போன ஜென்மத்து மனைவி

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2018
பார்வையிட்டோர்: 11,203 
 
 

*******************
இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும் சிறுகதைகள்.காம் ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகள். எஸ்.கண்ணன்.
*******************

சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் விடுமுறை வந்தது.

அப்போது என்னுடன் சென்னையில் ஐடி கம்பெனியில் பணி புரியும் சிவா, தன் குல தெய்வமான வைத்தீஸ்வரன்கோவில் போகப் போவதாக என்னிடம் சொன்னான்.

நானும் கூட வருவதாகச் சொன்னேன். இருவரும் கிளம்பினோம்.

நானும் சிவாவும் கடந்த மூன்று வருடங்களாக ஒரே ஐடி கம்பெனியில் வேலை செய்கிறோம். எங்களுக்கு இன்னமும் திருமணமாகவில்லை. சிவாவிற்கு கோவிலைவிட, ‘தனக்கு எப்போது கல்யாணம் ஆகும்’ என்று நாடி ஜோஸ்யம் பார்த்துக் கொள்வதில்தான் ஆர்வம்.

ஆனால் எனக்கு எந்த ஜோஸ்யத்திலும் நம்பிக்கை கிடையாது. நான் கொஞ்சம் ஷோக்குப் பேர்வழி. திருச்சியில் வசிக்கும் அப்பா முரட்டுப் பணக்காரர் என்பதால், என்னுடைய மாத சம்பளத்தை நான் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

வைத்தீஸ்வரன்கோவில் தரிசனம் முடிந்ததும் சிவா நாடி ஜோஸ்யம் பார்க்க அங்கேயே ஒரு வீட்டிற்குச் சென்றான். நானும் உடன் சென்றேன்.

அங்கு நெற்றியில் விபூதி குங்குமத்துடன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் எங்களை வரவேற்று அமரச் செய்தார். தன் பெயர் சுவாமி என்றார். நாடி ஜோஸ்யத்தின் மகிமைகளை எங்களிடம் எடுத்துச் சொன்னார். சிவா ரொம்ப ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டான்.

பின்பு சிவாவிடம் அவனது பெயர், பிறந்த தேதியை மட்டும் கேட்டுக்கொண்டு வீட்டினுள்ளே சென்றார். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு பழைய ஓலைச்சுவடியை தன் கையில் எடுத்து வந்தார்.

அந்தச் சுவடியைப் பார்த்து விலாவாரியாக சிவாவின் அம்மா, அப்பாவின் பெயர் அவனுடைய ஊர், அவன் தற்போது நிரந்தரப் பணியில் இருப்பது போன்றவற்றை பூடகமாகச் சொன்னார்.

சிவாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை….

அவர் சொன்னதற்கான பணத்தை வாங்கிக்கொண்டபின் வேறு ஏதாவது கேட்க வேண்டுமென்றால் தயங்காமல் கேட்கச் சொன்னார்.

“எனக்கு எப்ப கல்யாணம் ஆகும்னு பார்த்துச் சொல்ல முடியுமா?”

அதற்கென தனியாக ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, அவனுக்கு ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தில் அனைத்தையும் எழுதிக் கொடுத்தார்.

பிறகு சுவாமி என்னைப் பார்த்து, “தம்பி உங்களுக்கு எதுவும் வேண்டாமா?” என்றார். நான் திமிராக, “எனக்கு எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் நம்பிக்கை கிடையாது…” என்றேன்.

“அப்படியென்றால் போன ஜென்மத்துக் கதையைச் சொல்லவா?”

எனக்கு அதில் திடீரென ஒரு சுவாரஸ்யம் உண்டானது.

“சரி… சொல்லுங்க.”

சுவாமி என்னுடைய பெயர், பிறந்ததேதியை குறித்துக்கொண்டு உள்ளேசென்று ஒரு ஓலைச் சுவடியுடன் வந்தார்.

அதை அமைதியாகப் படித்துப் பார்த்தார். பிறகு என்னிடம், “தம்பி நீங்க ரொம்ப ரொம்ப புண்ணியம் செய்திருக்கீங்க… போன ஜென்மத்துலயும் நீங்க மனிதப் பிறவிதான். இது ரொம்ப அபூர்வம். முப்பது வருஷத்துக்கு முந்தி டெல்லியில ஒரு பெரிய செல்வந்தரா வாழ்ந்து ஒரு கார் விபத்துல இறந்து போனீங்க. இன்றைக்கும் உங்க வயதான மனைவியும், ஒரே செல்ல மகளும் டெல்லியில இருக்காங்க..”

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என் போன ஜென்மத்து மனைவியும், மகளும் உயிருடன் இருக்கிறார்கள்… ஓ காட்.

“எனக்கு அவங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்குமா?”

“உங்களுடைய போன ஜென்மத்து ஓலைச்சுவடியில் கல்யாண காண்டத்தைப் பார்த்தால் பல உண்மைகள் தெரியும்… ஆனால் நிறையப் பணம் செலவாகும்..”

“எனக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை….ஆனால் எல்லா உண்மைகளும் தெரியணும்.”

“சரி நான் உங்களின் போன ஜென்மச் சுவடிகளைத் தேடி எடுத்து வைக்கிறேன்… நீங்கள் ஒருமணி நேரம் கழித்து வாருங்கள். ஐந்தாயிரம் கொடுத்து விட்டுப் போங்கள்…”

பணத்தை எண்ணிக் கொடுத்தேன்.

நானும் சிவாவும் அந்த ஊரில் இருக்கும் சதாபிஷேகம் ஹோட்டலின் ஏஸி அறையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத் திரும்பி அந்த வீட்டிற்கு வந்தோம்.

அவர் என்னிடம், “உங்களுக்கு யோகம்தான்… உங்களைப் பற்றிய பழைய சுவடிகள் அனைத்தும் கிடைத்துவிட்டன…” என்றார்.

“எனக்கு அவைகளை சொல்லிவிட்டு, எழுதியும் கொடுத்து விடுங்கள்…”

“போன ஜென்மத்தில் உங்களின் பெயர் நிரஞ்சன். உங்க மனைவியின் பெயர் ஆஷா. அவங்களுக்கு இப்ப எழுபது வயது… ஒரே மகளின் பெயர் நிஷா. அவளுக்கு இப்போது நாற்பத்தைந்து வயது. அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

“எனக்கு அவர்களுடைய அட்ரஸ் கிடைக்குமா? நான் அவர்களை உடனே பார்க்க வேண்டும்…”

“நாடி ஜோஸ்யத்தில் அட்ரஸ் எல்லாம் தெரியாது…” சிரித்தார்.

அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அனைத்தையும் என்னிடம் எழுதிக் கொடுத்தார்.

“அவர்களைச் சந்திக்க ஏதாவது ஜோஸ்யம் உண்டா?”

“கிடையாது… ஆனால் உங்களுக்காக நான் உதவ முடியும்.”

“ப்ளீஸ்… உதவுங்கள்.”

“எனக்கு தெரிந்த போலீஸ் ஆபீசர் டெல்லியில் இருக்கிறார். அவரிடம் பேசி முப்பது வருடங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்துபோன நிரஞ்சன் என்பவரின் அட்ரஸ் கேட்க முடியும். போலீஸ் ரெக்கார்டில் இருக்குமே?”

“சார்… ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்கள்…”

அவரிடம் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம்.

சென்னை வந்து சேர்ந்த எனக்கு இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை. எப்படியாவது என் போன ஜென்மத்து மனைவியையும், மகளையும் சந்தித்துவிட வேண்டும். அவர்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்ய வேண்டும்.

பத்து நாட்கள் சென்றதும், சுவாமி எனக்கு போன் செய்து ஆஷாவின் அட்ரஸ் கிடைத்துவிட்டது என்றார். நான் அதை எழுதிக்கொண்டேன்.

ஒருவாரம் எல்.டி.ஏ எடுத்துக்கொண்டு நான் தனியாக டெல்லி சென்றேன். ஆஷாவின் ராமகிருஷ்ணா நகர் வீட்டை தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஏற்கனவே அந்த இடம் எனக்கு பரிச்சையமான ஒரு உணர்வு. உடம்பெல்லாம் ஒரு சிலிர்ப்பு.

ஆஷாவுக்கு எழுபது வயது இருக்கலாம். வீட்டினுள் நன்றாக நடமாடினாலும் தோல்கள் சுருங்கி வயோதிகம் நன்கு தெரிந்தது.

நான் சென்னையிலிருந்து வருவதாகவும், ஜோஸ்யம் கேட்டதனால் வீடுதேடி வந்ததாகவும் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் உண்மையைச் சொன்னேன்.

ஆஷா என்னை சந்தேகத்துடன் மேலும் கீழும் பார்த்தாள். பிறகு என்னை அமரச் சொல்லிவிட்டு, “நான் எப்படி உங்களை நம்புவது?” என்றாள்.

நான் என்னுடைய ஐடி கார்டை எடுத்துக் காண்பித்துவிட்டு, “உங்கள் பெயர் ஆஷா. கார் விபத்தில் இறந்த உங்கள் கணவர் பெயர் நிரஞ்சன். ஒரே மகளின் பெயர் நிஷா… சரியா? இறந்த உங்கள் கணவரின் மறுபிறவிதான் நான்…”

ஆஷா என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் ஈரம் பாரித்தது. வீட்டினுள்ளே பார்த்து, “நிஷா” என்று கூப்பிட்டாள்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் நிஷா அங்கு வந்தாள்.

பளிச்சென்று இருந்தாள். ஆஷா அவளிடம் என்னைப்பற்றிச் சொன்னாள்.

நிஷா என்னிடம் அழகான ஆங்கிலத்தில், “நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் இப்போது நாம் என்ன செய்ய முடியும்? நம்முடைய சந்திப்பினால் என்ன வேல்யூ அடிஷன்?” என்றாள்.

“உண்மைதான்… என்னுடைய போன ஜென்மத்தில் நான் உங்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தில் இறந்துபோனேன். கடவுள் செயலால் அடுத்த பிறவியிலும் ஒரு மனிதனாகப் பிறந்து தற்போது அதே பிறவியில் தொடரும் உங்களைச் சந்திக்க நேர்ந்தது என் பாக்கியம்…”

“…………………………”

“உங்களுக்குத் தேவையென்றால், நீங்கள் ஒப்புக்கொண்டால் என்னால் நிஷாவுக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து விட்டுப்போன என் கடமைகளைச் செய்ய முடியும். இந்தக் குடும்பத்திற்கு உதவ முடியும். நல்லவேளையாக நான் தற்போது பொறுப்புகள் எதுவும் இல்லாத ஒரு தனிக்கட்டை.”

“ஒருநாள் டைம் கொடுங்கள்… அம்மாவுடன் கலந்து ஆலோசித்து நான் உங்களை மொபைலில் நாளை கான்டாக்ட் செய்கிறேன்.”

நான் சரியென்று ஒப்புக்கொண்டேன். என்னுடைய மொபைலுக்கு அவள் மிஸ்டுகால் கொடுத்தாள். இருவரும் நம்பரை சேமித்துக்கொண்டோம்.

அன்று இரவு முழுதும் தூக்கம் வராது புரண்டேன். கடந்த பதினைந்து நாட்களில் என் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாறுதல்? கல்யாணம் ஆகாமலேயே ஒரு பெண்ணுக்கு பொறுப்பான அப்பாவாகப் போகிறேன்… என்னுடைய போன ஜென்மத்து மனைவிக்கும், மகளுக்கும் உதவப் போகிறேன்… கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான யாருக்குமே கிடைத்திராத அனுபவம்.”

மறுநாள் மாலை நிஷாவிடமிருந்து போன் வந்தது…

“அப்பா… நம்ம வீட்டுக்கு நீங்கள் வரமுடியுமா?”

நான் சந்தோஷத்துடன் என் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு நிஷா என்னை ஒரு அப்பாவாக பாசத்துடன் வரவேற்றாள். ஆஷா என்னை ஒரு கணவனாக அன்புடன் அணைத்துக்கொண்டாள். எனக்குள் ஒரு பெரிய மாறுதல் ஏற்படுவதை உணர்ந்தேன். அது ஒரு அமானுஷ்யமான பாச உணர்வு.

அன்று இரவு என் வீட்டில்தான் சாப்பிட்டேன்.

நிஷா என்னிடம், தான் பள்ளிக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பதாகவும்; சொந்தவீடு என்பதால் வாடகை கிடையாது எனவும்; வரும் பணம் அவ்வளவும் இருவரின் வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இருப்பதாகவும் சொன்னாள்.

“இனி கவலையே படாதே நிஷா. மாதா மாதம் அப்பா உனக்கு ஐம்பதாயிரம் அனுப்புகிறேன். டெல்லியில் ஒரு வேலை தேடிக்கொண்டு வந்து விடுகிறேன். நாம் சேர்ந்து வாழலாம்..”

ஆஷா என்னிடம் என்னுடைய போன ஜென்மத்து போட்டோக்களையும், எங்களுடைய கல்யாண ஆல்பத்தையும் பெருமையுடன் காண்பித்தாள்.

எனக்குப் புல்லரித்தது…

அன்று இரவு என் வீட்டிலேயே தங்கிக்கொண்டேன்.

சென்னை திரும்பியதும் எப்போதும் தனிமையையே விரும்பினேன். என் மனதும் நினைவுகளும் டெல்லியில் இருக்கும் என் போன ஜென்மத்து மனைவியையும் மகளையும் மட்டுமே ஆக்கிரமித்தன.

அவர்களிடம் அடிக்கடி பேசினேன். மாதா மாதம் நிஷாவுக்கு ஐம்பதாயிரம் அனுப்பினேன். தீவிரமாக டெல்லியில் ஒரு வேலை தேடினேன்.

அடுத்த ஆறு மாதத்தில் டெல்லியில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. உடனே டெல்லிக்கு மூட்டை முடிச்சுகளுடன் விரைந்தேன்.

நான் இப்போது என் எழுபது வயது மனைவியுடனும், நாற்பத்தைந்து வயது மகளுடனும் டெல்லியில் சந்தோஷமாக இருக்கிறேன்.

எனக்கு இப்போது இருபத்தியெட்டு வயது. என் வாழ்க்கைக்கு ஒரு நல்ல அர்த்தம் கிடைத்துவிட்டது. மனதில் இனம் புரியாத பெரிய நிம்மதியும், திருப்தியும் நிலவுகிறது.

திருச்சியில் இருக்கும் என் பெற்றோர்களுக்கு நான் ஏன் டெல்லிக்கு சென்றேன், எதற்காக திருமணம் வேண்டவே வேண்டாம் என்று அழிசாட்டியம் பண்ணுகிறேன் என்று இன்றளவும் புரியவில்லை.

புரியவும் வேண்டாம்…. நான் உண்மையைச்சொல்லி அவர்களை பயமுறுத்த விரும்பவில்லை.

நான் செய்தது எல்லாம் சரிதானே?

Print Friendly, PDF & Email

6 thoughts on “போன ஜென்மத்து மனைவி

  1. போன ஜென்மத்து கடன் அடைக்க இந்த ஜென்மத்து பெத்தவாளை தவிக்க விடறது சரியா கண்ணன் சார்

  2. கதை மிக நன்றாக உள்ளது, இந்த கோணத்தில் யோசிப்பது மிகவும் அரிது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் – பார்த்தசாரதி, நங்கநல்லூர்

  3. நிஜமாவே இது ஒரு வித்யாசமான கதை புதுமையான அனுபவம் வாழ்த்துக்கள்.. ஐயா ..

  4. வாழ்த்துக்கள் சார். வித்தியாசமான கதை.
    நிலாரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *