கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,470 
 

மணல் நெருடியது மனத்தை.

கீழே விழுந்த அந்தப் பேன்ட்டை மறுபடியும் கொடியில் போட்டே இருக்க வேண்டாம்.

உதிர்ந்தது மணல் மட்டுமா ?

அவள் நம்பிக்கை… கோட்டை எல்லாமுந்தான், பின்னே என்ன ?

அம்பத்தூரில் ஏதோ பாக்டரியில் அப்பரென்டீசாக இருப்பவனுக்கு பீச்சில் என்ன வேலை ?

கேட்டுவிட முடியுமா ? அம்மாதான், என்றhலும் வயிற்று எஜமான் ஆயிற்றே. அப்பனைக் கொண்டு பிறந்துவிடவில்லை என்ற அற்ப சந்தோஷமும் போய் விட்டதா ? பாவி, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்தாலும் குடி, கூத்தி என்று கெட்டலைந்து குடும்பத்தை சோற்றுக்கும், துணிக்கும் பறக்க விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். நெருப்பு மாதிரி இருந்த மகனும் இப்படியா ? அவருக்காவது ஆபீஸ் சம்பளம் என்று இருந்தது. இவன் இன்னும் ஆயிரம் ரூபாயைக்கூடக் கண்ணால் பார்க்கவில்லையே…

இருபத்தேழுக்குள் என்ன அவசரம் ? கூடப் பிறந்தவளுக்கு முப்பது வயதாகிவிட்டது. அவளுக்கு ஒரு வழி செய்ய வேண்டாமா ? ஊர் உலகத்தைப் போல் பெண்ணாயிருந்தால் நாலெழுத்துப் படித்து நாலு காசு சம்பாதிக்காவது துப்பிருக்கும். படிப்பு, பாட்டு, கைவேலை ஒரு சாமர்த்தியம் கிடையாது. உடம்புதான் மதமதவென்று வளர்ந்திருக்கிறது. அதையும் சொல்லிவிடக் கூடாது. ரோஷம் ஜாஸ்தி, தம்பி செல்லம் வேறு, “அக்காவை ஒண்ணும் சொல்லாதே, அம்மா”.

ஒண்ணும் சொல்லவேண்டாம். இப்போது இவனுக்கே ஆள் தேடிக் கொண்டு விட்டானே… அன்றைக்கே சந்தேகம்தான். ஜன்னலில் மாட்டியிருந்த ஜோல்னா பையிலிருந்து காகிதங்கள் காற்றில் பறந்து சிதறின. ஒவ்வொன்றையும் பொறுக்கி அடுக்கி பைக்குள் வைத்துக் கொண்டான். கம்பெனிக்குப் போன பிறகு ஒன்று அழுக்குக் கூடைக்கடியில் இருந்தது, மழையில் நனைந்து எழுத்தே தெரியவில்லை. ஆரம்பத்தில் மட்டும் அன்புடைய… என்று இருந்தது. வயிறு சொரேர்… என்றது. யாருடைய அன்பு இவனுக்கு ? அவன் பொறுக்கியெடுத்த காகிதங்கள் எல்லாமே அன்புடைய-தானா ? ஆயிரம் ரூபாய் அப்பரென்டீசுக்குக் கூட அன்புடையவர்கள் இருப்பார்களா ? நாணாவைக் கேட்க முடியவில்லை. கேட்கவும் முடியாது. “ஆமாம் அப்படித்தான்” என்று சொல்லிவிட்டால்…

எல்லாப் பிள்ளையும் பார்வதி மாமி பிள்ளைபோல் ஆகிவடுமா ? ஊரில் அப்படி ஒரு பெயர் அவனுக்கு. அவர் போனவுடனே அப்படியே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அம்பத்தூர் பாக்டரி போனவன்தான். ஒருத்தரிடம் ஒரு உதவி கேட்கவில்லை. அவன் மாமாகூடச் சொன்னார். “படிச்சு முடியேண்டா… அப்புறம் வேலைக்குப் போகலாம்”-னு. “வேண்டாம் உங்களுக்கு ஏன் சிரமம் ?”-னு சொல்லிவிட்டான். அப்போ அவன் செய்தது சரின்னு மாமா நிரூபிச்சிட்டார். அப்புறமா அவர் ஏன் கருடா-ன்னு கேட்கலை. இப்போ இவனும் ஒருத்தியைப் பார்த்துண்டு அவ பின்னாடி போயிட்டா எங்க கதி ? உத்தியோகம் பார்க்கற சின்னப் பெண்களுக்கே கல்யாணம் ஆறது கஷ்டமாயிருக்கு. முப்பது வயசாகி அரைக் கெழுமா நிக்கறவளுக்கு எப்படிக் கல்யாணம் ஆகும் ? ஒரு ஓட்டல் சர்வரோ சமையக்காரரோன்னாக்கூட என்னால் என்ன செய்ய முடியும் ?

முன்பெல்லாம் பாக்டரியிலிருந்து ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுவான். இப்போதெல்லாம் ஒன்பது, பத்தாகிறது. வந்ததும் சாப்பிட்டுப் படுத்துவிடுகிறhன். ஒரு பேச்சு இல்லை. கலகலப்பு இல்லை. மனதுக்குள் கலவரமோ ? வழக்கமான படியளப்பில் குறையில்லைதான். நாளைக்கு அவளுக்கு ஒரு முழம் பூ வாங்கினால் கூட நாலு ரூபாய் துண்டு விழுமே ! முதலாளி ஏதாவது போட்டுக் கொடுத்திருப்பாரோ ? தெரியவில்லை. கொடுத்தாலும் சொல்ல மாட்டான். என் மேல் சந்தேகம், சிக்கனம் போதாதென்று. ஓ.டி. போனஸ் என்று எது கொடுத்தாலும் வீட்டுக்கு வராது, முதலாளியிடம்தான் கல்யாணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்தான். இனிமேல் அது யாருடைய கல்யாணத்துக்கோ ?

வரப் போகிறவள் எப்படியிருப்பாளோ ? அவளும் கொஞ்சம் சம்பாதித்தால் நல்லது. ஆனால் இவன்தான் சம்பாதிக்கிற பெண்ணே வேண்டாம். நான் என்ன கையாலாகதவனா ? என்று கேட்பானே. அப்போது அப்படிச் சொன்னான். இப்போது எப்படியோ ? அந்தப் பெண் வழியில் அதிகம் வயது ஆகாமல் யாராது இரண்டாவது தாரம் என்று கிடைத்தாலும் போதும். கிடைக்குமா ?

இப்படி ஒரு பெண் ஜன்மம்… பிள்ளையை வேவு பார்க்க பீச்சுக்கு வந்து நிக்கற பெண் ஜன்மம் யாருக்கும் வேண்டாம். அவன் என்னைப் பார்த்துவிடக் கூடாது. ஆனால் நான் அவனைப் பார்க்கணும். அவளைப் பார்க்கணும். தனியாய்ப் பார்த்து நாலு வார்த்தை பேசணும். முப்பது வயசிலே ஒரு மூதேவி கல்யாணமாகாமே வீட்டிலே இருக்கிறதைச் சொல்லணும்.

அவனே சொல்லியிருப்பானோ ? பைத்தியமா புலம்பறேன். எல்லாத்துக்கும் காரணம் இந்த மணல்… முள்ளாய் உறுத்திய மணல். அன்னைக்கு அவன் பேன்டிலேருந்து உதிர்ந்ததும் இந்த மணல்தானே ? பேன்டிலே மணலிருந்தா காதலிகூடத்தான் வந்திருக்கணுமா ? தனியா யாரும் வர மாட்டாளா ? ஒரு நாள் ரெண்டு நாள் வரலாம். தெனம் ராத்திரி பத்தாறதே. ஈஸ்வரோ ரட்சது.

பாவம், அதோ யாரோ பெரியவர். அறுபதுக்கு மேலிருக்கும். டிபன் பாக்சிலே சுண்டலை எடுத்துண்டு ஓடறது…. அவர் பையனை எந்த மகராசி வலை வீசப் பிடிச்சாளோ…

“மாமி சுண்டல் வேணுமா ?”

வேண்டாம் என்று சொல்லத் தோன்றவில்லை. ஒரு ரூபாயை எடுத்து நீட்ட சுண்டல் கைக்கு வந்தது.

“பாவம் இந்தத் தள்ளாத வயதிலே…”

“என்ன செய்வது ? எல்லாருக்கும் அதோ போறானே, அவன் மாதிரி ஒரு புள்ளை பொறந்திருந்தா… கவலை வேண்டாம்தான் ?”

அவர் கை நீட்டிய திசையில்… அவன்… அவனேதான் ! அவன் இங்கே வந்துவிடுவானோ ?

“நாணா மாதிரி ஒரு பையனைப் பெறக் கொடுத்து வச்சிருக்கணும்மா. பெத்தவ பாக்கியசாலி. நாள் முழுவதும் அம்பத்துhர்லே பாக்டரியிலே வேலை செஞ்சிட்டு, அக்கா கல்யாணத்துக்குக் காசு சேக்க சாயந்திரத்திலே சுண்டல் விக்க இங்கே வர்றான் !”

“அப்படியா ?”

“ஆமாம்மா”

அவர் போய்விட்டார்.

மணலில் சற்று உட்கார்ந்துவிட்டுப் போகலாம். இனிமேல்…

மணல்

உறுத்தாது… மனதை நெருடாது… மெத்தென்றிருந்தது !

– ஆகஸ்ட் 03 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *