சுந்தரேசன்-காமாட்சி தம்பதியினருக்கு அன்றைய தினசரியில் வந்திருந்த விளம்பரம் அதிர்ச்சியளித்தது. அந்த விளம்பரத்தினால் பாதிக்கப் படப்போவது தாங்கள்தான் என்கிற உண்மை அவர்களை உறுத்தியது.
ஊஞ்சலில் அமர்ந்து அந்த விளம்பரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேசன், “காமாட்சி” என்று தன் மனைவியை அழைத்தார்.
கையில் காபியுடன் அவரை நெருங்கிய காமாட்சி “இதுக்காக ஏன்னா இப்படி இடிஞ்சு போயிட்டேள், இந்த விளம்பரம் வந்ததே நமக்குத் தெரியாது என்பது போல் மெத்தனமாக இருந்து விட்டால் என்ன?” என்று வினவினாள்.
சுந்தரேசனுக்கு அது நியாயமாகப் படவில்லை. “போடி பைத்தியம், நாமே இவ்வளவு ஆசையும் அன்பும் அதனிடம் வெச்சிருக்கோமே, அதை சின்ன குட்டியிலேர்ந்து வளர்த்து ஆளாக்கிய அவாளுக்கு எப்படியிருக்கும்?… என்றவாறு ஊஞ்சலை விட்டு எழுந்து சென்றார்.
இனிமேல் அவரைத் தடுக்க தன்னால் முடியாது என்ற உண்மை காமாட்சிக்குப் புரிந்ததும் அவள் முகம் வாடியது. அந்த விளம்பரத்தை மீண்டும் ஒருமுறை படித்தாள்
_________________________________________________________
காணவில்லை
எங்களுடைய சிறிய அழகான வெள்ளை நிறமுடைய
பொமரேனியன் எங்கோ வழி தவறி சென்று விட்டது.
அதன் பிரிவு எங்களை மிகவும் பாதித்துள்ளது. கண்டு
பிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் தரப்படும்.
ரம்யா ரமணன்
ரமணன் 9900006900
____________________________________________________________
மூன்று வாரங்களுக்கு முன்பு, இருட்டு வியாபிக்கும் ஒரு மாலை வேளையில் அந்த அழகான பொமரேனியன் சுந்தரேசன்-காமாட்சி தம்பதியினர் வீட்டுத் தோட்டக் கதவின் வழியாக உள்ளே நுழைந்தது.
திருமணமாகி முப்பது வருடங்களாகியும் குழந்தையில்லாத அவர்களுக்கு, குறிப்பாக காமாட்சிக்கு அந்த அழகான குறுகுறுத்த கண்களையுடைய பொமரேனியனைப் பார்த்ததும் சந்தோஷம் பீரிட்டது. அந்த பணக்கார தம்பதியினர் அதை ஒரு குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்தினர்.
காமாட்சி அதற்கு ‘ரோஸி’ என்று பெயரிட்டு, வேளா வேளைக்கு அதற்கு பால், பிஸ்கெட், படுத்துக்கொள்ள சிறிய மெத்தை, விளையாட பிளாஸ்டிக் பந்து, குளிப்பதற்கு சிறிய வாளி, வெது வெதுப்பான வெந்நீர் என்று அமர்க்களப் படுத்திவிட்டாள்.
குழந்தையில்லையே என்று அடிக்கடி தன்னிடம் ஆதங்கப் பட்டுக்கொண்டிருந்த காமாட்சி ரோஸியின் பிரவேசத்திற்குப் பிறகு சந்தோஷத்துடன் வளைய வருவதைப் பார்த்த சுந்தரேசனுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டதில் வியப்பில்லை.
ஆனால் –
இன்று வந்த விளம்பரத்தைப் பார்த்ததும், காமாட்சி ஆடித்தான் போனாள்.
ரோஸியைப் பிரிவது தனக்கு எவ்விதம் சாத்தியமாகும் என்ற கவலை அவளை ஆட்கொண்டது.
திருமணமான இரண்டு மாதத்திற்கெல்லாம் ரம்யாவும், ரமணனும் ஊருக்கு வெளியே வளர்ந்து வரும் அந்த புதிய காலனியில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகையில் அந்தப் பெரிய வீட்டில் குடியேறியபோது, ரம்யாவுக்கு அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க போரடித்தது.
அவளுடைய தனிமையை தவிர்ப்பதற்காக ரமணன் அந்த அழகிய பொமரேனியன் நாய்க்குட்டியை வாங்கி வந்தான். ரம்யா அதற்கு ரெக்ஸி என்று பெயரிட்டு அதை மாய்ந்து மாய்ந்து கொஞ்சினாள். அதைக் கொஞ்சுகிற மாதிரி என்னையும் கொஞ்சேன் என்று கூட ஒருமுறை ரமணன் ரம்யாவிடம் செல்லமாகச் சிணுங்கினான்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, ரமணன் ரம்யாவை அவளது தலைப் பிரசவத்திற்கு திருநெல்வேலிக்கு அனுப்பியபோது அவள் ரெக்ஸியைப்
பிரிய மனமில்லாது பிரிந்தாள்
ஆனால் தற்போது –
பிரசவம் முடிந்து ஊரிலிருந்து திரும்பி வந்து ரெக்ஸி எங்கே என்று அவள் கேட்டால் தான் என்ன பதில் சொல்வது என்று குழம்பி கடைசியாக தினமலரில் அந்தச் சிறிய விளம்பரத்தை அவள் பெயரையும் சேர்த்துக் கொடுத்தான் ரமணன்.
இப்போது – தன்னுடைய விளம்பரத்தின் பயனாக சுந்தரேசன் தன் மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது சந்தோஷமுற்றான்.
வரும் ஞாயிறு அவர் வீட்டுக்கு வந்து பொமரேனியனை வாங்கிச் செல்வதாகச் சொன்னான்.
ஞாயிறு காலை.
தனது வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் சுந்தரேசன் வீட்டைக் கண்டுபிடிப்பதில் ரமணனுக்கு சிரமமேற்படவில்லை.
இவ்வளவு தூரத்தைக் கடந்து ரெக்ஸி எப்படி தனியாக ஓடிப்போயிற்று என்பதை நினைக்க அவனுக்கு வியப்பாக இருந்தது.
வீட்டின் முன்புறத் தாழ்வாரப் புல்வெளியில் ஒரு பத்திரிக்கையை படிக்த்துக் கொண்டிருந்த சுந்தரேசனிடம், ரமணன் தன்னையும் தான் வந்த நோக்கத்தையும் அறிமுகப் படுத்திக் கொண்டபோது அவர் இவனை புன்னகையுடன் வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார்.
வீட்டினுள் செல்லும்போது ரெக்ஸி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை ரமணன் கண்ணுற்றான். ஆனால் அது இவனைக் கவனிக்கவில்லை.
காமாட்சியிடம் ரமணனை அறிமுகப் படுத்தினார். தனக்கு முப்பது வருடங்களாக குழந்தை இல்லாததையும் தற்செயலாக தன் வீட்டில் நுழைந்த ரோஸியிடம் (ரெக்ஸி) தன் மனைவி உயிரையே வைத்திருப்பதையும், அதன் வரவால் தன் மனைவிக்கு கிடைத்த அளப்பரிய சந்தோஷத்தையும் உடைந்த குரலில் சொன்னார்.
கணவர் பேசும்போது அமைதியாக சோகம் கப்பிய முகத்துடன் அருகில் நின்று கொண்டிருந்த காமாட்சியின் முகத்தைப் பார்த்தபோது ரமணனுக்கு மனதைப் பிசைந்தது.
தான் ரெக்ஸியை எடுத்துப் போனால் அதனால் காமாட்சியம்மாளுக்கு ஏற்படப்போகும் பாதிப்பை உணர்ந்தான்.
ரெக்ஸியிடம் அன்பு செலுத்துகிற ரம்யா, நல்ல படியாகப் பிரசவம் முடிந்து ஊரிலிருந்து கைக் குழந்தையுடன் திரும்பி வந்தவுடன், தன் குழந்தையின் மேல் உள்ள அளவிட முடியாத பாசத்தின் முன்பு, ரெக்ஸியின் நிரந்தரப் பிரிவு ஒன்றும் அவளை அவ்வளவாகப் பாதிக்காது என்று நினைத்தான்.
மேலும், தான் உண்மையை விளக்கிச் சொன்னால், தன்னுடைய இந்தச் செயலை ரம்யா நிச்சயம் அங்கீகரிப்பாள். அப்படியே தேவைப்பட்டால் வேறு ஒரு பொமரேனியன் வாங்கிக் கொண்டால் போயிற்று என்று முடிவு செய்தான்.
தவிர, இவர்களுக்கு தான் அவ்விதம் ரெக்ஸியை விட்டுக் கொடுக்கப் போவதை மறைத்து, அந்த பொமரேனியன் தன்னுடையது இல்லை என்று அறிவித்துவிடும் முடிவையும் எடுத்தான்.
சுந்தரேசனை நோக்கி, “சார், பொதுவாக எல்லா பொமரேனியன்களும் தும்பைப் பூ போன்ற வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். இது என்னுடையதுதானா என்று தெரிந்துகொள்ள நாம் அதைப் பார்த்து விடுவது நல்லது” என்றான்.
மூவரும் எழுந்து தோட்டத்திற்குச் சென்றனர்.
முன்னங்கால்களால் தோட்டத்து ஈரமனலைத் தோண்டியபடி மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்த ரெக்ஸி, தாழ்வாரத்திற்கு வந்த இவர்களை கவனிக்கவில்லை.
தான் ரெக்சி என்று அழைத்தால் அது எங்கே தன்னிடம் ஓடிவந்து விடுமோ, அல்லது ரோஸி என்ற அதன் தற்போதைய பெயரால் அழைத்தால் திரும்பிப் பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொள்ளுமோ என்று அஞ்சிய ரமணன் இப் பெயர்களை மறைத்து தன் குரலை சற்று மாற்றிக் கொண்டு. “ஜூலி, ஜூலி” என்ற வேறு ஒரு பெயரால் அதை அழைக்க, அது இவர்கள் இருந்த பக்கமே திரும்பவில்லை.
“சார், இது என்னுடைய ஜூலி இல்லை. வேறு ஏதோவொரு பொமரேனியன். ஐ திங்க் ஐ ஹாவ் மிஸ்டேக்கன்…தவறுக்கும் இடைஞ்சலுக்கும் மன்னிக்க வேண்டும்” என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டான்.
அந்த வயதான தம்பதியினர் முகம் மலர இவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். ரெக்ஸியை அந்த தம்பதியினருக்கு விட்டுக் கொடுத்த பெருந்தன்மையுடன் உள்ளம் பூரிக்க ரமணன் தன் வீட்டையடைந்தான்.
வீட்டையடைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ரமணனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில், “ஆண் குழந்தை. தாயும் சேயும் நலம்” என்றிருந்தது.
சந்தோஷத்தால் உடல் ரோமங்கள் சிலிர்க்க, ரம்யாவையும் தன் அருமை மகனையும் பார்ப்பதற்கு, திருநெல்வேலி புறப்பட ஆயத்தமானான்.