பொருத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 2,460 
 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்போ எல்லாம் வெளிநாடுதான்! ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமா? அதுவும் வெளிநாடு என்றால் தான் திறம்! வெளிநாட்டு மாப்பிள்ளைமார் பற்றி எத்தனை எத்தனை கதைகள் அடிபடுகின்றன. அனுபவித்து துன்பப்பட்ட பெண்களே, ‘சகோதரிகளே ஏமாறாதீர்கள் என்று புத்தகம் கூட அடித்து வெளியிட்டார்கள். யார் தான் காதில் போட்டுக் கொண்டார்கள்.

கௌரியின் விவாகம் பல தடங்கல்களுக்கு உள்ளாகி காலதாமதமாகிக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு குடியிருக்க வந்த ஜெயந்தியும் அவளது கணவனும் வந்து மூன்றுமாத காலம்கூட ஆகவில்லை. கௌரிக்கும் ஜெயந்திக்கும் இடையில் வலுவானதொரு நட்பு உருவாகியது.

கௌரி அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப்போய் உதவி ஒத்தாசைகள் புரிந்து வந்தாள்.

“ஜெயந்தி அக்கா …… என்ன புதிதாக தொலைக்காட்சிப் பெட்டியொன்று!”

“ஓம் கௌரி” இது எனது அண்ணன் முறையான ஒருத்தர் அன்பளிப்புச் செய்திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார். பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. கலியாணம் முடிந்தால் பெண்ணையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போய் விடுவார்.”

கௌரியின் மனதில் பற்பல கற்பனைகள் வண்ணத்துப் பூச்சியென சிறகடித்தன. இதயத்தில் பெண்மையின் மென்மையான உணர்வுகள் பூத்துக் குலுங்கின.

ஜெயந்தி கூறிய சேதியை கதையோடு கதையாக பெற்றோரின் காதில் போட்டு வைத்தாள் கௌரி.

ஜெயந்தி ஊடாக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஜாதகப்பொருத்தம், சீதனம் எல்லாமே சரிவந்து விட்டன.

பெண்பார்க்கும் படலமும் விமரிசையாக நடந்தது.

சங்கரின் கம்பீரமான தோற்றத்திற்கு கௌரியின் அழகும் மிடுக்கும் குறைந்ததல்ல என்பதை அவனது பெற்றோர்களும் ஏற்றுக் கொள்ளவே, அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

சங்கரும் கௌரியும் தனியே சந்தித்து கருத்துப் பரிமாற சந்தர்ப்பம் தரப்பட்டது……..

“கௌரி…..உங்களுடைய அழகும் அடக்கமும் எனக்கு நன்றாகப் பிடித்திருக்கின்றது.”

கௌரியின் மனதில் பல்லாயிரம் வர்ண மத்தாப்புக்கள் ஒளிவிட்டு பூத்து பிரகாசித்தன..

நீங்கள் இல்லாவிட்டால் எனக்கு இந்த வாழ்க்கையே தேவையில்லை என்று உங்களைக் கண்டவுடனேயே தீர்மானித்து விட்டேன்.” – கௌரியும் பதிலுறுத்தாள்.

சங்கருடைய மனம் நிறைந்தது. ஒரு பெண்மட்டுமல்ல ஆண்கூட புகழ்ச்சிக்கு மயங்குகின்றான்…

“என்றாலும் கௌரி.. வாழ்க்கை என்பது இலகுவானதல்ல. பல மேடு பள்ளங்களை உடையது. பொறுமை… விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை… மன்னிக்கும் சுபாவம்.. எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர் நீச்சல் போடும் மனத்தைரியம்….”

சங்கர் கூறிக் கொண்டே போனான். கௌரி இடைமறித்தாள்.. “இதெல்லாம் சரியான வயது… பராயம் வராதவர்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள். விவாகத்துக்குரிய பராயத்துக்கு வந்துவிட்ட, எங்களுக்கு இவையெல்லாம் புரியாமல் இருக்குமா?’

கௌரி கூறுவதும் மிக மிகச் சரியென்றே சங்கருக்குப் பட்டது.

“உம்முடைய கருத்தை நான் பாராட்டுறன் கௌரி, ஆனால் மறுபக்கத்தில் மிக மிக இளவயதினள் ஒருத்தி தான் கடந்து வந்த குறுகிய வாழ்க்கைப் பயணத்தில் ஆபத்துக்களையும் சோதனைகளையும் சந்தித்திருக்கக்கூடிய சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. ஆனால் உமது வயது முதிர்ச்சிக்கு நீர் பல அனுபவங்களுக்கும் ஆபத்துக்களுக்கும் முகங்கொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கலாம். அப்படியான சம்பவங்கள் எதுவும் எமது எதிர்கால வாழ்வுக்கு இடையூறாக வரும் என நீர் நினைத்தால் எனக்கு இப்போதே சொல்லி விடலாம். ‘

கௌரி கால் பெருவிரலால் தரையைக் கீறினாள்.

“அப்படியான அனுபவங்களோ சோதனைகளோ எனக்கு ஏற்படவில்லை.” சங்கரின் மனம் இந்த பதிலால் குளிர்ந்தது.

“உண்மையைச் சொல்லப்போனால் கௌரி…. உமது அழகுக்காக என்ன விலை வேண்டுமாயினும் கொடுக்கலாம்.

நானும் நீரும் ஒன்று சேர்வதற்கு தடையென எனது பெற்றோர் எண்ணக் கூடிய காரணிகள் எதுவும் இருந்தால் கூட நான் அவற்றை “மறைத்தாயினும் உம்மை அடைந்தே தீருவேன்”.

ஒரு முத்தப் பரிமாறலுடன் அவர்கள் பிரிந்தார்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்காக, ஒரு சில வாரங்களிலேயே சங்கர் கௌரி விவாகம் மிகவும் சிறப்புற நடைபெற்றது.

ஜெயந்தி முன்னின்றுழைத்தாள். சங்கர் கௌரிக் கான படுக்கையறை அலங்காரங்கள் கூட அவளது மேற்பார்வையில் அழகுற அமைக்கப்பட்டது.

வாழ்க்கையின் சுவாரசியமானதும் இன்பமூட்டுவது மான அத்தியாயங்களைத் தொடக்கி வைப்பதற்காக சங்கரும் கௌரியும் மீண்டும் ஒருவரையொருவர் தனியறையில் எதிர்கொண்டனர்.

“கௌரி…உம்மை நான் எப்படியாவது மனைவியாக அடைய வேண்டும் என்ற ஆசையில் நான் அன்று உம்மிடம் ஒரு உண்மையை மறைத்து விட்டேன். இப்போதாகிலும் நான் அந்த உண்மையை கூறிவிட வேண்டும் என்று எனது மனச்சாட்சி உறுத்துகின்றது. நான் வெளிநாட்டு மாப்பிள்ளை இல்லை கௌரி.”

கௌரிக்கு எதிர்பாராத அதிர்ச்சி. சாதாராணமாக ஆண்கள் பல பெண்களுடனும் பலவிதமாக பழகி இருப்பார்கள். அதை தனது மனைவியிடம் மறைக்கவும்தான் செய்வார்கள். ஆனால் இப்படியொரு குண்டு வந்துவிழும் என்று அவள் கருதியிருக்கவில்லை .

“அப்ப ஜெயந்தி அக்கா சொன்னது…..?”

“நான் வெளிநாடு போகவேண்டும் என முடிவெடுத்து தலைநகரில் தங்கியிருந்து வருடக்கணக்கில் முயற்சிகள் செய்தது உண்மை. ஆனால் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஊரில் பலர் வெளிநாடு சென்று விட்டதாகவே நம்பினார்கள். ஜெயந்தியும் அப்படித்தான் எண்ணியிருந்தாள். ஜெயந்தி வாயிலாக உம்மைப்பற்றி அறிந்த பெற்றோர் எனக்கு தகவல் தந்தார்கள். நான் செலவைப் பார்க்காமல் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை விலைகொடுத்து வாங்கி ஜெயந்திக்கு அன்பளிப்புச் செய்ததுடன் விவாக நிமித்தமாக நான் நாடு திரும்பி விட்டதாக தகவல் கொடுத்தேன். அவளும் அதனை முற்று முழுதாக நம்பினாள்.

பெண்களுக்கு கதையைக் கொடுத்தால் அவர்களுடைய வாய் சும்மா கிடக்காது என்று கணக்குப்பண்ணி அப்படிச் செய்தேன். நான் நினைத்தபடியே எல்லாம் நடந்தது. நான் வெளிநாடு போகும் தீர்மானத்திலேயே இன்னும் இருப்பதால் இப்படிச் செய்தது உம்மை ஏமாற்றியதாகாது என்று நம்பினேன். இந்த விடயத்தில் நீர் என்னை மன்னிக்க வேண்டும் கௌரி.”

கௌரி தனக்குள் சிரித்துக் கொண்டாள்…

ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்யவும் புரிந்து கொள்ளவும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இதனைக் கூறாது தன்னை அவனது மனைவியாக்கிக் கொள்ளுமளவிற்கு அவன் தன்மேல் கொண்ட ஆசையையும் ஆர்வத்தையும் இரசித்த கௌரி…

“இதெல்லாம் பெரிய விஷயமே அல்ல..நான் ஐந்து வருட காலம் அரபு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து பல இலட்சக்கணக்கில் பணம் சேமித்துள்ளேன். நாம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடாத்த அந்தப் பணமே போதுமானது.”

கௌரி கூறவும்..சங்கருக்கு பஞ்சணையே சுழன்றது!

– தினமுரசு. ஆகஸ்ட் 19.25.2001, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *