பொன்னு விளையுற பூமி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 3,609 
 
 

இந்த முறை ஊரில் உள்ள நிலத்தை விற்று விடுவது என்று தீர்மானித்து விட்டேன். ஜோதியின் பிடுங்கல் தாளாமல். “ என்னங்க உங்க பிரெண்டு எல்லாம் சொந்த வீடு கட்டி , கார் வாங்கி பந்தாவா போய்கிட்டிருக்காங்க.. இன்னமும் வாடகை வீட்டை கட்டிகிட்டு அழ வேண்டியதாயிருக்கு.. கொஞ்ச லோன் போட்டு மிச்சத்துக்கு ஊர்ல இருக்கிற நிலத்தை வித்துடுங்களேன். அங்க ஷூ கம்பெனி ஒண்ணு ஆரம்பிக்க போறாங்கன்னு பக்கத்துல இருக்கறவங்களெல்லாம் நிலத்தை தந்துட்டாங்களாம். இன்னமும் உங்கப்பாதான் வீம்பா வச்சிகிட்டிருக்கார்..” வேணும்கிறது அவருக்குதான் பென்ஷன் வருதே பேசாம எப்படியாவது விக்க பாருங்க..

தினம் இதே புராணம் பாடுவாள். உதாரணத்துக்கு சேகரையும், பிரகாஷையும் கம்பேர் பண்ணி சொல்லி கொண்டே சண்டை.

ஒரு சமயம் போல் இருக்காது. எனக்கும் பொறுமை இழந்துவிட்டால் வெடிப்பேன். “ ஆமாடி அவனுங்க பொண்டாட்டி சாமர்த்தியக்காரிங்க போய் போய் ஆத்தா வீட்லருந்து அள்ளிகிட்டு வந்துடறாளுங்க.. அவனுகளுக்கு என்ன செலவு இருக்கு.. சம்பளத்தை அப்படியே சேர்த்து வைக்கிறானுங்க.. நான் என்ன உன்ன இது வாங்கிட்டு வா.. அது வாங்கிட்டு வான்னா சொல்றேன்.. ?”

“ ஓஹோ.. ஐயாவுக்கு மாமியார் வீட்லர்ந்து வாங்கிட்டு வரனுமாக்கும்.. எங்க வீட்ல ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சுதானே கட்டிட்டு வந்திங்க.. இப்ப எதுக்கு குத்தி காட்டறீங்க..” உடனே ஒப்பாரிதான்.

“ ஹேய்.. நானா கேக்கறேன்.. சும்மா சீண்டிகிட்டே இருந்தா அவனால எப்படி முடியுதுன்னு சொன்னேன். இத பாரு வருமானத்துக்கு தகுந்தா மாதிரிதான் வாழ முடியும். வீடு வாங்கலாம் உடனே முடியாது..”

அவளை அடக்கி வந்தாலும், வீட்டு ஓனர் வருஷத்துக்கொரு முறை ஏற்றிக் கொண்டே போகும்போது.. மாச சம்பளத்தில் ஒரு தொகை போகும் போது வருத்தமாகதான் இருந்தது. எப்படியாவது கஷ்டப்பட்டு கட்டிட்டா நிம்மதியா இருக்கலாம, என் வாரிசுகள் சுமன் ஆறாவதும், காவ்யா இரண்டாவதுமாக படிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் அவர்களுக்கு செலவு செய்யவே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

பொங்கலுக்கு என்றுதான் வருஷத்திற்கொரு தரம் ஊர்ப்பக்கம் போக முடிகிறது. பேரப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அம்மாவும், அப்பாவும் புறப்பட்டு பத்து நாட்கள் தங்கிவிட்டு போவார்கள். அப்போதெல்லாம் குழந்தைகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். இங்கேயே இருக்க சொன்னால் மறுத்து விடுவார் அப்பா, “ அங்க என்னப்பா குறை சொப்பு சாதம் பொங்கிட்டு உங்கம்மா பொழுதண்ணிக்கும் எங்கூடதான் வம்பு அளந்திட்டிருப்பா.. சாயங்காலமானா சிவன் கோயில் ஒரு நடை போய்ட்டு வந்துட்டா பொழுது போயிடுது..”

அப்பா கிராமத்து பள்ளி கூடத்தில் வாத்தியாராக இருந்து ரிடையர்டு ஆனவர். தாத்தா விவசாயம் பார்த்துதான் கஷ்டப்பட்டு அப்பாவை படிக்க வச்சிருக்கார். அப்பாவும் எனக்கு நினைவு தெரிந்தும் வயல் வேளைகள் செய்தது நினைவிருக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து வயலுக்கு தண்ணி காட்ட போய்விடுவார். எட்டு மணிக்கு வந்து சட சடவென்று குளித்து விட்டு அம்மா தயாராக கட்டியிருக்கும் கேரியரை சைக்கிளில் மாட்டிக் கொண்டு கிளம்பி என்னையும் அழைத்து கொண்டு கிளம்பி விடுவார்.

தவிர்க்க முடியாமல் சில சமயங்கள்ல அப்பாவோட வகுப்பில என்னையும் போட்டுருவாங்க.. அப்பதான் அப்பாவை பார்த்து பிரமிச்சேன். தமிழ் இலக்கணத்தை இத்தனை சுலபமா அப்பா மாதிரி யாரும் சொல்லி தரமுடியாதுன்னு.

வாத்தியார் புள்ள மக்குன்னு சொல்வாங்க.. நான் மக்கா இல்லாட்டியும் சுமாராதான் படிச்சேன். அப்பா என்னை அதற்காக திட்டியதே இல்லை. என்னால் என்ன முடியுமோ அதை படிக்க வைத்து வேலைக்கு போன பிறகு கல்யாணமும் செய்து வைத்தார். “ சரவணா உனக்கு பணக்கார பொண்ணா, சம்பாதிக்கிற பொண்ணா பார்க்கலைன்னு வருத்தப் படாதே.. உங்கம்மா வீட்லர்ந்து நான் எதுவுமே கேட்கலை.. அவ சிக்கனமா குடும்பம் நடத்தின பாங்கு இப்படி உன்னை படிக்க வச்சி உங்க அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிஞ்சது. “ என்பார்.

பஸ்ஸை விட்டு இறங்கி என் வீட்டிற்கு நடந்தோம். முன் போலில்லை செம்மண் புழுதியில்லாமல் தார் ரோடு போட்டிருந்தார்கள் . எங்கள் வீட்டிற்கு செல்லும் முனையில் அந்த புது வீடு பிரமாண்டமாய் இருந்தது. அடடே இங்க பானைக்காரம்மாதான இருந்தாங்க.? ஒருவேளை இடத்தை யாருக்காச்சும் வித்துட்டு போயிருப்பாங்களோ என்று யோசிக்கும் போதே பானைக்காரம்மா எதிர் பட்டாள்.

“அடடே என்னப்பா நல்லாயிருக்கியா ? நம்ம வீடுதான் புள்ளைங்கள்ளாம் படிச்சி நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. பெரியவனுக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கேன். கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கிறேன் அவசியம் வரனும்..”

பாவம் கணவனில்லாமல் கஷ்டபட்டு பானை வேலை செய்தே பிள்ளைகளை படிக்க வைத்தாள்.

வீட்டிற்கு சென்றதும் அம்மா எனக்கு பிடித்ததாய் சமைத்து வைத்திருந்தாள். அப்பா குழந்தைகள் வைத்து கொள்ள தோட்டத்திலிருந்து மருதாணி பறித்து வந்தார். சாப்பிட்டு முடித்து பொதுவாக பேசிவிட்டு நிலத்தை பற்றி பேச்செடுத்தேன்.

“அப்பா.. நம்ம நிலம் பயிரில்லாம சும்மாதானே கிடக்கு.. பாக்டரிக்காரங்க நல்ல விலைக்கு கேட்கறாங்களாமே கொடுத்துடலாமில்ல..”

அப்பா கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்துவிட்டு, “ நீ சொல்றது வாஸ்தவம்தாம்பா.. நிலம் சும்மாதான் கிடக்கு. என் அப்பா காலத்தில மூட்டை மூட்டையா நெல் குவிச்சதும், கூடை கூடையா களாக்காய் பறிச்சதும் நினைச்சு பார்த்தா கனவா இருக்கு.. இப்ப எங்க வயக்காட்டு வேலைக்கு ஆளும் கிடைக்காம என்னால ஒத்தையா பார்க்க முடியாம விட்டுட்டேன்.. சும்மா கிடக்கிறது கஷ்டமாயிருக்கு.. அதுக்காக பயிரு விளைஞ்ச மண்ணில் பாக்டரி பார்க்க மனசு எடம் கொடுக்கலேப்பா.. ஒரு பொருள் ஒரு காலத்துல உபயோகமா இருந்து ஒரு நேரத்துல பிரயோஜனப் படலைன்னா அது நமக்கு வேண்டாததா ஆகிடறது அந்த பொருளோட தப்பா. பிரயோஜன படாத மாதிரி நினைச்சுக்கறது நம்ம மனசுதான். எங்கூட கைகொடுக்க ஒரு ரெண்டு ஆள் கிடைச்சாக் கூட போதும்.. அன்னலட்சுமி நிறைஞ்சி கொட்டுவா.. ஆனாலும் நீ கேட்டு நான் எதுவும் மறுத்ததில்லை.. யோசிச்சி ரொம்ப அவசியம்னா.. உன் விருப்பபடி செய்..!”

சரிப்பா.. பார்க்கலாம். நான் இளங்கோ வீடு வரை போய்ட்டு வர்றேன். என் நண்பனை பார்க்க கிளம்பினேன்.

“சரவணா அப்படியே வரும்போது புதுப்பானை வாங்கிட்டு வாப்பா. முன்னல்லாம் நம்ம நெலத்து புது அரிசிதான் பொங்க வைப்போம். ஆச்சு ஏழெட்டு வருஷமா ஒண்ணுமில்ல.. “

நண்பனுடன் பேசிவிட்டு அம்மா சொன்னது ஞாபகம் வந்ததால் கடை பக்கம் கிளம்பினேன். “ தம்பி புது பானை வாங்கிட்டு போப்பா..” பானைக்காரம்மாவின் குரல் கேட்டதும் திரும்பினேன். எழுபதுக்கு மேல் பானைகளை அடுக்கி வைத்திருந்தாள். சுற்றி கூட்டம் வேறு. கொஞ்ச நேரம் நின்றிருந்து ஒரு பானையை எடுத்து கொண்டேன்.” ஏம்மா புள்ளைங்கல்லாம் நல்லா சம்பாதிக்கறாங்க இல்ல எதுக்கு இப்ப போய் கஷ்டபடறே.. “

“அட என்னப்பா இப்படி கேட்டுப்பிட்ட.. இதுல என்ன கஷ்டம் இருக்கு.. எங்களுக்கு சாப்பாடு போட்டு இந்தளவுக்கு வளர்த்ததே இந்த தொழிலுதான.. இப்ப பானை யாரு உபயோகப்படுத்தறா.. இப்பல்லாம் பொங்கல் சீசன்லதான் வியாபாரம்.. சும்மாருக்க முடியுமா அதான் கடை போட்டுருவேன். . ஏன் தம்பி நீ சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உங்கப்பாவோட வாத்தி வேலைய விட்டுடவா சொன்ன..? இத மட்டும் ஏன் குறைச்சலா நினைக்கனும்..? எனக்கு தெரிஞ்ச வேலைய நான் செய்யுறேன்..”

அவள் சொன்ன பேச்சில் நியாயமிருந்ததால் மேற்கொண்டு பேச முடியாமல் பானை வாங்கி கொண்டு நகர்ந்தேன்.

பொங்கல் படைத்து சாப்பிட்டு எல்லோரும் தொலைக்காட்சி முன்னர் உட்கார்ந்தோம். எதோ ஒரு நடிகை பொங்கல் பானையில் பொய்யாய் சோப்பு நுரை பொங்க பொங்கல் கிளறி நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தாள்.

“இன்னும் கொஞ்ச நாள் போனா.. கரும்பு கூட பிளாஸ்டிக்கில வச்சி கொண்டாடுவாங்க. விவசாயத்தோட நிலம அப்படி போயிட்டிருக்கு.. இன்னும் இவங்க பேரன் பேத்தி காலத்துல சாப்புடறதுக்கு சாப்பாட்டுக்கு பதிலா மாத்திரை தயாரிச்சாலும் தயாரிப்பாங்க..” என்று அப்பா காவ்யாவை மடியில் உட்கார்த்தி வைத்து கொண்டார்.

லீவு முடிந்து கிளம்பும் போது, “அப்பா.. நிலத்தை விக்க வேணாம்பா.. அடுத்த மாசம் வர்றேன் தென்னங்கண்ணாவது வச்சிடலாம்..” கிளம்பினோம்.

“ஒரு நேரத்துல பிரயோஜனப் படலைன்னா அது நமக்கு வேண்டாததா ஆகிடறது அந்த பொருளோட தப்பா?” என்று படிச்ச வாத்தியாரும், “ இத மட்டும் ஏன் குறைச்சலா நினைக்கனும்..? எனக்கு தெரிஞ்ச வேலைய நான் செய்யுறேன்..” என்று படிக்காத பானைக்காரம்மாவும் நடத்திய பாடத்தில் நிலத்தை விற்கும் முடிவை மாற்றினேன்.

“ஜோதி.. எப்படியும் வீடு கட்டிடலாம்.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. அடுத்த தையில் நல்ல காலம் பொறக்கும்.. “

– 7 December 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *