மண்வாசனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 2,950 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உஸ்… ஸ்…… அப்பாடா.”

காலை முழுவதும் காட்டியும் மறைத்தும் கண்ணாம் பூச்சி ஆட்டமாடி, ஈற்றிலே வைரமுத்தரிற் கவிந்து, அவரைப் பரிபூரண மாக ஆட்கொண்டுவிட்ட களைப்பின் சொல் வடிவங்கள் அவை. அவர் தமது தோளிற் கிடந்த கலப்பையையும் நுகத்தையும் அநாயாசமாக, ஆனால் வெகு பரிவுடன் இறக்கி, பல்லாண்டு பல்லாண்டாகக் கலப்பையும் நுகமும் கிடந்து தழும்பு கண்ட அந்தச் சுவரிலேயே சார்த்திவிட்டு, தலையிற் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

அவர் இப்பொழுதும் வயலில் நின்றிருப்பாரானால் இன்னுங் கொஞ்சநேரம் உழுதிருப்பார்; கால்கள் மாடுகளின் பின்னால், அலையலையாகச் சரிந்துகிடக்கும் உழவுச் சால்களில் நடக்க, அங்கிருந்து பரவும் அபூர்வமான புதுமண் வாசனையை முகர்ந்து கொண்டு, சிறுகுழந்தையைப் போலத் தள்ளாடித் தள்ளாடி நடை பழகியிருப்பார்; அப்பொழுது அவர் மனம் பலபல எண்ணங் களை ஓடவிட்டு, அவற்றுக்கு அருத்தமும் அழுத்தமும் கொடுக் காமல், தொட்டுந் தொடாமலும் அலைந்து திரிய, நெற்றி வியர்வை வழிந்து நெற்றிப் பொட்டைக் குளிர்வித்துக் கீழிறங்கி வாயில் நுழைந்து, வெற்றிலைச் சாற்றோடு இணைந்து புதுச்சுவை கூட்ட, அவையெல்லாவற்றையும் அனுபவித்துச் சுவைத்துக் கொண்டு உழுதிருப்பார். இரண்டு நாட்களுக்குமுன் மழை பெய் திருந்தபோதிலும் பங்குனிமாத வெயில் தன் தனித்தன்மையைக் காட்டிக் கொண்டு தழலைச் சொரிந்து தகித்தது. பாவம்! மாடுகள் களைத்துப்போய் நுரை கக்கத் தொடங்கி விட்டன. வாய் பேசாது ஏவியவற்றை முடிக்கும் அந்த எருதுகளே வைரமுத்தரின் கண் கண்ட தெய்வம். தெய்வமும் வாய் பேசுவதில்லையன்றோ? அவர் இலக்கணப்படி மாடுகள் உயர்திணைப் பொருள்கள்; அதனால் அவைகளை – அவர்களை – மேலும் வருத்தாமல் அவிழ்த்து விட்டார். அவை பக்கத்திலிருந்த குளத்தை நாடிச் சென்றன.

அவிழ்த்து விட்ட மாடுகள் இன்னும் வீடு வந்து சேரவில்லை. துண்டை உதறி விரித்துவிட்டு முற்றத்து மாமரத்தின்கீழ்ப் படுத்து விட்டார் வைரமுத்தர். களைப்பு வேசிப்பெண்ணைப் போன்றது. இரண்டும் சமயசந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து, முடிவிலே அவனவன் பெலவீனத்தை வாயிலாகக் கொண்டு, அவனவனை முழுதும் வசமாக்கி மயக்கிவிடும். இவ்வளவு நேரமும் எங்கோ பதுங்கிக் கிடந்த களைப்பு, அவரை முற்று முழுதாக ஆட்கொள்ள, அவர் அதனோடு புணர்ந்து, மோனநிலையிற் கிடந்து கண்களைச் சொருக விட்டு, அதைச் சுவைத்துச் சுவைத்து அனுபவித்தார். களைப்பிலே பிறந்த சோர்வை, உள்வாங்கி அனுபவிப்பதென்பது பலருக்குக் கிட்டாத ஓரின்ப அனுபவம்.

“பூரணம்” என்று மனைவியைக் கூப்பிட்ட பின்னர்தான், தனது மோனப் பெருநிலையில் ஒரு பொள்ளல் விழுந்துவிட்டதை அவரால் உணரமுடிந்தது. ஆண்டாண்டு காலமாகக் கூப்பிட்டுப் பழகிய வாய், குரல் கொடுத்ததையும் அவராலே தடுக்க முடிய வில்லை .

இத்தனை மூடு சூளையாய் இந்தக் களைப்பு எப்போது தன்னிலே கவியத் தொடங்கியது என்று எண்ணிய போது, அவருக் குச் சிரிப்பு வந்தது. வயது ஒவ்வொன்றாக நழுவி நழுவி விழ, அந்த இடத்திலே சோர்வு வெற்றிக்கொடி நாட்டிவிடுகிறது. ‘என்ன! என்னில் இன்னும் வாலிபமா கொப்பளிக்கும்! போன தையோடு அறுபத்து நாலு முடிந்து அறுபத்தைந்தாகி விட்டதே! காடு வா வா எனக் கூப்பிடுகிறதே. இந்தப் பருவத்திலும் வயலைப் பாராம லிருக்க மனம் கேட்டால் தானே’ என்று எண்ணிக் கொண்டார்.

“மே…மே ஏ எ…ஏஎ” – வீட்டுக் கோடியிற் கட்டியிருந்த தாயாடு அளபெடை சேர்த்துக் கத்தியது. பின் தாயோடு சேர்ந்து குட்டிகளும் முறைவைத்துக் கத்தின. ‘நான் வீட்டுக்கு வந்த சங்கதியை இவைகளுக்கு யார் சொன்னவர்… பாக்குக் கடிக்கிற நேரம் பொறுங்கோ. ஏ! பூரணம், இவைகளுக்கு ஒன்றும் போடவில்லையோ? ‘ – அவர் மனத்தளவில் ஆடுகளோடும் பூரணத்தோடும் பேசினார். வாய்விட்டுப் பேசமுடியாத அவ் வளவு சோர்வு!

அவர் அசையாமல் அண்ணாந்து கிடந்து, மீண்டும் கண்மூடி மௌனியாய் எண்ணமும் நினைப்புமற்றதொரு நிலையில் லயித்து விட்டார். எல்லாம் பழுத்து உதிர்ந்து, புதிய தளிர்களுக்கு இடங் கொடுத்துவிட, தப்பித்தவறிக் கிடந்த ஒரு பழுத்த மாவிலை, அவர் நெஞ்சில் விழுந்தது. அவர் திடுக்கிட்டுப் போய்க் கண்விழித்தார். கண்கள் மேலே சென்று, மாமரத்தின் பசிய இலைகளெல்லா வற்றையும் அளாவி அலைந்து சுழன்றன; கை பழுத்த இலையை எடுத்துச் சுழற்றியது. ‘பழுத்துவிட்டால் இலையல்ல எதுவுமே விழவேண்டியது தான். புதிய இலை வரும்வரையில் இருந்ததே பெருங் காரியம். ஆசைக்கும் ஓரளவு வேணும். இந்தக் காணி பூமியில் எத்தனையோ ஆண்டுகளாகப் புரண்டுருண்டும் ஆண் டனுபவித்தும் சலிப்புத் தட்டவில்லையே! இந்த மண்வாசனை பூரணத்தின் கூந்தல் மணம் போல, நெஞ்சின் நெஞ்செல்லாம் இனிக்கிறது. ஆதி தெரியாத இந்தக் குல விருட்சத்திலும் எத்த னையோ பழுத்தல் இலைகள், புதுத் தளிர்களிடம் அதை வளர்க் கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அதனடியில் வீழ்ந்து அதற்கே உரமாகிவிட்டன. உடனடியாக இரு பிள்ளைகளையும் அழைத்து, காணி பூமி, பொருள் பண்டமெல்லாவற்றையும் பங்கிட்டு ஒப்படைத்து விடவேண்டும். எப்போது காற்று வீசும்; எப்போது பழுத்தலிலை விழும் என்று யாருக்குத் தெரியும்?’ – இந்த எண்ணம் மின்னலாய் வெட்டி, அவரது மனத்தின் மூலத் தானத்திலே பெருஞ் சோதியை எறிக்கவிட்டு மறைந்தது.

மின்னலையடுத்துப் பயங்கரவிருள் முழு மூர்க்கத்தனமாய் வந்து அவருள்ளத்திலே உறைந்தது. மனக் கண் அந்தவிருளிற் கூர்மையிழந்து தட்டுத்தடுமாறி ஊர்ந்தது. ஏதோ ஒருவகைத் தவிப்பு, மெல்ல மெல்லப் பெருகிப் பெருங்கடலாய் அலை மோதி, நெஞ்சச் சுவர்களைத் தாக்கியது. உள்ளத்தை இழக்குந் தவிப்பா? உள்ளதை இழக்குந் தவிப்பா? உள்ளத்திலே ஊறி ஊறி உயிருடன் கலந்துவிட்ட தன் மானத்தின் மரணாவத்தையிற் பிறந்த தவிப்பா ?

‘இனி, நானும் பூரணமும் யாருக்குப் பாரமாவது? மூத்தவ னுக்கா? இளையவனுக்கா? ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கா? யாருக்கும் யாரும் பாரமாக வேண்டாம். படுக்கையில் விழுந்து கிடக்கிறபோது, இருவரும் வந்து எது வேண்டுமானாலும் செய்யட் டும்’ எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகட்டும், இப்போது நான் யாருக்காவது பாரமாவதோ, யார் நிழலையாவது அண்டு வதோ முடியாது. ஆகவே பூரணத்தாலும் முடியாது’ இந்த எண்ணங்கள் அவரது தவிப்பின் பயங்கரக் கொந்தளிப்பை ஓளரவு தணித்தன.

தவிப்பு அடங்கிய நிலையிலே, சந்தேக வித்தொன்று முளைத்து மகாவேகமாக வளர்ந்து, கணப்பொழுதிலே பெருமர மாகிவிட்டது. அது நிரந்தரமாகி உண்மைத் தன்மை பெற்று விட்டால், அதனால் விளையும் பயனை அவர் தெளிவாக உணர்ந் தார். அந்த மனச்சாட்சியின் ஒவ்வொரு சிறு தோற்றமும் புரண்டு நெளிந்து வழுக்கி ஊர்ந்து புழுக்கூட்டம் போலக் கிலுமொலுத்தது.

“மூத்தவனுக்கு நிலத்திலும் பார்க்க உத்தியோகமே பெரிது. இளையவனுக்கு வியாபாரமே பெரிது. இருவரின் இந்தப் பற்றுக் களின் முடிபு நிலத்தின் பற்றின்மைதானே. ஆமாம், அவர்களுக்கு ஒன்றைத் தீர்மானமாகச் சொல்லிவிட வேண்டும். ‘அடே, இங்கே பாருங்கோ , நீங்கள் சிரித்துச் சிரித்து வாழக் காரணம் உங்கள் படிப்பென்றும் வியாபாரமென்றும் நினைத்தால் நீங்கள் சுத்த மடையரே, அதற்குக் காரணம் இந்த நிலம்; இந்த நிலத்திலே பரம்பரை பரம்பரையாகச் சிந்திய வேர்வை; அதனால் ஏற்பட்ட செழிப்பு. இந்தப் பூமித்தாய் வரண்டு வெடித்துப் பாழாய்க் கொட்டாவி விட்டு, பெருமூச்சுவிட்டால் அவ்வளவு தான்; குல விருட்சம் படவேண்டியது தான். இதோ ஒன்றாய்க் கிடைத்த நிலம் இரண்டாகி உங்களிடம் வருகிறது. இதோ உறுதிக் கடதாசி, குத்தகைக்கு விடுவேன்; வராத்துக்கு விடுவேன்; அப்படியிப்படி என்ற பேச்செதுவும் இருக்கக் கூடாது. ஒன்றில் நீங்கள் நிலத்துக்கு வரவேண்டும்; அவ்வளவுதான்’ என்று அறுத்துறுத்துச் சொல்ல வேண்டும். பாம்பு மாதிரி நழுவி நொழுவிப் பேசுகிற பேச்சுக் கிடமில்லை . பிறகு அவரவர்கள் வந்த வந்த வழி.”

அவர் மனத்திலே கிடந்து நெளிந்த மனக்காட்சிகளெல்லாம் ஒன்றில் ஒன்று அடங்கி, அந்த ஒன்றில் மற்ற ஒவ்வொன்றும் ஒவ்வொன்றா யடங்கி ஈற்றில் எல்லாம் ஒன்றுள் அடங்கி அந்த ஒன்றும் இல்லையாய் மறைந்தது. இந்நிலையில் அவர் மனம், ஆழ்ந்து அனுபவித்துத் தூங்குகிற குழந்தையாய், அது கனவிலே ‘நரி வெருட்டச்’ சிரிப்பது போலச் சிரித்தது; அவரும் சிரித்தார்.

“என்ன சிரிப்பு; கால் முகம் கழுவியாச்சோ” என்ற குரல் தூங்கும் இதயத்தை அருட்டி எழுப்பி இனிமையூட்டியது. வைரமுத்தர் ஒருக்கணித்துத் திரும்பி, தலைக்குக் கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு பார்த்தார். பூரணம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

உயர் சாதிப் பிராமணப் பெண்போல, மஞ்சளிலே சிறிது செம்மையைக் கொட்டிய நிறம்; வாட்டசாட்டமான பாரிய சரீரம்;

நடக்கும் போது சதை அதுங்கிப் பிதுங்கிக் குலுங்குவதும் ஒரு கவர்ச்சியாகத்தானிருந்தது. முன் நெற்றியிலே தொடங்கி நடு வகிட்டின் இரு கரையையும் பற்றிக்கொண்டு மேலே மேலே பரவிச் செல்லும் நரை; பளிச்சென்ற முகம்; குளித்த பிறகு நெற்றியிலிட்டுக் கொண்ட ஒரு சத அகலக் குங்குமப் பொட்டு; பார்த்தால் மனத்தூய்மையைப் பரவவிட்டுச் சிலிர்க்கச் செய்யும் முழுப்பொலிவு; அவள் அன்னபூரணி தான்; பூரணம் தான்.

அவள் தாமரையிலையால் மூடப்பட்ட சருவச்சட்டியொன்றை ஒரு கையில் ஏந்திக் கொண்டு, மறு கையிலே செம்புந் தண்ணீருங் கொண்டு வந்தாள்.

அவளிலே கண்ணைப் பதித்து, மனத்தால் விழுங்கி, பின் இரண்டினாலும் அளவிட்டுப் பூரித்தார் வைரமுத்தர். எத்தனையோ ஆண்டாண்டாய், ஒவ்வொரு நாளிலும் எத்தனை எத்தனையோ முறை பார்த்துங் கூட, அவருக்கு அலுக்கவில்லை; அலுக்கப் போவதுமில்லை. இப்போது அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தார். நாணம் என்றுமே நித்தியகன்னி. முதுமையின் எல்லையைத் தொட்டு நிற்பவளிடங் கூட, தன் தனித்தன்மை மாறாமற் பரந்து நிற்கும் மகாமந்திர சக்தி அதனிடமுண்டு. அது ஐம்பத்திரண்டு வயதிலும் அவளையறியாமலே, அவள் முகத்தே செம்மை காட்டி, பதிலுக்குச் சிரித்து விட்டு மறைந்தது.

“என்ன சிரித்துக்கொண்டு…எழும்புங்கோவன்…” அப்போது தான் கணகணவென்ற கழுத்து மணியோசையோடு, எருதுகள், சுதந்திரமாகத் திரிந்துவிட்டு, அதுவும் சலித்துவிட உள்ளே நுழைந்தன.

“உதை இப்படி வை. மாடுகளைப் பிடித்துக் கட்டி, வைக்கல் இழுத்துப் போட்டிட்டு வா.”

“இதைத் தின்னுங்கோவன். பிறகு போய்க் கட்டினா லென்ன”

”எனக்கென்ன அவசரம்’ வாயில்லாச் சீவன்கள் பாவம்! இன்றைக்கு நல்ல களை. அவைகளைக் கட்டி ஒரு திரணை

வைக்கல் போட்டிட்டு வாணை; என்ரை ராசாத்தி…”

கிழவன் வாய்விட்டுச் சிரித்தான். முன்னமே நாணத்தால் ஓரளவு செம்மைச் சாயம் தோய்ந்திருந்த கிழவியின் முகம் முழுவதும் சிரித்தது.

“சீச்சீ… கிழவனுக்கு வயது போனாலும் பகிடி போகாது.”

“ஒகோ, அப்ப நான் கிழவன். நீ இப்பவும் வாலைக் குமரி என்று நினைப்போ. அதுக்கென்ன போட்டு வா.”

வாயாட வாயில்லை பூரணத்துக்கு. சருவச் சட்டியையும் செம்பையும் ‘தொம்’ என்று வைரமுத்தருக்கு முன்னே வைத்து விட்டு, மாடுகட்டப் போய் விட்டாள் கிழவி.

வைரமுத்தர் எழுந்து கால்முகங் கழுவிக் கொண்டு வந்து அதேயிடத்தில் அமர்ந்தார். பூரணம் இன்னும் வரவில்லை . மெதுவாக இலையைத் தூக்கிப் பார்த்தார். உள்ளே பழஞ்சோறு; ஒடியற் பிட்டோடு மரவள்ளிக் கிழங்குப் பழங்கறியும் சேர்த்துத் தயிர்விட்டுக் குழைத்த கொழுகொழென்ற குழையல்; பார்க்கப் பார்க்க வாயூறியது. பசி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. என்றாலும் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டார். அதற்குக் காரணம் இருந்தது. பூரணம் திரட்டித் திரட்டிக் கையில் வைத்தா லல்லவா அவராலே தின்ன முடியும். மூடிவைத்து விட்டு இருந்தார்.

பூரணம் கடுகடுப்போடுதான் வந்தாள்; நெற்றியிலே முத்து முத்தாக வியர்வை துளிர்த்திருந்தது. கன்னம் இரண்டிலும் வியர்வை ஆறு, கால்வாய்கள் கண்டு ஓடியது. வாளிப்பான அந்த உடலை அசைத்தெடுத்தது நெடுமூச்சு.

“இந்த வேலையெல்லாம் இனிமேல் என்னாலை ஏலாது. என்னாலை ஏலாதென்றால் உங்களாலும் ஏலாது தான். பேசாமல் ஒரு பிள்ளையோடு போயிருப்பம்” – எத்தனையோ காலமாகச் சிறுச்சிறு ஊற்றாக ஊறி உள்ளே நிறைந்து அலைமோதிய ஆசைவெள்ளம். கிழவனது ஆண்மை ஆணையிட அடங்கிக் கிடந்த அது, வேளைகிடைத்த வேளையிலே வெளியே பெருகத் தொடங்கியது.

“என்ன, அழையா விருந்தாய்ப் போகச் சொல்லிறியோ?” – கிழவன் வேடிக்கை பண்ணினான். ஆனால், அதனுள்ளீடாகப் புருடத்துவ கம்பீரம் நிமிர்ந்து நின்றது.

“பேச்சைப் பாருங்கோ பேச்சை; இவர் பெரிய மகாராசா; கொடி, குடை, ஆலவட்டத்தோடு வந்து அழைக்க வேணுமாம், மீசை நரைச்சாலும் ஆசையும் அதிகாரமும் நரைக்கவில்லை .”

“பின்னை என்ன, உனக்கும் எனக்கும் என்ன குறைவாம். நான் இராசா; நீ இராசாத்தி. அவர்கள் வந்து கூப்பிட்டபோது பார்த்துக் கொள்ளலாம்; இப்ப உனக்கோ எனக்கோ எதுவும் வந்துவிடவில்லையே.”

“ஐயையோ, மறந்து போனன். காலமை இரண்டு காயிதம் வந்தது. ஒருவேளை வரச்சொல்லித்தான் இரண்டு பேரும் எழுதி யிருக்கோ என்னவோ. கொண்டு வரட்டோ” – பூரணத்தின் ஆசை வெகு மூர்க்கமாக நிமிர்ந்தது. இரு கடிதங்களையும் பற்றிக் கொண்டு, தன்னை வெளிக்காட்டியது.

“கொஞ்சம் பொறு, அதுக்கு இப்ப என்ன அவசரம். சாப் பிட்டு முடியட்டும்.” வைரமுத்தர் கிழவியின் ஆசைக் கலவை களைப் பிரித்துப் பிரித்துத் தனிக் கூறுகளாக்கிப் பார்த்தார். கிழவனிடம் குறும்பு முளைத்தது.

“ம் கோயியாதை, உள்ளதைச் சொல்… பிள்ளைகளைப் பார்க்க ஆசைப்படுகிறாயா? பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிச் சீராட்டவோ அல்லது சாகக்கு முந்திக் கொஞ்ச நாளைக்காவது மாமியார் அதிகாரம் பண்ண வோ …. அல்லது…”

“எப்பவும் நையாண்டிதான். இன்னும் எத்தனை நாளைக்கோ. உள்ளே அழுகத் தொடங்கிவிட்ட இந்தப் பூசணிக்காயைப் பெருமான் எப்ப தூக்கி எறிகிறாரோ’ அப்ப சளிஞ்சு போய், வாயைப்பிளந்து கிடக்க வெண்டியது தான். அதுக்கிடையிலை கொஞ்ச நாளைக்காவது….” பூரணம் வெம்பி வெடித்துக் கண்ணீர் சிந்தினாள். பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் நினைத்த போது அவள் உள்ளத்தின் உள்ளெல்லாம் உருகி நெகிழ்ந்தது, தாய்மைத் துடிப்பு உடலணுக்கள் எல்லாவற்றிலும் ஊறியது; பழஞ்சோறு திரட்டி எடுத்த கை நடுங்கியது. அவள் உணர்ச்சிப் பெருநெருப்பிலே கருகி, ஒரு கணம் தன்னை மறந்து மூச்சிழந்திருந்து வெளி வந்தாள். அவளைக் கண்டு, வைரமுத்தரின் கண்களும் குளமாகி விட, தனது சால்வைத்துண்டையெடுத்துப் பூரணத்தின் கண்ணீரைத் துடைத்தார்.

“என்ன பூரணம், உன்னத்தனை பாசமும் வருத்தமும் எனக்கில்லையோ; உன்னது தாய்ப்பாசம்; அடங்காது. என்னதை அடக்கியடக்கி, குமைந்து குமைந்து பார்க்கிறேன். நினைத்தவை களை நினைத்து நினைத்து, நினைக்க முடியாதவைகளையும் நினைத்துப் பார்த்து நான் படும்பாடு …….. எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த பிறகு ஒரு முடிபுக்கு வந்துவிட்டன்…..”

பூரணம் கண்களை அகல விரித்துக் கொண்டு, அந்தக் கண்களிலே ஆசை, இரசவோட்டமாய் ஓட, அந்தக் கண்களினாலே கேட்டாள், ‘என்ன’ என்று.

“இரண்டு பேரையும் வரச் சொல்லி இண்டைக்கே எழுதப் போறன். வந்ததும் சொத்தெல்லாத்தையும் இரண்டாய்ப் பிரிச்சு எழுதிப்போட்டு…”

கிழவனைக் கட்டியணைத்து, கொஞ்சிக் குலவவேண்டும் போல அத்தனை மகிழ்ச்சி கிழவியிலே கிளர்ந்தெழுந்தது. அதற்கு அணையிட அவள் விரும்பாவிட்டாலும். வயது அணையிட்டது.

“அது தான் சரி, நாங்கள் வாழ்ந்தது போதும். சின்னஞ் சிறுசுகள் ஆண்டனுபவிக்கட்டும். இந்தாருங்கோ தண்ணி . சருவச் சட்டிக்கை கையைக் கழுவிப் போட்டுக் குடியுங்கோ; காயிதத்தை எடுத்துக் கொண்டு வாறன்.”

பூரணம் சேலைத்தலைப்பிலே கையைத் துடைத்துக் கொண்டு குடுகுடுத்தாள். அடுத்த நொடியிலே கண்ணாடிக் கூடும் இரண்டு கடிதங்களுங் கொண்டு வந்தாள்.

வைரமுத்தர் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டு, ஒரு கடிதத்தைப் பிரித்து வாசித்தார். அவர் முகத்திலே கணத் துக்குக் கணம் உணர்ச்சித் திவலைகள் அள்ளித் தெளிக்கப்பட்டன. அந்தத் திவலைகளைக் கொண்டே, கடிதத்தில் என்ன இருக்கிற தென்று கண்டு கொள்ள முயன்று தவித்தாள் பூரணம். ஈற்றில் முகத்திலே துலாம்பரமாகத் தெரிந்த வெறுப்போடு அக்கடிதத்தை மடித்து வெகு நிதானத்தோடு துண்டு துண்டாகக் கிழித்தார். படபடென அடித்துக்கொள்ளும் மனப்பறவையின் ஒரு சிறகை யாரோ வெட்டி விடுவது போலத் துடித்தாள் கிழவி.

“என்னவாம்……..” – அவள் குரலில் ஏக்கம் குடியிருந்தது.

“இது உன் மூத்தமகன் எழுதினது. உன்ரை மூத்த பேரன் பூனாவுக்கோ எங்கேயோ விவசாயம் படிக்கப் போறானாம். இப்ப தன்னிடம் பணம் இல்லையாம்; தன்ரை பங்கை வித்துத் தரட்டாம்.”

“அதுக்கென்ன, என்ரை செல்வங்கள் படிச்சு நல்லாய் வரட்டும். அப்பனே முருகா! அந்தக் குஞ்சுகளுக்கு ஒரு குறையும் வரவிடாதை.”

“ம்…. அப்படியே?”…. வைரமுத்தர் கடைவாய்க்குள் சிரித்துவிட்டு மற்றக் கடிதத்தைப் படித்தார். மீண்டும் பூரணம் அவரது முகத்தில் எழுதப்படும் உணர்ச்சி வரிகளை வாசிக்க முயன்றாள். கடிதத்தைப் படித்து முடித்த வைரமுத்தர் மிக மிக நிதானத்தோடு அதையும் துண்டாக்கினார். மற்றச் சிறகும் அரிபட்ட பூரணத்தின் மனப்பறவை மேலுங்கீழுந் தொங்கி அவத்தைப் பட்டது.

“என்ன” – பூரணம் ஏங்கினாள்.

“இளையவன் இன்னுமொரு கடை எடுத்துவிட்டானாம். வியாபாரத்தைப் பெருக்க வேண்டுமாம்; பெருவாரியாகக் காசு தேவையாம். அதற்காகத் தன் பங்குக் காணி பூமிகளைத் தரட்டாம், விற்பதற்கு.”

“இளையவன் எப்பவும் கெட்டிக்காரன்தான். பாவம், நாலு பெண்ணைப் பெற்றுவிட்டான். சம்பாதிக்கத் தானே வேணும்.”

“ம்…..அப்படியா” – அதற்குமேல் எதுவும் பேசாமல், பல பல எண்ணங்களை உள்வாங்கி மனக்கல்லில் மோதி மோதிச் சிதறு தேங்காயடித்து விளையாடினார் வைரமுத்தர்.

“இப்ப என்ன செய்யப் போறியள்; எழுதுங் கோவன்.”

“எழுதத்தான் போறன்…”

“என்ன எழுதப் போறியள்?”

“உடனே வாருங்கோ என்று தான்.”

“இப்படி எழுதுங்கோ, இந்தக் கடிதத்தைத் தந்தியாய்ப் பாவிச்சு உடனே வரச் சொல்லி, என்ன…”

“வேறென்ன எழுதவேணும்…..”

“வாறபோது தனியே வரவேண்டாம். பெடிச்சி, பேரப் பிள்ளைகள் ஒருத்தர் தவறாமல் வரவேணும்… அதுவும் பத்துப் பதினைஞ்சு நாள் நிக்கக் கூடியதாய் வரவேணும்…”

“வேறென்ன….”

“வேறென்னத்தை நான் செல்ல…”

“பார் பூரணம், எழுதப்போறன்; எல்லாரும் உடனே வாருங்கோ; பெண்சாதி பிள்ளைகளோடு வாருங்கோ. பத்து நாளல்ல ஒரு மாதம் நிற்கக் கூடிய ஆயத்தத்தோடு வாருங்கோ … ஆனால், நீயும் நானும் இருக்கிறவரையில் எதையும் விற்பதற்காக ஒருவனும் வரவேண்டாம். இந்த நிலந்தான் இந்தக் குலத் தாய். அவளை விற்றுவிட்டுக் கிடைக்கிற படிப்பும் வேண்டாம்; வியா பாரமும் வேண்டாம். நாங்கள் இப்போது யாருக்கும் எதையும் எழுதிக் கொடுக்கிற யோசனையில்லை; இப்படித்தான் எழுதப் போறன், சரிதானே…..”

பூரணம் விக்கித்துப் போனாள். மடை திறந்தாற் போலக் கண்ணீர் ஆறாகப் பெருகியது. கண்ணீர்த் திரையினூடாக அவள் தன் கணவனைப் பார்த்தாள்; தன் முப்பத்திரண்டு வருடக் குடும்ப

வாழ்க்கையிலே கண்டிராத புதுமைக் கணவனை அவள் கண்டாள். மனம் பெருமையால் விம்மிப் பொங்கிப் பூரித்தது;

“நான் ஒரு மடைச்சி”

“சீ, யார் அப்படிச் சொன்னது? நீ ஒரு பெண்; என் மனைவி; இரு பிள்ளைகளின் தாய்.”

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *