கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,747 
 
 

(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாயங்காலம் ஐந்தரை மணிக்கு மேலாகி விட்டது. அலுவலகத்திவிருந்து வீட்டிற்கு வந்த நான் என் நாடக ராஜ உடுப்புக்களைக் களைந்து சாரத்தை உடுத்திக் கொண்டு கிணற்றடிக்குச் செல்கிறேன்.. முகத்தையும் உடல் முழுவதையும் பெரும் போக்காகக் கழுவிக்கொண்டு விலாந்தையிற் சாய்கதிரையில் அமர்ந்தபோது இதமாக இருந்தது! நேற்று வாசிக சாலையில் இருந்து எடுத்து வந்த நாவலை விட்ட இடத்திலிருத்து படிக்கத் தொடங்கினேன்.

புத்தகம் படிப்பதில் நான் ஒரு கிறுக்கு. உலகத்து ஈனக் கவலைகளை எல்லாம் மறக்கப் புத்தகங்களே எனக்குத் துணை புரிந்தன. வாசிப்பு எனக்கு ஒரு ‘எஸ் கேப்பிசம்’,

நாவலாசிரியர் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது ஆற்றொழுக்கான தமிழ் நடையும், விவகாரங் களை ஊடுருவி வெளிப்படுத்தும் திறமையும் எனக்கு மிகமிகப் பிடித்திருந்தன. நான் என் வாசிப்பில் ஆழ்ந்து விட்டேன்.

மனைவி தேநீருடன் வருகிறாள். என் கையில் தேநீர்க் குவளையை கொடுத்துவிட்டு “இஞ்ச பாருங்க. நாளைக் குக் காலையில் கோப்பிக்குத் தூள் இல்ல” என்றாள்.

“அதுக்கென்ன வாடிக்கைக் கடையில கோப்பிக் கொட்டை வாங்கி இடிக்கிறதுதானே” என்று சொல்லி விட்டு என் வாசிப்பைத் தொடர்கிறேன்.

“அவன்ர கடையில் கோப்பிக் கொட்ட இப்ப இல்லியாம். வேறு கடையில தூள் தான் வாங்க வேணும்.” |

“சம்பளத்திற்கு இன்னமும் மூணு நாள் இருக்கு. அன்ர கைல செப்புக் காசுகூட இல்ல.”

இஞ்சப் பாருங்க. ஒவ்வொருநாளும் நீங்க வாங்கிற தமிழ் இங்கிலீஸ் பேப்பர் எல்லாம் அம்பாரமாய்க் குவுஞ் சிருக்கு. பதினஞ்சு கிலோக்கு மேல தேறும். அந்தக் குப்பையை எல்லாம் விற்பமே”

“ஓஹோ… அதற்குத்தான் இந்தப் பீடிகையா? அந்தப் பேப்பர்களில் இருக்க சில கட்டுரைகள வெட்டிப் பைல் பண்ண வேணும் எண்டிருக்கன் நேரமில்ல. நீயென் னவோ அந்தப் பேப்பர் எல்லாம் உன்ர தலைக்குள்ள இருக்க மாதிரி அலுத்துக் கொள்றியே”

“அந்தப் பேப்பர் எல்லாம் அறை முழுதையும் அடைச்சிக் கொண்டு கிடக்கு. அறையக் கூட்டக் கூட முடியல்ல. அவைகளைக் கடையில் வித்திற்றாக் காசாவும் போயிரும். அறையும் துப்பரவாகும். அதைச் செய்யுங்க முதலில்”

தலையிலே வைச்சித் தூக்கிக் கொண்டு என்னைக் கடைக்குக் கொண்டு போகச் சொல்றியா?”

நீங்க ஏன் சுமக்க வேணும். இங்கின இருக்கிற நாடான் கடையில போய்ச் சொன்னா, அவன் பொடியன அனுப்பிப் பேப்பர வாங்கிக் கொள்றான்” என்று சற்றுச் சூடாகவே சொல்லிவிட்டு அவள் போய் விட்டாள்.

நான் உள்ளூர் அரசாங்க அலுவலகமொன்றிற் தலைமை எழுத்தர். இருபது வருட சேவையின் பின்னர் கூட என் சம்பளம் நான்கு பிள்ளைகள் கொண்ட என் குடும்பச் செலவுக்கு அர்த்தா பத்தியாகத்தான் இன்னமும் இருக்கிறது. வாடிக்கைக் கடையிலே அரிசி பருப்பு என்று வாங்கி விடலாம். ஆனால் மீன், மற்றும் கறி வகைகளை நாளந்தம் கைக்காசு கொடுத்தே வாங்க வேண்டும். மாதக் கடைசி நாட்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டில் மீன் கறியே இராது! நாளைக் காலையிற் கோப்பியே இல்லையே என்ற எண்ணத்தைத் தாங்கவேமுடியவில்லை. புத்தகம் வாசிப்பதற்கு அடுத்ததாக உள்ள என் ரசிகத் தனம் கோப்பியிற்தான்!

ஆகவே என் மனைவி கேட்டுக் கொண்டபடி நான் தாடான் கடைக்குப் புறப்பட்டேன்!

நான் தலமை எழுத்தர்! சாரத்தோடும் துண்டோடும் கடைக்குப் போக முடியுமா?

மீண்டும் அறைக்குட் சென்று காற்சட்டையை மாட்டிச் சேட்டையும் அணிந்து கொண்டு புறப் பட்டேன். என் கையிலே நான் படித்துக் கொண்டிருந்த நாவல் – இப்போதெல்லாம் எனக்குப் பல விடயங்களில் ஞாபக மறதி! ஆனாலும் கையிற் கொண்டு போகும் நூலை எந்தக் காலத்திலும் மறந்ததில்லை. புத்தகம் வாசித்துவிட்டு, விட்ட இடத்தைத் தொடர்ந்து படிப் பதற்காக அடையாளமோ அல்லது இதழை மடித்தோ வைப்பதும் இல்லை. வாசித்து விட்ட இடம் ஞாபக மாகவே இருக்கும். நான் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்தேன். .

வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரம்தான் நாடான் கடை. ஆனாற் சித்தம் போக்கு சிவம் போக்காக நடந்தேன். நினைவில் நாவலைப் பற்றிய சிந்தனையே ஓடியது

நாவலின் கதாநாயகி படித்தவள், உத்தியோகப் பார்ப்பவள். இங்குள்ள தரத்தில் கல்விப் பணிப்பாளர் உத்தியோகம் பார்க்கிறாள் தமிழ் நாட்டில், அக்கதா நாயகி, கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைக் காதலிக் கிறாள்.

ஒருநாள் தன் காதலனோடு காட்டுப் புறமுள்ள கோயில் ஒன்றிற்குச் செல்கிறாள். சம்பாஷணை யின் போது அவள் பேச்சிற் கோபங்கொண்ட காதலன், காட்டுமரக் கொப்பை முறித்து, அது நார் நாராகக் கிழிந்து போம்வரை அவளை அடிக்கிறான்.

அச்சம்பவம் நடந்த பின்னரும் இருவருக்கும் திருமண மாகிறது. கதாநாயகி தன் முழுச் சம்பளத்தையும் கண வன் கையிற் தருகிறாள். கணவன் அவளுக்குப் ‘படியளக் கிறான்.’

ஒரு நாள் இரவு இருவருக்குமிடையே பிணக்கு. கோபங் கொண்ட கணவன் அவளை அடி அடியென்று அடித்து முழு நிர்வாணமாக்கி வீட்டுக்கு வெளியே தெருவிற் தள்ளிவிட்டுக் கதவைப் பூட்டிக் கொள்கிறான். வெளியே நிர்வாணமாக நின்ற கதா நாயகி அடுத்த வீட்டுக்காரி கொடுத்த நூற் புடவையைக் கட்டிக் கொண்டு பிறந்த வீடு செல்கிறாள்.

பெண்ணடிமைத் தனத்திலிருந்து அவர்களை விடு விப்பதற்கான பிரச்சார நாவலாக இருந்தாலும், அதற்காகக் கதாசிரியர் இத்தகைய குரூரமான கற்பனைகளைப் பண்ண வேண்டுமா? கணவன், மனைவியை நிர்வாண மாக்கித் தெருவிலே துரத்தி விடுவதென்பது நடக்கக் கூடி யதுதானா; அதிலும் விரிவுரையாளராக உயர்ந்த அந்தஸ்திலுள்ளவன்?

என் மனம் சென்ற வாரம் படித்த சிறுகதைத் தொகுதி ஒன்றிற் படர்கிறது. அச்சிறுகதைத் தொகுதியின் ஆசிரியரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். மவை யாளங் கலந்த தமிழில் அவர் கதை சொல்லும் பாணியே அலாதியானதுதான். ஆனால் இரண்டு கதைகள் என் மனத்தை உறுத்தின.

இரண்டு கதைகளிலும் முஸ்லிம் ஏழைப் பிணங்கள் அடக்கஞ் செய்வாரின்றி நாற்றம் எடுக்கின்றன! இது நடக்கக் கூடியதுதானா?

என் மனம் அலை பாய்கிறது. நான் முஸ்லிம் கிராமத் திற் பிறந்தவன். முஸ்லிம்களோடு வாழ்பவன். எந்த முஸ்லிமின் ஜனசாவும், அவன் எத்தனைதான் ஏழையாக இருந்தாலும் மரித்து ஓரிரு மணித்தியாலங்களுள் அடக்கஞ் செய்யப்பட்டு விடும். ஆறேழு மணித் தியாலங் கள்கூட ஜனாசாக்களை வைப்பதில்லை! ஆனால் ஏழை முஸ்லிமின் பிரேதம், அடக்கஞ்செய்ய எவருமே இல்லா மல் நாற்றம் எடுப்பதாக எழுதியிருப்பது எத்தனை அயோக்கியத்தனமான கற்பனை!

நான் என் நினைவுகளோடு நடந்து கொண்டே – இருந்தேன்.

யாரோ மிஸ். மேயோ என்ற ஆங்கில ஆசிரியை இந்தியா சாக்கடைப் புழுக்கள் நெளியும் அருவருப்பான தேசம்’ என்று எழுதியதற்காக எத்தனையோ இந்திய எழுத்தாளர்கள் கொதித்தெழுந்த கடந்த காலச் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

இப்போதும் கூட என்ன வித்தியாசம் வந்துவிட்டது? மனைவியை நிர்வாணமாக்கித் தெருவிற் தள்ளிவிடும் தமிழ் விரிவுரையாளர்களும், செத்த பிணத்தை அடக்கஞ் செய்யாது நாற்றமெடுக்க விடும் முஸ்லிம்களும் வாழும் நாடுதானா தமிழ்நாடு?

அல்லது இத்தகைய சம்பவங்கள் எல்லாம் கதாசிரியர் களின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? எது சரி என்று எனக்கு வெளிச்சமாக் இல்லை.

நேற்று தொலைக்காட்சியிற் பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சண்டைப் படம்! வேண்டா வெறுப்புடன் தான் அதைப் பார்த்தேன்.

கதாநாயகன் சண்டையிடத் தொடங்கியபோது என்னுள்ளே விசித்திரமான ஒரு ஆசை பிறந்தது. தன் காலால் உதைத்தும், கைமுஷ்டியாற் குத்தியும் எத்தனை பேரைக் கதாநாயகன் வீழ்த்துகிறான் என்பதைக் கணக் கிடத் தொடங்கினேன்.

ஒருவர் பின் ஒருவராகக் கதாநாயகன் சரியாக முப் பத்து மூன்று பேரை வீழ்த்துகிறான்!

அவனது வீரத்தைக் கண்டு ஐந்தாம் ஆண்டிற் படிக்கும் என் மகன் கைதட்டி ரசித்தான்.

அவன் சின்னவன்! பரவாயில்லை.

ஆனால் இருபது வயது இளைஞர்களும் அந்தக் கேலிக் கூத்தை ரசித்து மகிழ்கிறார்களே. அதை என்ன என்பது? இதனாற் தான் இப்போது நான் படம் பார்ப் பதேயில்லை. வானொலியிற் சில சினிமாப் பாடல்களை ரசிப்பதோடு சரி.

சமீபத்தில் ‘செங்குருவி செங்குருவி, காரமடைச் செங்குருவி சேலைகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங் குருவி’ என்ற சினிமாப் பாடல் எனக்கு மிகவும் பிடித் திருந்தது. அந்தப் பாடலின் இசையும் பொருளும் என்னைக் கிறங்க வைத்தன. என் வாய் அப்பாடவை முணுமுணுத்தது. ஒருநாள் என் மூத்த மகன் சொன்னான்.

“அப்பா, இன்டைக்கு டெக்கிலே போட ஒரு படம் எடுத்து வந்திருக்கன்.”

“நான்தான் படம் பார்ப்பதில்லையே!” –

“இல்லப்பா, நீங்க புழுகிற ‘செங்குருவி’ என்ற பாடல் இந்தப் படத்திலதான் இருக்கு”

“அப்படியா? பார்த்தாற் போச்சு” என்றேன். படத்தைப் பார்த்தால் எனது அபிமானப் பாடலுக்கு ஒரு கூட்டம் ஆண்களும், பெண்களும் நடனமாடுகிறோம் என்ற நினைப்பிற் தேகப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

என் நினைவுகளோடு நடந்ததில், நான் கடையையும் தாண்டி வெகுதூரம் போய் விட்டேன்.

எதிர்த்த நகைக் கடைக்குள்ளே அவள் நின்று கொண் டிருந்தாள்!

நான் உற்றுப் பார்க்கிறேன். சந்தேகமில்லை. அவளே தான்!

இருபத்திரண்டு ஆண்டுகளின் முன்னே வண்ணக் கனவுகள் காணும் ‘ரீன் ஏஜ்’ஜில், எதிர் வீட்டில் அவளை ஒருநாள கண்டேன். அதன் பின்னர் மாலையில் – நான் கடற்கரைக்குப் போவதை நிறுத்திக் கொண்டேன. முன் விறாந்தையிற் கையிற் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அல்லது அவளுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். நாளடைவில் வாசிகசாலையில் அவளுக்காகவும் புத்தகங்கள் எடுத்து வருவேன். என் பகற்கனவு மனக்கொடிகள் அவளைச் சுற்றிப் படர்ந்த ன.

இரண்டு வருடங்களின் பின்னர், அவள் தந்தையா ருக்கு உத்தியோகம் மாற்றலாகியது. அத்தோடு அவளும் போய் விட்டாள். அவள் நினைவுகளும் படிப்படியாக என்னை விட்டுப் போய்விட்டன. இப்போது மீண்டும் அவளைக் காண்கிறேன் தன் நைலெக்ஸ் சாறிக்குள இப் போதும் அழகாகவே இருக்கிறாள்!

அவள் கடையை விட்டு இறங்கி வந்ததும் நான் அவளை நெருங்கக் கேட்கிறேன். “என்னைத் தெரிகிறதா?”

“தெரியாமல் என்ன?” என்று அவள் கேட்கையில் அழகு கொழிக்கிறது, அப்பேரிளம் பெண்ணிடம்.

“சுகமாயிருக்கிறீர்களா? சௌகரியமாக வாழ்கிறீர்களா?”

“ஓ! நல்ல சுகமாகவும் செழிப்பாகவும் இருக்கிறேன். மூத்த மகளும் அடுத்த பையனும் கனடாவில். அவருக்கும் நல்ல பிஸ்நெஸ். காரை அவர் கொண்டு போய்விட்டார். அதனாற்தான் நடந்து வந்தேன். நீங்கள் சுகமா? வாழ்க்கை எப்படி?”

“ஓ நானா? எனக்கும் ஒரு குறைவும் இல்லை. மூத்த மகன் அவுஸ்திரேலியாவில் இருக்கிறான். இரண்டாமவனும் போக இருக்கிறான்.”

“அப்படியா! சந்தோஷம். நான் இன்னோர் கடைக்குப் போக வேண்டியிருக்கிறது. மன்னியுங்கள். பிறகு சந்திப்போம்” அவள் அவசரப்பட்டாள்.

“இங்கே எங்கேயிருக்கிறீர்கள்?” நான் கேட் கிறேன்.

“நீங்கள் பழைய இடத்திலே தானே இருக்கிறீர்கள்?” என்று மட்டும் கேட்டுவிட்டு அவள் அவசர அவசரமாக நடந்து சனக் கூட்டத்துள் மறைந்தாள். நான் திகைத்து நின்றேன்.

என் காரியாலயச் சகா, என்னைக் கண்டு, “ஓ…. அந்தநாள் ஞாபகமா? பாவம், இப்போது அவள் கணவன் ‘இன்ரெடிக்ற்’ பண்ணப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறாள். தன் நகைகளை ஒவ்வொன்றாக விற்றுத்தான் வாழ்க்கையை ஓட்டுகிறாள், ஒரு சிறிய வாடகை வீட்டிலிருக்கிறார்.”

நான் அதிர்ந்தேன். என் மகன் அவுஸ்திரேலியாவி விருப்பது போலத்தான் அவள் மகனும் கனடாவிலிருக்கிறான்! எனக்குச் சிரிப்பு வந்தது!

ஒரு ‘கோல்ட் பிளேக’ பற்ற வைத்தால் இதமாக இருக்கும் போலத் தோன்றியது. சட்டைப்பையைத் துழாவுகிறேன். காசிருந்த தடம் கூட இல்லை .

நான் வீட்டை நோக்கித் திரும்பி நடக்கிறேன். வழியிலே நாடான் கடைக்குச் சென்றேன். அவனிடம் பழைய பேப்பர் விவகாரத்தைச் சொன்னபோது,

“சரி ஐயா, பையனை வீட்டுக்கு அனுப்பி எடுக்கிறன். இறாத்தல் பன்னண்டு ரூபா போடுவன். எத்தன இறாத்தல் இருக்கும் சார்”

“பதினைஞ்சு இறாத்தல் இருக்கும்” என்று விட்டு நடக்கையில், பழைய பேப்பர் விற்று வரும் நூற்றிச் சொச்ச ரூபாவில் நாளைக்குக் கோப்பியுண்டு. மீன்கறியும் இருக்கும் என எண்ணிக் கொள்கிறேன்.

– கணையாழி 1996

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email
வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *