வீட்டுக்குள்ள நுழைஞ்ச முத்துக்கருப்பனுக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. ஆத்திரதுக்குக் காரணம், தொலைபேசி அலறிக்கொண்டிருந்ததும் அது எங்க இருக்குங்குறது தெரியாததும் தான். ஏண்டா இந்தக் கார்ட்லெஸ் போன் வாங்கினோம்னு அலுத்துக்கிட்டான்.
எதுவுமே இருந்த இடத்தில இருக்குறதே இல்ல. எத்தன தடவ சொல்லியாச்சு. தொலைபேசிக்கு மேல அலறிக்கொண்டே அங்கயும் இங்கயுமாத் தொலைபேசியின் கையில் வைத்துக்கொள்ளும் பகுதியைத் தேட ஆரம்பித்தான். மனைவி இளவரசியோ அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே அவளது வாடிக்கை இது தான்.
ஒரு வழியாக் கண்டுபுடிச்சுப் பேசி முடித்தான். தொலைபேசிய வச்சவன், மூத்த மகன் கதிரேசனைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான், தொலைபேசியின் கைப்பிடிப் பகுதியை அவன் தான் மறந்து போய்க் கண்ட இடத்திலயும் வச்சிருக்கனும் என்கிற முடிவோடு.
ஏண்டா எதாவது சொரனை இருக்கா? சோறு தான சாப்பிட்ற. உரைக்காதா மண்டைல. எத எடுத்தாலும் ஞாபகமா அந்த இடத்தில் வைக்கனும்னு எத்தன தடவ சொல்ல்லி இருப்பேன். கொஞ்சம் காதுல போட்டுக்கடா. போ, போ கைல என்ன வச்சிருக்க. அதயாவது எடுத்த இடத்தில வை. போ போ, என்று தனது ஆத்திரத்திற்குக் கிடைத்த வடிகாலை உபயோகித்துக் கொண்டான்.
கதிருக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலே. அப்பா எப்ப பாத்தாலும் கோபமாவே பேசுறாங்களே. நானும் எதையாவது மறந்து போறேன். அதுக்காக இப்படித் திட்டுறாங்களே. மனசு உடைஞ்சு போய் அம்மாட்ட வந்தான்.
இளவரசி மகனின் தலயக் கோதிவிட்டு ஆறுதலாப் பேசினாலும் கணவனை வீட்டுக்கொடுக்காது இருந்தாள். ‘ஏம்பா அப்பாவும் எத்தன தடவ சொல்லுவாங்க. யோசிச்சுப் பாரு’ என்றாள்.
நான் என்னம்மா பண்ணட்டும். வேணும்னாம்மா பண்றேன். மறந்திருது என்றான் பாவமாக.
சரி, சரி விடு. கவல¨ப்படாத என்ற தாயுள்ளத்தின் அரவணைப்பின் சுகத்தைக் கதிரேசன் உணர்ந்தான். அடிக்கடி இந்த சுகம் அவனுக்குக் கிடைப்பதுண்டு.
இளவரசிக்குக் கணவன நின¨க்கும் போதெல்லாம் கதிரேசனத் திட்டுறது தான் ஞாபகதிற்கு வரும். உடனே ஏன் தான் இந்த மனுஷனுக்குப் புத்தி இப்படி போகுதோன்னு வருத்தப்படுவா. எல்லாம் விதின்னு நொந்துக்குவா.
நாளாக ஆக கதிரேசனை நோக்கிய முத்துக்கருப்பனின் பாய்ச்சல் அதிகமானது. எது காணாமப் போனாலும் அதுக்குக் கதிரேசன் தான் காரணங்குற முடிவுக்கு வந்தான் முத்துக்கருப்பன்.
இதில தலையிட்டாப் பிரச்னை பெரிசாகும்ணு இளவரசி பேசாமலே இருந்தாள்.
ஒருநாள் வேலைக்குக் கிளம்பின முத்துக்கருப்பன் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
என்னத்தங்க தேடுறிங்க? என்றாள் இளவரசி.
இத எங்க வச்சேன்னு தெரியலன்னு எரிச்சலோடு சொன்னான் முத்துக்கருப்பன். அவனுக்குக் கண்டிப்பாகத் தெரிந்தது, அவன் தான் அலுவலகத்தின் சாவியை எங்கேயோ தவறுதலாக வைத்தான் என்று. கதிரேசன் கைக்கு இது எட்டுகின்ற வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்தான்.
பொறுமையை இழந்த இளவரசியும், ‘என்னன்னு தான் சொல்லுங்களேன், நாங்களும் தேடுறோம்’ என்றாள்.
அட இந்தக் கம்பெனி சாவியத் தான் தேடுறேன்.
பக்கத்து அறைல இருந்த கதிரேசான் ஓடிவந்து, “அப்பா! இதத் தான தேடுறிங்க, இந்தாங்க சாவி” என்று நீட்டினான்.
சாவிய வாங்கிக்கொண்ட முத்துக்கருப்பனுக்கு, ஒரு சாதாரணமான விஷயம் மண்டைல ஏற வேண்டிய காலம் கடந்த பிறகே தனக்குப் புரியுதுங்குறது நல்லாத் தெரிஞ்சது. புரிய வைத்த கதிரேசன் போதிமரமாகத் தெரிந்தான்.
சே! என்ன மடத்தனமா நடந்திருக்கோம். பையனப் பையனா நடத்தாமப் பெரிய மனுஷத் தனத்தை எதிர்பார்த்ததும், அதுக்கேத்த மாதிரி அவன நடக்க வைக்க முயற்சி பண்ணினதும், தான் கூட அந்த மாதிரி இல்லாததும்.. .. ..சே! என்ன மடத்தனம் என்று உணர்ந்தான். அவனை நினைக்க அவனுக்கே வெட்கமாக இருந்தது.
கணவனின் மனதில் எதார்த்தம் குடிகொண்டது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது, இளவரசிக்கு.
– சிதம்பரம் அருணாசலம் (மே 2008)