மக்தலேனா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 4,280 
 
 

20 வருடங்களுக்கு பிறகு…

நானாகவே நிற்கிறேன். அடையாளம் தெரியாதவர்கள் பற்றி கவலை இல்லை. தெரிந்து தெரியாத மாதிரி போவோர் பற்றிய அக்கறை இல்லை. அடையாளம் தெரிந்து கொண்டு அருகில் வருவோர் பற்றி தான் பயம். இருபது வருட கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை.

எல்லாம் இறைவன் செயல் என்று யாராவது கூறினால் நான் பொறுப்பல்ல. எல்லாம் இதயத்தின் செயல் என்கிறேன்.

ஊருக்கு சென்று நான் முதலில் நின்ற இடம் ஆலய வாசல் தான்.

“வா நரேந்திரா உனக்காகத் தான் இத்தனை வருடம் காத்திருந்தேன்” என்று விவேகானந்தரை அழைத்தது போல ஒரு குரல். “வா விஜயேந்திரா…. உனக்காகவே இந்த கண்களும்… கதவும்.. திறந்தே இருக்கின்றன…” என்றது. சொற்களின் ஆழம் என்னைத் தின்றது.

நன்றாக உற்றுப் பார்த்தேன். வார்த்தை குவியாத உருவத்தில்… மென் சோகம் புன்னகையாகி என்னை பார்த்து தலை அசைத்தது.

நெருங்க நெருங்க… குரலற்ற ஓவியம்… வாழ்வற்ற தேகத்தில் வெள்ளை உடையில்…. ஒரு தேவ தூதி…. என்றே நம்பினேன்.

கன்னியாஸ்திரி என்பதெல்லாம்…. கடவுளுக்குத் தெரியும். காதலித்தவன் முன்னால் பேசாமல் இருக்க முடியாது. ஓடி வந்து கை பற்றிக் கொண்டாள்.

முகம் மாறி இருந்தாலும் அருகாமை அவள் என்றது.

“என்னாச்சு… ஏன் இப்டி….?!” கண்கள் மிரள பார்த்தேன். வாடைக்காற்றுக்கு வேறு வேலை இல்லை. வந்து ரகசியம் கேட்க சுழன்று கொண்டிருந்தது.

“உன்ன தேடி வந்திருக்கணும் விஜயேந்திரா…..” என்றாள். ஒரு பாதாள குகைக்குள் இருந்து மூன்றாம் நாள் வெளிவரும் குரல் போல இருந்தது. காலத்தின் கருப்பு கசிவுகளை கடினப்பட்டு விலக்கிக் கொண்டு வந்திருந்தது…..அந்த பெண்புறா குரல்.

பதில் இல்லை என்னிடம்.

அப்படியே ஒரு முறை ஆழமாய் பார்த்தவள்….”அப்டியே இருக்க…. அதே தோள் புரளும் ஹேர் ஸ்டைல்…..பொன்னிற சார்மிங்….பொன்னுடல் ஸ்மார்ட்னெஸ்…….உனக்கு வயசே ஆகல விஜயேந்திரா…..” என்றவள் கண்களில் மேலும் கீழும்…. காலத்தின் கருப்பு வளையம்.

பேச்சு எங்கெல்லாமோ போனது. 20 வருட கதை என்றால்… இரண்டு மணி நேரங்கள் போதுமா..

இறகு முளைக்க தோன்றிய போதெல்லாம் வானம் இல்லை என்னிடம் என்றாள். வானத்தில் மறுகோடியில்.. நிறம் தேடிக் கொண்டிருந்தேன் நான் என்றேன்.

சிறு இடைவெளியில் ஆண்டவர் சிலையை நகராமல் பார்த்திருந்தோம். ஆலய வாசலில் நிறைய மற்றம்.

சட்டென “சரி ரேவா கூட லவ் எப்டி…” என்றாள். சிலுவையின் கனம் கூடியதை உணர்ந்தேன்.

“நீ போனப்பறம் இருந்த தனிமையை ரேவா தான் போக்கினா. எந்த புள்ளில காதல் ஆச்சுன்னு தெரியல…” என்றபோது அவள் முகத்தை பார்க்க முடியவில்லை. கருணையற்ற முகத்தில்… என்னை வரைந்திருந்தது போல உணர்ந்தேன்.

“நான் வரவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்ட இல்ல…” என்றவள் ஒரு கல்லுக்குள் நின்றிருந்தது போல இருந்தது.

“அப்டி யோசிச்சிருக்க கூடாது. என்னவோ விளையாட்டுத்தனம்” என்றபோது எனக்கு கண்களில் இதயம் கசிந்தது.

“நீயும் ரேவாவும் ஒருமுறை பள்ளிக்கூடத்துல டான்ஸ் பண்ணுனீங்கள்ல… அப்ப அதை பாக்க நான் வந்திருந்தேன்” என்றாள்.

எனக்கு திக்கென்றது.

“அன்னைக்கு ஜோடியா ஆடி அவ்ளோ பாராட்டு…. செம ஜோடின்னு எல்லாரும் சொல்லி.. பயங்கர வாழ்த்து. அதை நீ பார்த்தியா…?” என்றேன்.

“ம்ம்ம்… கூட்டத்துக்குள்ள தனியா ஓரமா நின்னு….” என்றவள் ஒரு நிழல் போல தெரிந்தாள்.

“ஏன் என்கிட்ட வந்து பேசல…” ஆலயத்தின் நிழல் தாண்டியும் அவள் மீது ஏதோ வெளிச்சம் படுவதாகவே தோன்றியது.

“மனசுக்குள்ளயே பேசிட்டு போய்ட்டேன்” என்றவளின் நெற்றியில் சுருக்கம் கூடியது.

அமைதியில்… என்னையே வெறித்துப் பார்த்தாள். நொடியை வேகமாக்க…..” ஏன் அப்டி பாக்கற…? என்றேன். வார்த்தையில்…. வெறுமை எனக்கு.

“உன்ன விட்டு தூரமா இருந்தாலும்…உன்ன பத்தி எல்லாமே எனக்குத் தெரியும்” என்றாள்.

அவளை உற்று பார்த்துக் கொண்டே “எப்டி…?” என்றேன்.

“நமக்கு பிடிச்சவங்க என்ன பண்றாங்கன்னு தேடுவோம்ல… அப்டி தேடி தேடி எல்லாமே தெரியும்…” என்றவள் கண்களில்… நான் ஒரு முறை அமிழ்ந்து எழுந்தேன்.

“ரெம்ப வருசத்துக்கு அப்பறம் ஒரு நியூ இயர் அன்னைக்கு இதே இடத்துல வெச்சு… ரேவா என்கிட்டே சொன்னா. உன்கிட்ட ஒரு விஷயம் மறைச்சிட்டேன். மன்னிச்சிருன்னு எல்லாம் சொன்னா…..” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டே….. “இப்போ வரை நாங்க க்ளோஸ் பிரெண்ட்ஸா தான் இருக்கோம்…அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றாள்…மெல்ல புன்னகைத்தபடியே.

ஆண்களின் காதல் ஆறு போல ஓடி விடுகிறது. பெண்களின் காதல் வறண்டாலும் குளமாகவே இருக்கிறது. எனக்கு ரேவாவைப் பற்றி கேட்க தைரியம் வரவில்லை. அவளும் அதற்கு மேல் ரேவாவைப் பற்றி கூறவில்லை.

“சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இதென்ன சிஸ்டர்… வேஷம்….” ஆரம்பத்தில் இருந்தே இருந்த குழப்பத்தை வார்த்தையாலே கேட்டு விட்டேன்.

“வாழ்க்கையே வேஷம்தான. இதுல சிஸ்டர் வேஷம் என்ன.. ஒய்ப் வேஷம் என்ன….”

‘நிழலும் சுடும்தான போல……’ உணர்கையில்…தோளை யாரோ தொட பட்டென திரும்பினேன்.

நடுங்கிய முகத்தில்,….நண்பன் பிரான்சிஸ்.

‘பிரான்சிஸ் ..’ என்று கண்கள் விரிய கட்டிக் கொண்டேன்.

கண்கள் பனிக்க என்னை நகர்த்தியவன்…. ‘வா வீட்டுக்கு போலாம்’ என்று என்னை அழைத்துக் கொண்டே அவளின் கையைப் பற்றியும் அழைத்தான்.

நான் இருவரையும் பார்த்தேன்.

‘நான் வரல விடு…’ என்று ஒரு குழந்தையைப் போல கீழே விழுந்து புரண்டு…சற்று முன் பேசிக்கொண்டு இருந்தவளா இவள்… என்பது மாதிரி எனக்குள் குழப்பம் சுழல…அழுது அடம் பிடித்து கத்தி கூச்சலிட்டாள்.

மிரட்சியின் உச்சத்தில்.. தடுமாறிய நான்…..”என்னாச்சு பிரான்சிஸ்……..ஏன் இப்டி…… பண்றா…….அவளுக்கு என்னாச்சு… நீ ஏன் அவளை கூப்பிடற…” இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே தொடர் கேள்விகளை யாருக்கும் கேட்காத ஆலய மணி ஓசையோடு கேட்டேன்.

மணி சத்தம் ஓயட்டுமென பார்த்தவன்…. பிறகு அது பற்றி கவலை இல்லாமல்….”நீ போனப்பறம்… நாங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழல் வந்திருச்சு. வீட்ல முடிவு பண்ணினது. ஆனா தாலி கட்டுன அந்த நொடிலருந்து அவ மனசால ஒரு கன்னியாஸ்திரி ஆகிட்டா. அடிக்கடி இங்க வந்து உக்காந்துக்குவா… அந்த உடுப்பை போட்டுக்கிட்டு தன்னை ஒரு கன்னியாஸ்திரியாவே நினைச்சுக்குவா. இப்டி இவ இங்க வந்து உக்கார்ந்துக்கறதும்….. நான் வந்து கூட்டிட்டு போறதும்… வழக்கம் தான்….” என்று சொல்லி தலை கவிழ்ந்து குலுங்கினான்.

நான் ஆலயத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே அங்கிருந்த திண்ணையில் சரிந்தமர்ந்தேன். என் தலைக்கு மேல் வானம் வேகமாய் கீழே வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.

“நான் தான் ஜீசஸ்… நீ தான் மக்தலேனா…” என்று ஒரு கிறிஸ்துமஸ் அன்று ரேவாவிடம் இருந்து வாங்கிய பொட்டை நெற்றியில் வைத்து விட்டேனே… அந்தக் காட்சி நிகழ்ந்த இடம் இதே இடம் தான்.”

“நீ மனசுக்குள்ள பார்த்த அந்த காட்சி இப்ப எனக்கும் தெரியுது விஜயேந்திரா…” என்று கண்கள் சுழல பார்த்துக்கொண்டே மண்ணில் அமர்ந்து தன் நிழலுக்கு பொட்டிட்டுக் கொண்டிருந்தாள்.

நான் வேகமாய் எழுந்து கண்ணீர் மல்க பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு பிரான்சிஸ் அங்கு நிற்கவில்லை. என் தோளில் இருந்த சிலுவையின் கனம் இன்னும் இன்னும் கூடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *