கவின், அவன் தாத்தா வீட்டிற்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால் சென்னையிலிருந்து வந்த அவன் அப்பா அவனை அழைத்துக்கொண்டு போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
அந்தக் கிராமத்தில் ஒரு மாதம் எப்படி ஓடியது என்றே கவினால் உணரமுடியவில்லை. கண்ணை மூடித் திறப்பதற்குள் என்பார்களே! அப்படி ஓடிவிட்டன முப்பது நாட்கள். கவினின் தாத்தாவும் பாட்டியும்தான் பாவம். அவர்கள் இன்னும் இரண்டு மாதம் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்டிருக்கக் கூடாதா என்று பள்ளி நிர்வாகத்தைக் கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தனர்.
இந்த ஒரு மாத காலமும் கவினையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தனர் அவன் தாத்தாவும் பாட்டியும். அவர்களின் வேலைகள் அனைத்தையும் மறந்துவிட்டு கவினைக் கவனிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தனர். அந்த எட்டு வயது சிறுவன் அவர்களின் கவனிப்பில் மெய்மறந்து போனான்.
சிறிதளவும் கோபப்படாத தாத்தா, கேட்டதையெல்லாம் அடுக்கலைக்குள் புகுந்து அசராமல் செய்துகொடுக்கும் பாட்டியென அவனுக்காகவே உருகும் உள்ளங்களைப் பார்த்த கவினுக்குத் தன் அப்பா அம்மாவின் நினைவு துளிகூட இந்த ஒருமாத காலத்தில் வரவேயில்லை.
பட்டியல் போட்டுக்கொண்டு வாழும் சென்னை வாழ்க்கையிலிருந்து ஒருமாத விடுப்பு போதாது என்று தோன்றியது கவினுக்கு. அவன் அப்பா அம்மாவின் மருத்துவர், பொறியாளர் இத்யாதிகள் பற்றிய கனவுகள் அவன் தூக்கத்தைத் தற்போது தட்டியெழுப்பவில்லை என்பது மட்டுமே அவனுக்குப் பெரும் ஆறுதல்.
கவினைத் தூக்கிக்கொண்டு ஏரி, குளங்கள் குட்டைகளுக்கெல்லாம் போகும் அவன் தாத்தா, அதில் மேய்ந்துகொண்டிருக்கும் மீன்களையும் அதனூடே ஊர்ந்து செல்லும் தண்ணிப் பாம்புகளையும் காட்டி அவனை வியக்க வைப்பார்.
அதுமட்டுமா, பூவும் காயுமாக காட்சியளிக்கும் புளியமரங்களில் கல்லை விட்டெறிந்து அதிலிருந்து விழும் புளியம் பழங்களைப் பொறுக்கி வந்து அவன் கையில் கொடுத்து அழகு பார்ப்பார். கொல்லைமேடுகளில் வளர்ந்து கிடக்கும் பனைமரங்களில் கஸ்டப்பட்டு ஏறி, பனங்காய் வெட்டி அவனுக்கு நுங்கெடுத்து கொடுப்பார். கையோடு பனங்குடுக்கைகளில் வண்டி செய்து கொடுத்து அவனை வீடுவரைக்கும் ஓட்டி வரச் சொல்லுவார்.
வயல்களில் புல்லை மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளைத் தனது பேரப்பிள்ளையின் கைகளால் தடவிப் பார்க்க வைத்து, அதன் ஸ்பரிசத்தை உணரவைத்து அவனை மகிழ வைப்பார். வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் அவனை இறக்கிவிட்டு நடந்து வரச்சொல்லுவார். அதில் தத்தித் தத்தி வரும் அவன் அழகைக் கண்டு ரசிக்கும் அவர், அவனை அலேக்காகத் தூக்கிக்கொண்டு அணைத்து முத்தம் கொடுத்து மகிழ்வார்.
இரண்டு பக்கமும் நெற்கதிர்கள் நிறைந்திருக்க அதற்கு நடுவே இருக்கும் வயலில் கவினை நடக்கவிட்டுப் பார்த்து மகிழும் அவன் தாத்தா, ஈச்சமரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும் ஈச்சம் பழங்களைப் பொறுக்கி வந்து தண்ணீரில் அலசி அவனுக்கு ஊட்டிக்கொண்டே அவனை ரசித்து மகிழ்வார். அதை அவன் வாயில் போட்டு மென்று விழுங்கும் விதத்தைப் பார்ப்பதற்கே அவருக்கு அலாதி சுகமாக இருக்கும். இப்படி ஒருமாத காலம் இணைபிரியாத நண்பர்களாக அவர்கள் இருந்தார்கள்.
பகலெல்லாம் பல இடங்களுக்குப் போய்ச் சுற்றித் திரிந்துவிட்டு வந்தாலும் சாயுங்காலப் பொழுதிலும் சும்மா இருக்காமல் அவன் தாத்தா வாங்கி வைத்திருந்த குட்டி சைக்கிளில் அந்தக் கிராமத்தின் தெருக்களை வலம் வந்துகொண்டிருந்தான் கவின். சைக்கிளை வளைந்து நெளிந்து ஓடும் பாம்பைப் போல் ஓட்டிக்கொண்டு போகும் கவினுக்குப் பாதுகாப்பு அதிகாரியைப் போல அவனுக்குப் பக்கத்திலேயே நடந்து செல்வார் அவன் தாத்தா. அவன் பெடலை மெரித்து கால்கள் ஓய்ந்துபோகும் போது பின்பக்கத்திலிருந்து தள்ளிக்கொண்டு ஓடுவார்.
அவன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்ப்பதற்கே பல பிள்ளைகள் அவனுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரைக் கூட அவனுக்குப் பக்கத்தில் அண்ட விடாமல் அவன் சைக்கில் வலம் வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் அவன் தாத்தா, அந்தப் பிள்ளைகளை விரட்டுவதற்கு உபயோகப்படுத்தும் வார்த்தைகள் கண்டிப்பாக கவினுக்குப் புரியாதவைகள்.
அவன் யாருடனாவது விளையாடுவதற்கு விரும்பினால் கூட அவனை விடுவதற்கு அவன் தாத்தா தயாரில்லாமல் இருந்தார். பேரப்பிள்ளை இந்தக் கிராமத்துப் பையன்களோடு சேர்ந்துகொண்டு கண்ட கண்ட வார்த்தைகளையெல்லாம் கற்றுக்கொள்ளும் என்ற பயம் அவருக்கு.
அவருக்கு எப்போதும் பொழுதுபோக்கிற்காக உடனிருக்கும் பக்கத்து வீட்டுச் சிறுவனுக்கும் கூட அவரின் பேரப்பிள்ளையிடம் விளையாடுவதற்கு அனுமதியளிக்க மறுத்திருந்தார் கவினின் தாத்தா.
அந்தச் சிறுவன் அன்றாட வயிற்றுப் பாட்டிற்கே அவன் அம்மாவிடம் போராடிக் கொண்டிருப்பவன். கவின் இருக்கும் நிலையே வேறுவிதம். அவன் கைகளில் வகை வகையான தின்பண்டங்கள் இருக்கும். அதில் சிலவற்றைத் தின்பான், சிலவற்றைத் தெருவில் திரியும் நாய்களைக் கூப்பிட்டு அதுகளுக்குப் போட்டுவிட்டு வேடிக்கைப் பார்ப்பான். தின்றுவிட்டு மீண்டும் ஏதாவது கிடைக்காதோ என்று அவைகள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும். சில நேரங்களில் அவன் தாத்தா பாட்டிக்கும் தெரியாமல் அச்சிறுவனுக்கும் சில தின்பண்டங்களைக் கைமாற்றி விடுவான் கவின். அச்சிறுவன் வாங்குவதற்கு யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அவன் கைகளைப் பிடித்துத் தினித்துவிட்டு ஓடிவிடுவான்.
அந்தச் சிறுவன் கவின் செய்யும் ஒவ்வொரு சாகசத்தையும் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பான். ஆர்வத்தில் சிலநேரம் அவன் கிட்டப் போய் விளையாட்டில் சேர்ந்துகொள்ளும் தனது விருப்பதைத் தெரிவிப்பான். இருவரும் சேர்ந்து கொஞ்ச நேரம்தான் விளையாடுவார்கள். அதற்குள் கவினுக்கு அவன்மேல் கோபம் வந்துவிடும். அந்தச் “சிறுவனிடம் உனக்கு விளையாடவே தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு அவன் மட்டும் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொருளை எடுத்துக்கொண்டு தானியாகப் போய் விளையாடுவான்.
சிலநேரங்களில் கவின் வாயிலிருந்து வந்து விழும் ஆங்கில வார்த்தைகளைக் கேட்டு விட்டு, நம்மை ஏதோ திட்டுகிறான் என்று நினைத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடியிருக்கிறான் அச்சிறுவன்.
கவினுக்கு கிடைத்ததுபோல் தனக்கு ஒரு தாத்தாவோ பாட்டியோ கிடைக்கவில்லையே என்று அச்சிறுவன் தன் மனதுக்குள் நினைப்பதற்கு கவினே பல நேரங்களில் காரணமாய் இருந்திருக்கிறான்.
கவினின் அப்பா அவன் உடமைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கார் டிக்கியில் வைத்துக்கொண்டிருந்தான். அவன் தாத்தாவும் அவன் கூட ஒத்தாசை செய்துகொண்டிருந்தார். கவின் அவனோடு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. இனி புறப்பட வேண்டியதுதான். தனது தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவதற்குத் தயாரானான் கவின். அவன் அப்பா டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டு, பின்பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.
கவினின் தாத்தா ஏதோ ஒன்றை விட்டுவிட்டோமே என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவன் இதுநாள்வரை ஓட்டிக்கொண்டிருந்த சைக்கிள் அவர் கண்ணில் பட்டது. உடனே மகனை இருக்கச் சொல்லிவிட்டு காரின் மேல் பகுதியில் ஏற்றுவதற்குத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்.
காரில் ஏறப் போன கவின் கீழே இறங்கினான். கொஞ்சநேரம் அவன் தாத்தவையே பார்த்துக்கொண்டிருந்தான். சற்றுத் தொலைவில் பக்கத்து வீட்டுச் சிறுவன் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
சைக்கிளைக் கீழே இறக்கி வைக்கச்சொல்லி அதில் ஏறி உட்கார்ந்துகொண்ட கவின், அதை ஓட்டிக்கொண்டு நேராக அந்தச் சிறுவனிடம் போனான். அவனைப் பார்த்த அந்தச் சிறுவன், தன் வீட்டிற்குள் போய்ப் புகுந்துகொண்டான். வெளியிலிருந்தே அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்ட கவின், “இனிமே… இந்த ஊருக்கு நான் அடுத்த வருசம்தான் வருவேன்… அதனால… இந்த சைக்கிள் வீணாத்தான் கடக்கும்… எனக்கு சென்னைல அப்பா… நெறைய சைக்கிள் வாங்கி வச்சிருக்கார்…. உனக்குத்தான் சைக்கிள் இல்லையே…. இத நீயே வச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுவனின் வீட்டு வாசலிலேயே அந்தச் சைக்கிளை நிறுத்திவிட்டுக் காரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான் கவின்.
அவனின் அந்தச் செயலைக் கண்ட அவன் உறவுகள் அவனை வைத்தக்கண் வாங்காமல் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர்.