கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 6,314 
 
 

றெக்கை முளைத்த மாதிரியிருந்தது சிந்தாமணிக்கு. சந்தோஷமென்றால் சந்தோஷம்… அம்புட்டுச் சந்தோஷம். உள் நரம்புகளுக்குள் ஓடிப் பரவுகிற பரவசம். உள்மனச் சிலிர்ப்பு. ஒவ்வொரு அணுவிலும் மனத்துள்ளல்.

சிரமப்பட்டு மறைத்தாலும் மீறிக்கொண்டு முகத்தில் மனசின் மலர்ச்சி. அதன் ஒளி.

சிந்தாமணிக்கு வயது முப்பத்தைந்துக்கும் மேலே. மூன்று பிள்ளைகள். மூத்தவள் ராஜி. ஏழாங்கிளாஸ்.

சிந்தாமணிக்குள் சிறகடிப்பு. இப்பத்தான் கல்யாணம் ஆனவளைப் போல குதூகலத் துடிப்பு. மனசுக்குள் குமரிப் பருவக் கொந்தளிப்பு. கும்மாளம்.

எல்லாம்… புருஷனை நினைத்துத்தான். குமரேசனை நினைக்க நினைக்க ஒரே கொண்டாட்டம். அவனிடம் அத்தனை மாற்றம் தலைகீழ் மாற்றம்.

“நாற்பது வயசில் நாய்க்குணம்” என்பார்கள். நாய்க்குண வயசில்தான் அவனிடம் மனிதக்குணம் வந்திருக்கிறது. சூரியக்குணம் – பகலில் இயங்குகிற அக்கறை குணம். லௌகீக குணம்!

முந்தியெல்லாம் குமரேசன் இப்படி இருக்க வில்லை. வேறு மாதிரியிருந்தான். “ஒரு மாதிரி”யாய்…

காடுகரைக்குப் போகமாட்டான். போனாலும், அங்கேயும் புத்தகம் தான் படிப்பான். ஒரு வேலை ஜோலி பார்க்கமாட்டான். பொறுப்பே கிடையாது.

சூரியனைக் கேலி செய்கிற மாதிரி சும்மாவே இருப்பான் அக்கரை கிடையாது. ஆர்வம் கிடையாது.

விருந்தாளி மாதிரிதான் அவனும்! கால நேரம் பார்த்து கரெக்டாக சாப்பிடுவான். காலநேரம் தெரியாமல் வாசிப்பான் கண் பூத்துப்போனால் தெருக்காட்டுக்கு போய்விடுவான்.

டீக்கடையில் உட்கார்ந்து பேசினால், அப்படிப் பேசுவான் பசிதான் ஆளை எழுப்ப முடியும்.

“இப்படி ஆக்கங்கெட்ட ஆம்பளைக்கு வந்து வாக்கப்பட்டுச் சீரழியுறோமே” என்று சிந்தாமணி புலம்பாத மாதமில்லை வருத்தப்படாத வருஷமில்லை.

…மதியக்கரண்டு. பருத்திக்கு தண்ணீர் பாய்ச்ச கூலியாள் போயிருக்கும். சொந்தப் புஞ்சையில் நடக்கிற வேலை பற்றிய சுரணையேயில்லாமல், ஊர் மடத்தில் அவன் சத்தம் ஓங்கிக் கேட்கும்.

பக்கத்தில்தான் வீடு. சிந்தாமணிக்கு வயிறு எரியும். குலை கொதிக்கும்.

“புஞ்சைவேல நடக்கையிலே பொறுப்பில்லாத இந்த ஆளு இப்படி இருக்கே” என்று புலம்பி தகிப்பாள்.

“போடி… உங்கப்பனை இழுத்துட்டு வாடி” கோபத்தில் மகளை விரட்டுவாள்.

வந்து நிற்பான். குற்ற உணர்வில்லாமல் வெகு இயல்பாக இருப்பான். “காபி போட்டுட்டீயா?”

வெறுப்பும் கொதிப்புமாய் அனலாய்ச் சினந்து பார்ப்பாள். அவன் அலுங்கவேமாட்டான்.

“இப்படித் திரிஞ்சா எப்படி?”

“என்ன செய்யச் சொல்றே…நீ?”

“புஞ்சைக்கு போகலாம்லே? தண்ணி பாய்ச்சுறவனுக்கு காப்பியைக் கொண்டு போய்க் குடுத்துட்டு, அங்க உண்டான ஜோலியை பார்க்கலாம்லே?”

“நானா?”

“நீங்கதான். ஏன், நீங்க புஞ்சையிலே வேலை பாக்கக்கூடாதா? கிரீடம் எறங்கிடுமா? நீங்க என்ன பெரிய சீமானா?

புண்பட்டவனைப் போல அவன் முகம் குறாவிப்போகும். கண்ணில் ஒரு வேதனை துடிக்கும், அறுபட்ட பல்லி வாலாக!

“மொதல்லே….எனக்கு காபியைக் குடுத்துரு.”

குடித்து முடித்தவுடன் சின்னவனைப் பார்ப்பான். “ஏலேய், புஞ்சையிலே போய் நீ காபியைக் குடுத்துரு.”

உத்தரவு போட்டுவிட்டு, சீமைராசா மாதிரி புறப்பட்டு விடுவான். திணுங்காமல் அவன் போகிற லட்சணத்தைப் பார்க்கப் பா‘க்க, இவளுள் கிடந்து மனசு தகிக்கும்.

“இப்படியும் ஒரு மனுசரு இருப்பாரா? நாலு பேரைப் போல பாடுபடணும்…. நாலு காசு சம்பாதிக்கணுங்கிற அக்கறையில்லாம ஒரு ஆம்பளை இருப்பாகளா? சும்மாவே இருக்கிற இருப்பும் ஒரு இருப்பா? சூரியனுக்கடியில் குருவி கூட சும்மாயிருக்காதே… தெருக்காட்டிலே ஆம்பளை சுத்தினா வீடு விளங்குமா?”

கொதிபானைச் சோறாக அவள் நினைவு… தளதளத்துக் கொதிக்கிற நினைவு… ததும்பிப் பொங்கி, புலம்பலாக வழிகிற நினைவு.

இருக்கிறதே ஒண்ணே முக்கால் குறுக்கம் புஞ்சைதான். இறவைத் தோட்டம் உப்புத் தண்ணீர்க் கிணறு.

இந்தக் குண்டுச்சட்டிக்குள்தான் குடும்பத்தின் குட்டோட்டம், நெட்டோட்டம் எல்லாம். இதில் விளைவதை வைத்துத்தான். அஞ்சு ஜீவன்கள் மூச்சு வாங்க வேண்டும்.

இந்த ஆளுக்கு இந்தக் கவலையெல்லாம் கிடையாது. பெரிய்ய பண்ணையார் நினைப்பு. கைவிரலில் அழுக்குப்படாமல் திரிகிற கித்தாப்பு.

உழவுக்கு மாடு கூப்பிட பாத்திகட்ட ஆள் பார்க்க என்று எல்லா வேலைகளும் இவள் தலையில்தான். தாலியறுத்த பொட்டச்சி மாதிரி தெருத்தெருவாய் அலைந்து காலொடியணும்.

புஞ்சைக்கு வேலைக்கு வருகிறவர்கள், வாயை வைத்துக் கொண்டு சும்மா வேலை பார்ப்பதில்லை. கிண்டிக் கிளறுவார்கள். புண்ணில் சீண்டி பார்ப்பார்கள்.

“அண்ணாச்சி புஞ்சைக்கு வரமாட்டாரா?”

அப்புராணிப் பாவனையில் கேள்வி கேட்பார்கள். ஏளனமும் பரிகாசமும் உட்கார்ந்திருக்கும். அவமானமாய் உணர்வாள் சிந்தாமணி. வெளிக்காட்டிக்கொள்ள முடியாது.

“வருவாரு….”

“இன்னிக்கு வரல்லே?”

“ஊருக்குப் போயிருக்காரு”

“அண்ணாச்சி கவலையத்த ராசா. மகராசி நீங்க எல்லா வேலைகளையும் செஞ்சிடுறீக. அவரு சீமைராசா கணக்கா ஊரு சுத்தறாரு.”

பாராட்டா, கேலியா? தொனியை நிதானிக்க முடியாமல் துடிப்பாள். மனசுக்குள் கொத்திப் பிடுங்கும் அவமானம். இந்தப் பக்கம் ஊசியால் குத்தி, மறுபக்கம் உருவுவதைப் போல அவளுள் பரவுகிற வேதனை. அணுஅணுவாய் அவஸ்தை.

ஒன்றும் பதில் பேச முடியாது சிந்தாமணியால். என்னத்தைப் பேச? என்ன யோக்யதையில் பேச? கூறுகெட்ட ஆம்பளையை வைத்துக்கொண்டு எந்த வாயைத் திறந்து பேச?

அவளுள் குலை கொதிக்கும். ஊரில் அகப்பட்ட சாமிகளையெல்லாம் இழுத்துப் போட்டு வைது தீர்ப்பாள்.

“ஈ எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காத சாதிமான்கன்னு நான். எனக்கா இந்தக் கேவலம்? அட, குருட்டுப் பய தெய்வமே….”

வாழ்வின் வெளிவட்டத்தில்தான் குமரேசன் இப்படி உள்வட்டத்தில் கதையே வேறு. ரொம்பக் குளிர்ச்சி. பௌர்ணமி நிலாக் குளிர்ச்சி.

பிள்ளைகளுக்கு அருமை அருமையாய்ப் பாடம் சொல்லிக் கொடுப்பான். நல்ல நல்ல கதைகள் போடுவான். குழந்தைகளோடு குழந்தையாய். நிலா வெளிச்சமாய் சிரித்து சிரித்து விளையாடுவான். மழலை மனசு.

சாப்பிட உட்கார்ந்துவிட்டான் என்றால்.. குமுறிக் கொதித்துப் போயிருக்கிற சிந்தாமணியை குளிர வைத்துவிடுவான்.

“கொழம்பு ரொம்ப நல்லாயிருக்கு. தாழிச்ச வாசம் ஆளைத் தூக்குது” என்பான்.

“சோறு வேக்காடு ரொம்பப் பக்குவம்” என்பான். குழம்பு எதுவானாலும் நாலு வார்த்தை பாராட்டாமல் அதைத் தொட மாட்டான். வெறும் ரசமும் துவையலும் மட்டும் வைத்திருந்தால் கூட முகம் சுளிக்கமாட்டான்.

“ரசத்துலே மல்லிச்செடி வாசம். மனசைக் கொள்ளையடிக்குது” என்று அதற்கும் பூக்களைத் தூவுவான்.

பாராட்டைப் பழிப்பவளைப் போல சிந்தாமணி முகம் சுளிப்பாள். “ஆமா.. இந்தச் சொக்குப் பொடிப் பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லே” என்று ஏளனமாய்ச் சொல்வாள்.

ஆனால், உள்ளுக்குள் பௌர்ணமி நிலாக் குளிர்ச்சி பாய்ந்து பரவும். பூப்புவாய்ப் பூத்து, மனசேபூவனமாய் சிலிர்க்கும்…. தைமாச நிலா மிதக்கும் ஆகாயமாய் அவள்…

இரவின் அந்தரங்கத்தில் அவன் தொடுகிற விதம்கூட ஒரு நேர்த்திதான். நேரமறிந்து… மனசறிந்து….. தாகமும் மோகமுமாய் அவள் கனிந்து நெகிழ்கிற கணத்தில்தான் தொடுவான்… நிலா வெளிச்சமாய்.

மறுக்க வழியிருக்காது.

அவனது ஆக்கிரமிப்பின் இங்கிதத்தில், இதத்தில் சுகத்தில் அப்படியே லயித்துத் துவண்டு கிடப்பாள்….. தேனில் விழுந்த எறும்பாக.

அப்படியான ஒரு மயக்கப்பொழுதில்தான் சிந்தாமணி அந்தத் தகவலைச் சொன்னாள்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“என்னது?”

“தெக்குத்தெரு மாடத்தி மகள் சடங்காயிட்டா….”

“அந்தச் சின்னப்புள்ளையா?”

“ம்”

“அவ… நம்ம ராஜி வயசுதானே?”

“ம்… ராஜியும் அந்தப் புள்ளையும் ஒரே நாள்லே? பொறந்தாங்க…”

“அந்தப் புள்ளையா சடங்காயிருச்சி? அதுக்குள்ளேயா?”

“ம்..”

அவனது வியப்பில் ஒரு இறுக்கம் இருந்தது. உள் நடுக்கம் தெரிந்தது. பதற்றத்தில் பேசக்கூடப் பயந்து மௌனத்தில் உறைந்து போய்விட்டான். வாழ்க்கையின் மூர்க்கச் சுமையில், அவன் மனசு மூச்சுத் திணறியது.

இந்த ஒரு மாசமாய் தலைகீழாய் மாறிவிட்டான். குமரேசன்… வேலை… வேலை.. எந்த நேரமும் வேலைதான். சூரியனுக்குப் போட்டியாக அலைச்சல். சூரியோதயம். அஸ்தமனம் ரெண்டையும் புஞ்சையிலிருந்துதான் பார்ப்பான் – அதுக்குப் பிறகும் வேலைகள்.

இப்போதெல்லாம் தண்ணீர் பாய்ச்ச கூலியாள் கிடையாது. அவனேதான்… அசைப்பு பிரேயரைத் தூக்கி முதுகில் போட்டுக் கொண்டு, பருத்திக்கு ஓடி ஓடி மருந்தடிப்பதுவும் அவன்தான்.

சிந்தாமணியுடன் களைவெட்டக்கூட கூச்சப்படாமல் புறப்பட்டு விடுவான். நிரைபிடித்து குனிந்தால், லேசில் நிமிரமாட்டான்.

இதையெல்லாம் தூசியாக நினைக்கிற மாதிரி. இன்றைக்குப் பெரிய சாதனையைச் சாதித்துக்காட்டி. ஊரையே அசத்தி விட்டான்.

இவர்கள் கிணறு உப்புத் தண்ணீர். புஞ்சையே உவர் பொங்கிக் கிடக்கும். தண்ணீர் பாயப்பாய வெள்ளாமை தேய்பிறையாய்ச் சுருங்கும். மழை பெய்தால்தான் வெள்ளாமை.

உப்புத் தண்ணீர் பாய்ந்து உவர் பொங்கிய மண்ணில், நல்ல தண்ணீர் பாய்ந்தால்… பெரிய உரம் போட்ட மாதிரி, திகிடு முகுடாக வெள்ளாமை விளையும்.

தூரத்தில்…. முந்நூறு அடிக்குள் ஒரு கிணறு. நல்ல தண்ணீர் தேங்காய்ப்பால் மாதிரி தித்திப்பு.

இவர் ஊர் ஊராய் அலைந்து, விசாரித்து, சிரமப்பட்டு நானூறு அடி ரப்பர் டியூப் சுருளைச் சுமந்து கொண்டு வந்து, கிணற்றுக்காரரிடம் கெஞ்சிக் கூத்தாடி, மணிக்கு பதினைந்து ரூபாய் என்று வாடகை பேசி…. அந்த நல்ல தண்ணீரைப் பருத்திப் புஞ்சைக்கு இன்றைக்குப் பாய்ச்சிவிட்டான். இது பெரிய சாதனை. துணிச்சலான சாகசம். பெரிய விஷயம்.

சிந்தாமணிக்கு றெக்கை முளைத்த மாதிரியிருக்கிறது. முகத்தில் ஒரு ஒளித்ததும்பல். பெருமிதப் பரவல்.

ஊர் அவனைப் பேசி பேசி மாய்கிறது. மூக்கில் விரலை வைத்து அசந்துபோகிறது. புருஷனை நினைக்க நினைக்க இவளுள் பூரிப்பு பரவசச் சிலிர்ப்பு. அவனுக்காகத்தான்… பறந்து பறந்து சமையல் செய்கிறாள். புகையோடு மல்லுக்கட்டுகிறாள். அவனுக்கு வாளைக் கருவாடு என்றால் உயிர். குடியிருந்து தின்பான். அதிலும் வெங்காயம், மிளகாய் போட்டு, எண்ணெய் ஊற்றி கருவாட்டுத் துண்டை, வதக்கி வைத்துவிட்டால் போதும். சின்னப்பிள்ளை மாதிரி “அய்ய்” யென்று கும்மாளம் போடுவான். ரசித்து ரசித்து பாராட்டுவான்.

அவனிடம் குளிர்ச் சொல்லைக் கேட்கிற வேட்கையோடு, ரொம்ப பக்குவமாய்… கண்ணும் கருத்துமாய்ச் சமையலை முடித்த கையோடு. மஞ்சளைப் பூசி குளித்து முடித்தாள். ஈரக்கூந்தலைத் தளரப் போட்டிருந்தாள்.

என்னமோ… இன்றைக்கு அவள் ரொம்பக் கனிந்து நெகிழ்ந்திருந்தாள். புருஷனை எப்படி பாராட்ட, எப்படிச் சீராட்ட என்கிற மனத்தத்தளிப்பு உள்ளுக்குள் ஓடிச் சிலிர்க்கிற பரவசம்.

இருட்டின பிறகுதான் வந்து சேர்ந்தான். வேகவேகமாய் வந்தான். பரபரப்பாக இருந்தான்.

“எங்கே பொறப்புட்டாச்சு?”

“ட்யூபைக் கொண்டு போய்ச் சேக்கணும்லே?”

“சாப்டுக்கிடுறீகளா?”

“ம்”

அவசர அவசரமாய்க் கால் கையைக் கழுவிவிட்டு வட்டிலின் முன் நிமிர்ந்தான். பரபரவென்று அள்ளி விழுங்கினான்… யோசனை பூராவும் எங்கோ….

அவன் முகத்தையே பார்த்தாள்.

பரவச வார்த்தைகள் “அய்ய… வாளைக் கருவாடா? ரொம்ப மணமாயிருக்கே… என்கிற குழந்தைத்தனமான சந்தோஷச் சொற்கள்.. எதுவும் வரவேயில்லை.

சிந்தாமணிக்கு என்னவோ போலிருந்தது. குமரேசனையே அள்ளி விழுங்கியது அவளது பார்வை… “என்ன… வாளைக் கருவாடு எப்படியிருக்கு? ” மெல்ல கிசுகிசுத்தாள். இப்படிக் கேட்பதே புதுசு. கேட்க வேண்டியதே நேராது. அவனே சொல்வான். கேட்க நேர்ந்ததில் அவளுள் ஒரு கூச்சம்… வெட்கத்தை விட்டுக் கேட்டது போலிருந்தது.

“ம்…ம் இருக்கு” என்று ஏதோ ஞாபகத்தில் சொன்னது போல பற்றில்லாமல் சொன்னான். சட்டென்று, ட்யூப் சுருளை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது என்பது பற்றி மளமளவென்று பேச ஆரம்பித்துவிட்டான்.

சிந்தாமணிக்குள் பகீர் என்றது. இப்போதும் அடுப்புப் புகைக்குள் அவஸ்தைப் படுகிற உணர்வு. கண்ணோரத்தில் நீர்க்கசிவு.

“என்னாச்சு, இந்த ஆளுக்கு? எங்க போனாரு அந்த ஆளு?

“தாளிச்ச வாடை ஆளைத் தூக்குது” என்று பௌர்ணமி நிலாச் சந்தோஷமாய்… குழந்தைக் குதூகலாமாய்ச் சொல்கிற அந்த ஆளு… எங்கே?”

சாப்பிட்டுக் கைகழுவிவிட்டு புறப்பட்ட குமரேசனைக் குழந்தைகள் மறித்தனர்.

“அய்யா, கதை சொல்லுங்கய்யா.”

“கதையா? தலைக்கு மேலே வேலை கெடக்கு… உங்க அம்மா கதை போடுவா…”

சொன்ன சொல் உதட்டில் இருக்கும்போதே, ஆள் வெளியே போயாகி விட்டது. பிள்ளைகளுக்கும் வியப்பான ஏமாற்றம். மலங்க மலங்க விழித்ததுகள். அம்மாவைப் பார்த்ததுகள்.

அவர்களின் விளையாட்டுப் பிள்ளையாக இருந்த அய்யாவைக் காணாமல் அதுகளின் தவிப்பு.

தன் பெண் ராஜியும் சீக்கிரத்திலேயே சடங்காயிடுவாள். என்கிற உண்மை தந்த மாற்றத்தில், லௌகீகம் தெரிந்த…. அக்கறையுள்ள ஆளாகிவிட்ட குமரேசன் பௌர்ணமிக் குளிர்ச்சியைத் தொலைத்துவிட்டானா? மனுச ஈரத்தையும், குளிர்ச்சிரிப்பையும் மறந்துவிட்ட எந்திர மனுசனாகிவிட்டானா?

சிந்தாமணிக்குள் பீறிட்டுக் கொண்டிருந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும், ஊமைச் சோகமாக நிறம் மாற்றிக் கொண்டிருந்தது வாழ்க்கை.

நன்றி: மானாவாரிப்பூ.

மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *