மதுரைக்கு டிக்கட் இல்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 2,971 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாம் கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலை வரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட் டிலே உட்கார்ந்து கொண்டு, அதுவேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும்போல் இருக்க, இந்த வேதனையை நான் பட வேண்டுமாம், இதற்கு, வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.

“டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப்பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு “காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, ஏதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப்பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக்காட்சி தானே இருந்து தீரும், பாஷையிலே வித்யாசம் இருக்கும், ஆனால் தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?

எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார், வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசாரகீதம் பாடுவாள். அவன் ஏசும்போதாவது கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம் விறைத்துப் பார்க்கலாம், முணுமுணுக்கலாம், சாக்கிட்டுத் திட்ட லாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள் பக்கத்திலே படுத்துக் கொண்டு, உள்ளத்தை முள்ளால் குத்தும் போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள் நம்மை கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித்தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன், அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவது போல, நவரத்னகண்டியல்ல – என்றெல்லாம் தோன்றும், ஆகவே அவளிடம் கோபித்துக் கொள்ளவும் முடியாது, தவறிப்பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்தில் புரளும், பிறகு நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து முன்தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்க வேண்டும். காலையிலே அந்தக் கடினசித்தம் படைத்தோன் அடே கழுதே! என்று ஏசினானே அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றும், அர்த்த ராத்திரியிலே அவள், “ஆமாம்! நான் கேட்டால் வாங்கித்தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?” என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.

அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்டபலன் என்ன? நான்! ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்…”

பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை, இருந்தபோது, இதுபோலக் கூறிவந்தான், ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்து விடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது. ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடி போடுவதைப் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோது கூட அவர்கள் மனச் சாந்தியில்லாமலே இறக்க வேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் ஏன் மனக்குறை ஏற்படும்படி நடந்து கொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒருகட்டை. என்னமோ அவளைத் தொட்டு தாலிகட்டுகிற வேளை, பகவான் கண் திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே.” கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது அவன் கூறியதிலே. ஆனால் பிரம்மச்சரியத்தைவிட்டுக் கிரஹஸ் தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக்காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டு மல்ல, பெரிய நாயகியின் புன்சிரிப்பும்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை. அவன் மட்டுந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதையே வெளியே சொல்லத்தான் மாட்டார்கள்!!

“மதுரை! உங்கவீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு.”

“ஏன்! சாமிகோயிலுக்கா?”

“அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”

“எந்த அம்மன் சன்னதி?”

“அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான், கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை” பகை “திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்ட மாட்டே போலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டு போயிடுவேன் போலிருக்கே.”

“ஆமாம்! நாம்ப ராஜாசர்! வைரமாலையும், கைநிறைய வளையலுமா வாங்கித் தரப்போறோம்? என்னவோ பாபம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியதுதானே, நான் மட்டுமா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன் அப்போ நீயும் அப்படித்தான்”

“நானா? நான்தான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லையே!”

“வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக் கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்த சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?”

திருமலை, மதுரையின் நண்பன். இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்து வந்தான் மதுரைக்கு. ஆனால் வீட்டுக்குப் போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்யம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை, “ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை” என்று கூறுவான்.

“பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்து கொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித்தான் சில பேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவு செய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியது தானே. இல்லை, நான்தான் கேட்கிறேன், என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார், அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளு நோவுன்னு படுத்தாரு, பக்கத்திலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுகபாவம், இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆளுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மளமளவென்று பேசுவாள். மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகி விட்டது. ஆறணா கிடைத்தபோது, “திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடிபோலிருக்கு” என்று கூறின மதுரை ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு, “உன் சம்சாரம் சொல்வது போலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க” என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது. அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரிய நாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!

கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை, பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!

வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவினாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! வீட்டுக்குள்ளே நுழைகிறபோதே, பெரிய நாயகி நம்மைப் பார்த்து வெந்நீர் வேணுங்களா? என்று கேட்ட உடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றாப் பறந்து போயிடுது. என்னமோ உழைக்கிறோம், பெரியநாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்து வைத்திருந்து இரவிலே போடுவதும் இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிட வேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வரவரத் துரும்பாக இளைத்துப் போறீங்க என்று வைத்தியராகும் போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம்தானே! – என்று மதுரை எண்ணிக்களித்தான். பெரியநாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளான போதும் சந்தோஷமாகத்தானிருந்தது. “அவன் எங்கே? சின்னவனை ஜாக்கிரதையாகக் கவனி! ஜலதோஷம் போல இருக்கே” என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.

“அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாகக் கத்துதுங்க?”

“குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?”

“குழந்தைகள்! மகாகுழந்தைகள், கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க.”

“இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்ததுங்களே. அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பப்பா! குழந்தைகளை இப்படி அலற அடிக்கக்கூடாது.”

கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடிபுகுந்தது. குடும்பம் வளர்ந்தது, கூலி வளரவில்லை . கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தை விட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?

வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாக பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை, வேலைபோயிற்று கிருஹஸ்தாஸ் ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான், உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் – அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கல மாக்கினான். பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனக சபையின் காலைக் கும்பிட்டுக் கூலிவேலைப் பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட் டான், குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கைத்தலையணை, உறக்கத்துக்கு பதில் ஏக்கம்! இந்நிலையில் சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் அதிக நாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான் மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவல்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான், அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டாள். நாலாவது பையன் அவன் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின் துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டு விட்டான். அலைந்தான் அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான், எச்சில் இலைகளிடம் உறவு கொண்டான். ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான், நீறு பூசினான், கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்கு மட்டும் பூஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ, கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்கு சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் ‘அரோகரா” கூறத்தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு! ஆனால் அவளுக்கு ஒரு ‘அவன்” தேவை! சன்யாஸ ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.

***

இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம் மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.

தொழில் பெருக வேண்டும் தேசத்தில்; வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால் இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக் கூடாது – என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருக்கும் அன்பர் இந்து மார்க்க விசேஷம்பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த மிஸ்டர் ஆஸ்டின், சுடச்சுட பதிலுரைத்தார், “இந்த இலட்சியங்கள் எழிலுள்ளனதான்! மார்க்க மணிகள்தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்” பாட்டாளி காணச்சகியாத இடத்திலே இருந்து கொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்யபோதனையும்; ஆஸ்ரம இலட்சணமும், என்னய்யா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.

ஆம்! ஆஸ்டின் துரை மட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்து வரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதிபெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!.

“நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும், என்னைப் போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல, இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடிருக்கும் வறுமை! அது போக, உமது வேதப் புத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழ மார்க்கமில்லாத எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள் கேட்போம்!” என்று கூறுவான். ஆனால் நீதிபதி, நிர்மலமான இந்து மார்க்கத்தைப் பற்றி இதோபதேசம் செய்த இடம் இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகு கலையாத மோட்டார் ஏறிச்சென்று மேதினியின் நிலையாமைப் பற்றியும் வாழ்வு பொய் என்பது குறித்தும் வாயுரை செய்யும் இடம்! மதுரை, எப்படி அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தார்ந்தமுணர்ந்த சீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடிய இடம்! அங்கே போக மதுரைக்கு “டிக்கட் கிடைக்காது”

– 4-3-1945

– செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 1950, பரிமளம் பதிப்பகம், காஞ்சீபுரம்.

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *