பிரியாணிக்குப் பிறகு வெள்ளைச் சோறை பிசைந்து சாப்பிட ஏதோ கோழி ரசம் என்ற ஒன்றை ஊற்றுவார்கள்.
கூடவே ஒருத்தர் கோழியின் அவித்து மேல் ஓடு நீக்கப்பட்ட வெள்ளை நிற முட்டை ஒன்றை ஒவ்வொரு இலையிலும் முழுசாக வைத்துக்கொண்டே போவார், அதைப் பார்த்தால் அப்போதுதான் கோழி வந்து ஒவ்வொரு இலையிலும் வரிசையாக முட்டையிட்டுவிட்டுப் போன மாதிரி இருக்கும். ரசச் சோறுக்கு இது.
மோர் சோறுக்கு தொட்டுக்கொள்ள சுண்டல் மாதிரி ஆட்டு ரத்தத்தை நன்றாகவே வறுத்து வைத்துக்கொண்டு கேட்கிற அளவுக்குப் பரிமாறுவார்கள். இன்னும் அவனுக்குப் பெயர் தெரியாத மாமிச அயிட்டங்கள் பரிமாறப் பட்டுக்கொண்டே இருக்கும். ஏதாவது காரணத்தால் கல்யாணத்துக்கு வர முடியாமல் போனவர்கள்கூட இந்தக் கறிச் சாப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். சில கல்யாணங்களில் கறிச் சாப்பாட்டுக்கு மட்டும் விசேஷமாகக் கூப்பிடும் அந்தஸ்து மிகுந்த விருந்தாளிகள்கூட இருப்பார்கள்.
இந்தக் கறிச் சாப்பாட்டு விருந்து நாளில் அவனைப் போன்ற சைவ சாப்பாட்டுக்காரர்கள் சரியாக கவனிக்கப்பட மாட்டார்கள். விரல்விட்டு எண்ணி விடக்கூடிய எண்ணிக்கையில்தான் அந்தக் காலத்தில் சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் இருப்பார்கள். தனியாக அவர்களை ஒரு ஓரத்தில் பாய் விரித்து அமர வைப்பார்கள்.
ஆனால் உடனே இலை போட்டு அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி விடமாட்டார்கள். கொஞ்சம் நேரமாகும். எல்லா பரிசாரகர்களும் ஏனோ சைவ உணவுப் பந்திக்காரர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்படியே ஆடி அசைந்து பரிமாறத் தொடங்கிவிட்டால் கூட வரிசையாக உணவு வகைகள் உடனுக்குடன் வந்து கொண்டிருக்காது. சாம்பார், ரசம் போன்ற அத்தியாவசிய அயிட்டங்கள் வர காத்துக் கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் கை காய்ந்து போகும். மோர் வாளியைக் காணோம் என்ற சப்தம்தான் கேட்டுக் கொண்டிருக்கும்.
சில சமயம் இன்னொரு வேடிக்கையும் நடக்கும். அவன் மாமிச உணவு எதுவும் சாப்பிடாத சைவ சாப்பாடுக்காரன் என்பது அப்போதுதான் தெரிந்த மாதிரி சில சொந்தங்கள் பொய்யான ஆச்சர்யங்களை அவனிடம் வந்து காட்டிக் கொண்டிருப்பார்கள்.
அவன் அப்பா எவ்வளவு நெருங்கிய சொந்தக்காரர்கள் வீட்டின் கல்யாணமாக இருந்தாலும் இந்த மூன்றாம் நாள் சாப்பாட்டுக்கு மட்டும் போகவே மாட்டார். கொஞ்சம் பெரிய பையனாகி விட்ட பிறகு அவனும் அப்பா மாதிரி போவதை நிறுத்தி விட்டான். இதைப் பார்த்து சந்தோஷப்பட்ட அவன் அப்பா ‘சபாஷ்’ என்று சொல்லி அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். அது அவனுக்கு ஒரு பெரிய பரிசைப் பெற்ற மாதிரி மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால் அவன் அப்பா அவனை வளர்த்தமாதிரி அவனுக்குப் பிறகு பிறந்த அவன் இரண்டு சகோதரிகளையும், ஒரு சகோதரனையும் வளர்க்க நினைக்கவில்லை. அப்படி அவர்களை வளர்க்கவும் இல்லை.
அவன் அம்மாவைப் போல அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் எல்லாவிதமான மாமிச உணவுகளையும் சாப்பிட்டு வளர்ந்தார்கள். இன்னும் நிறைய விஷயங்களிலுமே கூட அப்பா அவனை வளர்த்த மாதிரி தம்பி தங்கைகளை வளர்க்கவில்லை.
சிறு வயதில் இருந்தே அவன் அப்பா நிறைய புத்தகங்கள் வாசிக்கிறவர். அவருடைய பெரிய அலமாரி நிறைய ஆங்கில இலக்கியம் சம்பந்தமான புத்தகங்களும், பல தேசங்களின் அரசியல் வரலாறு போன்ற புத்தகங்களும் ஏராளம் இருக்கும். அவற்றில் அப்பாவுக்கு மிகவும் பிடித்த புத்தகங்களின் சுவாரஸ்யமான பகுதிகளை அப்பா அவனை உட்கார வைத்து ஆங்கிலத்தில் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருப்பார்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் சில முக்கியமான கதாபாத்திரங்களாக அப்பாவே மாறி மாறிப் பேசி அழகாக நடித்துக் காட்டுவார். அவன் அப்பாவிற்கு ஆங்கிலம் மிகப்பிடித்த மொழி. ஆக்ஸ்போர்டு பாணி ஆங்கிலத்தில் பேச ஆசைப்படுவார்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் மிக உக்ரமான ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், ஆங்கிலேயர்களின் பல வாழ்க்கை முறைகளில் அப்பாவிற்கு பெரிய அபிமானம் இருந்தது. அதைப் பற்றி எல்லாம் அவனுக்கு நிறையச் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் அப்பா இதயெல்லாம் அவனிடம் மட்டுமே பேசியிருக்கிறார். அவன் தம்பியிடமோ, தங்கைகளிடமோ ஒருநாளும் பேசியதில்லை.
அதே மாதிரி அப்பா அவருக்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த தொழில் அதிபர்கள்; அரசியல் தலைவர்கள்; பெரிய அரசு அதிகாரிகள் போன்றவர்களைச் சந்திக்கப் போகிற பல நேரங்களில் அவனையும் அழைத்துப் போயிருக்கிறார். இந்தச் சந்திப்புகள் அவன் சின்னப் பையனாக இருந்தபோதும் நடந்திருக்கின்றன. அவன் பெரிய பையனாக ஆகிய பிறகும் நடந்திருக்கின்றன. சில முக்கியமான மனிதர்களை மிக முக்கிய தருணங்களில் அப்பா சந்தித்தபோது அவனும் உடன் இருந்திருக்கிறான்.
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த திராவிட முன்னேற்ற கழக அரசு, பேருந்து போக்குவரத்தை அரசுடமை ஆக்கியது. அந்தச் செய்தியினால் அவன் அப்பா மிகவும் பதட்டமாகி விட்டார். அப்போது எதிர்பாராமல் அவன் மெட்ராஸில் இருந்து விருதுநகர் போயிருந்தான். அப்பா அவனையும் அழைத்துக்கொண்டு மதுரை போனார்.
அப்போது தென் தமிழ்நாட்டில் இணை சொல்ல முடியாத பெரிய பேருந்து நிறுவனமாக வளர்ந்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் அலவலகம் மதுரை மேற்கு வெளி வீதியில் இருந்தது. அதன் மேனேஜிங் டைரக்டரான டி.எஸ்.கிருஷ்ணா அவன் அப்பாவின் நெருக்கமான நண்பர்களில் மிக முக்கியமானவர். கிருஷ்ணாவின் பெயரைச் சொன்னாலே அப்பாவின் தலை அவரையும் அறியாமல் வணங்கும். நண்பர்தான் என்றாலும் கிருஷ்ணாவின் பெயரால் அப்பா அவரைக் குறிப்பிட மாட்டார். முதலாளி என்றுதான் சொல்வார். அந்த மாதிரி ஒரு மரியாதை…
டி.எஸ்.கிருஷ்ணா புகை பிடிக்கிறவர். அப்பா அவரைப் பார்க்க மதுரை போகிற போதெல்லாம் அவர் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை அப்பாவிடம் நிறைய தருவார். அவன் அப்பாவிற்கு அவைகள் விலை மதிப்பற்ற பொக்கிஷம் போன்றவை. அந்த சிகரெட் பாக்கெட்டை சட்டைப் பையில் வைத்திருந்து எல்லோரும் பார்க்கும்படி ஒவ்வொன்றாக எடுத்துப் பெருமையுடன் புகைத்துக் கொண்டிருப்பார்.
அன்று அப்பாவும் அவனும் மதுரையில் டி.எஸ்.கிருஷ்ணாவின் எதிரில் போய் உட்கார்ந்தார்கள். அப்பாவின் கண்கள் ஒரு மாதிரியான கோபத்தில் சிவந்து போயிருந்தன. சிறிது நேரத்திற்கு அவர்கள் இருவரும் பேச்சு எதுவும் இல்லாமல் மெளனமாக இருந்தார்கள்.
முதலில் ஆரம்பித்த டி.எஸ்.கிருஷ்ணா அப்பாவிடம் நா தழுதழுக்க “முன்னூறு பஸ்களைக் கொண்ட பஸ் போக்குவரத்துத் தொழிலை இழந்ததில் எனக்குப் பெரிய வருத்தமில்லை… ஆனால் பஸ் கம்பெனியின் ஊழியர்களை இழப்பதுதான் எனக்கு மிகப்பெரிய துயரம். அவர்களை பார்த்துப் பார்த்து நான் அன்புடன், மரியாதையுடன் நடத்தினேன்… அவர்களை எப்படிப் பிரிவேன்?” என்றார்.