மடி நனைந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 8,707 
 
 

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜாகி, ஓரடி எடுத்து வைப்பதற்குள் நெஞ்சுக்குள் பொங்கிய குமுறலை ஆபிதாவால் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அன்வரின் மார்பில் முகம் புதைத்து ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழளானாள்.

அன்வருக்கு மாத்திரமென்ன இழப்பின் ஆற்றாமை இல்லையா? அவன் இதயம் ஊமைப்புலம்பலாய் அழுது கொண்டிருந்தது ஆபிதாவுக்குத் தெரியுமா? ஆயினும், அவன் ஓர் ஆண் பிள்ளையாயிற்றே! பெண்மயின் பலவீனம் அணையுடைத்துப் பாயும்போது ஆறுதல் சொல்லியாக வேண்டிய ஒரு பொறுப்பு மிக்க கணவனல்லவா?

சே, சே, என்ன ஆபிதா இது, குழந்தை மாதிரி? அதோ பார், நாலு பேர் நம்மையே பார்க்கிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொள்.. “ என்று அவன் வாய் ஆறுதல் சொற்களை உதிர்த்த போதிலும், அந்த அழுகையும்ம் தேம்பலும் ஒரு தாய்மை நெஞ்சிலிருந்து வெளிப்படுகிற இயல்பான குமைச்சல் என்பதையும் அவனால் உணர முடிந்தது.

இங்கே,..இங்கே வருகிறபோது எவ்வளவு சந்தோஷமாக…எத்தனை மகிழ்ச்சியோடு வந்தேன்..இப்போது எல்லாமே… எல்லாமே” நிகழ்ந்து முடிந்துவிட்ட அந்த மோசமான சம்பவத்துக்கு ஆபிதாவால் வார்த்தை வடிவம் தர முடியவில்லை.

உண்மைதான். ஏழு நாட்களுக்கு முன்பு இதே ஆஸ்பத்திரி வாயிலில் அவர்கள் வந்த குதிரை வண்டி நுழைந்தபோது ஆபிதாவின் நெஞ்சம் எத்தனை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிக் கிடந்தது. எவ்வளவு எழில் கனவுகள் கண்டுகொண்டிருந்தது. எல்லாமே இப்போது நாசம்தான். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே என்கிற புளித்துப்போன சித்தாந்தத்தை எண்ணி மனம் தேறுகிற நிலையில் அவளில்லை. ‘ஏன் நினைக்க வைத்தாய் இறைவா?’ என்று அரூபமாகி நிற்கிற அந்த ஏகனுக்கு கேள்வி எழுப்பிக்கொண்டு நின்றது அது.

அன்வரின் விழிகளைக்கூட வெண்பனி திரையிட்டது. ஆபிதாவின் பச்சை உடம்பைக் கைத்தாங்கலாகப் பற்றியபடி ஆஸ்பத்திரி கேட்டைக் கடந்துகொண்டிருந்தான் அவன். காலை நேரமாதலால் பிணி கொண்ட மனிதர்களின் ஜீவனற்ற கலகலப்பில் தோய்ந்து நின்றது அந்த ஆஸ்பத்திரியின் வெளிப்புறம். வண்டியில் சாத்துக்குடிப் பழங்களில் வியாபாரம் செய்கிற நடைபாதை வியாபாரிகளின் கூவலும் மருந்து பாட்டில்களைப் பேரம் பேசும் நோயாளிகளின் முனகலுமாய் ஓர் உயிர்ப்பற்ற சந்தடி.

ஆபிதாவால் அடிபெயர்க்கவே இயலவில்லை. ஏழு நாட்களுக்கு முன்பு வரை பூரிப்பிலும் பொலிவிலும் பொங்கி நின்ற அந்தத் தேகம், இப்போது கொத்தாக இளைத்திருந்தது. தாய்மையின் பூரணத்துவம் நிறைவாகக் குடிகொண்டு நின்ற வதனம், இப்போது மஞ்சள் பூத்து வெளிறிக் கிடந்தது. ஆர்வமும் ஆவலும் மின்னிய அந்த விழிகள் இப்போது வேதனையில் ஆழ்ந்து கிடந்தன. நெஞ்சின் வேதனையே நடையைத் தளர்த்தித் தள்ளாட வைத்திருக்கும்போது, தெம்பாக நடந்துவர எப்படி இயலும்/

ஆஸ்பத்திரியின் எதிர்வாடையில்தான் பஸ் நிலையம். எப்படியாவது ஆபிதாவை அதுவரை நடத்திச் சென்றுவிட்டால் போதும். பொறையார் போகிற பஸ் அடிக்கடி உண்டு. பகல் சாப்பாட்டுக்கெல்லாம் வீடு போய்விடலாம். அங்கே வந்து நெஞ்சின் துயரங்களை அவள் எப்படித்தான் கொட்டினாலும் நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகிற ஒலியலைகள்தானே? பரவாயில்லை.

சிமிண்டித் தரையில் அவளை அமர்த்தி வைத்துவிட்டு, “ஏதாவது சாப்பிடேன், ஆபிதா, இப்படி வெறும் வயிற்றோடு இருந்தால் எப்படி?” என அன்வர் பரிவை இழைத்து வினவியபோது, “வரும்போது வெறும் வயிற்றோடு வரவில்லையே. போகும்போதுதான் வெறும் கை” என்று விரக்தியாக ஆபிதா பேசியபோது, அந்த அர்த்தம் செறிந்த சொற்றொடருக்குப் பதில் கூற மொழி தெரியாமல் வாயடைத்துப் போனான் அன்வர்.

இந்தப் பரந்த உலகத்தில், நாளுக்கு நாள், வினாடிக்கு வினாடி, எத்தனையோ ஜனனமும் எத்தனையோ மரணமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கால வசத்தால் நமக்கும் அப்படியோர் அசம்பாவிதம் ஏற்படும்போது நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லைதான். அதுவும் புது வாழ்வின் நுழைவாயிலிலேயே அப்படியொரு சோகமான காவியம் எழுதப்பட்டுவிட்டால், ஆபிதாவைப் போன்ற பெண்களின் மென்மையான இதயங்களால் தாங்கிக்கொள்ள முடியாதுதான். அது அவளுக்குத் தெரிந்திருந்தும்கூட, அவள் எதிர்பார்த்து ஏங்கி நின்றது அதைத்தானா? இல்லையே, அது ஒரு கொடியில் முகையவிழ்க்கப்போகிற அரும்பைப் பற்றிய இனிமையான கற்பனை. அந்தக் கற்பனை அவர்களின் இல்லற ஏட்டில் கதையாகத்தான் எழுதப்பட்டு விட்டது. எழுதியவன், ஒரு சாதாரணக் கதாசிரியனா? இகபரம் இரண்டையும் இரு விரல்களால் இயக்குகிற அந்த ஏகனாயிற்றே.

பொறையார் செல்லுகிற பஸ் வந்துவிட்டது. பஸ் நிலையத்தில் மந்த கதியில் இயங்கி நின்ற மனிதர்கள் அசுரத்தனமாய்ப் பாய்ந்து சென்று அதில் ஏற முயன்றபோது, “இரண்டே பேர், யாராவது ஒரு பெண்ணும் ஆம்பிளையும் வாங்க” என்று கத்தினார் கண்டக்டர்.

அடுத்த விநாடியில் அன்வரையும் ஆபிதாவையும் சுமந்து கொண்டு நகர்ந்தது பஸ். பஸ்ஸுக்குள் இட நெருக்கடி மிதமாக இருந்த காரணத்தால் பெண்கள் சீட்டிலேயே ஆடவர்களும் அமர்த்தப்பட்டிருந்தனர். நல்ல வேளையாக அனைவரும் கணவன் மனைவிகள்தான். அவர்களினூடே அன்வரும் ஆபிதாவும் உட்கார்ந்தனர்.

“டீட், டீட்” டிக்கட் என்கிற வார்த்தை ரொம்ப நீண்டதாகத் தெரிந்ததாலோ என்னவோ கண்டக்டர் சுருக்கி முழக்கியபடி பஸ்ஸை அலைந்துகொண்டிருந்தார். ஆபிதா முக்காட்டை இழுத்து மூடிக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே நகர்ந்து விரைகிறவற்றில் பார்வையை நாட்டி அமர்ந்திருந்தாள். விழிகளில் தெரிகிற காட்சிக்கும் அவள் இதயத்தில் நடக்கிற போராட்டத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமிருக்காது என்கிறவரை அன்வருக்குத் தெரியும்.

எதிர் சீட்டில் ஒரு முஸ்லிம் வாலிபனும் அவனருகே ஒரு இளம் பெண்ணும் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். குப்பென்று நாசியை நெருடிய வாசனாதிகளின் மணத்தைக் கொண்டும், வாலிபனின் புத்தாடைகளைக் கொண்டும், அந்தப் பெண் அசையும்போதெல்லாம் சலசலத்துச் சிரிக்கிற பட்டுப் புடவையின் இரைச்சலைக் கொண்டும், அவர்கள் சமீபத்தில் மணமாகிய இளம் தம்பதிகள் என்பதை அனுமானித்துக் கொண்ட அன்வருக்கு, ஆபிதாவும் தானும் இதே மாதிரி தலைப் பெருநாளுக்கு மாமியார் வீடு சென்ற நினைவு நெஞ்சிலாடிற்று. அப்போதெல்லாம் எத்தனை மகிழ்ச்சி. பஸ்ஸின் குலுங்கலில் உடல்கள் உராய்ந்து கொள்ளும்போது அந்த இதமான வெம்மைச் சுகத்தில் எத்தனை புல்லரிப்பு. ஆபிதாவின் பட்டு மேனியைக் கள்ளத்தனமாகத் தொட்டுப் பார்த்து அவளை வெட்கத்தால் கூச வைப்பதில் எவ்வளவு ஆசை. ஒரே வருடத்தில் எல்லாமே போய்விட்டது என்று சொல்வதைவிட, ஒரே ஒரு இழப்பில் எல்லாமே கசந்து விட்டது என்பது பொருந்தும்.

இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்வையை நகர்த்திய அன்வரின் விழிகள் நிலைக்குத்தாய் நின்றன. ஏனோ இதயத்தின் அடித்தளத்திலிருந்து வெம்மைக் காற்று வெளிக்கிளம்பிற்று. கண்கள் பளிச்சென்று நீரில் மிதந்தன.

ஒரு பெண் — ஒரு இந்துப் பெண்தான் — தன் கணவனின் அருகில் அமர்ந்து கொண்டு, மடியில் மல்லாந்து படுத்தபடி தன் பொக்கை வாயில் புன்னகையைத் தவழ விட்டிருந்த தன் குலக்கொழுந்தை — பிள்ளைக் கனியமுதை — பூரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள். தாய்மை நெஞ்சின் நிறைவெல்லாம் பார்வையில் பரிவாகச் சொட்ட, அந்த இளம் கொடியைத் தழுவியிருந்த கைகளைத்தான் எத்தனை லாவகமாக வைத்திருந்தாள், மடிய மஞ்சமாக்கி, அந்த மஞ்சத்தில் கிடந்த புது மலரை நோக்கி நிற்பதில்தான் எத்தனை களிப்பு அவளுக்கு?

அன்வர் வெடுக்கென்று தலையைத் திருப்பினான். அங்கே ஆபிதா,அந்தப் பெண்னையும் அவளுடைய பிஞ்சையும் ஏக்கம் வடிகிற விழிகளால் வெறித்துக் கொண்டிருந்தாள். ஒரு பெண்ணுக்கு இறைவன் அருளியிருக்கும் சந்ததி பேற்றைப் பூரணமாக்கிக் கொண்டு விட்ட ஒருத்தியை, அது கிடைத்தும் கை நழுவிப் போன ஆற்றாமையில் வெய்துயிர்த்து வீற்றிருக்கும் மற்றொருத்தி இப்படித்தான் பார்ப்பாளோ?

அன்வர் சங்கடத்துடன் நிமிர்ந்தான். எதிரே அமர்ந்திருந்த புதுமணப் பெண்ணும் தன் பார்வையை அருகில்தான் நாட்டியிருந்தாள். அந்த நோக்கில் இழப்பின் வெறுமையில்லை. ஏக்கத்தின் சாயையில்லை. சோகத்தின் நிழலில்லை. பெருமிதத்தின் சுடரிருந்தது. ஆம், இன்னும் பத்துமாத காலத்தில் நானும் இப்படியொரு பிஞ்சுடலைப் பெற்றெடுத்துப் பேணிக்கொண்டிருப்பேன் என்று சொல்லாமல் சொல்லுகிற பெருமிதம். எனக்கும் அந்த உரிமையிருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிற பரவசம். தாம்பத்ய வாழ்வில் புத்தம் புது மணிகளாய்க் கோக்கப்பட்டிருக்கிற அவர்களின் இயல்புதானே அது?

இரண்டு ஜோடி விழிகள் தன் பசும் மேனியை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை உணராத அந்தச் சிசு மெல்ல வீறிட்டது. பசிப்பேய் அந்தப் பாலகனையும் விட்டு வைப்பதில்லையே.

சின்னச் சின்னதாய் அவயவங்களை ஒட்டி, ரொம்பவும் நுணுக்கமான கண்காணிப்பில் — வார்த்தெடுத்து மிகவும் நுட்பமான படைப்பாய்க் கிடந்த அந்தக் குழவி, தாயின் அமுத சுரபியில் இதழ்களைப் பதித்துக் கொண்டபோது, குபீரென்று பொங்கி மடை திறந்து கொட்டிய கண்ணீருக்கு உரியவள் ஆபிதாதான். தினவெடுத்து வலிக்கிற அந்த மார்பகங்களில் முத்துச் செவ்வாய் பதிக்க ஒரு ஜீவன் இல்லாத காரணத்தால் அவள் படுகிற வேதனை யாருக்குத் தெரிகிறது? பொங்கிச் சுரக்கிற அந்த அமுதத்தைச் சுவைத்துப் பருக அவளுக்கென்று ஓர் இளங்கொழுந்து இல்லாது போன துயரம் யாருக்குப் புரிகிறது? வெட்ட வெட்டத்தான் மணற்கேணி சுரக்கும். வெட்டாமலே ஊருகிறது தேனமுது.

ஆபிதாவின் இந்த நிலை — சொல்லமுடியாததும், நெஞ்சுக்குள் அடங்காததுமான இந்த சங்கட நிலை — யாருக்குத் தெரியாவிட்டாலும் அந்த இறைவனுக்குத் தெரியும். எல்லாம் தெரிந்த அவன் தான் அவளை இப்படி வாட்டுகிறான். ஏன் இப்படியொரு வன்மம்?

கண்ணுக்கு நிறைவான கணவனைத் தந்து, கருத்துக்கு இசைவான வாழ்வையும் தந்து, அவளுக்கு ஒரு புதிய உலகையே திறந்துவிட்டிருந்த இறைவன், அவளை நித்திய மலடாக்கி விட்டிருந்தால்கூட அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்மணிகளின் குழந்தைகளைக் கொஞ்சி அந்த இல்லாமையைத் தீர்த்துக்கொள்ள அவளால் முடியும். அன்வரையே வடிவில் சிறிதாக்கி, அவள் வயிற்றில் உருவாக்கி, உயிர்க்களையோடு கையில் தராமல், பறித்துக்கொண்டு விட்ட பிறகு, அவளால் எப்படித் தாங்க முடியும்?

பஸ் காரைக்காலைக் கடந்தது.

அமுதருந்திய குழந்தை பசி நீங்கிய நிறைவில் அன்னையையே நோக்கிக் கன்னங் குழியச் சிரித்தது. கொள்ளை கொள்ளை அழகை வாரி வைத்துக் கொண்டிருக்கிற அந்தப் புன்னகை இந்தப் பிஞ்சுக்கு எங்கிருந்துதான் கிடைத்ததோ?

கையையும் காலையும் துருதுருவென்று உதைத்துக் கொண்டு தாயின் கரங்களில் நெளிந்து புரண்டது. ஆயிரம் மலர்களின் மென்மையைக் கொண்டு வந்தாலும் இந்த உடம்பின் மென்மை போலாகுமா?

ஆபிதாவின் கரங்கள் துடித்தன. அந்தக் குழந்தையை அப்படியே பறித்தெடுத்து, மார்போடணைத்து, உள்ளத்தின் கொதிப்பெல்லாம் தீர்ந்து குளிர்கிற வரைக்கும் அதன் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அதன் செவ்வதரங்களை — நெஞ்சோடு கோத்து, அந்த இதமான உறிஞ்சுதலில் உலக இன்பத்தையே காண வேண்டும் போல் பரபரத்தது. ஆனால், சாத்தியம்தானா அது?

அன்வர் ஆண்டவனையே சபித்தான். ‘இல்லை என்று ஆக்கினதுதான் ஆக்கிவிட்டாய், ஒரேயடியாக அந்த நினைவையே நெஞ்சிலிருந்து அழித்துவிடக் கூடாதா, அல்லாஹ்? இப்படியொரு குழந்தையை எதிரில் வைத்து, அந்நியம் என்றொரு குறுக்குச் சுவரையும் இடையில் எழுப்பி, அவளை ஏன் வதைத்துக் கொல்கிறாய் ரஹ்மானே?

‘அந்நியம்! எது அந்நியம்? — பொங்கிப் பிரவகிக்கிற ஒரு பெண்ணின் தாய்மையுணர்ச்சிகளின் தாபத்தைத் தணிக்கிற ஒரு குழந்தை தாய்க்கு அந்நியமா? பெற்றவள் ஒருத்தியாயிருக்கலாம். பெற்று, பெற்றதை வாரிக்கொடுத்துவிட்ட பல பேருக்கு, எதிரில் இருப்பதுதானே பிள்ளைகள்? ஆபிதாவின் மனம் ஆக்ரோஷமாய் ஓலமிட்டது நியாயம்தானே?

அப்பப்பா, எத்தனைக் குழைவு! எவ்வளவு நளினம். அந்தத் தாயின் முகத்தில் பெற முடியாத ஒன்றைப் பெற்றிருக்கிற மாதிரி எவ்வளவு நிறைவு. நமக்கும் இப்படித்தான் இருக்குமோ? அந்த சுகமும் இன்பமும் எப்படியிருக்கும்? புது மணப் பெண்ணின் நெஞ்சில் இழையோடிய அந்த எண்னங்களுக்கு அவளின் அடக்கவொண்ணா ஆவல், மறுகணமே செயலாக்கம் தந்துவிட்டது. குழந்தையின் தாயை நோக்கிக் கையை நீட்டினாள்.

இந்தப் பசுந்தளிரின் மென்மை சுகத்தை இன்னொருத்திதான் எத்தனை இன்பமாயிருக்கிறதென்று உணர்ந்து பார்க்கட்டுமே என்கிற எண்ணத்தில் அவளும் குழந்தையை அந்தப் புதுமணப் பெண்ணிடம் நீட்டினாள்.

ஆபிதாவுக்கு நெஞ்சமே விண்டுவிடுவது போலிருந்தது. அதைக் கையில் வாங்கி அனுபவிக்கிற அந்த அற்ப பாக்கியம்கூட நமக்குக் கிடையாதா?

இட மாற்றத்தின் குலுங்கல், குழந்தையின் வயிற்றிலிருந்த தாய்ப்பாலைத் திரட்டிக்கொண்டு வந்து கடைவாயில் தேக்கிற்று. மளமளவென்று வடிந்து அது அவளின் துப்பட்டியை ஈரமாக்கியபோது, “புதுப்புடவை ஈரமாகிவிடப் போகிறது…கொடுத்துவிடு…”என்று கிசுகிசுத்தான், பெண்மையின் ய்தார்த்தமான நெஞ்சைப் புரிந்துகொள்ளாத அவள் கணவன்.

புதுமணப்பெண் கையிலிருந்ததை அதன் தாயிடம் தர முனைந்தபோது ஆபிதா தன் கரங்களை ஆவலோடு நீட்டினாள். மற்றவளும் தந்துவிட்டாள். இதயத்தில் பொங்கிக் குமிழ்கிற ஆனந்தப் பரவசத்தை அப்படியே உள்ளடக்கி, ஆவலும் ஆசையும் நெஞ்சில் மோத அதைத் தூக்கி அணைத்து தன் ஆற்றாமைத் துயரையெல்லாம் ஆபிதா கரைத்துக் கொண்டிருந்தபோது –

“ஐயையோ, உங்க புடவையெல்லாம் அசிங்கமாய்ட்டுதேம்மா” எனப் பதறித் துடித்தாள் குழந்தையின் தாய்.

“அசிங்கமா? இல்லை இது ஆனந்தம்’ எனக்கூறிக் கண்களை மூடிக்கொண்டாள் ஆபிதா. கரகரவென்று மடி நனைந்து கொண்டு வந்தது. அப்போது அதன் அபரிமிதமான வெப்பம் ஆபிதாவைப் புல்லரிக்க வைத்துக் கொண்டிருந்தது. மெய்ம்மறந்த நிலை.

தாய்மை சுகம். அது இப்படி மடி நனைக்கிற போதும் கிடைப்பதுண்டு என்கிற உண்மை, ஆபிதாவைப் போல் பெற்றுப் பறி கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும், இல்லையா?

சிறு குறிப்பு:
அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு 2007-ன் சார்பாக வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சிறுகதைகள் என்ற நூலில் இது இருந்தது. பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு குறும்படமாக ஆக்க முடிகிற அருமையான சிறுகதை.இதை எழுதியது எந்த ஆண்டு, எதில் முதலில் வெளிவந்தது, இது ஒரு முத்திரைக்கதையா என்றும் தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *