ஐஸ் கிரீம் பார்லரில் இவ்வளவு பிரச்சினை வரும் என எதிர் பார்க்கவில்லை தான். இனிமேல் பேச்சில் கவனம் தேவை. எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.
என்னப்பா இது வெண்ணிலா ஐஸ் கிரீம் மேல தேன் மட்டும் உட்டு கொடுத்திருக்காங்க. எனக்கு சாக்கலேட் சிப்ஸ், பாதாம் எல்லாம் போட்ட பபிள்கம் ஐஸ்கிரீம் வேணும்னு தானே இவ்ளோ தூரம் வந்தோம். மகனின் குமுறலுக்குப் பின் மனைவி
உங்கப்பா வாய்க்குள்ள முணுமுணுத்திருப்பார். அதனால வந்த வினை.
இதில ஏதோ தப்பு நடந்திருக்கு. நீங்க தப்பான ஐஸ் கிரீம் கொண்டு வந்திருக்கீங்க. மெதுவாக ஆரம்பித்த என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதுவரை பவ்யமாய் கைகட்டி ஆர்டர் எடுத்த வெயிட்டரின் குரலில் மாற்றம்.
என்ன சார் நீங்க பையன சமாதானப் படுத்தறதுக்காக எங்கள குறை சொல்றீங்களே. வேணும்னா இன்னோண்ணு வாங்கிக் கொடுத்திட்டுபோங்க.
ரோட்டோர ஐஸ்கிரீம் கடை னா பரவாயில்ல. மெனக்கிட்டு இதுக்குன்னு சிறப்பா உடை உடுத்தி, காரில் வந்திறங்கி குளிரூட்டப்பட்ட இந்த அறையில் இசைப் பின்புலத்தோட ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டுமென்றால் இப்படித்தான்.
எங்கள் மேசைக்கு அருகேயுள்ள வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ள குடும்பத்தின் தலைவரும் திருதிருவென்று முழிப்பதைப் பார்த்தால் அவருக்கும் அதே பிரச்சினை போல.
இல்லை இல்லை அவர் பர்ஸ் தேடுகிறார். கையை சட்டைப் பாக்கெட்டில் ஒருமுறை, பாண்ட் பாக்கெட்டில் ஒரு முறை மாறி மாறி கை விடுவதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
யாரையும் நம்பக்கூடாது.திரும்பி உட்கார்ந்துவிட வேண்டியதுதான். எப்போதோ வார இதழில் படித்த கதை நினைவிற்கு வருகிறது. குடும்பம் போன்ற செட்டப்புடன் வந்து அடுத்தவர்களிடம் ஆட்டயப் போடுவாங்களாம். எதில் படித்தேன் குங்குமமா?, விகடனா. சரியாக நினைவில் இல்லை.
பரவாயில்லை. இப்போதைக்கு இந்தக் குடும்பத்திடமிருந்து நாம் தப்பிக்க வேண்டும் அவ்வளவுதான். நீங்கல்லாம் சாப்பிட்டுட்டிருங்க நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். சிறிது நேர உலாத்தலுக்குப் பின் மனம் லேசானது. உள்ளே நுழைந்தேன்.
டேபிளின் மேல் வைக்கப்பட்ட பர்ஸ் நகர்ந்து மனைவிக்கு அருகில் இருந்தது. விக்ரம் அவனுக்குப் பிடித்த பபிள்கம் ஐஸ் கிரீம் உண்டு கொண்டிருந்தான்.
ரொம்ப தாங்ஸ் ஐஸ்கிரீமை மாத்திக் கொடுத்ததுக்கு. வெயிட்டர் என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டுச் சென்றார்.
கிளம்பும் நேரத்தில் பக்கத்து டேபிள் மனிதர் க்ளாட் டு மீட் யு. என கைகுலுக்க எத்தனித்தவுடன் அவரைப் புறக்கணித்து
சரி சரி கிளம்புங்க என மனைவி, மகனை விரட்டி காரில் ஏற்றிய பின் தொடங்கியது வினை. வீடு வந்து சேரும் வரை மனைவி ராமாயணம் வாசித்தாள். இப்டியா மூஞ்சியக் காட்டறது. உங்களுக்கு குடும்பம், குழந்தை குட்டி எல்லாம் எதுக்கு. எப்போ பாத்தாலும் ஆபீஸ் நெனைப்பு தான். அந்த மனுசர் எவ்வளவு சோசியலா பழகறார் தெரியுமா? நீங்களும் இருக்கீங்களே.
ஆமாம்பா. உங்களுக்கு பழகவே தெரியல. நீங்க பேசாம கவுன்சிலிங் போங்களேன். எங்க கிளாஸ்ல பிரெண்டே இல்லாத பசங்களுக்கு எப்டி பழகணும்னு கவுன்சிலர் மேடம் சொல்லித்தருவாங்க.
வாய மூடுடா. அதிகப்பிரசங்கி மாதிரி. அப்பாக்கு ஆபீஸ் வேல ஜாஸ்தி அவ்ளோதான். மனைவிக்கு தனக்கு மட்டும்தான் திட்டும் உரிமை என்ற எண்ணம். அவளைத்தவிர யார் பேசினாலும் வக்காளத்து வாங்கி விடுவாள். ரோட்டப் பாத்து கார் ஓட்ட விடு. அமைதியாகவே வீடு வரை வந்த நான் சாப்பிட உட்கார்ந்தவுடன் மனைவி ஆரம்பித்தாள். நாளைக்கு நல்ல மூட் ல இருக்கும்போது இந்த நம்பருக்கு போன் பண்ணி பேசிருங்க. இல்லன்னா உங்க பையன் ஆரம்பிச்சுருவான். இன்னிக்கு நேர்ல பாத்தபோதே பேசியிருக்கலாம். கைகுடுக்கக் கூட கவுரவம் பாத்தா நடக்குமா. நாளைலேர்ந்து அவர் தானே நம்ம வீட்டுக்கு வந்து விக்ரம் கு செஸ் சொல்லிக் கொடுக்கணும்.. இன்னிக்குக் கூட பாவம் உங்ககிட்ட விசிட்டிங் கார்டு கொடுக்க முடியல. கொண்டு வர மறந்துட்டேன்னு பேப்பர்ல போன் நம்பர் எழுதிக்கொடுத்தார். மனைவி தட்டில் போட்ட தோசை தொண்டையை அடைத்தது. அவர் செஸ் மாஸ்டரா?
என்ன ஆயிற்று எனக்கு. அவரைப் போய் என்னவெல்லாம் யோசித்துவிட்டேன். விக்ரம் சொன்னது போல் கவுன்சிலிங் போக வேண்டியதுதான். அரசாங்க அலுவலர் அதுவும் தாசில்தார் என்பதால் நான் செல்லும் இடத்தை கண்காணித்து அரட்டை அடிக்கும் வெத்துவேட்டுகளிடம் சிக்காமல் செல்ல வேண்டும்.
ஒருவழியாக கூடப் படித்த பள்ளி நண்பன் ரமேஷ் மதுரையில் சைக்கீரியாடிஸ்டாக இருப்பதை அறிந்து அவனைப் பார்க்கச் சென்றேன்.
டேய் உனக்கு ஒண்ணுமில்லடா. உன்னய மாதிரி தொண்ணூறு சதவிகிதம் பேர் இருப்பாங்கடா. சில பேர் மனசுக்குள்ள பாதி விசயம் நடந்ததா நெனச்சி அதோட தொடர்ச்சிய மட்டும் வெளில சொல்வாங்க. நிறைய பேர் மனசுக்குள்ளயே வேற வாழ்க்கை வாழ்ந்திட்டிருப்பாங்க. நான் எனக்குள்ளே பேசிக்கொண்டேன். நான் ரெண்டாவது ரகம். ஐஸ் கிரீம் ஆர்டர் செய்யுமுன் மனதிற்குள் சாக்கலேட் , பாதாம் எல்லாம் போட்டால் ஐஸ்கிரீம் நன்றாகத்தான் இருக்கும். அதுவும் பபிள்கம் டேஸ்டுடன் சேர்ந்தால்எப்படிஇருக்கும் என யோசித்துக்கொண்டே வாயால் ஒன்றும்பேசாமல் கையை மாற்றிக் காட்டியிருக்கிறேன். அதன் விளைவுதான் அவ்வளவும்.
டேய் என்னடா திரும்பவும் யோசனையா. டாக்டர் நண்பரின் குரல். உன்ன மாதிரி நபர்களால தான் குடும்பத்துல எந்த பிரச்சினயும் வராது. உன் மனைவி கொடுத்து வச்சவ. குடும்பம் நல்லா போணும்கறதுக்காக அவனவன் புரியாதது மாதிரியும், கவனிக்காதது மாதிரியும், மறந்ததது மாதிரியும் நடிச்சிட்டிருக்கான்.
இதற்கு இப்படி ஒரு கோணமா பாவமாக அவனைப் பார்த்தவுடன் அவன் தொடர்ந்தான்.
இப்ப என் மனைவிய எடுத்துக்கோ. ஊருக்கு போகணும் னு சொன்னவுடனேயே என்னென்ன வேணும் னு லிஸ்ட் போட ஆரம்பிச்சுடுவா. அத எழுதறதுக்காக மனசுக்குள்ள நாலு தடவ அந்த எடத்துக்கு போய் வந்த மாதிரியே யோசிச்சிருவா. சொந்தக்காரங்கள பாத்தா அவங்க என்ன சொல்வாங்க அப்டிங்கற அளவுக்கு யோசிச்சு அதுக்கு பதிலயும் மனசில ரெடி பண்ணிருவா. அதுக்குப் பெயர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை னு அவளே வச்சிருக்கா.
இப்போ சொல்லு. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் மனோ வியாதி உள்ளவர்கள் தானே. அதனால ரொம்ப மனசப் போட்டு அலட்டிக்காம. எனக்கு கற்பனை வளம் அதிகம் னு நெனச்சி கதை எழுத ஆரம்பி. பெரிய எழுத்தாளராயிடுவ. வாழ்த்துக்கள்.
விடை பெறுமுன் கடைசியாக நண்பனின் முகத்தைப் பார்த்தபோது என் மனதினுள் என்னுடன் மட்டுமே உரையாடும் குரல் கேட்டது. இவன் உண்மையில் சைக்கீரியாடிஸ்ட் தானா. பேருந்துப் பயணத்துடன் சேர்ந்து என் மனப் பிரயாணமும் தொடர்ந்தது.