சதா மொண மொண வென்று நொந்து கொண்டேயிருந்தான். அந்த செட்டுலே இப்படிச் செஞ்சிருக்கலாம், இந்த செட்டிலே அப்படிச் செஞ்சிருக்கலாம். இந்தப் பயலுவ கதை என்னன்னு சொல்லாமியே வேலை வாங்கியிருக்கானுவ. ஹும்” என்ற உஷ்ணப் பெருமூச்சுடன் கடந்து போன தவறுகளுக்கெல்லாம் கரைந்து கொண்டிருந்தான்.

ஸ்புட்னிக் காலையில் உலகத்தைச் சுற்றிற்று, அன்று மாலை மயில்சாமி நடித்த படமும் வெளிவந்தது.

நாலாம் நாள் காலையில் வீடு அமளிப் பட்டது. கார் காராக வந்து நின்றது. மபில்சாமி தடுப்பைத் தாண்டிக் கொண்டு கூடத்தின் எங்கள் பகுதிக்கு வந்தான்.

“அண்ணே, இந்த நாற்காலியையும் ஸ்டூலையும் எடுத்திட்டுப் போறேன். செத்தைக் களிச்சு கொண்டாந்து போட்டுடறேன்.”

“கேக்கணுமாடா தம்பி!”

யார்யாரோ வந்தார்கள். பேசிக்கொண்டிருந்தார்கள். நாற்காலியும் ஸ்டுலும் என் அறைக்குத் திரும்பி விட்டு மீண்டும் இரண்டுதடவை என் அனுமதியின்பேரில் மயில்சாமியின் கூடத்துக்குச் சென்றன.

நாலாம் தடவை வாசலில் கார் வந்து அவன் என் அறைக்கு வந்து நின்றதும் நாளே நாற்காலியை விட்டு எழுந்து கொண்டு விட்டேன். மயில்சாமி சிரித்தான், “சாயங்காலம் வரைக்கும் பொறுத்துக்குங்கண்ணே!” என்றன்.

சாயங்காலம் வெளியே போய்விட்டு வந்தபோது மயில்சாமியின் முன் அறையில் எட்டிப் பார்த்தேன். பளபளவென்று நாலு பிரம்பு நாற்காலிகள் சாய்ந்தும் உடகார்ந்தும் கொண்டிருந்தன.

“மயில்சாமி இல்லையா ?”

“வெளியேதான் போனாங்க!” என்று அவன் மனைவி பதில் சொல்வதற்கும் வாசலில் ஒரு சின்ன டாக்ஸி நிற்பதற் கும் சரியாயிருந்தது. மயில்சாமி அதிலிருந்து இறங்கினான்.

மயில்சாமியோடு பல சாமான்கள் இறங்கின. ஒரு முகம் பார்க்கிற நிலைக் கண்ணாடி. ஒரு கைக்கடிகாரம், ஒரு சுவர்க் கடிகாரம். குழந்தைகளுக்குத் தங்க ஜீகினாச் செருப்புகள், அவன் மனைவிக்குத தங்க ஜிகினாச் செருப்பு, காப்பி பலகாரம் சாப்பிட முன்னாடி வைக்கிற குட்டை ஸ்டூல் காலு, ஒரு அமெரிக்கன் பேனா ஸெட்டு, ஒரு படி பிடிக்கிற வெள்ளிக் கெட்டில், தலைக்குப் பெண்கள் கூந்தலை மாட்டுகிற கறுப்பு வளையம் இரண்டு, தலைவலை இரண்டு ஜோடி, நைலான் புடவை அரை டஜன். மயில்சாமி கழுத்தில் ஒரு சங்கிலி – மயில்சாமி என்னிடம் எல்லாவற்றையும் காண்பித்தான்.

“அண்ணே! கோபிச்சுக்கப்படாது. உங்க நாற்காலியை மட்டும் உள்ளாரத் திரும்பிக் கொண்டு வந்து வச்சேன். ஸ்டூலை நானே வச்சுக்கிட்டிருக்கேன். அதுலெ உட்கார்ந்து காலமே ஒரு படத்துக்குக் கையெழுத்துப் போட்டேன் பாருங்க! நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க! அப்புறம் சாயங்காலம் நாலு மணி வரைக்கும் ‘தபதப தபதப’ன்னு வந்துக் கிட்டேயிருந்தாங்க. இன்னக்கிப் பதினாறு படத்துக்குக் கையெழுத்துப் போட்டிருக்கேன். காலமே போட்ட முதல் கையெழுத்து இரண்டாயிர ரூபாய்க்கு. அப்புறம் பாருங்க….” கண்னைச் சிமிட்டிக் கொண்டான் மயில்சாமி. “சும்மா கேட்டு வைப்பமேன்னு, அடுத்தாப்பல ஒரு ப்ரொட்யூசர் வந்தாரு, அவருகிட்டே எண்ணாயிரமனு போட்டேன். மனசிலே கொஞ்சம் தயக்கம்தான். ஆனால் அந்த ஆளு ‘அதற்கென்ன’ன்னாரு. அவ்வளவு தான், அப்படியே எழுதினாரு. ஆயிரம் அட்வான்ஸைக் கொடுத்தாரு. அப்புறம் வேடிக்கையைக் கடைசி வரைக்கும் பார்த்துப்பிடறதுன்னு இரண்டு இரண்டா ஓசத்திக்கிட்டே போனேண்ணே! பதினாறாவது படம் முப்பத்திரண்டாயிரத்துக்குப் போட்டிருக்கேன். எல்லாம் இந்த ஸ்டூல்லே உட்கார்ந்த வேளைதான். என் இ.து எங்கிட்டவே இருக்கட்டுமண்ணே” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை கையில் வைத்து, ஒரு கும்பிடு போட்டான். “அண்ணன் மறுதனிக்கப் படாது” என்று பஞ்சைச் சிரிப்புடன் நின்றன் மயில்சாமி.


மூன்றாம் நாள் விடியற்காலையில் லாரியில் ஏழெட்டு ஆட்கள் வந்தார்கள்.

“அண்ணனுக்கில்ல? வரவங்க போற வங்க ஜாஸ்தியாயிடிச்சு. வேறே தனி ஊடா நூத்தம்பது ரூவாயிலே பாத்திருக்கேன் அண்ணே” என்றான் மயில்சாமி.

லாரியில் சாமான்கள் ஏறின. டாக்சியில் மயில்சாமி குடும்பத்தோடு நானும் அவளும் கூடப் போய்ப் புது வீட்டில் அவர்களைக் குடியேற்றினோம்.

“என்னமோ இப்படிப் புசுக்குனு வந்திட்டேனென்று நினைக்கப்படாது அண்ணன். எனக்குப் பழைய நாளெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. அதுவும் இப்ப அப்படியே குபுகுபுன்னு நினைவு வருதுண்ணே”- மயிலசாமிக்குக் கண்ணில் நீர் கட்டிவிட்டது.

“பேசாம இரு மயிலு – இந்தத் தொழிலுக்குக் கொஞ்சம் டாப்பு ஜொப்பெல்லாம் வேணும், இல்லேன்னா மதிக்க மாட்டானுக. என்னைக் கேட்டா இன்னும் கொஞ்சம் பெரிய வீடா வாடகைக்கு எடுத்திருக்கணும்” என்று நானே அவனுக்கு ஆறுதல் சொன்னேன்.

“பாத்தப்பம், அண்ணே! ஒரேயடியா வீங்கப்படாது” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டான் அவன்.

புது வீட்டில் ஒரு மாதம்கூட, இல்லை அவன். அதற்குள் எண்பதாயிரத்துக்குச் சொந்த வீடே வாங்கி விட்டான். அந்த மனை புகு விழாவுக்குப் பந்தல், சமையல் வரவேற்பு எல்லாம் அடியேன் மார்பத்தில் தான் நடந்தேறின. வீட்டின் நுழைவில் “சுபுத்தினியகம்” என்று எழுதியிருந்தது.

“என்ன மயிலு இது?” என்றேன்.

” அண்ணனுக்கு மறந்து போச்சு முதப் படம் ரிலீஸ் ஆன அன்னிக்குக் காலமே ஒண்ணு பறந்திச்சில்லே ரஷ்யாவிலேர்ந்து- “

“ஆமாம், ஸ்புட்னிக்கு.”

“பேப்பரைப் பார்த்தேன். அது பூமியிலேந்து கிளம்பின அதே நேரத்துக்குத் தான் அந்தப் பட ரோலுங்களும் கம்பெனியை விட்டுத் தியேட்டருக்கு ‘வான்’லெ கிளம்பிச்சுன்னு தெரிஞ்சுது. இதுக்கும் நமக்கும் ஆண்டவன் ஏதோ ஒத்துமை வைச்சிருக்கான்னு ஒரு தோத்தம் எனக்கு – இதெல்லாம் எல்லாக் கவனிச்சாத்தானேண்ணே தெரியுது. அப்புறம் ரெண்டாவது பறக்க விட்டான் பாருங்க, அன்னிக்குத்தான் நான் இருபத்தஞ்சாவது படத்துக்குக் கையெழுத்துப் போட்டேன். இந்த ஸ்புட்னிக்குக்கும் நமக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு அப்ப இன்னும் கெட்டிப்பட்டுப் போச்சு. ஊட்டை வாங்கினேன். உடனே அதும் பேரையே வைச்சேன். என்ன பார்க்கிறீங்க? பேர் வேறே மாதிரியிருக்குன்னு யோசிக்கிறீங்களா? பேர் வைச்சாலும் தமிள்ப் பேரு மாதிரி இருக்கணும் லேண்ணே. ஸ்புட்டுனிக்குன்னா புட்டு. இடியாப்பங்கற மாதிரி ‘சௌண்டு’ என்னமோப்போலல்ல கேக்குது. அதான் சுபித்தினியகம்னு வைச்சேன். ஸ்புட்னிக் பேர் மட்டும் இல்லாம இன்னும் என்னென்னமோ ஐடியாவெல்லாம் வருது பாருங்க. புத்தி, சுபுத்தி, சுபுத்தினியகம். எப்படி நம்ம சேர்வை அண்ணன் என்ன கேட்டார் தெரியுமில்ல? சேர்வை யண்ணே, என்ன) கேட்டீங்க அப்ப?”

பக்கத்து ஜமாவில் இருந்த ஒரு ‘ஆள் சிரித்துக் கொண்டே. “ஏன், தம்பி! சம்சாரத்தின் பேரை நேரடியாப் போடாமல் இப்படிப் போட்டிருக்கிங்க போலிருக்குன்னேன். என்ன தப்பு?” என்றார்.

“கேட்டீங்களாண்ணே. சுபுத்தினின்னா நல்ல புத்தி உள்ளவ. அவ அகம், அவ வீடு… சேர்வையண்ணன் ஐடியா பார்த்தீங்கள்ளே?”

“பலே! பலே! தெய்வம் கண்ணைத் தொறந்திச்சுதுன்னா எல்லாம் சேர்ந்துக்குது” என்றேன்.

“அகமுடையான்னு நாம சொல்லுவம், சுபுத்தினியாயிருக்கிறவங்களுக்கு அகம் யாரு?” என்று சேர்வையண்ணன் அடுத்தாற்போலக் கேட்டார்.

“எப்படிண்ணே?” என்று கேட்டான் மயில்சாமி.

“சுபுத்தினிக்கு அகம் நீதான்” என்றேன்.

“சேர்வை அண்ணே, பாத்தீங்கள்ளே. அண்ணன் தமிளைக் கரைச்சுக் குடிச்சவங்க, ஒளவை, கம்பரு எல்லாம் மனப் பாடம். அவங்ககிட்ட நடக்காது.”

மயில்சாமி வாயிலிருந்து வரும்போது இதெல்லாம் என்னமோ அசட்டுத்தனம் என்றே எனக்குத் தோன்ற மறுத்து விட்டது. கூரையைக் கிழித்துக் கொண்டு தடுக்க முடியாமல் வரும் பணத்தையும், சேர்த்துவிட்ட சம்பாரங்களையும் பெருமைகளையும் சிறு பிள்ளை போல் கபடமில்லாமல் அவன் ரசிக்கிற தினைப்புத்தான் எனக்குப் பட்டது. ஏதோ நல்ல பாலாகக் குடிக்கிறமாதிரி இருந்தது எனக்கு.

ஆள் கூட எத்தளையோ மாறுதலுக் குள்ளாயிருந்தான். கொஞ்சம சதை போட்டிருந்தது. உடம்பில் ஒரு மினு மினுப்பு. சில்க் சட்டை, அரையில் இரண்டு அங்குலம் ஜரிகை போட்ட வெண்பட்டு, பாம்புவீரல கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களில் தினுசு தினுசாக மோதிரங்கள், இடது ஆள்காட்டியில் இரண்டு மோதிரங்கள். இப்போது தான் குளித்துவிட்டு வந்தாற்போல் மினு மினுப்புடன் மின்னுகிற தலை. தலைமயிர் கூட மாறிவிட்டது. இழைப்புளி தள்ளுகிற சுருள்களைப்போல் தலைமயிர் முழுவதும் சுருள் சுருளாகச் சுருண்டிருந்தது. சிறிதளவாவது முகத்தில் காண்கிற எண்ணெய் அறவே மறைந்து நிரந்தரமாக ஒரு கடைத்தவிட்ட மெருகு. அவனை விட்டுக் கண்ணை எடுக்கவே முடியவில்லை.

ஆனால் வெகு நேரம் பார்க்க முடியவில்லை. கிருகப்பிரவேசத்தன்று கூட அவனுக்கு ஓய்வில்லை! ராத்திரி சாப்பாடாகி விருந்தாடிகள் முழுவதும் கலைவதற்குள் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். கொல்லம் உப்பங்கழியில் வைத்து ஷூட்டிங்காம்.

கொல்லத்திலிருந்து காலை எட்டு மணி இருக்கும். ஒரு ‘ட்ரங்சால்’ வந்தது.

“வந்து சேந்திட்டேண்ணே. நீங்க ஊட்டுக்குக் கிளம்பிடாதீங்க. நாளானிக்கிக் காலமே வந்திருவேன். அப்புறம் தான் போகணும்”.


மூன்றாம் நாள் காலையில் ஏழெட்டு பலாப்பழம், ஒரு டஜன் மிதியடிகள், மலையாளத்துத் தைலங்கள், பச்சைப் பாக்கு அரை முட்டை-இப்படி வந்து சேர்ந்தார்கள் காரும் மயில்சாமியும்.

என்னென்ன வாங்குவான் அவன் என்று சொல்ல முடியாது.

“ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தாண்ணே. மாதளம் பளத்தைத் தோலைக் குந்துனாப்பல உரிச்சு ஒவ்வொரு முத்திலே இருக்கிற சாத்தை யெல்லாம் கக்கப் பண்ணி ஒரு குளா வளியா விளப்பண்றது இலேசான காரியமா? நம்ம ஊர்லெ செய்வாங்களா? இத பாருங்க – கோமதி – நம்ம அண்ணனுக்கு அந்தமாதளங்கா மிசினைக் கொண்ணாந்து காட்டு. நெக்லஸை எடுத்துக் காட்டலையா அண்ணனுக்கு? பம்பாய்க்குப் போனேன், அண்ணே, போன மாசம். அப்ப ஒரு வெள்ளைக்காரங் கிட்டே வாங்கினேன். நாப்பத்திரண்டாயிரம் ஆச்சு. அப்புறம் இங்க வந்து பச்சையிலே பதக்கம் பண்ணிச்சு. எல்லாம் நாப்பத்தஞ்சு ரூவா ஆயிரிச்சு.”

அட்டிகை பூத்துக் குலுங்கிற்று. வாங்கிப்பார்த்தேன்.

“ஹாலண்டுன்னு ஒரு ஊராமே, அங்கெல்ல கட்டுறானாம்” என்றான் மயில்சாமி.

திடீரென்று வாத்தியமும் பாட்டுமாகக் கேட்டது.

“எங்க பாடுது, சொல்லுங்க, பார்ப்பம்’ என்று ரெத்தான் மயில்சாமி.

நான் உச்சி மோட்டைப் பார்த்தேன். கதவிடுக்கில் பார்த்தேன். சுவரைப் பார்த் தேன். “இல்லே. இல்லே, இல்லே’ என்று நான் பார்க்கிற ஒவ்வொரு இடத்தையும் பார்த்து மறுத்துக் கொண்டே வந்தான், “இங்கே!” என்ற வலது மார்பைத் தட்டிக் கொண்டான். சட்டையின் உள் பாக்கெட்டில் கையை விட்டு டயரி ஒன்றை எடுத்தான். டயரி இல்லை. ரேடியோ. அதை என் முன்னால் வைத்து எங்கேயோ தடவினான். சாட்டைமாதிரி புசுக்கென்று ஒரு கம்பி கிளம்பி நின்றது. “ஏரியல் அண்ணே” என்றான் அவன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மலைத்துப்போய்ப் பார்த்தேன்.

“நம்ம ஊரிலே சித்தர் பாடல்லெ சொல்லி யிருக்கும்பாங்க. இந்த ஆளுங்க செஞ்சே காமிச்சுப்பிட்டான் பாருங்க.”

மயில்சாமி வீடு முழுவதும் ஆச்சரியங்களாக நிரப்பியிருந்தான். வீட்டுக்கு வந்த எல்லாவற்றையும் சொல்லி, “என்னத்துக்கு இப்படி கண்டா முண்டானெல்லாம் வாங்கறான்னுதான் புரியலே” என்று சொன்னபோது இவளுக்குக் கோபமே வந்து விட்டது.

“என்னமோ ஆசை. போகட்டுமே. உங்க மோட்டார் டயர் செருப்பு என்னமோ நூறு சண்டை பாத்த சிப்பாய் மாதிர் காதலேந்து குதிவரைக்கு நூறு பிளாஸ்திரி போட்டுக்கிட்டு உங்களை நாலு வருசமாச் சுமக்குது.”

“மோட்டார் டயர் செருப்பைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?”

“பின்னே! அவன் மாத்திரம் உபயோகமில்லாம வாங்குவான! ஏதோ ஆசை!”

” அதுக்காக-இப்படியா? குழந்தைகளுக்கு விரலை நீட்ட முடியலே ஒவ்வொரு விரலுக்கும் ஒரு மோதிரம்; ஒவ்வொரு மோதரத்திலிருந்தும் சங்கிலி கிளப்பிக் கை வளையோட ஜாய்ண்டு. கல்கத்தாக்குப் போனப்ப மூவாயிர ரூபாய்க்கு ஜவுளி வாங்கியிருக்கான். குழந்தைகளுக்குச் சட்டை வாங்கினால் தடவைக்கு ஏழெட்டு டஜனா வாங்கறது !

“உங்கங்களுக்கென்னாங்கறேன்? உங்க பணத்தை எடுத்துச் செலவு பண்ணாப்பலல்ல அலமலங்கறீங்க? மரியாதைக்கு அண்ணன்னு கூப்பிட்டா நெச அண்ணன மாதிரியே காயறீங்களே?”

“அட, செலவு பண்ணறதிலே இத்தனை அசிங்கமா? பாந்தமாப் பண்ண வாணாம்? அதுக்கில்ல சொல்றேன்?”

“அவன் என்ன அசிங்கமா செலவு பண்ணான்? கோமதியைத் தவிர யாரும் அவனுக்குப் பொம்பிளையாவே படமாட்டாங்க, ஒண்ணுக்கு ரெண்டு வேளையா காப்பி குடிப்பான். அவ்வளவுதான்.”

“அது சரி.”

“பின்னே?”

இவள் சொன்னால் நான் சிரிக்காமல் இருப்பேனா? தீபாவளிக்கு முன்னால் நல்ல பால் கிடைக்கவில்லை என்று டில்லியிலிருந்து யானை மாதிரி சுருட்டை எருமை ஒன்று வாங்கி வந்தான். அதைப் போய் வாங்க என்ன செலவு! ஒரு கோனாரோடு விமானத்தில் டில்லிக்குப் போய் மாட்டைட வாங்கி ரயிலில் ஏற்றி, விமானத்தில் திரும்பிவந்து…எல்லாம் சரி. நாலாவது மாடி கட்டட்டும். அதன் மேல் ஸ்புட்னிக் என்னத்துக்கு?

சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறபோது என்னை எழுப்பி, “காப்பிக் கொட்டை மிஷினுக்குப் போய் வாரேன். பாலுக்கு ஏனம் வைச்சிருக்கேன். வந்தா வாங்கி வைச்சு மூடிப்பிட்டுத் தூங்குங்க” என்று சொல்லிலிட்டுப் போனாள் ராஜி.

மயில்சாமிக்கு ராத்தூக்கமே இல்லை யாம். ராத்திரி ஒன்பது மணியிலிருந்து இரண்டு மணி வரையில் ஷூட்டிங், அங்கிருந்து வேற ஸ்டூடியோவுக்குப் போய் உடை மாற்றி, காலை ஐந்து மணி வரையில் ஷூட்டிங், பிறகு பல் துலக்கிக் குளித்துவிட்டு மறுபடியும் ஏழுமணியிலிருந்து ஷூட்டிங். பகல் ஒரு மணிக்கு அது முடிந்ததும் இரண்டு மணிய லிருந்து ராத்திரி இரண்டு மணி வரையில் ஷூட்டிங். உடனே மூன்று மணிக்குக் காரில் ஏறி மைசூர் போய் அங்கே வெளிக் காட்சி ஷூட்டிங்…..

போடா போ.

நான் பகலில் தூங்காமல் இருக்கமாட்டேன். கோடி ரூபாய் கொடேன். சனி, ஞாயிறு பிற்பகல் தூக்கத்தை விடுவேனோ? தொண்டைத் தண்ணீர் வற்ற ஐந்து நாள் கத்துகிறேனே, எதற்கு?

ஆனால் இதற்கு எத்தனை இடைஞ்சல்! மூன்று மணிக்குக் கன்னத்தில் அறை கிறாற்போல் பால்காரன் கத்துகிறகுரல்.. இல்லாவிட்டால் வாசலில் வெயில் வீணாகாமல் கிரிக்கெட் ஆடுகிற தெருப்பட்டாளம்! தலைவலி மருந்து விளம்பரம் பண்ணுகிற தலைவலி மேலண்டை ஜன்னல் வழியாகப் பாடுகிறது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் வேலைக்காரப் பெண் பிள்ளை! என்னமோ இடும்பி வந்து வீட்டு வேலை செய்கிறாற்போல், அவள் துடைப்பத்தை எடுத்துப் பெருக்குவதே மாவுமிஷின் அரைக்கிறாற் போல். இன்று பேச வேறு ஆரம்பித்து விட்டாள். கால் தூக்கமும் அரைத் தூக்கமுமாக அதையும் என் காது வாங்கிக் கொண்டுதான் இருந்தது.

“நாப்பது ரூபாயா? எதுக்கு?”

“வேணும், ரொம்ப அவசரம். நாளன்னிக்குக் காலமே கொடுத்திடறேனக்கா,”

“நாப்பது ரூபாய்க்குத் திடீரென நான் எங்க போவுது?”

“என்னக்கா இது?”

“நாலு அஞ்சுன்னாலும் பாக்கலாம். அதுவும் வாத்தியார்கிட்டதான் பாக்கணும். அவங்களும் முந்தாநேத்துதான் பத்து ரூபா கொடுத்தாங்க. சம்பளத்திலே ரண்டு ரண்டாப் புடிச்சிக்குங்கன்னுவாங்கினேன். இந்தச் சனி பெரிசாயிருக்கு. நேத்துத்தான் குளியல். அதுக்குத்தான் வாங்கினேன்.”

சனி சனி என்று தான் தன் மகளைக் குறிப்பிடுவாள் அவள்.

”அப்படியா? அக்காகிட்ட கேட்டா கிடைக்கும்னு செனச்சேன்.”

“என்ன செய்யிறது?”

எனக்கு என்னமோ ஒரு திகைப்பு! யார் இது? மயில்சாமி குரல்மாதிரி இருக்கிறதே என்று கண்ணைக் கசக்கி எழுந்தேன். வாசல் கதவைத் திறந்தேன். பளீர் என்ற கருகருவென்ற கார் நின்று கொண்டிருந்தது. வழக்கமாகக் கார்களுக்கு இரண்டு அல்லது நாலு முன் விளக்குகள் இருக்கும். இந்தக் காரில் ஏழெட்டு இருந்தது. பக்கத்தில் வேறு நாலு விளக்குகள். மயில்சாமி கார்மாதிரி தான் இருந்தது.

படியிறங்கினதும் திண்ணையோரமாக, காம்பவுண்ட் சுவருக்கு இந்தண்டையிருந்த இடைவெளியில் மயில்சாமி நின்று கல்பகத்தோடு பேசிக் கொண்டிருந்தான். வலது கையில் துடைப்பக் கட்டையை வைத்துக்கொண்டே வேலைக்காரி கம்பகம் பதில் சொல்லுகிறள்.

“அடேடே! அண்ணன் எழுந்துக்கிட்டாங்களே” என்றான் மயில்சாமி.

“அட மயில்சாமியா! வா தம்பி! என்ன இங்கே நிக்கிறே! எப்ப வந்தே?”

”நான் வந்து அரை மணியாச்சுண்ணே. நல்லாத் தூங்கிக்கிட்டிருந்தீங்க. கனைச்சேன். இருமினேன். நீங்க எழுந்துக்கலெ. சரி, காத்தாட நிப்பம்னு இங்கே வந்தேன்”

கிரிக்கெட் விளையாடும் தெருச் சிறுவர்கள் காம்பவுண்டுக்கு வெளியே நின்று மயில்சாமியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே வந்தான் அவன்.

“உட்காரேன்.”

“இல்லேண்ணே, போகணும்.”

மயில்சாமி கொள்ளாமல் பறந்து கொண்டிருந்தான்.

“போகலாம். என்ன காரியம்?”

“ஒரு நாப்பது ரூவா பணம் வேணும்.”

“நாப்பது ரூபாயா?”

“ஆமாம்.”

“திடீர்னு-“

“காலமே லட்ச ரூபாய்க்கு ஒரு படத்துக்குக் கையெழுத்துப் போட்டண்ணே. ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாங்க, போன மாசம் கொண்டாமங்கலத்திலே ஒரு பள்ளிக்கூடத்துக்குக் கட்டடம் கட்ட நாலாயிரம் ரூபாய் தரேன்னு ‘மீட்டிங்’கிலே சொல்லிப் பிட்டேன். அதைக் ‘கொடு கொடு’ன்னு நச்சரிச்சிட்டானும். உடனே பாங்கியிலே இருக்கிறது. அந்த ஆயிரம் எல்லாத்தியும் சேர்த்து அனுப்பிச்சிட்டேன், அண்ணே! இன்னி மத்தியானம் ஒரு மணியிலேர்ந்து கையில் காலணா இல்லேண்ணே. ஆறு மணிக்குப் பங்களூர் போகணும். ஷூட்டிங். நாளை ராத்திரிதான் வருவேன். வீட்டிலே ஏதாவது கொடுத்திட்டுப் போகணும். கைச் செலவுக்கு வேறே வேணும். நாற்பது ரூபா இருந்தாப் போதும்”

உட்கார முடியாமல் பறந்தான் அவன். முகத்தில் ஈயாடவில்லை. எல்லாச் சொத்தும் பறிபோனது போல் முகத்தில் ஒரு பயமும் வெளிரும் படர்ந்து கிடந்தன. வெறும் பயமாகக்கூட இல்லை. ஒரு திகில்.

“ப்ரொட்யூசருக்கெல்லாம் போன் பண்ணினேன். கையை விரிச்சிட்டானுவ. நான் போய் நகையை அடகு வைக்கலா மாண்ணே! இத்தினி கஷ்டம் வரும்னு நான் நினைக்கவே இல்லேண்ணே. யார் யாரையெல்லாம் கஷ்டப்படுத்திருக்கேனோ தெரியல்லே.” மயில்சாமியின் கண்னில் நீர்த்துளி கண்டது.

“என்ன தம்பி இது?”

“நெசமாகச் சொல்றேண்ணேன். ஒருத்தருக்கும் இதுவரைக்கும் வஞ்சனை பண்ணினது இல்லே. இன்னிக்கி என்னைச் சோதிச்சுது பாருங்களேன் தெய்வம். எத்தினி பேரைக் கேட்டாச்சு. நம்ம கல்பகத்தைக் கூடக் கேட்டிட்டேன், பாருங்க.”

நாலு மணி நேரம் பணமில்லாமல் அவன் வாழ்க்கை தைரியம் எல்லாம் இருண்டு விட்டது.

”அண்ணே! நான் எவ்வளவோ தப்பு செஞ்சிருப்பேன். அதையெல்லாம் மறந்தட்டு இப்ப எனக்குக் கைகுடுங்க. நான் மறக்கவே மாட்டேன், சாகிறவரைக்கும் மறக்க மாட்டேண்ணே.”

கல்பகம் ஜன்னல் வழியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“தாம் தாமனு வாரி இறைச்சேன், பணத்தை மரியாதை இல்லாம, இன்னிக்கி அந்த லச்சுமி சோதிச்சுப்பிட்டா” மயில்சாமி கண்ணீர் அடைக்கப் பேச முடியாமல் நிறுத்திக் கொண்டான்.

அந்தச் சமயம் பார்த்துக் காப்பிக் கொட்டைக் கடையிலிருந்து அவளும் வத்து விட்டான்.

“வா தம்பி” என்று மலர்ந்து வரவேற்றவளுக்கு அவன் இருந்த நிலையைக் கண்ட தும் வெதறிப் போய் விட்டது. என்னை அர்த்தத்தோடு பார்த்தாள்.

“உங்கிட்ட எதானும் பணம் இருக்கா?” என்றேன்.

“இருக்கே! பெரியம்மா கொடுத்துவச்சிருக்கிற அம்பதுரூபாய் இருக்கு.”

“எடுத்துட்டு வா.”

பணம் வந்தது.

“அம்பது ரூபாயா வச்சுக்கவேன் தம்பி!”

“வாண்டாண்ணே. நாப்பது போதும்.”

“அட வைச்சுக்க சொல்றேன்.”

“வேண்டாம்” என்று பத்தைத் திருப்பி வைத்து வீட்டான்.

“நாளானிக்கிக் காலமே நூறாத் திருப்பிக் கொடுத்திடறண்ணே”

“நூறா! இப்பத்தானே லட்சுமி. மரியாதைன்னு வேதாந்தம் பேசினே.”

“இருக்கட்டுண்ணே.” பஞ்சைச் சிரிப்புடன் எழுந்தான் அவன்.

“காப்பி சாப்பிட்டுப் போ, தம்பி!” என்று அவள் அதட்டியதும் உட்கார்ந்து விட்டான்.

“இன்னக்கி நரகவேதனை பட்டாச்சிண்ணேன். அண்ணன் இல்லாட்டி என்ன ஆயிருக்கும்!” என்று அதே சிரிப்புச் சிரித்தான். “ஒரு பெரிய புசல் அடிச்சாப்பல ஆயிடுச்சுண்ணே.”

“அதுக்காகக் கூட்ற பொம்பிளையைப் பணம் கேட்டியா?”

“கேட்டா என்ன அண்ணே? இப்ப அது நாளன்னிக்கி ரூபாயா கொடுத்தா வாங்கிக்கும். நீங்க என்னென்ன சண்டை போடப் போறீங்களோ? அப்படியும் தெரியாத பொம்பிளையா அது? அஞ்சு வருசமா கூடப் பொறந்த மாதிரிதானே பளகுது – வேலை செஞ்சாலும்,”

காப்பி வந்தது. சாப்பிட்டான். சொல்லிக் கொண்டான். காரில் ஏறிக்கொண்டான். போய் விட்டான். தெருப்படைகள் கையெழுத்துக்கு நீட்டின் கோட்டுகளை. “நாளைக்கு நாளைக்கு” என்று மீறிக் கொண்டு கிளம்பி விட்டான்.

ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு வேலைக்காரி கூடத்தைப் பெருக்க ஆரம்பித்தாள்!

– ஜூலை 1959

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *