மனமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,728 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புத்தக வெளியீட்டுவிழா முடிந்ததும் நந்தா என்கிற நந்தகுமார் அவசரமாக வெளியேறி முக்கியச் சாலைக்கு வந்தார். அவர் அருகில் வந்து நின்றது ஒரு கார். கதவைத் திறந்துகொண்டு இறங்கினார் வெங்கட்பிரபு.

‘வணக்கம் அண்ணே. வாருங்கள் உங்களை இறக்கிவிட்டு பின் நான் செல்கிறேன்.’ என்றார்.

உடனே ஏறிக்கொண்டார் நந்தா. நந்தா எப்பொழுதொ சிங்கப்பூருக்கு வந்துவிட்டார். வெங்கட்பிரபு சமீபத்தில்தான் வந்தார். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்தான். எப்படி இவ்வளவு சீக்கிரம் சிங்கப்பூரைப் புரிந்துகொண்டு காரும் வாங்கினார் வெங்கா? அதிசயப்பட்டார் நந்தா. வாழ்க்கையில் எதையோ தொலைத்துவிட்டதுபோல் உணர்ந்தார். உடனே முடிவு செய்தார் கார் வாங்கிவிடவேண்டுமென்று.

அடுத்த நாள் ஒரு விளம்பரம். அவருக்காகவே வந்தது.

‘முன்பணம் வேண்டாம். உங்கள் காரை நீங்கள் உடனே ஓட்டிச் செல்லுங்கள்’

என்றது அந்த விளம்பரம். உடனே அந்த எண்ணைப் பிதுக்கினார் நந்தா. அடுத்த முனையில் ஒரு சீனப்பெண் கொஞ்சினார். சேமநிதி விபரம், சம்பளச் சான்று, வருமான வரித் தகவலுடன் ஓட்டுநர் உரிமத்தையும் உடனே மின்பிரதியில் அனுப்பச் சொன்னார். உடனே அனுப்பினார் நந்தா. அன்று மாலையே அந்தப் பெண் அழைத்தார்.

‘வங்கி உங்களுக்குக் கடன் தர ஒப்புக்கொண்டுவிட்டது. உடனே வந்து உங்கள் காரை ஓட்டிச் செல்லுங்கள்.’ என்றார்.

பத்துப் பதினைந்து கையெழுத்துக்களைப் பதிந்தபின் கார்ச்சாவி கைக்கு வந்தது. லாவண்டர் எம்மார்ட்டி அருகில்தான் வீடு. மனைவி காஞ்சனா, மூன்று வயது மகன் தீபன், பணிப்பெண் சகிதம் ஏற்றிக் கொண்டார். ஜாலம்பசாரில் தவழ்ந்து விக்டோரியா சாலையில் திரும்பி மீண்டும் வீடு வந்தார் நந்தா. வாழ்க்கையில் தான் தொலைத்துவிட்டதைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் மிதந்தார்.

நந்தாவின் ஊர்க்காரர். இன்னொரு நண்பர் பாரிவள்ளல். ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். அவர் மகனுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளாம். அவசியம் வரவேண்டுமென்றார்.

ஞாயிற்றுக்கிழமை. பாரிவள்ளல் வீடு. கதவு திறந்தே இருந்தது. ஓர் அழகான மீந்தொட்டியும் அதில் நளினமாக நீந்தும் அந்த ஒற்றை மீனும் நந்தாவை வரவேற்றது. மைய ஹாலில் மோனலிசா புன்னகைத்தார். சாப்பாட்டு மேசையின் நடுவில் ஒரு வட்டப் பலகை கேக்குடன் சுழன்றது. வீடு மொத்தமும் ஒரு கண்காட்சியாய்ச் சிரித்தது. மீண்டும் எதையோ தொலைத்துவிட்டதுபோல் உணர்ந்தார் நந்தா. தன் வீட்டையும் இதுபோல் செய்துவிடவேண்டும் என்று அப்போதே தீர்மானித்தார். உடனே அணுகினார் ஒரு பொறியாளரை.

மதிப்பீடு $20,000 என்றது. விண்ணப்பித்தார். அன்று மாலையே அந்தக் கடனும் கிடைத்துவிட்டது. பதினைந்தே நாளில் தேசிய விழாக் கொண்டாட்டமாய் பளபளத்தது வீடு. அதே மீன்தொட்டி. அதே சாதி மீன். காஞ்சனா பெருமைப் பட்டுக் கொண்டார்.

சில மாதங்கள் ஓடின. காருக்கு மாதம் $900 புதுப்பிப்புக்கு மாதம் $500 பெட்ரோல் செலவுகள் கார் நிறுத்தச் செலவுகள் என்று துண்டாக $2000 ஒவ்வொரு மாதமும் தொலைந்து போனது. தொலைபேசிக் கட்டணம், தொலைக் காட்சிக் கட்டணம் தண்ணீர் மின்சாரம் அத்தனையும் செலுத்திய ஜைரோ கணக்கு அம்பேலானது. நினைவூட்டல் கடிதங்கள் ஒவ்வொரு நாளும் ஏழெட்டு வந்தன. வீட்டு வசதிக் கழகம் கடிதம் அனுப்பியது.

‘மூன்று பேருக்கு ஏன் நாங்கறை வீடு. உடனே மூன்றறைக்கு இறங்கவும்’

என்று ஆலோசனை வழங்கியது. கடன் அட்டை பாக்கிகள் வழக்குப் போடுவோம் என்று சில வங்கிகள் மிரட்டின. நந்தா காட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் காஞ்சனா கேட்டார்.

‘நாம் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும். நிச்சயம் அது ஓர் அழகான பெண் குழந்தையாகத்தான் என்று.

கேட்ட மாத்திரத்தில் ஆயிரமாயிரமாய் ஆகும் பிரசவச் கண்முன் ஓடியது. அடி வயிற்றில் யாரோ அடுப்பு எரித்தார்கள். வாழ்க்கையின் மொத்த மகிழ்ச்சியையும் இழந்தார் நந்தா. ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் கடிதமும் இருதயத் துடிப்பை இரட்டிப் பாக்கின. அந்த சமயத்தில்தான் நியூபேப்பரில் வந்தது ஒரு செய்தி. படித்த மாத்திரத்தில் உடம்பின் வெப்பநிலை ஓரிரு டிகிரி குறைந்தது. அப்படி என்ன செய்தி அது?

‘நூருல் ஹலீமா என்ற பெண் தன் நாற்பதாம் வயதில் பத்துக் குழந்தைகளுடன் விதவையானாராம். கணவர் ஒரு சாலை அகால மரணமாம். பத்து ஆண்டுகளாக மாதம் ஆயிரம் வெள்ளியில் பத்துப் பிள்ளைகளையும் ஆளாக்கியதுடன் மாதம் தன் வீட்டுக்கான கடைசி தவணையையும் செலுத்திவிட்டாராம். எவரிடமும் ஒரு காசு கடன் இதுதான் அந்தச் செய்தி.

இது எப்படி சாத்தியம்? இந்தப் பெண்ணை உடனே சந்திக்க வேண்டும். தீர்மானித்தார் நந்தா. நியூபேப்பரை அழைத்தார். முகவரி தந்தார்கள். அறிவித்துவிட்டுச் செல்லுங்கள் என்று ஆலோசனையும் தந்தார்கள். உடனே அழைத்தார் நந்தா. ஹலீமாதான் பேசினார்.

‘உங்களைப் பற்றிய செய்தி படித்தேன். வாழ்த்துக்கள். உங்களை நான் பார்க்கவேண்டும்.’

‘இன்று இரவு எட்டு மணிக்கு வாருங்கள்.’ என்றார் நூருல்.

காஞ்சனாவை மட்டும் அழைத்துக் கொண்டு நந்தா புறப்பட்டார்.

தெம்பனீஷ் எம்மார்ட்டி அருகில்தான் வீடு. கதவைத் நூருல்தான் திறந்தார். ஒரு மெல்லிய ஊதுபத்தி மணம் நந்தாவைத் தீண்டியது. நுழைந்தார். தொடர்ந்தார் காஞ்சனா.நாலைந்து பேர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். ஐந்து பேர்சாப்பாட்டு மேசையில்.

மூத்த பெண் ரொட்டித் துண்டுகளுக்கிடையேபழக்குழைவை தடவிக் கொண்டிருந்தார். ஒரு கோப்பையில் மீஹீன் மூடி இருந்தது. தக்காளிக் குழைவு மிளகாய்க் குழைவு போத்தல்கள் கூடவே இருந்தன. நந்தா அமர்ந்திருப்பது ஒரு மெத்தையில்லாத சோபா. ஆனாலும் வசதியாக இருந்தது அந்த எளிமையான வீட்டில் அவர்களோடு இறைவனும் ஒரு மனிதனாக வாழ்வதுபோல் உணர்ந்தார் நந்தா. நந்தாதான் பேச்சைத் துவக்கினார்.

‘பத்துக் குழந்தைகளையும் எந்தக் குறையுமின்றி வளர்க்க எப்படியம்மா முடிந்தது?’

தேங்காய்த் துருவலாய்ச் சிரித்தார் நூருல். பின் சொன்னார்.

‘பிள்ளைகளின் ஒத்துழைப்புதான் காரணம். என்கணவர் ஒரு சாலை விபத்தில் மெளத்தாகிவிட்டார். அவர்தந்த பக்குவம் அப்படி. அவர் சொல்வார். நாம் அனுபவிப்பது அல்லாஹ் தந்தது. அதற்கு மேல் ஆசைப்படக்கூடாதென்று அவர் இறந்த பின் அதுவே என் பிள்ளைகளுக்கு வாழ்க்கை விதியாகிவிட்டது.’

‘இந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறதா?’

‘ஏன் முடியாது? பன்னிரெண்டு ரெட்லீஃப் பேனா 3 வெள்ளிதான்.ஆறுமாதத்திற்குப் பேனா கேட்கமாட்டார்கள். அதோ அந்த மூத்தபெண் அரபுப் பள்ளியில் படித்தார். இப்போது அங்கேயே ஆசிரியராக இருக்கிறார். நான் ஒரு பள்ளி வாசலில் தொண்டூழியராக இருக்கிறேன். ஆறு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருள்கள் எப்போதும் வீட்டில் இருக்கும்’.

‘நீங்கள் ஆதரவின்றி இருப்பதாக உணர்ந்ததே இல்லையா?’ ஹலீமா அதிர்ந்து சிரித்தார். பின் சொன்னார்.

‘ஐயா மன்னர்கள் சாப்பிடும் உணவிலும் சரி மண் குடிசைவாசி உணவிலும் சரி உப்பு உப்பாகத்தான் இருக்க வேண்டும். நாங்களாக இருப்பதில்தான் எங்களுக்குப் பெருமை.’

அந்தப் பெண்மணி பேசப் பேச நந்தாவுக்கு முட்டிக்கொண்டு அழுகை வந்தது. குரல் நடுங்கியது. கடைசியாக நந்தா கேட்டார்.

‘இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு மேல் போதும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?’

‘தோன்றியது. என் கணவரிடம் சொன்னேன். அவர் சொல்வார். ‘இந்த பூமியை இந்த அளவுக்கு வளர்த்தது மனிதமூளை.நம்மூலமாக எப்படிப்பட்ட பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறானோ அப்படிப்பட்ட பிள்ளைகளை அவர் அனுப்புகிறார். யார் கண்டது நம் பிள்ளைகளில் ஒருவர் எதிர்காலத்தில் தண்ணீரில் பெட்ரோல் செய்யும் நுணுக்கத்தை உலகுக்குச் சொல்லலாம். அவர்களைத் தடுக்க நாம் யார்? என்று.’

இப்போது நூருல் கேட்டார். ‘எங்கே தங்கி இருக்கிறீர்கள்? எப்படி வந்தீர்கள்?’

‘லாவண்டர் எம்மார்ட்டி அருகில் தங்கியிருக்கிறோம். காரில் வந்தோம்.’

‘எதற்குக் கார்? எம்மார்ட்டியில் பத்து நிமிடப் பயணம்தானே? ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எங்களின் ஒரு வேளை உணவு.’

சொல்லிவிட்டு உண்டியலைக் குலுக்குவதுபோல் சிரித்தார். அந்தச் சிரிப்பு நந்தாவை செவிட்டில் அறைந்தது. தொடர்ந்தார் நூருல்.

‘ஒரு பிள்ளை என்கிறீர்கள். நாலறை வீடு என்கிறீர்கள். வீட்டை சுத்தம் செய்ய உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். நான் வேண்டுமானால் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து சுத்தம் செய்து தருகிறேன் நீங்கள் விரும்பினால்’ என்றவர் தன் கைப்பையைத் திறந்து நந்தாவிடம் காட்டினார். அதில் பல சாவிக் கொத்துகள் சிரித்தன. ‘இத்தனை சாவிகளும் பல பங்களா வீடுகளின் சாவிகள் எனக்கும் நேரம் கிடைக்கும்போது போய் சுத்தம் செய்வேன்.இந்தக்

கிழவியை எப்படியெல்லாம் நம்புகிறார்கள் பார்த்தீர்களா?’

நூருலின் ஒவ்வொரு சொல்லும் ஊசியாகக் குத்தியது நந்தாவையும் காஞ்சனாவையும். அமைதியாக நூருலிடமும் பிள்ளைகளிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.

வீடு வந்து சேரும்வரை இருவருமே பேசவில்லை. தீபன் தூங்கிவிட்டான். பணிப்பெண் சுருண்டு கிடந்தாள். மேசையில் உணவு மூடியிருந்தது. மீன் அநாதையாக நீந்திக் கொண்டிருந்தது.சாப்பிட்டார்கள். படுக்க போகுமுன் காஞ்சனாதான் ஆரம்பித்தார்.

‘உடனே பணிப்பெண்ணை நிறுத்திவிடுங்கள். இந்த மீன் தொட்டிபோல் ஒன்று வாங்க வேண்டுமென்று நண்பர் குமரகு சொன்னார். அவரிடம் கொடுத்துவிடுங்கள். சங்கரன் கார் வாங்கப் போவதாய்ச் சொன்னார். அவர் விரும்பினால் நம் காரை அவருக்குக் கொடுத்துவிடுங்கள். வங்கி பாக்கியை அவர் பெயருக்கு மாற்றிவிடுங்கள். பிறருக்காக வாழ்ந்தது போதும்….போதும்….’ சத்தமாக அழுதார் காஞ்சனா. நந்தா தேற்றினார். காஞ்சனா விரும்பியது போலவே எல்லாம் நடந்தது. எல்லாப் பிரச்சினைகளிலுமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையானார் நந்தா. நான்கே மாதங்களில் பழைய நிலை திரும்பியது.

ஓராண்டு ஓடியது காஞ்சனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நந்தா சொன்னார்.

‘யார் கண்டது? இந்தப் பெண் நாளை ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தையை உலகுக்குச் சொல்லலாம்.’

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *