பேசப்படாத பிரியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 9,824 
 

”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, ஃபிஷ்ஷ§, மட்டனு, காடை…” சர்வர் சொன்னதும் சரவணன், சித்தப்பா காளீஸ்வரன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து, ”ரெண்டு சிக்கன் கொண்டுவாங்க!” என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக் கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணிதான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக் கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காரவைத்துக்கொண்டு, ”உள்ள விட்றா தடா!” என்று ஒவ்வொரு மிதிக்கும் சொல்லுவார். அந்த வார்த்தை ஒவ்வொண்ணும் அவர் மிதிக்கும்போது சத்தமாக வெளிவரும் மூச்சுக் காற்றில் பஸ்பமாவதுபோல் தோன்றும் சரவணனுக்கு.

சித்தப்பா பிரியாணியைச் சாதாரணமாகச் சாப்பிடுவாரில்லை. அரை பிளேட் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு, கழுவிய கைப்பக்க சட்டையை மடித்துவிட்டு, முழங்கைக்கு மேல் ஏத்திவிட்டுக்கொள்வார். பிரியாணி வந்ததும் அதை இலையில் தட்ட அவர் ஒருபோதும் சம்மதித்தது இல்லை. ‘அப்படியே வச்சிடு’ என்று இடது கையால் இலையை மூடிக்கொண்டு சமிக்ஞை செய்வார். வலது பக்கமாக பிரியாணி பிளேட்டை அவர் வைத்துக்கொண்டு, அதில் கொஞ்சத்தை மட்டும் இலையில் தட்டுவார். ஒவ்வொரு வாய்க்கும் பச்சடி ஒரு தரம் என்றும் இலை ஓரமாக ஊற்றிய குருமா ஒரு தரம் என்றும் முறை மாறாமல் அவர் கைகள் போகும். இரண்டு வாய்க்கு இடைஇடையே கோழிக்கறியை ஒரு கடி. தப்பித்தவறி கோழிச்சாறு கடைவாயில் வழிந்தால், அப்பவே சர்வரைப் பார்த்து ”டிஷ்யூ இருக்கா?” என்று கேட்பார். அதை உச்சரிக்கவே சிரமப்படும் சர்வரிடம், ”மெட்ராஸ்லலாம் கை தொடைக்க, வாய் தொடைக்க அதான் வைக்கிறாங்கப்பா!” என்பார். அந்த உரையாடலின் கடைசியில் வைக்கப்படும் ‘ப்பா’ அந்த சர்வரை சித்தப்பா பக்கம் வர வைத்தது. ”வொயிட் ரைஸ் வேணுமா சார்?” என்று கேட்டு, சித்தப்பா மறுக்க… மறுக்க… இலையில் சாதம்வைத்து மட்டன் குழம்பு ஊற்றுவார்.

அதற்கடுத்த முறை அந்த சர்வர், சித்தப் பாவின் நண்பராகவே ஆகிவிட்டார். ஒரு மாசம் கழித்து சனிக் கிழமை சித்தப்பா மறுபடி அதே ஹோட்டலுக்குப் போகும்போது, அந்த சர்வரின் பெயரை ”அபூ” என்று சொல்லி சித்தப்பா கூப்பிட்டதும், அபூ சித்தப்பாவுக்குக் கேட்காமலே ஒரு பிளேட் ஈரல், ஒரு ஒன் சைடு ஆம்லெட் போட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. ”உனக்கென்னடா வேணும்?” என்று அபூ வாஞ்சையாக இவனிடம் கேட்டார். சாப்பிட்டு முடித்த பிறகு, சுடச்சுட சம்சா ஒன்றை அபூ தந்தார். ‘வேணாம்’ என்று சொல்ல வாய் எடுத்தவன் அதன் வாசத்தாலும் சூட்டாலும் ஈர்க்கப்பட்டு, லபக்கென்று கடித்தான். ”நல்லாருக்காடா?’ என்று கேட்டார் சித்தப்பா.

சின்ன தாளில் பில் கொண்டு வைத்த தும் முதலில் சித்தப்பா அபூவுக்கு ஒரு முழு பத்து ரூபா தாளை நீட்டினார். அபூ அதை வாங்கி அவசரமாக பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். பில் தொகை அதிகமாக இருக்கும் என சரவணன் நினைத்தான். தொண்டை வரை நிறைந்து இருந்த சம்சா அப்படி நினைக்கவைத்தது. சித்தப்பா பில்லை எட்டிப் பார்த்து ”ஒண்ணும் பிரச்னை இல்லியே?” என்று கேட்டார். ”ச்ச… அதெல்லாம் இல்ல. நீங்க ஸ்பெஷல்லா!” என்றார் அபூ. எடுக்காமல் போன பில்லை எட்டிப் பார்த்தபோது, அதில் ஒரு அரை பிளேட் பிரியாணிக்கும் ஒரு கால் பிளேட் பிரியாணிக்குமான காசு மட்டும் போட்டிருந்தது. சரவண னுக்கு ஒரு நிமிஷம் சித்தப்பாவைப் பிடிக்காமல் போனது.

பிரியாணி சாப்பிட்டுவிட்டு பில்லோடு வைக்கப்படும் பெருஞ்சீரகத்தை சித்தப்பா நாசூக்காகச் சுவைக்க ஆரம்பித்தார்.

”சித்தப்பா?”

‘என்னடா?’

‘பில்லுல ஈரல், ஆம்லெட்லாம் இல்ல பாருங்க?”

சித்தப்பாவின் முகம் ஒரு நிமிஷம் கடுப்பாகி, ‘அது போன வாரம் சில்லறை வாங்காமப் போயிட்டேன்ல!” என்று சமாதானமான ஒரு குரலில் சொன்னார்.

இருவரும் பேசாமலேயே வெளியே வந்தார்கள். இவர்கள் எழுந்த அறையின் மின்விசிறியை அபூ அணைப்பதன் மூலம் அந்தக் கடகட சத்தம் மெள்ள மெள்ள அமுங்குவதும், உட்கார்ந்து இருந்த நாற் காலியை மேஜைக்கு அடியில் தள்ளுவதுமான ஒலி கேட்டது. எல்லாமே சித்தப்பாவுக்கும் அபூவுக்குமான ரகசியங்களின் மௌன சாட்சியாக இருப்பதாக இவனுக்குத் தோன்றிற்று.

தனக்கு ரொம்பவும் பிடித்த சித்தப்பாவை ஒரு பிரியாணி பிடிக்காமல் செய்துவிட்டதாகவே இவனுக்குத் தோன்றிற்று. வரும் வழியில் கோயில் வாசலில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, இருட்டுக் கடையில் கால் கிலோ அல்வா வாங்கி வந்தார். கையில் வாழை இலையில் வழுக்க வழுக்க ஐம்பது கிராம் அல்வா. அப்போதைக்குச் சாப்பிட! கவரை ஹேண்டில் பாரில் மாட்டியபடி ”சாப்பிடுல!” என்றார்.

”வேணாம் சித்தப்பா!” என்றவன், திடீரென பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்ததும், ”குட்ஈவ்னிங் மிஸ்!” என்றான். பூங்கொடி மிஸ் திரும்பி இவனைப் பார்த்து, ”என்ன சரவணப்பெருமாள்? அல்வா சாப்பிடுறியா? அப்பாகூட எங்க வந்தே?” என்றார் இவன் கன்னத்தைத் தட்டி. இவனுக்கு பூங்கொடி மிஸ்ஸுக்கு மிக நெருக்கமாக இருக்கும் உணர்வு வந்தது.

”நான் சரவணன் அப்பா இல்லீங்க… சித்தப்பா!’ என்றார் சித்தப்பா.

பூங்கொடி மிஸ், ”அச்சசசோ” என்றபடி சிரித்தார். அவருடன் வந்தவர் அல்வா வாங்க வரிசையில் நின்று சிரமப்பட்டதைப் பார்த்த சித்தப்பா, ”எவ்ளோ வேணும்?” என்றபடி முன்னால் விரைந்தார்.

முன்னால் போய்க்கொண்டு இருந்த சித்தப்பாவுக்குக் கேட்கிற மாதிரி பூங்கொடி மிஸ், ”அரை கிலோ போறும்” என்று காற்றுக்கும் முன்னால் சித்தப்பாவிடம் சொல்வதுபோல் ஒருவிதமான வேகத்தோடு சொன்னார்.

நெடிய போராட்டத்துக்குப் பிறகு, நாட்டை மீட்டு வந்த அரசன்போல் சித்தப்பா பெருமூச்சுக்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வந்தார். சித்தப்பாவுக்குத் தன்னுடைய அப்பாவை அறிமுகப்படுத் தியபடி அல்வா வாங்கிக் கொடுத்ததற்கு ஆயிரம் தேங்க்ஸ் சொன்னார் மிஸ். அப்போதுதான் சித்தப்பா அதைக் கேட்டார்.

”சரவணன் எப்படிப் படிக்கான்? நல்ல பயலா இருக்கானா?”

பூங்கொடி மிஸ் இவனைப் பார்த்து கள்ளச் சிரிப்புச் சிரித்து, ”படிக்கான்… வீட்ல கவனிக்க மாட்டீங்களா? ஹோம் வொர்க் செல நாள் பண்றதில்ல!” என்றார்.

”அப்படியால? கேட்டா, ‘செஞ்சிட் டேன்… செஞ்சிட்டேன்’னு சொல்லிடு தானே!’ என்ற சித்தப்பா, ”இனிம நான் பாத்துக்குறேன் மிஸ்’ என்றார்.

இவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘கழுகு’ படம் பார்த்துவிட்டு ஒரே ஒரு நாள் ஹோம்வொர்க் செய்யாமல் போனதுக்கு பூங்கொடி மிஸ் இப்படிப் போட்டுக்கொடுக்கணுமா?

வர்ற வழி முழுதும் சித்தப்பா இவனுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லிக்கொண்டே வந்தார். தொண்டர் சந்நிதி முக்கு வரைக்கும்தான் இவனுக்கு ஞாபகம் இருந்தது. அதற்குப் பிறகு தூங்கிவிட்டான். வீட்டுக்கு வந்து, மிஸ் சொன்னதாக சொல்லியவற்றை சித்தப்பா சொன்னதால், அப்பா இடுப்புக்குக் கீழே இரண்டு அடி அடித்தார். அம்மா சாயங்காலம், காம்பவுண்ட் சுவர் வழியாகப் பின் வீட்டு பாத்திமா அம்மாவிடம், சித்தப்பா தேவை இல்லாமல் இவனைப்பற்றிப் போட்டுக் கொடுத்து அடி வாங்கிக் கொடுத்த தாக ரகசியமாகச் சொன்னது இவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

அப்பா சொன்னதாகச் சொல்லி, சித்தப்பா இவன் ஹோம் வொர்க்கில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். வாரம் ஒருநாள் ஸ்கூலுக்கு வந்து பூங்கொடி மிஸ்ஸிடம் பாடம் சம்பந்தமான விவரங்களையும் சரவணன் அந்த வாரம் ஸ்கூலில் எப்படி நடந்துகொண்டான் என்ற விவரங்களையும் கேட்டுக்கொண்டார். பையன் படிப்பின் மேல் தம்பி கொள்ளும் அக்கறையால் அப்பா சிலிர்த்துப் போனார். சித்தப்பா எந்த நாளில், நேரத்தில் ஸ்கூலுக்கு வருவார் என்று தெரியாமல், மத்தியான சாப்பாட்டு நேரத்திலேயே கைக்கடிகார ஜவ்வு மிட்டாயையும் நெல்லி ஊறுகாயையும் வாங்க வேண்டியதாயிற்று இவனுக்கு. பூங்கொடி மிஸ், ”உங்க சித்தப்பா கீழ போட்டுட்டுப் போயிட்டார்” என்று கொடுத்த கைக்குட்டையில் புதுத் துணிக்கான வாசம் இருந்தது. பிரித்தபோது ஓரத்தில் காளீஸ்வரன் என்று எம்ப்ராய்டரி போட்டு இருந்தது.

இவன் மெனக்கெட்டு அதை அம்மாவிடம் கொடுத்து, ”மிஸ், சித்தப்பாட்ட கொடுக்கச் சொல்லுச்சும்மா!” என்றான். அம்மா அன்றைக்கு முழுக்க மசாலா அரைத்ததில் இருந்து, துணி பிழிந்து கொல்லைப் பக்கமாகக் காயப்போடும் வரை ”எம் புள்ளையக் குறை சொல்லிக் கூத்தடிக்கிறவன் உருப்படவா போறான்?” என்று புலம்பித் தள்ளி, சாயங்காலம் அப்பா வந்ததும், ”கொழுந்தன்ட்ட சரவணன் மிஸ் கொடுக்கச் சொன்னாவ ளாம்” என்று கிசுகிசுத்தாள். அப்பா அதைப் பெரிசா எடுத்துக்காமல், ”நீ கொடுத்துத் தொலையறதுதானடி?” என்றார். சரவணன் சித்தப்பா அன்று லேட்டாக வந்தார். முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. அப்பா அவரிடம், ”சாப்பிட்டியால” என்று கேட்டார். அவர் வெறுமனே ‘ம்’ கொட்டி உள்ளே போனபோது, ”ஸ்கூல்ல கைக்குட்டையை வுட்டுட்டு வந்துட்டி யால? சரவணன் டீச்சர் எடுத்துக் கொடுத்துவிட்டிருக்கு” என்று சொன்னார்.

சித்தப்பா முகத்தில் ஒரு நிமிஷம் பல விதமான உணர்வுகள் தெரிந்தன. விளக்கில் இருந்து கழற்றின மாலையில் புதுப் பூவின் மிஞ்சிய வாசமும் காய்ந்த இதழ்களின் மணமும் சேர்ந்து இருப்பது போல சித்தப்பா குழப்பமாக அந்த கைக்குட்டையை வாங்கிக்கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு, பூங்கொடி மிஸ்ஸின் டிரெஸ்ஸை வைத்தே அன்று சித்தப்பா ஸ்கூலுக்கு வருவாரா, மாட்டாரா என்று தெரிந்துகொள்ள முடிந்தது இவனுக்கு. சித்தப்பா வரும் நாட்களில் மிஸ் கொண்டையைச் சுற்றிப் பூவைத்து, அதன் ஒரு நுனி வலது கழுத்துப் பக்கம் வருமாறு விட்டிருந்தார். அன்று மட்டும் மிக நேர்த்தியாக உடுத்திஇருந்தார்.

ஒருகட்டத்தில், இந்த மர்மம் நிறைந்த காதல் கதை இவனை சுவாரஸ்யப்படுத்தவே செய்தது. பூங்கொடி மிஸ் இவன் மேல் பிரத்யேக அன்பு செலுத்த ஆரம்பித்தது பசங்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து, ”இவன் பூங்கொடி மிஸ் ஆளுல்ல?” என்று சிரித்தார்கள். இவனுக்கு அது பெருத்த அவமானமாக இருந்தது. ‘இனி, நீ ஸ்கூலுக்கு வராத சித்தப்பா!’ என்று சொல்லிவிடத் துடித்தான். அதற்காகவே சித்தப்பாவுடன் தனியாக இருக்கும் நேரங்களைத் தேடினான். சித்தப்பா வெளியே போகும்போது எல்லாம் ”நானும் வர்றேன்லா!” என்றபடியே இருந்தான்.

”ஏறுல!” என்று ஒருநாள் சித்தப்பா சிரித்தபடி சொன்னார். சொல்ல நினைத்ததை நாசூக்காக எப்படிச் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தான். வசந்தி மிஸ் கிண்டலாகச் சொன்னார் என்று கதைகட்டிவிடலாமா என்றுகூடத் தோன்றிற்று இவனுக்கு. சித்தப்பா ஒரு பழைய கட்டடத்துக்குள் இவனைக் கூட்டிப் போனார். அதுவரை அந்தக் கட்டடத்தை அவன் அந்த ஊரில் பார்த்ததே இல்லை. சினிமா பட போஸ்டர் மாதிரி நிறைய போஸ்டர்கள் வெளிச் சுவரில் இருந்தன. எல்லா போஸ்டரிலும் ஒரு அரிவாள் படம் இருந்தது. சித்தப்பா எதிர்ப்பட்ட எல்லாரிடமும் ”என் அண்ணன் மகன்!” என்றபடி இருந்தார்.

உள்ளே அவனை உட்காரவைத்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார். ஒரு பெண் அவசர அவசரமாக உள்ளே வந்து, ”ஹேய்… யாருய்யா இது?” என்றது. சித்தப்பா பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது, ”இரு… இரு… வந்துடுறேன்!” என்றபடி உள்ளே ஓடினாள். ஐந்து நிமிடங்களில் நனைந்த கால்களில் புடவை படாதபடி ”கூட லேடீஸ் வாராங்களே… அவங்க பாத்ரூம் போகணுமேனு எவனும் யோசிக்க மாட் டேங்கிறான் தோழர். சுவர் இருக்கிற தைரியம் ஆம்பளைங்களுக்கு” என்றவள், ”அது சரி… இது யாரு?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். சித்தப்பா மறுபடி என் அண்ணன் பையன் என்றார். அவள் மௌனமாக இவனைப் பார்த்து, ”சித்தப்பாகூட பவனி வந்தியாக்கும்!” என்றாள்.

”நீங்களும் வாங்களேன் செல்வி. தாஜ்ல பிரியாணி சாப்பிட்டுட்டு வரலாம்!” என்றார் சித்தப்பா. அவர் ஏதோ நாகரிகத்துக்காகக் கேட்கிறார் என்றுதான் இவன் நினைத்தான். ஆனால், செல்வி அப்படி நினைக்காமல் கிளம்பியது ஆச்சர்யமாக இருந்தது. செல்வி சிந்துபூந்துறை வழியாக நடந்து வர… இவனை கேரியரில் உட்காரவைத்து சித்தப்பா உருட்டினார்.

ஹோட்டலினுள் நுழைந்ததும் அபூ சித்தப்பாவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி ”மைனியா?” என்று ரகசியமாகக் கேட்டது இவனுக்கும் கேட்டது. பூங்கொடி டீச்சர் இப்ப இங்கே பிரியாணி சாப்பிட வரணும்போல் இருந்தது இவனுக்கு. இவனால் பெரிதாக ஒன்றும் சாப்பிடவோ, பேசவோ முடியவில்லை. ”சமர்த்தா இருக்கானே!’ என்று செல்வி இவன் கன்னத்தைத் தட்டியபோது, முகம் துடைப்பதுபோல் அந்த ஸ்பரிசத்தை அழித்தான்.

கடைசியில் அபூ சம்சா தந்தபோது இவன் வேண்டாம் என்றான். ”தாஜ் ஹோட்டல் சம்சாவை வேணாம்னு சொல்லாத தம்பி” என்று சொன்ன செல்வி, அதை பேப்பரில் மடக்கி ஹேண்ட் பேக்கினுள் வைத்தாள். சித்தப்பாவிடம் இருந்து இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு பில் கொடுத்தான் அபூ. இவன் விரைவாகப் படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து சைக்கிள் பக்கமாக நின்றுகொண்டான்.

அவர்கள் இருவரும் வெளியே வந்து ”போலாமா?” என்றார்கள் இவனிடம். செல்வி சித்தப்பாவைப் பார்த்து, ‘ரொம்ப நாள் கழிச்சுத் திருப்தியா சாப்பிட்டேன் உங்ககூட!’ என்றாள்.

சித்தப்பா ”அதுக்கென்ன” என்றார். இருவரும் அங்கேயே வெயிலில் நின்று ஏதோ கூட்டம்பற்றிப் பேசினார்கள். இவனுக்கு ஒன்றுக்குப் போக வேண்டும்போல் இருந்தது. ஹோட்டல் பக்கவாட்டில் இருந்த மடையில் இருந்தபோது, செல்வி பார்க்கிறாளா என்று திரும்பிப் பார்த்தான். ‘சுவர் இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு’ என்று சொன்னது மாறி, ‘மடை இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு’ என்று சொல்லிவிடுவாளோ என்று தோன்றிற்று. தான் பெரியவன் ஆனா காதலிக்கவே கூடாது என்றும், சித்தப்பா மாதிரி இரண்டு பெண்களை ஏமாற்றவே கூடாது என்றும் தோன்றிற்று.

அடுத்த வாரமே சித்தப்பாவை போலீஸ் கைது செய்தது. ”கட்சில இருந்தா இதெல்லாம் சகஜம்தான்டி!” என்று அப்பா சாதாரணமாகச் சொன்னார். ஆனால், அம்மாவோட அப்பா தாத்தா இவனைத் தனியாகக் கூட்டிட்டுப் போய், ”சித்தப்பாகூட இனி தனியாலாம் போகக் கூடாது!” என்று சொல்லி, நாலணாவும் தேன் மிட்டாயும் வாங்கிக் கொடுத்தார். யோசித்தால் அதெல்லாம் அம்மாவின் வரிகளாகத் தோன்றுகிறது இவனுக்கு.

சித்தப்பா வெளியே வந்த பிறகு நிறைய மாறுதல் ஏற்பட்டது. அப்பாவைத் தவிர, வேறு யாரும் அவரிடம் சகஜமாகப் பேசவில்லை. பூங்கொடி மிஸ்ஸிடம் அவர், ”கட்சியை எப்டிம்மா விட முடியும்?” என்று சமாதானம் சொல்லியும் ‘இல்ல… இதெல்லாம் சரி வராது!” என்று சொல்லி மிஸ் அழுதது வாசலுக்கு வெளியே நின்ற இவனுக்கும் கேட்டது. சித்தப்பா பிறகு ஸ்கூலுக்கு வரவே இல்லை. அடுத்த முழு ஆண்டு பரீட்சையின்போது கடைசியாக பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்தது. கும்பகோணத்தில் கல்யாணமானதாக ஜூன் மாசம் ஸ்கூலுக்குப் போனபோது பேசிக்கொண்டார்கள். சித்தப்பாவிடம் சாயங்காலம் சொல்லவா… வேண்டாமா என்று நினைத்தபடியே சொன்னான். ”தெரியும்!” என்று ஒத்த வார்த்தையில் நிறுத்திக்கொண்டு, சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார். சித்தப்பாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது இவனுக்கு.

சித்தப்பாவுக்கு அப்பா தீவிரமாகப் பெண் பார்க்கத் தொடங்கினார். அம்மாவும் வாரம் ஒரு முறை நகையெல்லாம் போட்டுக் கொண்டு பெண் பார்த்து வந்தார். எல்லா பெண்களையும் ‘சித்தப்பா பிடிக்கலை’னு சொல்லிக்கொண்டே வந்ததில் அப்பாவுக்கு எரிச்சலாயிற்று. ”மனசுல யாரையாச்சும் வெச்சிருந்தா சொல்லித் தொலை!” என்றார்.

”அதெல்லாம் இல்ல!” என்ற சித்தப்பா, அடுத்த வாரம் அம்மா பார்க்கப் போன பெண்ணை போட்டோகூடப் பார்க்காமல் சரி என்றார். இவனுக்கு செல்வி பத்திக் கேட்க நுனி நாக்கு வரை வந்தும் கேட்காமலே இருந்துவிட்டான். கல்யாணத் தன்னிக்கு சித்தியைப் பார்த்தால் முள்ளும் மலரும் ஷோபா மாதிரி தெரிந்தது. சித்தப்பாவுடன் ராயல் டாக்கீஸில் அந்தப் படம் பார்த்த ஞாபகமும் இன்ட்ரவலில் அவர் வாங்கிக் கொடுத்த முறுக்கு வாசமும் ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்கு கட்சியில் இருந்து வந்தவர்களோடு செல்வியும் வந்திருந்தார். கைத்தறிப் புடவையில் முகம் முழுக்க வேர்வையில் அவர் சிரித்த மாதிரி நடிப்பதுபோல் இருந்தது. அவசர அவசரமாக சித்தப்பாவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு, ”வர்றேன்” என்றாள் இவனைப் பார்த்து. ”போட்டோ எடுத்துக்கோங்க!”- யாரோ சொன்னார்கள். ”இருக்கட்டும்” என்றபடி அவசரமாக வெளியேறின செல்வி, தூசு விழுந்திடுச்சி என்று பொய் சொல்லி அழுதிருக்கலாம். அபூகூட கல்யாணத்துக்கு வந்திருந்தார். ”காயப் போட்டு விருந்து வெச்சிட்டீக. இல்லைன்னா, பிரியாணி போட்டு ஜமாய்ச்சிருக்கலாம்”னு சொல்லிக்கிட்டே, ஒரு கவர் எடுத்து சித்தப்பா கையில் கொடுத்துவிட்டு போட்டோவில் நிற்கத் தயாரானார்.

அந்த போட்டோ இன்னும் சித்தப்பா வீட்டு டி.வி. மேல் இருக்கிறது. தாஜ் ஹோட்டலை மூடிய பிறகு, அபூ எங்கே என்று தெரியாமலே போனது. மூன்று பெண் குழந்தைகள் ஆன பிறகு, நாற்பதாவது வயதில் சித்தி கர்ப்பப் பை கேன்சரில் இறந்துபோனார். சித்தப்பா அழுது இவன் பார்த்தது அன்றுதான். அவருக்கும் சித்திக்கும் இடையில் பேசப்படாத ஒரு பிரியம் இருந்திருப்பதை தான் கவனிக்காமல் விட்டதை நினைத்து இவன் மருகினான். மூத்த பெண்ணுக்கான டீச்சர் டிரெய்னிங் சீட்டுக்கு இவனையும் கூட வரச் சொல்லி சித்தப்பா போன் செய்தார்.

டிரெய்னிங் கல்லூரியில் ஃபீஸ் கட்ட சித்தப்பாவிடம் ஐநூறு ரூபாய் கம்மியாக இருந்தது. இவன் ஆயிரம் ரூபாயை அவரிடம் நீட்டினான். ‘ஃபீஸ்னு ஒரு தொகை போட்டுட்டு. டாக்ஸ் அது இதுனு இங்க வந்தா கூட போடுறாகல்ல!” என்றார், மீதியை பாக்கெட்டில் வைத்தபடி. ”சாப்பிடலாமா?” என்றார்.

எதிரே இருந்த ஹோட்டலில் நுழைந்தபோது அங்கு பிரியாணியைத் தவிர ஏதும்இல்லை. சித்தப்பாவுக்கும் தனக்கும் பிரியா ணிக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே தோன்றிற்று இவனுக்கு. ”இப்பல்லாம் அரை பிளேட்டுனுலாம் இல்ல!” என்றார் அவராகவே. ஒரு வெங்கலக் கிண்ணத்தில் வந்த பிரியாணியை அவர் பிளேட்டில் தட்டிக் குனிந்தபடியே சாப்பிட்டார். பச்சடியை எப்போதாவது தொட்டுக்கொண்டார். குழம்புப் பாத்திரத்தை அவர் தொடவே இல்லை.

‘குழம்பு சித்தப்பா?’ என்றான் இவன்.

”வேணாம்ப்பா!” என்று மறுத்து இடது கையை மறித்தார். மளமளவெனச் சாப்பிட்டு இவனுக்கு முன்பாகவே கை கழுவிவிட்டு உட்கார்ந்தார். மேஜையின் மீது ஒரு இரும்பு ஸ்டாண்டில் டிஷ்யூ பேப்பர் இருந்தது. சாப்பிட்டு முடித்தும் அதை எடுக்கவில்லை அவர்!

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *