பெண் நினைத்தால்…….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,717 
 
 

விநாயகர் படத்தருகில் மணிபாரதி உட்கார்ந்து இருந்தாள். அவள் இருந்த அறைக்கு அருகில் உள்ள ஹாலில் அவள் அப்பாவும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பேசுவது மணிபாரதிக்கு தெளிவாக கேட்டது

“ மணிபாரதியை எங்களுக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. உங்களுக்கும் எங்க பையன் சிவாவையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க. மத்த விசயங்களைப் பற்றியும் பேசலாமுன்னு நெனைக்கிறேன்” என்றார் மாப்பிள்ளையின் அப்பா தணிகாசலம்.

“ பேஷாகப் பேசலாம் சம்பந்தி. எனக்கு மணிபாரதி ஒரே மகள். நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்களோ? சொல்லுங்க…! என்று மணிபாரதியின் அப்பா சிவலிங்கம், தன் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்த மகிழ்ச்சியில் கேட்டார்..

தணிகாசலம் தன் தோளில் கிடந்த துண்டை சரி செய்து கொண்டே பேச ஆரம்பித்தார். “ ஐம்பது சவரன் நகை, ரொக்கம் ஐம்பதாயிரம், மற்ற சீரிவரிசைகள் எல்லாம் செய்து, கல்யாணத்தையும் என்னோட கவுரவம் பாதிக்காத அளவில் சிறப்பாகச் செய்திடணும் “ என்று மூச்சு விடாமல் பேசி விட்டு, தான் கேட்டதில் ஏதும் விட்டுப் போகவில்லையே என்று கேட்பதுபோல் தனது மனைவியைப் பார்த்தார். உடனே அவருடைய மனைவி வைரத் தோட்டை நினைவுபடுத்தினார்.

மணிபாரதியின் அப்பா எதைப் பற்றியும் கவலைப்படாமல் “ சம்பந்தி… என்று பேச அவர் ஆரம்பிக்கும்போது, அவர் மகள் மணிபாரதி “ அப்பா இங்கே ஒரு நிமிடம் இங்கே வந்துவிட்டுப் போங்க “ என்று மணிபாரதி தனது அறைக்கு வெளியே இருந்து, அப்பாவை மெதுவாக் அழைத்தாள்.

சிவலிங்கம் , தணிகாசலத்தைப் பார்த்து “ சம்பந்தி ஒரு நிமிசம் என்னோட பொண்ணு கூப்பிடறா என்னானு கேட்டுட்டு வந்திடறேன். “ என்று கூறிவிட்டு , மணிபாரதி இருக்கும் அறைக்குள் சென்று “ என்னம்மா மணி ? “ என்று அவசரமாக கேட்டார். அவர் இருக்கும் நிலையில் யார் என்ன சொன்னாலும் அப்போது கேட்பதுபோல் தெரியவில்லை.

“ அப்பா , அவர்கள் என்ன கேட்டாலும் சரி ! சரின்னு கூறாதீங்க ! உங்கள் வருங்காலத்தையும், அம்மாவின் வருங்காலத்தையும் நெனைச்சு செயல்படுங்க அப்பா !” என்று யோசனை கூறினாள்

“ ப்பூ இதற்குத்தான் நீ கூப்பிட்டியா, எனக்கு எல்லாம் தெரியும். நீ பேசாமல் இரு ! “ என்று மகளிடம் கூறிவிட்டு வேகமாக சம்பந்தியிடம் பேச சென்று விட்டார்.

மணிபாரதியின் அப்பாவும், அம்மாவும் , மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளையின் அப்பா தணிகாசலம் கேட்ட நகைகள், பணம் மற்றும் சீர்வரிசை கேட்டதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்து விட்டு, மணிபாரதியின் திருமணத்திற்கு ,நாள் பார்த்து உடனேயே உறுதியும் செய்து விட்டார்கள்.

மணிபாரதியின் திருமணத்திற்குப் பத்து நாட்கள் இருக்கும்போது விதி விளையாட ஆரம்பித்தது, சிவலிங்கம் நடத்தும் தொழிலில் எதிர்பாராதவிதமாக பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மணிபாரதியின் திருமணத்தை இனி எப்படி நடத்துவது என்று சிவலிங்கத்திற்கு ஒரு கேள்விக்குறியானது. அவரும் ,மனைவியும் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போது,, அவர் சம்பந்தி தணிகாசலத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் மணிபாரதியைத் தன்னோட மகன் சிவாவிற்கு திருமணம் செய்ய வேண்டுமானால் மேலும் ஐந்து சவரன் நகையும், ஐயாயிரம் ரொக்கமும் கேட்டு எழுதியிருந்தார். ஆசைக்கும் ஒரு அளவில்லை என்பது போல் அவர் கடிதத்திலிருந்து தெரிய வந்தது.

கடிதத்தைப் படித்த மணிபாரதி “அப்பா ! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டதற்கெல்லாம் சரி ! சரின்னு இருந்தால், நீங்களும், அம்மாவும் நடுத் தெருவில்தான் நிற்பீங்க “ என்று சற்று கோபத்துடன் கடிந்து கொண்டாள் மணிபாரதி.

“ மணிபாரதி ! இப்போது நான் பேசியபடியே உனக்கு நகையெல்லாம் போட முடியுமா ? என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் நடத்தும் தொழிலில் இப்போது எதிர்பாராதவிதமாக ஏகப்பட்ட நஷ்டம். இந்த நெலமையில் மாப்பிள்ளையின் வீட்டிலிருந்து மேலும் ஐந்து சவரன் நகையும், ஐயாயிரம் பணமும் கேட்டு கடிதம் வேறு எழுதி இருக்கிறாங்க. “ என்று கூறும்போது அவர் முகத்தில் கவலை தெரிந்தது. .

கடிதம் வந்த இரு நாட்களிலே தணிகாசலம் காரிலிருந்து இறங்கி, மணிபாரதியின் வீட்டிற்குள் நுழைந்தார். நுழைந்தவர் “ என்ன சம்பந்தி கல்யாண வேலைகள் எல்லாம் எப்படியிருக்கு? நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்கும் என்று நெனைக்கிறேன். உங்ககிட்ட இருந்து ஒரு பதிலும் வரவில்லையே என்று கேட்டு விட்டு போகலாம் என்றுதான் வந்தேன். “. என்று என்னமோ தான் சிவலிங்கத்திற்கு கடன் கொடுத்து வைத்தவர்போல் கேட்டார்..

அப்பாவும் மணிபாரதியின் வருங்கால மாமாவும் பேசிக்கொண்டு இருப்பதை அருகில் உள்ள அறையிலிருந்து மணிபாரதி கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

“ சம்பந்தி! நாம் ரெண்டுபேரும் முன்பு பேசியபடி நான் எப்படியாவது கஷ்டப்பட்டு நகை, பணம் எல்லாம் கொடுத்திடறேன். மன்னிக்கணும் , இப்போது நாங்க இருக்கும் நெலமையில் மேலும் சிறப்பாக என்னால் செய்ய முடியாது” எனத் தயக்கத்துடன் கூறினார்.

“ அப்படின்னா நாம் உறுதி பண்ணியதோட நிறுத்திக் கொள்ள வேண்டியத்துதான். உங்க பொண்ணுக்கு வேறு இடத்திலே மாப்பிள்ளை பார்த்து கொள்ள வேண்டியதுதான் “ என தணிகாசலம் நெஞ்சில் ஈரமில்ல்லாமல் பேசினார்.

மணிபாரதியின் அம்மா குறுக்கிட்டு “ இப்போது நாங்க இருக்கும் நெலமையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏன்னா , அவர் நடத்தி வந்த வியாபாரத்தில் எதிர்பாராதவிதமாக பெருத்த நஷ்டம் ஏற்பட்டுடுச்சு. . எனவே நாங்கள் பேசியபடியே உங்களுக்கு செய்ய வேண்டுமானால்கூட நாங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர, மற்றதெல்லாம் வித்துதான் செய்ய வேண்டும். நீங்க மேலும் மேலும் நகை பணம்ன்னு கேட்டுக்கொண்டிருந்தால் நாங்க என்ன செய்ய முடியும் ? . இந்தக் கல்யாணம் நல்லபடியாக நடப்பதற்கு நீங்க மனசு வைத்தால்தான் நடக்கும். “ என்று அழுது கொண்டே கூறினாள்.

இவற்றையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மணிபாரதி, பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு முடிவுக்கு வந்தாள். தான் செய்யப்போவது தப்பில்லை. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். தன் அப்பா அம்மாவிடம் ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் இவர்களுக்கு இப்படித்தான் பாடம் புகட்ட வேண்டும் என்று ஒரு திட்டத்துடன் தணிகாசலத்தின் முன்பாக, தைரியமாக வந்து நின்று அவரிடம் வெட்டு ஓன்று, துண்டு இரண்டு என்பதுபோல் “ மாமா நீங்க கேட்டுக் கொண்டபடியே , என் அப்பா குறைவில்லாமல் செய்வார். அதைப் பற்றி நீங்க கவலைப்படவேண்டாம் “ என்று உறுதியுடன் கூறினாள். அவள் கூறிய பின்னர்தான் தணிகாசலம் மனத்திருப்தியுடன் சென்றார்.

மணிபாரதி தன அப்பா அம்மாவைப் பார்த்து , மெதுவாகத் தன் திட்டத்தை பற்றி கூறியவுடன், அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து “ வேண்டாம் மணிபாரதி அவர்கள் கேட்டுக் கொண்டபடியே எப்படியாவது, நாங்கள் ஏற்பாடு செய்து கொள்கிறோம். இதனால் உன்னோட வாழ்க்கையே சூனியமாகி விடும். இந்த விஷப் பரீட்சை.வேண்டாம், உன் வாழ்க்கையோட விளையாடதே ! என்றனர் இருவரும் பாசத்துடன். .

“ இல்லையப்பா இப்படி எல்லாருடைய பெண் வீட்டுக்காரங்க எல்லாம் சரி .. சரின்னு பயந்து போவதால்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, பெண் வீட்டுக்காரங்களை பம்பரம் போல் ஆட்டிப்படைக்கிறாங்க. எனக்குத் தோன்றிய இந்த திட்ட்ப்படிதான் நான் நடக்கப்போறேன். இதைப் பற்றி நீங்க யாரிடமும் மூச்சுவிடாதீங்க. அமைதியாக இருந்து என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க. அவர்களை நம் வழிக்குக் கொண்டு வர்றேன் “ என்று கூறியதிலிருந்து மணிபாரதியின் உறுதிப்பாடு தெரிந்தது.

“ மணிபாரதி உன் திட்டத்தின்படி மாப்பிள்ளையின் மனம் புண்படாதா ? அதனால் அவர்களை நாம பிளாக் மெயில் பண்ணறது போல் எனக்குக்த் தோணுதும்மா “ என்றார் மணிபாரதியின் அப்பா.

“ அப்பா, அவர்கள் மட்டும் நம்மிடம் பேசி உறுதி பண்ணி விட்டு, வாக்கை மீறி மேலும் நகையும் பணமும் இப்போது கொடுத்தால்தான் திருமணம் என்று நம்மை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கலாமா?. இது மட்டும் நியாயமா? கூறுங்க அப்பா” என்று வாதிட்டாள்.

“சரியம்மா உன் இஷ்டம்போல் நடத்து. உன் பிடிவாத குணத்தையும் மாற்ற முடியாது. முருகா! எல்லாம் நல்லபடியாக நடக்க நீதான் அருள் புரிய வேணும் ! “ என்று அருகில் உள்ள முருகன் படத்தை நோக்கி வேண்டிகொண்டார்.

திருமணம் வழக்கம்போல் பேசியபடியே பெண் வீட்டுக்காரங்க மூலமாக நடத்த வேண்டும் என்ற முறையில் சிவலிங்கம் தன் மகள் மணிபாரதியின் திருமணத்தை எப்படியோ கடனை வாங்கி திருமணத்தை நடத்திவிட்டார்.

சிவலிங்கம் வீட்டில்தான் புதுமணத் தம்பதிகளுக்கு முதல் இரவு. நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .

பால் செம்புடன் மணிபாரதி அலங்காரம் செய்யப்பட்ட முதல் இரவுக்கான அறையில் நுழைந்தாள்..தனது அப்பா வாங்கிக் கொடுத்தக் கட்டிலிலே குஷன் மெத்தையில் சாய்ந்து புதுப்பெண் மணிபாரதியின் வரவுக்காக, மாப்பிள்ளை சிவா ஆவலுடன் காத்திருந்தான். மணிபாரதி ஏற்கனவே கொள்ளை அழகு. . புதுப்பெண் அலங்காரத்தில் மணிபாரதி இன்னும் அழகாக் இருந்தாள். அவள் அழகில் சிவா மயங்கி, அவளை இதமாக பிடித்து அருகே உட்கார வைத்து , உணர்ச்சி மிகுதியில் அவளை ஆசையுடன் தழுவ முற்படும்போது , மணிபாரதி அவன் பிடியில் சிக்காமல் எழுந்து நின்று, அவனை மெத்தையில் தள்ளி விட்டு ஒதுங்கி நின்றாள்

“ என்ன மணிபாரதி பயமாக இருக்கிறதா ? முதலில் அப்படித்ததான் இருக்கும் போகப் போக எல்லாம் சரியாகி விடும் “ என்று அவளிடம் கூறிக்கொண்டே, அவளைத் தொட முயன்றபோது அவன் தோற்றுப் போனான்.

“ சிவா என் உத்தரவு இல்லாமல் என்னைத் தொடாதீங்க. என்னை உங்க மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், நான் கூறியபடிதான் நீங்க கேட்க வேண்டும். இல்லையெனில் நீங்க யாரோ ?! நான் யாரோ? “ சற்று கோபத்துடனே பேசினாள்.

சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு ஆததிரமாக் வந்தாலும், அதனை அடக்கிக்கொண்டு “மணிபாரதி ! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிரே. ஏன் இப்படியெல்லாம் பேசுரே ? “ என்று கேட்டான்.

“ அப்படி வாங்க வழிக்கு. நான் கூறுவதையெல்லாம் கவனமாகக் கேளுங்க. ..”. என்று கூறிவிட்டு தான் போட்ட திட்டத்தையும் தெரிவித்தாள். இறுதியாக தனது அப்பா அம்மா இருவரும் எங்க குடும்ப நெலமையை எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவனுடைய அப்பா இரக்கமில்லாமல் நடந்து கொண்ட விதத்தையும் கூறி முடித்தாள்.

மணிபாரதி பேசியதிலிருந்து , சிவாவும் அவள் பக்கம் நியாயம் இருப்பதையும் நன்கு உணர்ந்து கொண்டான். அவன் அவளை நோக்கி “மணிபாரதி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறாயோ, அதன்படி உன்னோட திட்டத்திற்கு நான் சம்மதிக்கிறேன் “ என்றான்.

மறுநாள் இருவருக்கும் மறுவீடு. மணிபாரதி புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும். அதற்க்கான ஏற்பாடுகளை தணிகாசலம் செய்துவிட்டு , “சிவா , மணிபாரதியை முகூர்த்தப் பட்டை கட்டிக்கொண்டு சீக்கிரம் நம்ம வீட்டிற்கு புறப்படச் சொல்லுப்பா “ என்று கூறினார். மேலும் சிவா வீட்டு நெருங்கிய உறவினர்களும் துரிதப்படுத்தினர்.

ஆனால் சிவா, அவன் அப்பா, அம்மாவை மட்டும் தனியாகக் கூப்பிட்டு மெதுவாக, தயக்கத்துடன் ஒரு போட்டோவை நீட்டினான். அந்தப் போட்டோவைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியுடன் “ என்ன சிவா யாரோ ஒருத்தியின் விதவைக் கோல போட்டோவை காட்டுகிறாய். “ என்று கேட்டார்கள்.

சிவா “ அப்பா, அம்மா நீங்க ரெண்டு பெரும் இந்தப் போட்டோவை , நான் ஏன் கொடுத்தேன் என்பதை மணிபாரதியிடமே போய் நீங்க தெரிந்து கொள்ளுங்க. அவள் தனி அறையில்தான் உட்கார்ந்து இருக்கிறாள் “ என்று கூறி அமைதியாகச் சென்று விட்டான்.

இருவரும் மணிபாரதியின் அறையை அடைந்து “ என்னம்மா மணிபாரதி ! நீ இன்னும் நம்ம வீட்டுக்கு புறப்படலையா ? சிவா ஏதோ விதவைக்கோல போட்டோவை நீ கொடுத்து அனுப்பியதாக கூறுகிறான். என்ன விபரம் ? “ என்று பதட்டத்துடன் கேட்டார்கள்.

“ மாமா, அத்தை நான் கூறுவதைக் கேட்டு நீங்க கோபப்படாதீங்க. இப்போது உங்களுக்கு என்ன வசதிக் குறைவு. எதற்காக என் அப்பா, அம்மாவிடம் இரக்கமில்லாமல் நகை, பணம் கேட்டு நடந்து கொண்டீங்க !. எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு , வீட்டை அடமானம் வைத்து நீங்க கேட்ட நகை பணம் எல்லாம் சீர்வரிசை எல்லாம் செய்திருக்காங்க என்பது உங்களுக்குத் தெரியுமா ? உங்க செய்கை கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கலே அதனாலே உடனடியாக எனது அப்பாவிடமிருந்து என் கல்யாணத்துக்காக வாங்கிய ரொக்க பணம் முழுவதும் நீங்க திருப்பித் தரனும். . என் அப்பா நல்ல வசதியாக இருந்தால் இப்போ உங்களிடம் நான் இந்த பணத்தையெல்லாம் கேக்கமாட்டேன்.”

மேலும் தொடர்ந்த மணிபாரதி அவர்களை நோக்கி “ ஒருவர் கவுரம் என்பது ஒரு பெண்னின் கல்யாணத்துக்காக வாங்கும் பணம், நகையில் இல்லை மாமா ! அவர்களுடைய நல்ல எண்ணங்களும் செயல்களும் என்பதை புரிந்து கொள்ளுங்க மாமா பெண் வீட்டுக்காரங்க விருப்பப்பட்டுச செய்வதை, நான் ஒண்ணும் தப்பாக கூறவில்லை . பணம் நகை சீர்வரிசை இப்படிச் செய்தால்தான் தங்கள் குடும்பத்திற்கு கவுரவம் என்று வறட்டுக் குடும்பப் பெருமை பேசி திரிகிறீர்களே அவர்களை நான் பிச்சைக்காரர்களை விட கேவலமாக நினைக்கிறேன். எனது அப்பா முன்புபோல் வசதியாக இருந்தால் என் அப்பா கொடுத்த பணத்தை நானும் உங்களிடம் இப்படி கேட்கமாட்டேன்.

“ அப்பாவும் அம்மாவும் தங்கள் நெலமையைக் கூறியும், நீங்க இரக்கமில்லாமல் பிடிவாதமாக் நடந்து கொண்டீர்களே. அதற்காகத்தான் கொடுத்த பணத்தைக் கேட்கிறேன் மாமா “ என்று மணிபாரதி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள்.

“மணிபாரதி நீயா இப்படி பேசுரே ! உங்க அப்பாவிடம் வாங்கிய பணமெல்லாம் நான் திருப்பிக் கொடுக்க முடியாது. உன்னால் என்ன செய்ய முடியும் “ என மாப்பிள்ளையின் தந்தை என்ற தோரணையில் பணத் திமிருடனும் கோபத்துடன் கத்தினார். ,

“நீ இப்போது என் மகனுடன் எங்க வீட்டிற்கு வருகிறாயா இல்லையா என் வீட்டில் ஏகப்பட்ட பெரிய மனிதர்கள் புதுப்பெண்ணையும் மாப்பிள்ளையும் பார்க்க காத்திருக்கிறாங்க. உடனே புறப்படு “ என்றார். .

“வரேன் மாமா ! உங்க மகனுடன் புதுமணப் பெண்ணாக அல்ல, நீங்க சற்று முன் பார்த்தீங்களே, என்னோட தோழியின் விதவைக் கோல போட்டோ, அக் கோலத்தில்தான் வருவேன். சம்மதமா? வந்து எல்லா உண்மைகளையும் கூறி, நீங்க வெளியே தலை நிமிர்ந்து நடக்க முடியாதபடி உங்க கவுரவத்தை, காற்றில் பறக்கும்படி செய்து விடுவேன். இது என் வெறும் வார்த்தைகள்தான் என்று அலட்சியமாக நீங்க நினைத்தால் நீங்கதான் வீணாக அவமானப்படப் போறீங்க. “ என எச்சரிக்கை செய்தாள்.

“மணிபாரதி இதுதான் உன்னோட முடிவா? நான் உன்னை அழைத்துச் செல்லவில்லேன்னா என்ன செய்வாய் ? “

“மாமா இதுதான் என் முடிவு. என் வழிக்கு நீங்க வந்து அழைத்துச் சென்றால் புதுப்பெண்ணாக , உங்க வீட்டு மருமகளாக வருவேன். நீங்க அழைக்காவிட்டாலும் ,கண்டிப்பாக உங்க வீட்டிற்கு வருவேன் , உங்க மகன் உயிரோடு இருக்கும்போதே விதவைக் கோல மருமகளாக , அப்போது உங்கலொடக் கவுரவம் என்ன ஆகும் என யோசித்து முடிவு சொல்லுங்க மாமா ! “ என்றாள்..

“ மாமா நான் புதுப்பெண்ணாக வரவா? இல்லை விதவைக்கோல மருமகளாக வரவா ? இப்போது முடிவு உங்க கையில்தான் இருக்கு மாமா .” என்று ஒவ்வொரு முறையும் மாமா என்று கூறும்போது மணிபாரதி சற்று அழுத்தம் கொடுத்தே பேசினாள்.

தணிகாசலம் தன்னோட தவறை உணர்ந்து, “மணிபாரதி என்னை மன்னித்து விடம்மா. உன் அப்பா, அம்மா அவங்க நெலமையைக கூறியும், நான் கண்டிப்புடன் நடந்து கொண்டது தப்புதானம்மா. பெண் நினைத்தால்…, புகுந்த வீட்டுக் கவுரவமும், பிறந்த வீட்டின் கவுரமும் அவள் கையில்தான் இருக்குதுன்னு மணிபாரதி உன் மூலம் நான் நன்கு உணர்ந்து கொண்டேன். நீ எங்களோட வீட்டுக்குப் புதுமணப்பெண்ணாக, மருமகளாகவே வந்து எங்க குடும்பக் கவுரவத்தைக் காப்பத்தும்மா “ என்று தணிகாசலம் வேண்டியவுடன்., மணிபாரதி மகிழ்ச்சியுடன் பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டு புதுமணப் பெண்ணாகக் கிளம்பினாள்,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *