கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 7,112 
 
 

அது ஒரு சனிக்கிழமை.

சென்னை எக்ஸ்ப்ரஸ் மால். காலை பதினோரு மணி.

மாதவி தன் கணவன் நரேன் மற்றும் இரண்டரை வயதுக் குழந்தை வருண் ஆகியோருடன் விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாள். ஏஸியின் குளிர் இதமாக இருந்தது.

வருண் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவன் எங்கே கீழே வழுக்கி விழுந்து விடுவானோ என்கிற பயத்தில் மாதவி அவனை துரத்திக் கொண்டிருந்தாள்.

வருண் உடனே அங்கிருந்த ஒரு பொம்மைக் குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். குதிரையை ஓட்டியபடி விளையாடினான். நரேனும், மாதவியும் அவனருகே நின்று கொண்டனர்.

அப்போது அங்கு அவர்களுடன் ஒரு அழகிய இளம்பெண் வந்து நின்றாள். மாதவியிடம், “ஹி இஸ் வெரி க்யூட் அண்ட் லுக்கிங் பப்ளி…” என்றாள். மாதவிக்கு பெருமை பிடிபடவில்லை. அவளைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தாள்.

“மேடம், ஐ வான்டு டேக் சம் ஸ்னாப்ஸ் ஆப் ஹிம்.”

“ஓ ஷ்யூர்… ப்ளீஸ் டேக்.”

அவள் உடனே வருணை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தாள்.

“மேடம் மை நேம் இஸ் தீபிகா. ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில் ஒர்க் பண்ணுகிறேன். நாங்கள் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனியின் விளம்பரத்திற்காக ஒரு அழகிய குழந்தையை தேடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் குழந்தை வருண் அந்த விளம்பரத்திற்கு மிகச் சரியாக இருப்பான் என்று நம்புகிறேன். நீங்கள் சரி என்று சொன்னால் நான் என் ரீஜினல் மானேஜரிடம் குழந்தையின் போட்டோவைக் காண்பித்து ஒப்புதல் வாங்கியபின், உங்களுக்குச் சொல்லுகிறேன்… அதன் பிறகு நீங்கள் குழந்தையுடன் ஷூட்டிங் வர வேண்டியிருக்கும். ஆல் இண்டியா லெவலில் உங்கள் குழந்தை பிரபலமாகும். மேலும் பல வாய்ப்புகளும் கிடைக்கலாம். ஏன் சினிமாவில்கூட வாய்ப்புகள் கிடைக்கலாம்…”

மாதவி ஆசையுடன் நரேனை திரும்பிப் பார்த்தாள். அவன் தீபிகாவின் அழகில் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தான்.

“ஓ ஷ்யூர் தீபிகா..” என்றவன், தான் வேலை செய்யும் ஐடி கம்பெனியின் விஸிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான். தீபிகாவும் தன்னுடைய பிஸ்னஸ் கார்டை எடுத்து மாதவியிடம் கொடுத்தாள். பிறகு மாதவியின் மொபைல் நம்பரை கேட்டுவாங்கி தன்னுடைய மொபைலில் சேமித்துக்கொண்டாள்

“நான் இன்று மாலை உங்களை தொடர்பு கொள்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

மாதவிக்கும் நரேனுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. மாதவி ஏராளமான கற்பனையில் மிதந்தாள். இருவரும் குழந்தையுடன் மதியம் தங்களுடைய பாலவாக்கம் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் வருண் ஓடி விளையாடிய களைப்பில் தூங்க ஆரம்பித்துவிட்டான்.

அன்றே மாலை நான்கு மணிக்கு, மாதவிக்கு அழைப்பு வந்தது. “மேடம், திஸ் இஸ் தீபிகா. என்னுடைய ரீஜினல் மனேஜர் ஓகே சொல்லிவிட்டார். நீங்கள் தயவுசெய்து நாளை காலை பத்துமணி வாக்கில் எங்கள் கம்பெனிக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு வரமுடியுமா? ஒரு போட்டோ ஷூட் இருக்கிறது…” என்றாள்.

உற்சாகமான மாதவி “கண்டிப்பாக வருகிறேன் தீபிகா” என்றாள். நரேன் அவளுடைய விஸிட்டிங் கார்டை மாதவியிடமிருந்து வாங்கிப் பார்த்தான். “ஓ அடையாறில்தான் அவர்கள் ஆபீஸ்…இங்கிருந்து ரொம்பக் கிட்டக்கதான்.. நாளைக்கு காலையில் சரியாக பத்து மணிக்கு நாம் அங்கிருக்கலாம் மாது..” என்று அவளை ஆசையுடன் அணைத்துக் கொண்டான்.

ஞாயிறு காலை சரியாக பத்து மணிக்கு அவர்கள் இருவரும் குழந்தையுடன் அங்கு சென்றார்கள். ஆபீஸ் ஏஸியில் நல்ல ரசனையுடன் அழகாக காட்சியளித்தது. ஏற்கனவே அங்கு அழகழகாக இருபது குழந்தைகள் காத்திருந்தன. அதைப் பார்த்த மாதவிக்கு ‘ஓ இவர்களையெல்லாம் தாண்டி தன் குழந்தைக்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே’ என்ற பயம் தொற்றிக்கொண்டது. நல்லவேளை வருண் பார்ப்பதற்கு புஷ்டியாக அழகாக இருக்கிறானே என்கிற நம்பிக்கையும் துளிர்விட்டது.

அப்போது வயதான ஒருவர் லிப்ட் மூலமாக அங்கு வந்தார். தீபிகா, அவர்தான் பில்டிங் ஓனர் என்றும், நான்காவது தளத்தில் தனியாக வசிப்பதாகவும் அங்கிருந்த அனைவருக்கும் அறிமுகப் படுத்தினாள். அவர் சற்று நேரம் அங்கு அமர்ந்திருந்தார். பிறகு எழுந்து சென்றுவிட்டார்.

பத்தரை மணிக்கு அந்தக் குழந்தைகளை தனித் தனியாகவும்; ஒரே குரூப்பாகவும் பேஸ்மென்டில் இருந்த ஸ்டூடியோவில் ஒரு செயற்கையான அருவியின் பின்னணியில் ஷூட் செய்தார்கள். அதன்பிறகு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட குழந்தைகளின் அம்மாக்களை மட்டும் தொடர்பு கொள்வதாகச் சொல்லி அனுப்பினார்கள்.

வீட்டிற்கு திரும்பிய மாதவிக்கு வருண் இந்தப் போட்டியில் ஜெயித்து வரவேண்டுமே என்று ரொம்ப ஏக்கமாக இருந்தது.

புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு தீபிகாவிடமிருந்து அழைப்பு வந்தது. “மேடம், யு மஸ்ட் பி ப்ரவுட் யுவர் ஸன் வருண் இஸ் செலக்டட் பை ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன்… அடுத்ததாக வருணை விதம் விதமாக பல உடைகளில் போட்டோ ஷூட் செய்யவேண்டும். குழந்தைக்கு அம்மாவாக நீங்களும் அதில் ஒரு வேளை நடிக்க வேண்டியிருக்கும். உங்களிடம் இருக்கும் அழகிய நல்ல உடைகளில் ஒரு நான்கைந்தை தேர்வுசெய்து எடுத்துக்கொண்டு இன்று மாலை நான்கு மணிக்கு ஸ்டூடியோ வரமுடியுமா?” என்றாள்.

“சரி தீபிகா வருகிறேன்” என்றவள் உடனே நரேனை தொடர்பு கொண்டாள். அவன் “எனக்கு ஆபீஸில் நிறைய வேலை இருக்கிறது. நீ மட்டும் குழந்தையுடன் பத்திரமாகப் போய் வா…” என்றான்.

மாதவி உடனே தனக்கும், குழந்தைக்கும் விதவிதமாக நல்ல உடைகளைத் தேர்வு செய்து ஒரு சூட்கேஸில் எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டாள். அவளுக்கு உற்சாகம் கரை புரண்டது. பூஜை அறையில் சற்றுநேரம் நின்று வேண்டிக்கொண்டாள். சரியாக நான்கு மணிக்கு குழந்தையுடன் ஸ்டூடியோ சென்றாள். அங்கு தீபிகா காத்திருந்தாள்.

நல்ல வேளையாக அன்று வேறு குழந்தைகள் எதுவும் இல்லை. அவளது எண்ணத்தைப் புரிந்துகொண்ட தீபிகா, “ரிலாக்ஸ் மேடம்… வருண் மட்டும்தான் செலக்ட் செய்யப் பட்டுள்ளான். நீங்கள் முதலில் சல்வாரிலிருந்து புடவைக்கு மாறுங்கள்… புடவை அணிந்த அம்மாவாக நீங்கள் வருணை அன்புடன் அணைத்துக் கொள்ள வேண்டும்…” என்று அங்கிருந்த ஒரு அறையைக் காண்பித்தாள்.

மாதவி சந்தோஷத்துடன் அந்த அறையில் நுழைந்து புடவையில் வெளியே வந்தாள்.

பல கோணங்களில் புகைப்பட ஷூட்டிங் முடிய மாலை ஆறுமணி ஆகிவிட்டது. அவர்களை அழைத்துப் போக நரேன் வந்திருந்தான்.

தீபிகா அழகாகச் சிரித்தவாறு நரேனிடம், “சார் எங்களுக்கு ஜான்ஸன் கம்பெனியிலிருந்து டைரெக்ட் பேமென்ட் மொத்தமாக பதினைந்து லட்சம் வரும். அதில் உங்களுக்கு பத்து லட்சம் நாங்கள் கொடுப்போம். வருணுக்கு பைனல் ஷூட்டிங் ஊட்டியில் இருக்கும். ஆபரேட்டிங் காஸ்ட் செலவுக்காக எங்களுக்கு முன்பணமாக ஒரு ஐந்து லட்சம் தேவைப்படும். நீங்கள் தற்போது கொடுத்து உதவினால், பைனல் பேமென்ட் கிடைத்ததும் இந்தப் பணத்தை உங்களுக்கு திருப்பிக் கொடுத்துவிடுவோம்…” என்றாள்.

“ஓ ஷ்யூர் தீபிகா. ஊட்டி ஷூட்டிங்கை சனி அல்லது ஞாயிறில் வைத்துக்கொண்டால் எனக்கு நல்லது. நாளைக்கு காலை பத்தரை மணிக்கு ஐந்து லட்சத்தை உங்கள் கம்பெனிக்கு ஆர்டிஜிஎஸ் பண்ணி விடுகிறேன்…” என்றான்.

சொன்னவாறே மறுநாள் காலை ஐந்து லட்சத்தை அனுப்பியும் வைத்தான்.

ஒரு வாரம் சென்றது.

தீபிகாவிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.

மாதவி அவளைத் தொடர்பு கொண்டாள். தொடர்ந்து என்கேஜ்டாக இருந்தது. இரண்டு நாட்களாக இதே நிலை… ஒருவேளை மிகவும் பிஸியாக இருப்பாளோ என்று நினைத்துக் கொண்டார்கள். ஒரு வாரம் ஆயிற்று. நரேன் அவளை ஆபிஸிலேயே சென்று பார்த்துவர முடிவு செய்து அங்கு சென்றான்.

அந்த ஆபீஸில் யாருமே இல்லை. பூட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்தான்.

ஞாபகம் வந்தவனாக ஓனரைப் பார்க்க நான்காவது தளத்திற்கு லிப்டில் சென்று, காலிங்பெல் அடித்தான்.

கதவைத் திறந்த அந்த முதியவர், “வாங்க, நீங்க இருபதாவது ஆள்… ஒரு மாதம் முன்புதான் வாடகைக்கு வந்தார்கள். எனக்கும் வாடகை தராமல், உள்ளேயிருந்த ஏஸி; வாட்டர் கூலர்; ப்ரிட்ஜ் ஆகியவைகளுக்கும் வாடகைப் பணம் தராமல் காலி செய்துகொண்டு போய்விட்டார்கள். நாம் அனைவரும் நன்றாக ஏமாந்திருக்கிறோம். அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் நீங்களும் ஒரு புகார் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்..” என்றார்.

நரேன் வீட்டிற்கு திரும்பிவந்து மாதவியை அழைத்துக்கொண்டு அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.

மாதவிக்கு மறுநாள் மொபைலில் ஒரு அழைப்பு வந்தது.

“நீ என்ன போலீஸ்ல கம்பெயின்ட் கொடுத்திருக்கியாமே? மரியாதையா அதை உடனே வித்ட்ரா பண்ணு. அது என்னடி புடவையை மாத்திட்டு வான்னு சொன்னா, அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன்னால நிர்வாணமா நின்னு உன் மார்பகங்களை கையில் தூக்கி நிறுத்தி ஒரு நமட்டுச் சிரிப்புடன் போஸ் கொடுக்கிற? அந்த வீடியோ என்கிட்ட இருக்கு… அதை ரிலீஸ் பண்ணா ஒன் பொழப்பு நாறிடும்… போ போய் வித்ட்ரா பண்ணு.” தீபிகா மிரட்டினாள்.

மாதவி நரேனிடம் சென்று அழுதாள்.

“அஞ்சு லட்சம் போனா போகுது மாது. உடனே போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வா.” போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள்.

“என்னம்மா இது பெரிய ரோதனையாகப் போய்விட்டது… இது நாற்பதாவது வித்டிராயல்” என்றார் இன்ஸ்பெக்டர்.

அவமானத்துடன் வீடு திரும்பினார்கள்.

மாதவி மிகவும் சோர்வாக ஒரு நடைபிணம் மாதிரி ஆகிவிட்டாள்.

அடுத்தவாரம் மாதவியின் அப்பா மதுரையிலிருந்து ஒரு வேலை நிமித்தமாக சென்னை வந்திருந்தார்.

“என்னம்மா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கே?” என்றார்.

அவ்வளவுதான்… மாதவி அப்பாவை கட்டிக்கொண்டு வெடித்து அழுதாள். தான் ஏமாற்றப் பட்டதை, அந்த வீடியோ விஷயம் தவிர்த்து, அனைத்தையும் சொன்னாள்.

“சரிம்மா, போனது போகட்டும். அஞ்சு லட்சம் பெரிசு இல்ல. நீயும் மாப்பிள்ளையும் குழந்தையும் நன்றாக இருக்கிறீர்களே.. அதுவே போதும். எல்லாத்துக்கும் நம்முடைய பேராசைதான் காரணம். இனிமேலாவது கவனமுடன் இரு. மனிதர்களுக்கு தன்னை புகைப்படமாகப் பார்த்துக் கொள்வதில் சந்தோஷம்தான். முன்பெல்லாம் உறவினர் வீட்டுக் கல்யாணங்களில் நாம் நன்றாக வந்திருக்கிறோமா என்று நம் புகைப்படத்தை தேடிப் பார்த்து மகிழ்வோம். இப்போது நாமே நம் போட்டோவை விதவிதமாக எடுத்து அதை எவ்விதக் கூச்சமோ வெட்கமோ இல்லாமல் அதை முகநூலில் வெளியிட்டு தம்பட்டம் அடித்துக்கொண்டு அதற்கு எத்தனை லைக்ஸ் வரும் என்று ஏங்குகிறோம். வர வர தற்போதைய மனிதர்களுக்கு சுயமோகம் அதிகரித்துவிட்டது. ஆனால் உன் விஷயத்தில் உன் பையனைக் காட்டி பணம் பறித்துவிட்டார்கள். உண்மையில் அவர்கள் வருணை ஒரு போட்டோகூட எடுத்திருக்க மாட்டார்கள். வெறும் வாடகைக் காமிராவில் பாவ்லா காட்டியிருப்பார்கள். இனிமேலாவது புத்திசாலித்தனமா இருந்துக்கம்மா” என்று வேதனையுடன் சொன்னார்.

அடுத்த சனிக்கிழமை…. கோயம்புத்தூர் ப்ரோஸான் மால்.

ஒரு இளம் அம்மாவிடம் அழகாகச் சிரித்தபடி, “மேடம், யுவர் ஸன் இஸ் வெரி க்யூட் அண்ட் பப்ளி…” என்றாள் தீபிகா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *