பொய் முகம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 3,852 
 

” எந்த சிறுக்கிடி எம் புள்ளைய நாக்குல நரம்பில்லாம பேசினது…? தைரியமிருந்தா..என் முன்னால வந்து பேசுங்கடி…” அந்த மத்தியான வெய்யிலில் போவோர் வருவோரைப் பற்றிக் கவலைப் படாமல் பத்ரகாளி போல ஏழரைக் கட்டைச் சுருதியில் கத்தி கூப்பாடு போட்டாள் ராக்கம்மா.

அந்தத் தெருவில் உள்ள எந்தக் குடிசையும் எட்டிப் பார்க்கவில்லை.

” ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சிருந்தா எம் முன்னால வந்து பேசுங்கடி பொட்டைங்களா…” திரும்பவும் அவள் அதே சுருதியில் கத்த….

‘அட…! கத்தி அடங்கிப் போயிடுவா. இவகிட்ட போய் எதுக்கு வார்த்தையை கொடுப்பானேன் ! ‘ என்று இருந்த ராமாயி அவள் வித்தியாசமாகப் பேசவே அதற்கு மேல் தாங்க முடியாதவளாக அடிபட்ட நாகம் போல தன் குடிசையை விட்டு வெளியே வந்தாள்.

வந்து அவளுக்கு எதிரே நின்று….

” என்னடி..! பெரிய லம்பாடியாட்டம் பேசறே…? ஏன் நான்தான் பேசினேன். என்ன செய்யப்போறே…? ” அவள் பாணியில் கத்தினாள்.

எதிரி கண்ணில் பட்டதும் சும்மா இருப்பாளா ராக்கம்மாள்..? !…..

” பேசினதுமட்டுமில்லாம எதிர்த்து வேற பேசறீயா..? வாடீ.. எஞ் சக்களத்தி ! ” என்று ஆவேசமாக அவள் அருகில் சென்றவள்….

” எம் புள்ளையைப் பார்த்து என்னடி சொன்னே..? இப்ப சொல்லு..? ” எகிறினாள்.

எகிறினால் ராமாயிக்கு ரோசம் வராதா..? ஏற்கனவே ரோசப்பட்டு வந்தவள்…கோபம் வந்தது.

” ம்..ம்… ! நான் இல்லாதது பொல்லாததைக் கேட்கல. குத்தமாவும் ஒன்னும் சொல்லல. இப்படி அவலட்சணமாய் வந்து பொறந்து ஆத்தாளுக்கு க கஷ்டத்தைக் கொடுக்குறீயே.? ! நீ இருந்தா என்ன… செத்தா என்னன்னு கேட்டேன். அதுக்கு என்ன செய்யப்போறே நீ…? ”

” அது அழகா இருக்கு. அசிங்கமா இருக்கு. ஒனக்கு எந்தப் பக்கம்டி வந்து பொத்துக்கிட்டுப் போவுது…? ”

” த்தொ பாரு. வார்த்தையை அளந்து பேசு.. ஆமா….” எச்சரித்தாள்.

” அளந்து பேசலைன்னா என்னடி செய்வே.? ”

” ம்…ம்… ! பேசுற வாயைக் கீய்ச்சுடுவேன்…! ” கையை விரித்துக் காட்டினாள்.

” அவ்வளது தூரத்துக்கு வந்துட்டியா..? வாடீ… எஞ் சக்களத்தி…” என்றவாறு ராக்கம்மா ஓடிப் போய் ராமாயின் தலை மயிரைக் கொத்தாகப் பிடிக்க…

ஆயிற்று….. யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.!!

ஆக்ரோசம், ஆவேசத்தில் துணிமணி விலகுவது கூடத் தெரியாமல் இருவரும் சண்டைப் போட்டனர். முந்தானை விலகி , ஜாக்கெட் கிழிந்து, புடவை அவிழ்ந்து போனாலும் இருவரும் ஒருவர் பிடியை ஒருவர் விடவில்லை;. இருவரும் உடலிலும் பலத்திலும் சளைத்தவர்களில்லை என்பதால் தங்கள் அலங்கோலத்தைக்கூட அவர்களால் சீர்செய்து கொள்ள முடியவில்லை.

தெரு இப்போது வேடிக்கைப் பார்க்க வந்து விட்டது. உருண்டு புரண்டவர்களை விலக்காமல் ஆண்களும் பெண்களும் வேடிக்கைப் பார்த்தார்கள்.

விலக்கினால் தாங்கள் அகப்பட்டுக்கொள்வோம், அல்லது மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தே சில பேர்கள் நின்றார்கள்.

இன்னும் சிலர் வாட்சப், முகநூலில் வெளியிடுவதற்கென்று தங்கள் கை பேசிகளால் சண்டையைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

யுத்தம் உச்ச நிலையிலிருந்தது.

தன் தாய் உருண்டு புரள்வதை பார்த்த அந்த ஆறு வயது சிறுவன்..” அம்மா ! அம்மா..! ” என்று பயத்துடன் அலறி தன் குடிசை வாசலில் அழுது கொண்டிருந்தான்.

இந்த சண்டைக்கு மூலகாரணமே அவன்தான். இவனை இவனென்று சொல்வதைவிட ‘ ‘இது’ வென்றே அந்த தெருக்காரர்கள் அழைப்பார்கள்.

சூம்பிப் போன குச்சி குச்சியான கை, கால்கள். சூனாம் வயிறு. எலும்புகள் தெரியும் மார்புக்கூடு. மொட்டைத்தலை. …முடியே முளைக்காத வழுக்கைத் தலை. ஒழுகிக் கொண்டிருக்கும் மூக்கு. இரண்டு பக்கம் பார்க்கும் ஒண்றரைக் கண்கள். தெருப் புழுதி அப்பிய உடல். இவனை இதுவென்று சொல்வதுதானே பொருத்தம்.?!

ஆனால்… அவன் அது இல்லை. அவன்தான் ! ஆண்பிள்ளை. அவலச்சனத்தையெல்லாம் ஒட்டு மொத்தமாய்க் குத்தகை எடுத்திருக்கும் ஆண்பிள்ளை. ராக்கம்மாவின் செல்ல மகன் செல்லப்பன்.

ராக்கம்மாவும், அவள் கணவன் மாயாண்டியும் வெயிலில் கருத்த மேனி என்றாலும் அழகில்லாதவர்கள் இல்லை. வாட்ட சாட்டமானவர். மாயாண்டி ரிக்ஸா மிதித்தானென்றால் அவனுடன் போட்டிபோட அந்த குப்பத்தில் ஆளில்லை.

ராக்கம்மா இரண்டு கோணிப் பைகளை எடுத்து சொருகிக் கொண்டு சென்றாலென்றால்… நிரப்பிக்கொண்டுதான் திரும்புவாள். அவைகளைக் கழிவுகள் வாங்கும் இரும்பு கடையில் போட்டு காசாக்கித் திரும்புவாள். கணவன் மனைவி இருவருமே நல்ல உடல் உழைப்பாளிகள் மட்டுமில்லாமல் திடசாலிகள்.

அப்படிப்பட்டவர்களுக்கு என்னவோ திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு இல்லாமலிருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதற்காக மாயாண்டி மனைவியை வெறுக்கவில்லை, வேறொரு திருமணம் செய்து கொள்ளவில்லை.

கறிவேப்பிலைக் கொத்து மாதிரி எட்டாவது வருட இறுதியில் செல்லப்பன் பிறந்தான். பிள்ளைக்காக ராக்கமா தின்ற மருந்து மாத்திரைகளின் பாதிப்போ என்னவளோ… குழந்தை பிறப்பே.. ஒண்றரைக் கண்ணும், சப்பை முக்குமாகப் பிறந்ததை பார்த்தபோது… ராக்கம்மாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

அதற்காக பெற்ற குழந்தையைத் தூக்கி எறிந்துவிட முடியுமா..? காலங்கடந்து பிறந்த குழந்தையாச்சே…! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு …! கண்ணும் கருத்துமாய்ச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாள்.

குழந்தையைப் பற்றி யார் ஏளனமாகவோ, தவறாகவோ பேசினால்… அன்றைக்கு அவர்கள் செத்தார்கள். பிடி பிடி என்று பிடித்து அவர்களை உண்டு இல்லை ஆக்கிவிடுவாள். இதனால் அவளை பற்றியோ அவள் குழந்தையைப் பற்றியோ பேசுவதற்கு அந்த பேட்டை மக்கள் பயந்து கிடந்தார்கள்.

” இந்தப் புள்ளையைப் பெத்ததுக்கே இந்த குதி குதிக்கிறாளே..! இன்னும் குறையிலில்லாத அழகான புள்ளையாய்ப் பெத்திருந்தா… இவளைக் கையாளப் பிடிக்க முடியாது.’ – என்று பேட்டை மக்கள் அவர்களுக்குள்தான் பேசிக்கொள்வார்களேத் தவிர..ராக்கம்மா தலையைக் கண்டால் கப்சிப்.

அவலட்சணமாகப் பிறந்திருக்கானே என்று அன்றைக்கு உடைந்து போனவன்தான் மாயாண்டி. கொஞ்ச காலத்தில் இன்னொருத்தியை இழுத்துக் கொண்டு ஏங்கேயோப் போய்விட்டான். எங்கிருக்கிறான்..? என்ன செய்கிறான்…? இதுவரையில் யாருக்கும் எவருக்கும் ஒரு தகவலுமில்லை.

கணவன் தன்னை விட்டுப் போனது குறித்து கொஞ்ச நாள் வருத்தப்பட்டாள் ராக்கம்மா. அப்புறம்…. இதுதான் தலையெழுத்து, வாழ்க்கை என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டாள் . கையிலிருக்கும் தொழிலை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

காலையில் செல்லப்பனை அழைத்துக்கொண்டு தொழிலுக்குச் சென்றால் ….. மாலைதான் குடிசைக்குத் திரும்புவாள். இப்படித்தான் மகனைத் தனியே விடாமல் தன் கையிலேயே வைத்திருப்பாள்.

நேற்றும் அப்படித்தான் தொழிலுக்குச் சென்றாள். குப்பைத் தொட்டியைக் கிளறும்போது மலேரியா கொசு கடித்ததோ என்னவோ… வீட்டிற்கு வந்ததும் இவளுக்குச் சுரம்.

இதனால் …காலை இவனை வீட்டில் விட்டு விட்டு அரசாங்க மருத்துவமனையில் சென்று மாத்திரைகள் வாங்கி திரும்பினாள்.

வாசலில் செல்லப்பன் அழுது கொண்டிருந்தான்.

மகன் தன்னை அரை மணி நேரமாகக் காணோமென்று அழுகின்றானோ என்று நினைத்து…

” என்னடா செல்லம்…? ” என்று கொஞ்ச….

” அந்த அத்தை என்னைத் திட்டிச்சு…” சொல்லிவிட்டான்.

அவ்வளவுதான்…! ராக்கம்மாவிற்கு ஆவேசம் வர… யுத்தம்.

யுத்தத்தின் முடிவு….

ராமாயிக்குக் கடைவாயில் ரத்தம் ஒழுக…

ராக்கம்மா…. மகனை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் வந்துவிட்டாள்.

ராமாயி……மருத்துவமனைக்குச் செல்ல…

” ரத்தக் காயமா இருக்கு. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துட்டு வாங்க ” … என்று மருத்துவர் சொல்ல….

இரண்டு போலீஸ் வந்து ராக்கம்மாவை மகனோடு அழைத்து வந்து விட்டார்கள்.

விசாரணையில்….

” ஐயா ! நான் ரொம்ப நல்லவள். இந்த பையன் பொறக்கும் வரை தெருவுல யார் வம்பு, தும்புக்கும் போகாம இருந்தவள். இந்த மாதிரி பொறந்ததும் ….என்மேல உள்ள வாஞ்சை, நல்லெண்ணத்துனால…மத்தவங்க இவனைப் பத்தி பேசி… புள்ள மனசை நோகடிச்சுடக் கூடாதுன்னு மகனைப் பார்த்து யார் என்ன பேசினாலும் சல்லுன்னு விழுந்து சண்டை போடுற பொய் முகம் கட்டிக்கிட்டேன். இன்னைக்கு ஆத்திரம் ஆவேசத்துல ராமாயியை ரொம்ப மோசமா அடிச்சிட்டேன். தப்புக்கு மன்னிச்சுக்கோங்கய்யா. தப்புக்குத் தண்டனையா ராமாயி கால்ல விழுறேன் ” என்று சொல்லி அருகில் நின்ற ராமாயி காலில் படாரென்று விழ…..

” என்னையும் மன்னிச்சுக்கோத் தாயி…! ” என்று சொல்லி கட்டுப்போட்ட தலையுடன் இருந்த ராமாயி ராக்கம்மாவை அள்ளினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *