பொய்யும் மெய்யும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,999 
 
 

மகாபலிபுரத்தை கால் கடுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, எட்டு மணிக்கு சென்னைக்குப் போகும் பஸ்சை பிடிக்க போய்க் கொண்டிருந்த போது, மீண்டும் கேட்டாள் ஜானகி…
“”ஏங்… அந்தக் கிழவி பொய் சொல்லி இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?”
களைப்பில் உறங்கிப் போன குழந்தையை, தோளில் போட்டு நடந்து கொண்டிருந்த நான், என்ன பதில் சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தேன். உண்மையைச் சொன்னால், அவளால் தாங்க முடியாது; அந்தக் கிழவியின் மேல், அப்படியொரு பரிதாபம் பெருகியிருந்தது அவளுக்கு.
அன்று, மகாபலிபுரம் போவது என்பது சட்டென்று எடுத்த முடிவுதான். அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி…
பொய்யும் மெய்யும்!“குழந்தையை எங்காவது அழைச்சுகிட்டு போகணுங்க. அக்கம் பக்கத்துல குடும்பத்தோடு, “பிக்னிக்’ போறதை பார்த்து, நம்ம குழந்தை ஏங்கிப் போறான். நாம, அவனை எங்கேயும் அழைச்சிட்டுப் போய் காட்றதில்லை; மகாபலிபுரத்துக்காவது ஒரு முறை கூட்டிட்டு போகணும்…’ என்று.
— அது, குழந்தையின் ஆசையில்லை; ஜானகியின் ஆசை என்று தெரியும். எதையும் நேரடியாக கேட்க மாட்டாள்; குழந்தை கேட்டதாகத்தான் சொல்வாள்.
மனைவி, குழந்தையோடு வெளியில் போக, வர எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன! பார்க்கும் உத்தியோகம் அதற்கு இடம் கொடுப்பதில்லை. நைட் ஷிப்ட், ஓவர் டைம் என்று தொடர்ந்து பார்த்தே ஆக வேண்டிய நிர்பந்தம். அபூர்வமாக, “பிரேக்’ கிடைக்கும் போது மட்டும், அவதி, அவதியாக எங்காவது இழுத்துக் கொண்டு போய் வருவதுதான்; அப்படித்தான் இன்றும் அமைந்தது.
“நீங்க… எப்பவும் இப்படித்தான். திடீர்ன்னு பேன்ட்டை மாட்டிகிட்டு நிப்பீங்க. உங்களப் போல சட்டுன்னு கிளம்பிட முடியுமா? அடுப்பில் அரிசி வெந்து கொண்டிருக்கு; இனிமேதான் சாம்பார், ரசம், பொரியல் செய்யணும்; குழந்தையை ரெடி பண்ணணும். வீட்ல எல்லாம் போட்டது, போட்ட இடத்துல கிடக்குது…’ என்று அங்கலாய்த்தாள்.
“சாப்பாட்டை வெளியில பார்த்துக்குவோம்; மத்த வேலைகளை அப்புறம் கவனிக்கலாம். இப்ப கிளம்பினால்தான் போயிட்டு திரும்ப சரியாயிருக்கும்…’ என்றதும், அவள் அடுப்பை அணைத்து<, பாத்ரூம் ஓடி, முகம் கழுவி, சேலை மாற்றி, பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வந்து, சட்டை போட்டு ரெடியானாள்.
இப்படி எங்காவது போனால், விருப்பப் பட்டதை வாங்க வேண்டுமென்பதற்காக சேர்த்து வைத்திருந்த, 300 ரூபாய் பணத்தை, அஞ்சறைப் பெட்டியிலிருந்து எடுத்து, பர்சில் வைத்துக் கொண்டாள்.
“இதை உங்களுக்கு தர மாட்டேன்…’ என்றாள்.
அவள் என்ன வாங்குவாள் என்று தெரியும்.
குழந்தைக்கு வாங்கிய பொம்மையை விட, அவள் தனக்கு வாங்கிய பொம்மைகள் தான் வீட்டில் அதிகம்.
வீட்டிலிருந்து கிளம்பி, பஸ் பிடித்து மகாபலிபுரம் போய்ச் சேர்ந்த போது, உச்சி வெயில். சுமாரான ஓட்டல் ஒன்றில் சாப்பாட்டை முடித்து, வெளியில் வந்து டிக்கெட் வாங்கும் இடத்துக்குப் போய், வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி திரும்பினால், ஜானகியைக் காணவில்லை.
சுற்று முற்றும் பார்த்துவிட்டு, எதிரிலிருந்த விற்பனை மையத்துக்குள் நுழைந்து பார்த்தால், ஒரு கடைமுன் நின்று கிளிஞ்சல் சரம் ஒன்றை விலை பேசிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், அசட்டுச் சிரிப்பு…
“இது ரொம்ப நல்லாயிருக்கு இல்லையா?’ என்றாள்.
அவள் கையிலிருந்த பை நிறைந்திருந்தது.
எல்லாம் கிளி, குருவி, பிள்ளையார், பனையோலை விசிறியாகத்தான் இருக்கும்.
“வந்த வேலை முடிஞ்சு போச்சு போலிருக்கு. இப்படியே பஸ் ஏறிடலாமா மெட்ராசுக்கு…’ என்று கடுமையாக சொன்னதும், “இந்த மாலைய வச்சிரு… அப்புறம் வாங்கிக்கிறேன்…’ என்று கடைக்காரனிடம் சொல்லிவிட்டு, பின் தொடர்ந்தாள்.
நான், குழந்தையுடன் முன்னால் நடந்தேன்.
ஐந்து ரதம், லைட் ஹவுஸ், அர்ஜுனன் தபசு… பார்த்துவிட்டு பொடி நடையாய் கடற்கரை கோவில் வரை போய், திரும்பிய போது, மாலை, 6 மணி…
“பீச்சுக்கு போகணுமா?’ என்றேன்.
“பின்னே…’ என்றாள்.
கடற்கரைக்கு போகும் மணல் பாதை குறுகலாக இருந்தது. ஒரு புறம் கம்பி வேலி, எதிர்ப்பக்கம் வரிசையாக கடைகள். அவற்றில் விதம், விதமாக பொருட்கள்.
கண்களால் அவைகளை பருகிய படி நடந்தாள் ஜானகி.
கடைகளைக் கடந்ததும்… கடற்கரை பெருவெளி காட்சியாயிற்று.
ஐஸ்க்ரீம் வண்டிக்காரன் குறுக்கிட்டான். ஜானகிக்கும், சுரேஷûக்கும் வாங்கினேன்…
ஜானகியின் பார்வை எங்கோ போவதை கவனித்தேன்.
அங்கே, கம்பி வேலி ஓரமாக ஒரு கிழவி அப்போதுதான் கடை விரித்துக் கொண்டிருந்தாள். உலர்ந்த சருகு போல ஒட்டி, வாடிப் போன தேகம். முகமெல்லாம் சுருக்கம்; கண்கள் உள் வாங்கியிருந்தது. எண்ணெய் காணாத பஞ்சாய்ப்போன தலை முடியை கயிறு போட்டு கட்டியிருந்தாள். நைத்து போன சேலை… அதிலும், அங்கங்கே ஒட்டு… பரிதாபமாக இருந்தது தோற்றம்.
பழைய கோணியை மணலில் விரித்து, கொண்டு வந்த அட்டைப் பெட்டியிலிருந்த பொருட்களை எடுத்து பரப்பினாள்; ஒரு பொருளும் விசேஷமாயில்லை. ரெண்டு சோப்பு டப்பாக்கள், சில கிளிஞ்சல் பொம்மைகள், மணிமாலைகள் என்று சொற்பமான பொருட்கள். நூறு ரூபாய் அளவுக்கு கூட இருக்காது மொத்தம்.
“பாவம்ங்க… இதுல என்ன லாபம் வந்துடப் போகுது. இந்த வயசான காலத்துல, ஆதரிக்க ஆள் இல்லையோ என்னமோ…’ என்று வருத்தப்பட்ட ஜானகி, நேரே கிழவியிடம் போய் கையிலிருந்த சொச்ச ரூபாய்க்கு ஒரு பொம்மை வாங்கினாள். திரும்பிப் போக பஸ்சுக்கு பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.
கடல் நீரில் கால் நனைத்து, மணலில் உட்கார்ந்து, கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு திரும்பும் போது, எங்கும் விளக்குகள் ஒளிரத் துவங்கியது; கூட்டமும் அதிகமாகி விட்டது. பஸ் பிடிக்க கூட்டத்தை ஊடுருவிக் கொண்டு நடந்த போது தான், அந்த இரைச்சல்…
அந்தக் கிழவிதான்…
வட மாநில குடும்பம் ஒன்று அவளைச் சுற்றி நின்று சப்தம் போட்டுக் கொண்டிருக்க… அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கிழவியும் கத்திக் கொண்டிருந்தாள். என்னவென்று பார்க்க, எனக்கு முன் ஜானகி விரைந்தாள்.
நான் அருகில் போய் கேட்டேன்…
“பாருங்க தம்பி… பணமே கொடுக்காம பொருளை எடுத்துக்கிட்டு, நான் கொடுத்துட்டேன்… சில்லரை கொடுன்னு வம்பு பண்றாங்க. இவங்க சீண்டி விளையாடறதுக்கு இங்க நான்தான் கிடைச்சனா?’ என்றாள் கிழவி.
எனக்கு தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் அவர்களை விசாரித்தேன்.
“இந்த மாலை, 20 ரூபாய் சொல்லிச்சு; நூறு ரூபாய் கொடுத்தேன். சில்லரை கொடுக்காம வேற, வேற ஆளுங்ககிட்ட வியாபாரம் செய்துகிட்டு, எங்களை கண்டுக்காத மாதிரி இருந்தது. பாக்கி கொடுன்னு கேட்டால், சப்தம் போடுது…’ என்றான் அந்த ஆள்.
அவனைப் போலவே, அவன் வைத்திருந்த பர்ஸ் ரொம்ப புஷ்டியாக இருந்தது. கூட்டம் கூடி விட்டது. கிழவி எழுந்து புடவையை உதறி, சுருக்கு பையை பிரித்துக் காட்டி, கூடையைக் கவிழ்த்து… “பாருய்யா… நல்லா பாரு… எங்கயாவது நூறு ரூபாய் நோட்டு இருக்கான்னு…’ என்று தகரக் குவளையையும் சாய்த்தது. அதிலிருந்து இரண்டு, 10 ரூபாய் தாள்களும், சில்லரைகளும் சிதறியது.
எங்கிருந்தோ வந்த உள்ளூர் ஆசாமிகள், கிழவிக்காக பரிந்து பேசினர்…
“சேட்டு… நீ கொடுக்க மறந்திருப்ப… நல்லா பாரு… <உன் பர்ஸ்லயே இருக்கும் பாரு… கிழவி நல்ல கிழவி… பொய் சொல்லாது!’
“அப்ப நாங்க பொய் சொல்றோமா? வேணும்ன்னா பிச்சையாக வச்சிகட்டும்; நாங்க கொடுக்கலைன்னு சொல்லாதீங்க!’
“அப்படின்னு நினைச்சுகிட்டு போங்களேன்… உங்க மாதிரி ஆளுகளுக்கு பணத்துக்கா குறைச்சல்… மல்லுகட்டிகிட்டு நிக்கறீங்களே… போங்க… போங்க!’ – உள்ளூர் ஆசாமிகள்.
“சீட் பண்றீங்க… போலீசுல கம்ப்ளெய்ன்ட் பண்ணுவோம்…’ என்றார், வடக்கத்திக்காரர்.
“ஆமாம்… அங்கங்க கோடிக்கணக்குல அபேஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க. அதை கேட்கறதில்லை ஒருத்தரும். வந்துட்டாரு கிழவிகிட்ட வம்பு பண்ண…’ என்று ஆளுக்கொன்றாய் பேச, பேச தெம்பில்லாதவள் போல கிழவி, குத்துக்காலிட்டு உட்கார்ந்து புலம்பினாள்.
ஒரு வழியாக அவளை திட்டிக் கொண்டே, அந்த குடும்பம் தங்கள் காரை நிறுத்தியிருக்கும் ஸ்டாண்ட் நோக்கி நடக்க, கூட்டம் உந்தித்தள்ள நாங்களும் நகர்ந்து வந்து விட்டோம்.
ஜானகி திரும்பி, திரும்பி பார்த்தபடி நடந்தாள்.
இவ்வளவு தூரம் வந்து, பணம் செலவழித்து, சுற்றிப் பார்த்து மகிழ்ந்த மனநிறைவை எல்லாம் வழித்துப் போட்டுவிட்டு, அந்த கிழவிக்காக வருந்திக் கொண்டிருந்த ஜானகியை எப்படி சமாதானப் படுத்துவது என்று யோசித்தேன்.
உண்மையைச் சொன்னால், அவளால் தாங்க முடியாது.
“கிழவிக்கு பிழைப்பே அதுதான்… பரிதாபமான தோற்றம் அவள் பலம். இருட்டும் வேளையில் கடை விரிப்பது ஒரு யுக்தி. ரூபாய் நோட்டுகளை மறைக்கலாம்; மாற்றி கொடுக்கலாம். கூட்ட நெரிசலான நேரம். நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்க யாருக்கும் பொறுமையிருக்காது. வீடு திரும்பும் அவசரம், ஒழியுது என்று விட்டு விடுவர். அவர்கள் போனதும், பணத்தை எடுத்துக் கொண்டு, நடையை கட்டும்; நல்ல தந்திரம்தான். இதற்கு, கவுரவமாய் பிச்சை எடுக்கலாம்…’ என்று மனம் கசந்தேன். இதைச் சொன்னால், ஜானகி நம்புவாளோ, இல்லையோ, நிச்சயம் மனம் வருந்துவாள்.
அதற்காக ஒரு பொய் —
“”அந்த பாட்டி… நிச்சயம் பொய் சொல்லியிருக்காது. பொய் சொல்லி சம்பாதிக்கிற சாமர்த்தியம் இருந்தால், ஏன் அந்தக் கிழவி அத்தனை வறுமையில் இருக்கணும். நாலு காசு சம்பாதிச்சு… வயிறு நிறைய சாப்பிட்டு, நல்ல சேலை கட்டி, கொஞ்சம் பெரிய கடை போட்டு வியாபாரம் செய்யுமே… பொய் பேசத் தெரியாதவங்க, பேசாதவங்கதானே ரொம்ப துன்பப்படறாங்க… அந்தக் காலத்துல அரிச்சந்திரனாகட்டும், இந்த மூதாட்டியாகட்டும்,” என்றேன்.
ஜானகி முகத்தில் மலர்ச்சி.
“”ஆமாங்க… நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்,” என்றாள் மனம் சமாதானமடைந்தவளாய்; எனக்கும், அதுதான் வேண்டியிருந்தது.
அப்போது அந்த சம்பவம் நடந்தது.
“”அய்யா நில்லுங்க… அய்யா சாமி நில்லுங்க!” என்று பலவீனக் குரலில் கத்திக் கொண்டு, ஓட்டமாக வந்தாள் அந்த கிழவி.
ஏன் வருகிறது என்று அந்த வட மாநில குடும்பத்தார் போல, நாங்களும் நின்று பார்த்தோம்.
கிழவி… அவர்களிடம் நூறு ரூபாய் நோட்டை கொடுத்து, “”அய்யா… உங்க பணம் இதுதானா பாருங்க… சாமி சத்தியமா நான் பொய் சொல்லலை. வாங்கும் போது கை தவறி விட்டிருக்கேன். அது, காத்துல தள்ளி போய், கம்பி வேலியில சொருகிகிட்டிருந்திச்சி. சுத்துமுத்தும் தேடினப்ப தென்பட்டுது. இது, உங்களுடைய தாய்தானிருக்கும்… வச்சிக்குங்க… சாமி… வச்சிக்குங்க!” என்று சொன்னாள்.
அவர்களைப் போலவே, நாங்களும் ஆச்சரியத்தில் நின்றோம். கிழவி தொடர்ந்தாள்… “”பாடுபட்ட பணமே சமயத்துல ஆபத்துக்கு உதவறதில்லை. பொய் சொல்லி, வந்த பணத்தால் என்ன ஆகும்; இன்னும் கேடுதானே வரும். இந்த கடலையும், கல்லையும் நம்பி, 50 வருஷமா வாழறேன். இது, என்னை வசதியா வைக்கலைனாலும், நல்லவளாதான் வச்சிருக்கு. அந்த பேரோடு செத்துப் போகணுங்கறதுதான் என் ஆசை. ஒரு நிமிஷத்துல என்னை திருடின்னுட்டீங்க!” என்று புலம்பியபடி திரும்பி நடந்தாள்.
என்ன நினைத்தாளோ, அந்த வட மாநில குடும்பத்துப் பெண்… கிழவியைக் கூப்பிட்டு, ஏதேதோ சமாதானம் சொல்லி, அந்தப் பணத்தை அவளையே வைத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்தி கையில் திணித்தாள்.
மெய் சிலிர்த்தது.
அதே நேரம் உண்மை அறியாமல், முதியவளைப் பற்றி ஏதேதோ தவறாக கற்பனை செய்ததற்காக… மானசீகமாக தலை கவிழ்ந்தேன் நான்.

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *