மகன் தந்த பரிசு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 4,890 
 
 

(குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து(suicide) கொள்ளும் ஒருவருடைய கதை, இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு செல்லவும்)

சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான் ராமமூர்த்தி நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றார். தெருவுக்குக் கொஞ்சம் தள்ளியேதான் இவரின் வீடு அமைந்திருந்தது. கதவுகள் வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. யாராவது வந்து திறந்தால்தான் உண்டு. இந்த ஒருமாதமாய் அவ்வளவாக யாரும் இந்த வீட்டிற்கு வருவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது யாராவது ஒருவர் வந்துவிட்டுப் போவார்கள். இப்பல்லாம் ராமமூர்த்தி முன்னே மாதிரி இல்லை. எப்பவும் கத்திக்கிட்டே கிடக்கார். மணி இரவு பத்துக்கு மேல ஆவுது. இப்போதுகூட பூட்டிய வீட்டினுள்ளிருந்து ராமமூர்த்தியின் பெருங்குரல் வந்து கொண்டிருக்கிறது.

“டே… யாராவது இருக்கீங்களா டா… கொஞ்சம் வாங்கடா…

என்னால முடியல… அந்தத் தண்ணீய எடுத்துக்கொடுங்கடா… தாகமா இருக்கு!

வயிறு முட்டிக்கிட்டு நிக்குதுடா… ஒன்னுக்குப் போவனுன்டா…

ஐயோ! இடுப்புக்குக் கீழ வலி பொறுக்க முடியலையே… ஐயோ… அம்மா…

அடியே பொட்டுக்கன்னி ! எங்கடி இருக்க நீ? சீக்கிரம் வாடி மொவளே…

சுள்ளுசுள்ளுன்னு வலிக்குதே… ஐயோ என்னால தாங்க முடியலயே…

அந்த மாத்திரை மருந்த எடுத்தாவது கொடுங்களேன்…

இருட்டு… இருட்டு… கருங் – கும்முன்னு இருட்டு!

எனக்கு கண்ணு தெரியலையா? இல்லை இந்த அறையே இருட்டா இருக்கான்னு தெரியலையே…

இப்போது நேரம் யாமத்தைத் தாண்டிய நிலையில் நிலவு நடுவானத்தைத் தொடர்ந்து கிழக்குப் பக்கமாய்க் கீழிறங்கி கொண்டிருந்தது. ராமமூர்த்தியின் அழுகையும் ஓலமும் அந்த நான்கு சுவருக்குள்ளாகவே முடங்கிப்போயிருந்தது.

காலையில் வாணிதான் கதவை திறந்தாள். பீ நாத்தமும் மூத்திர வாடையும் வாந்தியின் குமட்டலும் ஒருசேர வாணியின் நாசியின் வழியாக உடம்பினுள் புகுந்து ஒருநொடிக்குள் அவளை மயக்க நிலைக்கே கொண்டு சென்றன. சுதாகரித்துக்கொண்டு வெளியே ஓடினாள். ராமமூர்த்தியின் அண்ணன் பேத்திதான் வாணி. இங்கதான் கவர்மெண்ட் ஸ்கூல்ல பன்னிரெண்டாவது படிக்கிறாள். ராமமூர்த்தியின் மனைவி மல்லிகா ஆச்சி இருக்கின்றவரை தினமும் இங்கையேதான் பெரும்பாலும் சாப்பாடே… சில நேரங்களில தூங்கவும் செய்வா… இப்ப ஆச்சி செத்து முப்பது நாளு முடிஞ்சி போச்சி..

தன்னுடைய சுடிதாரின் ஷாலை எடுத்து முகத்திலே கட்டிக்கொண்டு விட்டாள். வீட்டிற்கு இருபது அடி தூரத்தில் இருக்கும் தண்ணீர் பம்பில் இரண்டு மூன்று குடங்களில் தண்ணீர் மொண்டு வந்து வீட்டினுள்ளே ஊற்றி நன்றாகக் கழுவிவிட்டாள். எடுத்து வந்த தண்ணீரை ராமமூர்த்தியின் மேலும் ஒரு குடம் முழுக்க ஊற்றினாள். தொடப்பத்தால் வீட்டை பெருக்கிக்கொண்டே,

“ஆச்சி இருக்கும்போது எத்தனை பேரு இந்த வூட்டுக்கு வந்துட்டு போவா… இப்பபாரு… ஒரு மனுசி போய்டுச்சின்னா அவ்வளவுதான். தொடப்பத்தைத் தரையில் தட்டிதட்டி நன்கு தேய்த்தவாறே புலம்பி தள்ளினாள்”

“என்ன சின்ன தாத்தா… இரவு முழுக்க சிவராத்தியா?”

“ஆமான்டி கழுத… என்ன இப்படி அநாதையா வுட்டுட்டு போயிட்டிங்களே.. நகரவும் முடியாம… வலியையும் பொறுக்க முடியாம… தனிமைய நினைச்சு அழுதும் கத்தினதும் உங்க யாரு காதுலேயும் விழுந்துச்சா…”

“நேத்து மாமா வரலியா சின்ன தாத்தா?”

“வந்தான் அவன். என்ன புண்ணியம் வாணி! ஒத்தையல விட்டுட்டு போயிட்டான்ல… ராத்திரில வலி பொறுக்க முடியாம கத்தினதுல ஒன்னுக்குப் போயி கூடவே ரெண்டுக்கும் போயி இருட்டுல கண்ணு தெரியாம அத தொட்டு…. கொமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தேன். அந்த நாத்தத்துல மூச்சும் விட முடியாம நகரவும் முடியாம தவியா தவிச்சுப்போயிட்டன் தெரியுமா?”

ராமமூர்த்தி தொணிந்த குரலில் மெதுவாய்ச் சொன்னார். இல்லை இல்லை… தன்னுடைய இயலாமையைச் சொன்னார். இல்லை இல்லை… அழுத கண்ணீருடன்…. புலம்பிய மனதுடன்… மனைவியை இழந்த துக்கத்துடன்…. எப்படி வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம்.

வாணி மூக்கை உரிந்தவாறே, ராமமூர்த்திக்குத் தலையை நன்றாகத் துவட்டிவிட்டு இடுப்புக்குக் கீழே வேட்டியைக் கட்டினாள்.

“ஆக்ஸிடெண்டுல என்னோட ரெண்டு காலும் போச்சு. எனக்கு வலியும் தெரியல. காலு போச்சுன்னு நான் கவலையும் படல. ஏன்னா? எங்கூட யா பொட்டுக்கன்னி மல்லிகா இருந்தா… எனக்காக எல்லாமே செஞ்சா… நா அவளா இருந்தேன். என்னிக்கு அவ போனாளோ அன்னிக்கு நானும் செத்துருக்கனும்”

“சின்ன தாத்தா… அப்படியெல்லாம் சொல்லாதீங்க… யாரு வந்து உங்கள கவனிக்கனாலும் நான் வந்து பாத்துக்கிறேன். போதுமா !”

“நீயும் எத்தனை நாளு பாப்ப வாணி? படுத்த படுக்கையில் இருந்தவாறே சொன்னார் ராமமூர்த்தி.

“நான் இருக்கின்ற வரையும் சின்ன தாத்தா” என்று மட்டும் சொன்னாள்.. ஊதுபத்தியும் சாம்பிராணியும் கொளுத்தி புகையோடுயிருந்த அந்த வீடு நாத்தம் மறைந்து நறுமணம் வந்தது. இரவு முழுக்க கண்விழித்து இருந்ததனால் ராமமூர்த்தி கண் அயர்ந்து தூங்கிப்போனார். சுடுதண்ணீரைப் பக்கத்தில் வைத்தவள் அசையாமல் கதவை இழுத்துச் சாத்திவிட்டு ஒரே ஓட்டமாய் தன்னுடைய வீட்டிற்கு ஓடினாள் வாணி.

அன்னிக்குச் சாயங்காலம் பூபதி, சாப்பாடும் குழம்பும் தூக்குச்சட்டியில் கொண்டு வந்திருந்தான். எடுத்து வந்த சாப்பாட்டை அப்பா ராமமூர்த்திக்கு ஒரு தட்டில் போட்டுக்கொடுத்தான். ராமமூர்த்தி மகன் பூபதியிடம் எதுவும் பேசாமல் மௌனித்து இருந்தார். மகன் கொடுத்த சாப்பாட்டுத் தட்டை வாங்கமலே எங்கையோ விட்டத்தை முறைத்தப்பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்பா… இந்தாங்க சாப்பாடு…”

”இந்தச் சாப்பாடு ஒன்னுதான் கொறச்சல். போடா உன்ன தெரியும்” ராமமூர்த்தி கொஞ்சம் கோவத்துடனேயே மகனிடம் பேசினார்.

“நான் என்னப்பா பன்றது. உங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி பார்க்க முடியாத சூழல்ல இருக்கேன். அங்க அவ வேற, எப்ப பாத்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா… ச்சீ…” உதட்டை கடித்து சுழித்து கண்ணை வலப்பக்கமாய் திருப்பி மேலேயும் கீழேயும் ஒரு பார்வை பார்த்துச் சொன்னான்.

ராமமூர்த்தியின் மனசு பெத்த மனசாச்சே… மகன்கிட்ட என்னத்த சொல்லி அழுவ முடியும். அவனையும் சொல்லி குத்தமில்ல… ஏதோ மனசில நினைத்தவராய் பூபதி கையில் பிடித்துக்கொண்டிருந்த சாப்பாட்டை வாங்கிக்கொண்டார்.

சாப்பாட்டை பிசைந்துகொண்டே, “தம்பி… எனக்கு தனியா இருக்க பயமா இருக்குடா… என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயி எங்கையாவது முதியோர் இல்லத்துல விட்டுடுடா” என்றார் ராமமூர்த்தி.

“அப்பா அங்கெல்லாம் வேண்டாம். நீங்க இங்கையே இருங்க. இதுதான் உங்களுக்கு பாதுகாப்பு. நான் தினமும் வந்து பாத்திட்டுப்போறேன்”

“இருட்டு எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. அந்த ஜன்னல் ஓரமா யாரோ நின்னு என்னை முறைச்சி பாக்குற மாதிரியே இருக்குடா..”

“தேவையில்லாத எல்லாம் யோசிச்சி மனச நோகடிச்சிகாதிங்கப்பா… அதெல்லாம் ஒன்னுமில்ல. அங்க யாரும் நிக்கல..” என்றான் பூபதி.

“காலு ரெண்டும் போனபிறகு ஒன்னுக்கு ரெண்டுக்கு போறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா”

கொஞ்சநேரம் யோசித்துவிட்டு “சரிப்பா… அதுக்கு நான் ஏற்பாடு பன்றேன். அப்பறம், வாணி வந்திட்டு போனாளா…”

“ஆமான்டா… காலையில அவதான் எல்லாத்தையும் கழுவிட்டுப் போனா… இந்த காலு இல்லாத நொண்டிய எத்தனை நாளைக்கு நீயும் பாத்துப்ப.. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவங்கள சரியா பாத்துக்கு. இங்கிட்டும் அங்கிட்டும் மாத்திமாத்தி உன்னல அலைய முடியாது. அதுக்கு…” என்று இழுத்துக்கொண்டே சொன்னார் ராமமூர்த்தி.

“அதுக்குன்னா… என்னாப்பா” என்றான் பூபதி.

“ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிட்டு வந்து குடுத்தின்னா… நானும் குடிச்சிட்டு செத்துப்போயிடுவேன்”

“அப்பா… என்னா சொல்றீங்க… அப்படியெல்லாம் பேசாதீங்க. உங்களுக்கு நான் இருக்கன்”

“இனிமே நான் இருந்து என்ன பன்ன போறேன். தண்டத்துக்கு வாழனுமேன்னு இருந்தாதான் உண்டு”

அப்பாவுக்கும் மகனுக்கும் ஆயிரம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. காரசாரமான விவாதங்களும் அடங்கும். அங்கு கோபமும் அழுகையும் இயலாமையும் முடியாமையுமே அதிகம் நிறைந்திருந்தன. இறுதியில் கிளம்ப தயாரானான் பூபதி.

பூபதி கதவுகிட்ட சென்றபோது, “அடுத்தமுறை வரும்போது கண்டிப்பா மருந்த வாங்கிட்டு வாடா… அப்புறம் மறக்காம பேரக்குழந்தைகள கூட்டிட்டு வா..” என்றார்.

கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு லைட் சுவிட்சை அணைக்காமல் வீட்டைவிட்டு வெளியேறினான். அப்பாவுக்கு ஏதோ ஆச்சு. அம்மா போனபிறகு இப்படித்தான் ஏதோ பிணாத்திக்கிட்டே இருக்கார் என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.

அன்றைய இரவு பூபதிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். எழுந்து நடந்தான். உலாவினான். மனதைப் போட்டு உடைத்துக்கொண்டான். காலையில் மனைவியிடமும் குழந்தையிடமும் கூட அவ்வளவாகப் பேசவில்லை. போகும்போது பையனையும் பொண்ணையும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு அலுவலகத்திற்குச் சென்றான்.

அன்றைய தினத்தில் சாயங்காலம் அப்பாவைப் பார்க்க குழந்தைகளோடு சென்றிருந்தான். குழந்தைகளைப் பார்த்த ராமமூர்த்தி பரவசமடைந்தார். குழந்தைகளை அள்ளி முத்தமிட்டார். அவர்களுக்கு மனதார வாழ்த்துச் சொன்னார். ரெண்டு பிள்ளைகளிடமும் நிறைய பேசினார். அவர் பேசியதில் பாதிக்கு மேல் குழந்தைகளுக்குப் புரியவேயில்லை. கடைசியில் தன்னுடைய தலையணைக்கு அடியில் இருந்து சில காகிதங்களை எடுத்துக்கொடுத்தார். பிள்ளைகளும் அது என்னவென்றுகூட தெரியாமல் வாங்கிக்கொண்டனர். நேரம் சென்றுகொண்டிருந்தது. பூபதியின் கண்கள் நிறைய கண்ணீரோடு தலையைக் குனிந்தபடியே உட்காந்திருந்தான். அப்பாவின் முகத்தைப் பார்க்க அவன் வெட்கப்பட்டான். தான் கொண்டு வந்திருந்த விஷ பாட்டிலை அப்பாவின் தலைமாட்டில் வைத்துவிட்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு சடாரென வெளியேறினான்.

மகன் சென்றபிறகு தலைமாட்டிலிருந்த விஷபாட்டிலைக் கையில் எடுத்தார். மகனை நினைத்து வாய்விட்டுச் சிரித்தார். அவன் பிறந்தபோது பொத்திபொத்தி பார்த்துக்கொண்டேன். அவனுக்குக் கை வலிக்குமோ கால் வலிக்குமோ என்று எத்தனை இரவுகள் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தேன். என்மனைவி எவ்வளவு வற்புறுத்தியும் அவன்மேல்லுள்ள அன்பால் இன்னொரு குழுந்தை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டேன். இறுதியில் எனக்கு கிடைத்தது இந்த விஷபாட்டில் மட்டுமே! மென்மையாகச் சிரித்துக்கொண்டே பாட்டிலைத் திறந்து முழுவதையும் குடித்து முடித்தார்.

என்மனைவி இருந்தால் எனக்கு இப்படி நேர்ந்திருக்குமோ? இறைவா! நான் என்ன தவறு செய்தேன். வாய்விட்டே அழுதார் ராமமூர்த்தி. மனைவி இறப்பதற்கு முன்னாலே கணவன் இறந்துவிடவேண்டும். அப்போதுதான் கணவனுக்கு மரியாதையும் மற்றது எல்லாமுமே. மனைவி இல்லையென்றால் அவன் வாழ்க்கையே வெட்டியாகத்தான் போகிறது. ராமமூர்த்திக்குக் கண்கள் சொருக ஆரமித்தது. சாவை எதிர்நோக்கிய அவருக்கு, பயத்திலிருந்து விடுபட பக்கத்திலிருந்த மனைவின் சேலையை எடுத்து உடம்பிலே சுற்றிக்கொண்டார். தன்னுடைய ஆழ்மனதில் மனைவியைக் காதலுடன் நினைத்துக்கொண்டு இறப்பை எதிர்கொண்டார்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மகன் தந்த பரிசு

  1. உண்மை சுடும். மனம் கனத்தது. நிறைய முதியவர்கள் நிலைமை இதுதான்!

    1. தங்கள் கருத்திற்கு நன்றிகள். மனைவி இறப்பதற்கு முன்பே கணவன் இறந்துவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *