மனச்சங்கமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,834 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுமணா விஹாரைக்குப் போய் இன்னும் வீடு திரும்பவில்லை

“சரி…. சரி. இருக்கட்டுமே! இப்ப என்ன குடியா முழுகிப் போய்விட்டது!”

அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோதுதான் : மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான்…

நகர முச்சந்தியில் திரும்பிய பேருந்து வெடித்துச் சிதறிய செய்தி பொறியில் தட்டியபோது அவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை .

அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை. பௌத்த விஹாரைக்குச் சென்றிருந்த சுமணா இன்னும் வீடு திரும்பவில்லை. காலை ஒன்பது மணிக்குப் போயிருந்தாள்.

நேரஞ் செல்லச் செல்லப் புதிது புதிதாக அதிர்ச்சி தரும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. வதந்திகள் என்று சும்மா இருக்கவும் முடியாது.

இறுதியாகக் கிடைத்த தகவல் இதயத்தையே ஒருகணம் பிழிந் தெடுத்துவிட்டது. என்ன அநியாயம்!

பதினாறு சடலங்கள் ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கின்றனவாம். இன்னும் இனங்காணப்படாத நிலையில் சரியாகப் பார்க்கப் போனால், இந்தச் சம்பவம் நடந்தபோது கிட்டத்தட்ட மணி ஒன்று முப்பது. பிற்பகலின் அகோர வெயில் பூமியை எரித்துக் கொண்டிருந்த நேரம்!

இப்பொழுது இரண்டு நாற்பத்தைந்து. இரண்டு மணிக்குள் சுமணா வீடு வந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் வந்து சேரவில்லை.

‘நாற்பத்தைந்து நிமிடச் சுணக்கம் ஏன்?’ என்று மனம் அடித்துக் கொண்டிருந்தது.

‘ஒருவேளை சம்பவம் நடந்த இடத்தில்….?’

வீதியில் நடந்து கொண்டிருந்த பலர் சதையும் சாம்பலுமாக….

இன்னும் சில முண்டங்கள் சிதறிக் கிடக்கின்றனவாம். தலை வேறு, கால் வேறு…. கை வேறு…. என்ற நிலையில்!

வழிநெடுகக் காற்றில் எதிரொலித்த வதந்திகளுடன் மருத்துவமனைக்கு விரைகிறோம் நடைப்பிணங்களாய்!

அங்கே நீண்ட ‘கியூ’ வரிசை.

அந்தக் கதறல்! அந்தத் தவிப்பு! அந்தக் கோலம் !

அப்பப்பா! பார்க்கச் சகிக்கவில்லை ! மனம் கலங்கிவிட்டது. ‘அய்யோ அத்தநாயக்க….! சுமணா இதில் மாட்டிக்கொண்டிருப்பாளா…..?” அலறிவிட்டேன்.

“பயப்படாதீங்க…. கிச்சிலான். போய்த்தான் பார்ப்போமே!”

நீண்ட நேரம் நின்று…. நின்று கால் கடுக்க, எமது முறை வந்ததும் மீண்டும் பதட்டம்.

ஒவ்வொரு உடம்பின் தலையையும் உன்னிப்பாக அவதானித்தாயிற்று. தட்டுப்படவில்லை .

இனி என்ன செய்வது?

இறுதி முயற்சியாக பத்திரிகையாளர் என்ற முறையில் அத்தநாயக்கா வின் ஓர் ஆலோசனையில் ஆஸ்பத்திரி அதிகாரிகளுடன் பேசினோம். அதுவும் பிரயோசனமில்லை .

சுமணா என்ற பெயரே இல்லையாம்!

அப்படியென்றால் அவளும் சந்தியில்…!

சுமணாவுக்கு என்ன நடந்தது….?

சுமணா வீட்டை விட்டுப் போய் இருபத்துநான்கு மணித்தியாலங்கள் கடந்துவிட்டன! நாளொன்று!

பௌத்த விஹாரையில் கிடைத்த தகவலின்படி வெடிச் சத்தம் கேட்பதற்கு முன்னும் பின்னும் பக்தர்கள் கிளம்பிவிட்டிருந்தனர்.

வழக்கமாகச் சுமணா விஹாரைக்குப் போனால், காலை ஒன்பது மணி தொடக்கம் இரண்டு மணி வரைக்கும் பக்தியில் ஈடுபட்டிருந்து இரண்டரை மணிக்குள் வீட்டுக்குத் திரும்பியிருக்க வேண்டும்….!

முறைப்படி என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, ஒன்றுவிடாமல் செய்துவிட்டோம்.

அடுத்த வீட்டுக்காரர். பாவம், அத்தநாயக்கா கூடவே இருந்து தோழமையுடன் நல்கிய ஒத்துழைப்பு இருக்கே……!

அவர் கேட்டார்

“கிச்சி…. எதுக்கப்பா இப்படிப் பதட்டப்படுற….. இப்ப இப்படியெண்டா அவ குமரா இருந்தப்ப அவவப்பார்க்காட்டிச் சாப்பிட்டு இருக்கமாட்டியே…..? எப்படியோ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றோம். அங்கும் சனத்திரள் ! இரண்டு மணித்தியாலங்கள் விரயம் செய்து எமது முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்குள்….! சிங்கள மொழியில் பதிவு செய்வதற்குப் பத்திரிகையாளரான அத்தநாயக்காவின் ஒத்தாசை இருந்திருக்காவிட்டால் எல்லாமே அரை குறையாகத்தான் போயிருக்கும்!”

சுமணாவைப் பற்றிய ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் சோர்ந்து களைத்துத் திரும்பினோம்.

சுமணா ஞாயிற்றுக்கிழமை நாட்களில், காலையில் எழுந்ததும் சுறுசுறுப் பாகக் காணப்படுவாள். வழக்கம் போல் கிணற்றில் குளித்துவிட்டு வந்து தேநீரும் காலையுணவும் (பெரும்பாலும் பாற்சோறு தயாரித்துவிட்டே விஹாரைக்குப் புறப்படுவாள்.

வெள்ளைச் சட்டையணிந்து, நீலக்கரை போட்ட வெள்ளைச் சேலை அணிந்து, இடப்பக்க இடையைச் சுற்றி மடிப்புகளை அழகாக ஒழுங்கு படுத்தியதும் அவள் அசல் கண்டியச் சிங்களக் கலாசாரத்தில் தோன்றுவாள்.

அவளைப் பொறுத்த வரையில் அவை விஹாரைக்குச் செல்லும் சீருடையாக இருந்தாலும் அவளுடைய இயற்கை அழகுக்கு அவை மேலும் மெருகேற்றின.

மணித்தியாலங்கள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தன. தாகமும் பசியும் களைப்பும் தவிர்க்க முடியாதவை.

மிகுந்த சோகத்துடன் வீட்டை வந்தடைந்தாலும் சற்று நேரம் ஓய்வெடுத்தோம்!

சமையலறையில் அவள் தயாரித்து வைத்திருந்த பாற்சோறும் கட்டைச் சம்பலும் பரிதாபமாகக் கிடந்தன!

நானும் அத்தநாயக்காவும் ஓரளவு உண்டு பசி தீர்த்தோம்.

அத்தநாயக்கா சுதந்திரமாகச் சமையலறைக்குள் புகுந்து தேநீர் தயாரித்துத் தந்தார். அருமையாக இருந்தது.

மீண்டும் முன் சோபாவில் வந்தமர்ந்தோம். அத்தநாயக்கா பொக்கற்றி லிருந்து ஒரு சிகரட் பெட்டியை இழுத்தெடுத்து சிகரெட்டொன்றைப் பற்றவைத்துக் கொண்டார். அதன் புகையும் மணமும் வளையம் வளையமாக விறாந்தையில் பரவின. அவரே எழுந்து சென்று ஒரு யன்னலைத் திறந்துவிட்டார். நான் எனது சிந்தனையைச் சுழற்றிவிட்டு, விட்டுப்போன நண்பர்களையும் வேண்டியவர் களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

நண்பரின் சிகரட் தீர்ந்ததும் அடுத்த நடவடிக்கையாக ஒரு முச்சக்கர வண்டியை வரவழைத்து அவள் வழக்கமாகச் செல்லும் இடங்களுக்குப் போய் விசாரிக்கத் தீர்மானித்தோம்.

“அத்த…. நீங்க ரொம்பக் களைச்சுப் போய்ட்டீங்க…. இனிவீட்டுக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுங்க…. நாமிச்சத்தைப் பார்த்துக் கொள்கிறன்…. சரியா….”

எவ்வளவு வற்புறுத்தியும் கேட்டால்தானே. வண்டி வந்ததும் முதல் ஆளாக, தானாகவே சுறுசுறுப்பாக….. வந்து வண்டியில் ஏறிக்கொண்டார். “இந்த இக்கட்டான நிலையில் நண்பருதவி இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்?” என்று

கூறிக்கொண்டே மீண்டும் அலைந்து திரியப் புறப்பட்டோம்.

அடிக்கடி கையடக்கத் தொலைபேசிதான் சிணுங்கிக் கொண்டிருந்தது. உருப்படியாக ஒரு தகவலும் இல்லை.

ஒன்று நிச்சயமாக எங்களுக்கு விளங்கிக் கொள்ள முடிந்தது.

அவள் உயிருடன் நகர எல்லைக்குள் இருந்திருந்தால் இந்நேரம் ஏதாவது ஒரு தகவல் வந்திருக்கும்.

அப்படி இல்லாவிட்டால்..? இல்லாவிட்டால்…

முச்சந்தியில் எரிந்து…

“சுமணா! உனக்கு இப்படியா வரவேணும்!”

சுமணா வெண்ணிறம். அழகானவள்..’சிங்கள மொழியைக் கரைத்துக் குடித்தவள். அவ்வளவு பாண்டித்தியம் படிப்படியான அவதானங்களுக்குப் பிறகு, அட்வான்ஸ் லெவல் படிக்கும் போது, அவளுக்கும் எனக்கும் இலேசான ஊடல் மலர்ந்தது. அப்படியும் சொல்ல முடியாது. நீண்டநாள் நெருக்கம் இறுக்கமாகி…. ஸ்திரமாகியபோது –

மதங்கள் தடைக்கற்களாகின.

“சுமணா நீ அழகுச் சிலை. சீகிரியாவின் ஓவியம்! உன்னோடு என்னை ஒப்பிடும் போது, நான் எங்கேயோ…!”

“அட்டன் காதர் மலையுச்சிக்கும் சிங்க மலைப் பள்ளத்துக்கும் உள்ள வித்தியாசம். ஏணி வைத்தாலும் எட்டாது”

நான் சும்மா கேலிக்காக அவளைச் சீண்ட சில வார்த்தைகளை உதிர்த்து விட்டேன்.

சுமணாவின் முகம் கோபத்தால் சிவந்தது!

“இந்தா….. கிச்சிலான் நீ எங்களைக் காதர் ஷீலாவுக்கு’ ஒப்பிடாதே! என்னைப்பொறுத்தவரையில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளத் துணிச்சல் இல்லாமல், சுரங்க மலையுச்சிக்குப் போய் உயிரை மாய்த்துக் கொண்ட கோழைகள்….! கிச்சிலான் நீசொல்ல வாறவிசயம் எனக்குப் புரியுது! யானைக்குத் தன் உருவமும் பலமும்தான் அழகு என்பது அதற்குத் தெரியாது…”

அவளைப் பேசவிட்டு விட்டு நான் மௌனச் சிலையானேன்.

பல வருடங்களாக அவள் என்னை அவதானித்துப் படிப்பதும் நானும் அவளையும் அவளது மன ஆழத்தையும் பழக்க வழக்கங்களையும் துருவித் துருவி ஆராய்வதும்…

உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடப் புத்தகமோ!

மனம் குழம்பிய நிலையில் அடிக்கடி மதங்கள் வாயைப் பிளந்தன.

“மானுட நேயத்திற்கு வித்தியாசங்கள் உள்ளனவா? அழகும் அந்தஸ்தும் மூலதனமா?”

“இல்லற வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை மனப்பொருத்தம் எங்களிடம் இருக்கு. சும்மா நொண்டிச் சாக்குகளைச் சொல்லிக் கொச்சைப் படுத்தாதே!”

இப்படிப் பேசிப் பேசி விவாதித்துத்தான் எங்கள் பதிவுத் திருமணம் நடந்து முடிந்து, ஆறு மாதங்கள் காற்றில் பறந்துவிட்டன!

“டி.வி. பிரேகிங் நியூசில் பலமுறை காட்டப்பட்ட முச்சந்தி அனர்த்தத்தின் முழுமையான விளைவுகளை ‘நியூஸ் பஸ்ட்டில்’ கூர்மையாகப் பார்ப்பதற்கு கண்களையும் காதுகளையும் டி.வி.யில் குவித்து வைத்துக் கொண்டிருந்தபோது, வெளியில் ஒரு ஜீப்வண்டி நிதானமாக வந்து நின்று, அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது.

முன்வாசல் மின் விளக்கைத் தட்டி விட்டதும் பளீரென்றிருந்தது முற்றம்.

பொலிஸ் ஜீப்பின் முன் கதவைத் திறந்துகொண்டு இன்ஸ்பெக்டர் இறங்கிக் கொண்டிருந்தார். ஆ! எனக்குப் பழக்கமானவர்தான்!

பின் கதவிலிருந்து சுமணா இறங்குவதைக் கண்டதும் எனக்கும் அத்த நாயக்காவுக்கும் கண்கள் பனித்துவிட்டன.

சுமணாவின் இடப்பக்க இடையில் ஒட்டினாற்போல…. அந்தச் சேலையின் வெண்ணிறச் சேலையின், அந்த வரிவரியான மடிப்புகள் கலையாமல் அப்படியே மானுடக் கலாசாரத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

“மறிடே (வா)…. கிச்சிலான்…..” என்று அரைகுறை மலாய் மொழியில் என்னை வரவேற்று நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார் பொலிஸ் அதிகாரி.

நன்றாகத் திட்டம் போட்டுத்தான் இந்தக் கடத்தலைச் செய்திருக்கிறாங்க பாவிகள்.

“பௌத்த விஹாரைக்குப் பக்கத்தில் அடிக்கடி தேவையில்லாமல் ஆட்கள் வந்து போவதில் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்ததுதான். இன்று காலை விஹாரைக்குப் போகிற வழியில் அது நடந்திருக்கிறது: ஆனால் ஊர் எல்லைச் செக் பொயின்ற்றில் நாங்கள் உசாராக இருந்தபடியால் அந்தக் கறுப்பு நிறக் காரை மடக்கி இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டுவிட்டது! சம்பந்தப்பட்டவர்களைத் தேடிப் பிடித்து விளக்க மறியலில் வைத்து உண்மையைப் பிடுங்கி சம்பவத்தைப் பதிவு செய்வதற்குள் மணித்தியாலங்கள் காத்திருக்குமா?”

“உங்கள் மனைவிக்கு முழுப்பாதுகாப்பு வழங்கப்பட்டது!”

எதுவிதக் கலக்கமுமின்றிச் சுமணா தப்பித்தோம் பிழைத்தோமென்று முன் அறைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பெருமூச்சுவிட்டாள்!

“சேர் உள்ளே வாங்க…..”

“தேங்ஸ்…. கிச்சில். இப்படியே மரத்தடியில் இருந்து பேசுவோம்!”

நாங்கள் ஜேம் காய் மரத்தடியில் போடப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தோம். நான் அத்தநாயக்காவை அதிகாரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.

“கிச்சில்! நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்…இது உங்கள் தனிப்பட்ட விசயம் தான். நான் தலையிடுவதாயிருந்தால் மன்னிக்கவும்…சுமணாவுக்கும் அறிவுறுத்தியாயிற்று…அவள் ஓ.கே..!”

“பரவாயில்லை. சொல்லுங்க”

“கணவன் மனைவி ஆன பிறகு நீங்கள் இருவரும் ஒரே மார்க்கத்தில் போவதுதான் எதிர்காலத்துக்குப் பொருந்தும்”

“நீங்கள் சொல்வது சரிதான் சேர்…ஆனால்…”

நான் என்னவோ சொல்ல நினைத்து வாய் திறந்தேன். அதற்குள் தட்டில் ஆவி பறக்கும் தேநீரை ஏந்திக்கொண்டு சுமணா மரத்தடிக்கு வந்துவிட்டாள்.

“என்னங்க…இப்ப நேரமென்ன, ‘இஷாத் தொழுகைக்குப் போகல்ல…” என்று சுமணா சொன்னது கிச்சிலானின் மனதை உலுக்கிவிட, அவன் அத்தநாயக்காவைமிகத் தீட்சண்யமாகப் பார்த்தான்.

“இதுக்குத்தான் அத்தநாயக்கா நான் காணாது பயப்பட்டன்…”

“காலையில் ஸ்டேஷனுக்கு வந்து கையொப்பம் போடுங்க….விஸ்யூ ஆல் திபெஸ்ட்…”

பொலிஸ் அதிகாரி ஆறுமுகம் முன் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் மிக நிதானமாகப் போய்க் கொண்டிருந்தது ஜீப் வண்டி.

– ஜீவநதி சிறுகதை சிறப்பு மலர் ஜனவரி – பெப்ரவரி 2009

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *