போர் தந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 2,020 
 
 

சக்திவேலுக்கு அப்பாவின் வழக்கமான அறிவுறுத்தல்கள், திட்டுகள், கேட்டு ..கேட்டு.. பழகி போய்விட்டது.

“படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போய் , உருப்படியா பிழைக்கிற வழியை பாரு”ன்னு அவர் சத்தம் போட, அவன் அம்மாவோ…”என் பையனோட திறமையை, கூடிய சீக்கிரமே இந்த உலகம் பாராட்ட போகுது…அவன் சாதிப்பான்“ என்று நம்பிக்கையோடு சொல்வாங்க!

“கதை கவிதைன்னு எழுதி காசு பணம் சம்பாதிப்பது அவ்வளவு சாதாரமணமல்ல.! நம்ம மாதிரி அன்றாடங்காச்சிகளுக்கு அது ஒத்து வராது. “

ஒரு பக்கம் எச்சரிக்கை செய்யும் அப்பா! இன்னொரு பக்கம் நம்பிக்கை தரும் அம்மா!

இவர்களுக்கு நடுவே சக்திவேலு அவன் விருப்பபடி கதாசிரியர் அல்லது கவிஞர் ஆகி, பத்திரிகைகள், சினிமா… ‘டிவி ஷோ’க்களில் பிரபலமாகி விட துடிக்கும் சக்திவேல்.!

ஆன்லைன் பத்திரிகைகள்…கவிதை தொகுப்புகள்…பிரபல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவது என்று தொடர் முயற்சிகளில் அவன் போராடிக்கொண்டிருக்க … அவன் அப்பாவிற்கோ இவன் இப்படியே இருந்தால்…அவன் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயம் !?

“நாம நினைக்கிற விசயத்த நடத்தி காட்டணுமுன்னா நிறைய போராடனும். ஒரு போரில் வெற்றி பெற விருப்பம் மட்டும் போதாது . வெறும் உடல் பலம் மட்டும் பத்தாது. எப்படி போரிட்டால் வெற்றி கிடைக்கும் என்ற யுக்தியும் தேவை. அதை போர் தந்திரமுன்னு சொல்வார்கள். அதை முதலில் தெரிஞ்சுக்கோ…
‘முதலில் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து, உன் செலவுக்கு தேவையான வருமானத்திற்கு வழி பண்ணிக்கோ ! அதற்கு அப்புறமா.. உன் விருப்பமான வழியில் முன்னேறு’ என்கிற அப்பாவின் அறிவுரையை அவன் மனசு ஏற்கவில்லை!

அவனுக்கு, அவன் படித்த என்ஜினீயர் படிப்பை விட இலக்கியத்தில் ஆர்வம் அதிகம்.

அப்பாவின் விருப்பத்திற்காக அவன் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து படித்தாலும் … நிறைய பாடங்களில் பெயிலாகி…பின்பு எப்படியோ எல்லா அரியரும் முடித்து பாஸ் ஆகிவிட்டான்.

இப்ப உடனே வேலை தேடு…சம்பாரி…வேலைக்கு போனா தான் பொண்ணு கிடைக்கும் என் று வீட்டில் நெருக்க தொடங்கி விட்டார்கள்.

கடைசியில், சென்னைக்கு போனால்தான், அவன் நினைத்த படி சாதிக்க முடியும் என்று…வீட்டிற்கு தெரியாமல் சேலத்தில் இருந்து, சென்னைக்கு ரயில் ஏறி வந்து விட்டான்.

சென்னையில் ஒரு கல்லூரி நண்பனை தேடி பிடித்து…அவனுடைய அறை வாடகையில் பாதியை பகிர்ந்து கொண்டே…திரையுலகம்…தொலைகாட்சி என்று பல முகவரிகளில்…தொடர்ந்து முயற்சி செய்தான்.

பல முகங்களை பார்த்து..பேசி.. கெஞ்சி…எதுவுமே தேற வில்லை.

திரை உலகம் அவன் நினைத்ததை விட பெரியதாக இருந்தது…இங்கே அங்கே என்று அலைய வேண்டி வந்தது. பல விஷயங்களில் நிறைய புதிய அனுபவங்கள் கிடைத்தது. அந்த துறையில் யாரையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லது நிறைய பணம் செலவு செய்ய..வசதி வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அனுபவத்தில் தெரிந்தது..

இவன் சென்னைக்கு வந்த பிறகு, ஒரு கம்பெனியில் வேலையில் இருப்பதாக வீட்டில் சொல்லி வைத்து இருந்தான். அப்பாவோ வழக்கம் போல.. இவனை நம்பாமல் போன் பண்ணி இவன் வேலையை பற்றி துருவி துருவி ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார். அம்மாவோ, அவனை பார்க்கணும் போல இருக்கு…’எப்போ ஊருக்கு வருவே’ ன்னு கேட்பாங்க. அவன் கையில் இருந்த காசு…பணம்…வாட்ச்…மோதிரம்…எல்லாமே அன்றாட செலவுகளுக்கு செலவழிந்து போனது.

‘இப்போ.. எந்த முகத்தை கொண்டு, திரும்ப ஊருக்குப் போவது’ என்கிற வருத்தத்துடன்…ஒரு தெரு வழியே நடந்து போக, ‘வேலைக்கு ஆள் தேவை’ என்கிற வாசகம் ஒரு கடை வாசலில் கண்ணில் பட்டது. அது ஒரு ஆட்டோமோட்டிவ் ஸ்பேர் பார்ட்ஸ் – வண்டி வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம். சற்று பெரிய அளவில் நான்கைந்து பேர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே ஒரு பெரியவர்…அப்படியே அவன் அப்பா சாயலில்.. நிர்வாகி போல உட்க்கார்ந்து இருந்தார்.

சக்திவேல் அவரிடம் போய் வேலையை பற்றி கேட்க…அவரும் அவனை பற்றிய, நிறைய விசாரணைக்கு பிறகு…

“என் பையன் நடத்திட்டு இருக்கிற கடை இது . இப்போ அவன் வெளிநாட்டில் இருக்கிறான். இங்கே மேற்பார்வை வேலைக்கு பொறுப்பான ஒரு ஆளை தேடிட்டு இருந்தேன். நீ வெளிப்படையா பேசறது எனக்கு பிடிச்சிருக்கு. உன் முயற்சியை தொடர்ந்து செய். நம் திறமைக்கு தகுந்த வாய்ப்பு வரும் போது பயன் படுத்திக்கலாம். இப்போ முதல்ல வருமானத்துக்கு ஒரு வழிய பார்த்துக்கோ! இங்கே உன் வேலைக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும். உனக்கு பிடிச்சிருந்தா இன்னைக்கே சேர்ந்துக்கலாம்” என்றார்.

அவர் பேசுவது அப்பா பேசியது போலவே அவர் சொன்ன போர் தந்திரத்தைதான் நியாபக படுத்தியது.

“நாம நினைக்கிற விசயத்த நடத்தி காட்டணுமுன்னா நிறைய போராடனும். ஒரு போரில் வெற்றி பெற விருப்பம் மட்டும் போதாது. வெறும் உடல் பலம் மட்டும் பத்தாது. எப்படி போரிட்டால் வெற்றி கிடைக்கும் என்ற யுக்தியும் தேவை. அதை போர் தந்திரமுன்னு சொல்வார்கள். அதை முதலில் தெரிஞ்சுக்கோ…முதலில் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து, உன் செலவை சமாளிக்க தேவையான வருமானத்திற்கு வழி பண்ணிக்கோ! அதற்கு அப்புறமா..உன் விருப்பமான வழியில் முன்னேறு’ ன்னு அப்பா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மனசுக்குள் ஓடியது.

அவன் அவரையே பார்த்தபடியே “சரி வேலைக்கு சேர்ந்துக்கிறேன்” என்றான். அவர் சிரித்தார்.

சக்திவேலுக்கு, அவன் அப்பாவே அவனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது. அவன் கண்களில் நீர் திரையிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *