பூவும், கல்லும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 12,860 
 
 

படுக்கையில், வாடிய கீரைத்தண்டாய் சோர்ந்திருக்கும் மனைவி சுசீலாவை, கவலை பொங்க பார்த்த பத்மநாபன், அப்படியே அவளின் நாடியை பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தான்.

டாக்டரின் முகத்தில், நம்பிக்கை ரேகை தென்படவில்லை.

ஆஸ்பத்திரியில் சொல்லிதான் டிஸ்சார்ஜ் செய்தனர்… “ஒரு வாரம் தான் தாங்கும்… வீட்டுக்கு கொண்டுபோய் அவங்க விருப்பப்பட்டதை கொடுத்து வழியனுப்பிடுங்க…’ என்று.

மருத்துவர் குழு தீர்மானித்த பின்னும், உள்ளூர ஒரு எண்ணம். ஓடிப் போய், தெரிந்த டாக்டரை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

பூவும், கல்லும்

பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லி, முதலில் பரிந்துரை செய்ததே அவர்தான். அவரது மருத்துவ அறிவுக்கு எட்டிய வரை, எல்லா பரிசோதனைகளையும் செய்து, ரிசல்ட்டுகளைப் பார்த்து, நோயின் தன்மை பிடிபடாததால் தான், உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அங்கும் சரிபடுத்த முடியாமல், கெடு விதித்து அனுப்பிய பின் தான், என்ன செய்ய முடியும் என்று நினைத்தாலும், பத்மநாபனின் வற்புறுத்தலுக்காக வந்திருந்தார்.

பெரிய ஆஸ்பத்திரியில் கொடுத்திருந்த ரிப்போட்டுகள், ப்ரிஸ்க்ரிப்ஷன்கள், எக்ஸ்-ரே, ஸ்கேன்… இத்யாதிகளை பார்த்தார

“”ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை தொடர்ந்து கொடுங்க; பார்ப்போம்…” என்றவர், பீஸ் வாங்க மறுத்து, வெளியேறினார்.

அவர் கிளம்பிப் போன சிறிது நேரத்தில், நாராயண மூர்த்தி வந்தார்..

கடந்த பத்து நாட்களாக அவர் ஊரில் இல்லை. சதுரகிரி மலைக்கு போய்விட்டு வந்திருந்தார்.

“”என்னடா பத்து…”

“”சுசீலாவுக்கு நாள் குறிச்சுட்டா மாமா…” எனும் போதே, பத்மநாபன் கண்களில் நீர் கொப்பளித்தது.

“”வீட்டை பகைச்சுக்கிட்டு, கட்டின புடவையோடு என்னை நம்பி வந்தாள். தனக்காக வரலே, எனக்காகவே வந்தாள். ஒவ்வொரு நிமிஷமும் எனக்காகவே வாழ்ந்தாள். பார்த்து பார்த்து ருசியா சமைச்சு போட்டு, துணி துவைச்சு கொடுத்து, ஒரு நோய் நொடி அணுகாம, என்னைப் பாதுகாத்தவள் உயிரை, என்னால் பாதுகாக்க முடியாம போகும் போலிருக்கே மாமா…” என்று, அவர் தோளில் சாய்ந்து கதறினான்.

“”அவளுக்கு வந்த நோய், எனக்கு வந்திருக்கக் கூடாதா… அவளைப் போகவிட்டு, நான் மட்டும் வாழ முடியுமா… நானும் அவளோடயே போய்ச் சேர்ந்துடப் போறேன். எங்க ரெண்டு பேரையும் கிட்டேயிருந்து வழியனுப்பிடுங்க…” என்றான்.

நாராயண மூர்த்தி கூட கலங்கிப் போனார்; சுதாரித்துக் கொண்டு, அவனைத் தேற்றினார்.

“”என்னடா சொன்னாங்க டாக்டர்ஸ்…”

“”வாயில் நுழையாத பெயரெல்லாம் சொன்னாங்க. நாலஞ்சு வியாதிகள் ஒண்ணா பூத்திருக்காம். படிப்படியா உயிரை உறைய வச்சுக்கிட்டுருக்காம். பத்து லட்சத்துல ஒருத்தருக்கு வர்ற அபூர்வ வியாதியாம். இதற்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கலையாம்…!

“”என் சுசீலா, சாதாரண பெண்ணில்லை மாமா. அபூர்வ பிறவி; லட்சத்தில் ஒருத்தி; கோடியில் ஒருத்தின்னு சொல்லிச் சொல்லி பூரிச்சு போவேனே மாமா… அதைக் கேட்டுதான், அந்த அபூர்வ வியாதி வந்து சேர்ந்திடுத்து…”

“”அழாதடா… டாக்டர்ஸ் கடவுள் இல்ல; கடவுள் மாதிரி… அவ்வளவுதான். உண்மையான கடவுள் மேல இருக்கான். அவனுக்குத் தெரியும், யாரை, எதற்கு, எப்படி பயன்படுத்தி, எதை சாதிக்கணும்ன்னு…

“”பாரேன்… சதுரகிரியில் ஒரு மண்டலம் இருந்து, நிஷ்டைப் பண்ணப் போன என்னை, பத்தாவது நாளே, “உனக்கு ஊர்ல முக்கியமான வேலையிருக்கு போடா… அந்த பத்மநாபன் மனைவி உயிரைக் காப்பாத்து…’ன்னு பிடறியில போட்டு துரத்தி அனுப்பினார்னா பாரேன்…” என்றபடி, சுசிலாவை கிடத்தியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

கட்டில் அருகே அமர்ந்தார்.

இருபத்தாறு வயதேயான சுசீலாவா… இப்படி உருக்குலைந்து கிடப்பது; பேச்சு கொடுத்தார்.

“”மா… நாராயணன் வந்திருக்கேன்… தெரியறதா…?”

நலிந்து, சுவாசத்துக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், சிரமமாக இமை திறந்து, பலவீனமாகப் பார்த்தாள்.

உலர்ந்த இதழ்களில் கடுகளவு புன்னகை.

“”வா… ங்… கோ…”

“”நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைமா… நீ இப்படி பண்ணுவேன்னு…” என்றார் தடாலடியாக.

“”…”

“”என்ன பார்க்கற… உன்னை ஆசையாசையா காதலிச்சு, நீயே உலகம்ன்னு உன்னை நேசிச்சு… குழந்தை மாதிரி வாழ்ந்துண்டு ருக்கான் பத்மநாபன். அவனுக்கு இப்ப ஒரு கண்டம் வந்திருக்கு; பெரிய ஆபத்து. உயிர்போறது போல ஒரு பிரச்னை.

“”யாராலும் அவனைக் காப்பாற்ற முடியாது. தர்ம பத்தினியால் மட்டும்தான் சாத்தியம்ன்னு எனக்கு மேலிருந்து உத்தரவு. நிஷ்டையை பாதியில் விட்டுட்டு ஓடோடி வந்திருக்கேன். நீயானால் சாவகாசமா கட்டில்ல படுத்திருக்கியே…” என்றார்.

குழம்பிப் போய் நின்றான் பத்மநாபன்; புருவம் உயர்த்தி பார்த்தாள் சுசீலா.
நாராயண மூர்த்தி, சுற்று முற்றும் பார்த்தார்; எழுந்தார்; ஜோல்னா பையிலிருந்து ஒரு பொருளை எடுத்தார்.

“”இது ஏதோ கருங்கல்ன்னு நினைக்காதே… இது இமயமலைலருந்து கொண்டு வரப்பட்ட சிவன் மூர்த்தம்…” என்றபடி அதை அங்கிருந்த மாடம் ஒன்றில் வைத்தார்.

“”ஒரு சித்தர் கொடுத்தது… ரொம்ப பவர்புல். இப்பவே இந்த அறைக்குள்ள எனர்ஜிவேவ் பரவறது பாருங்க… சக்தி அலை… பீல் பண்ண முடியறதில்லையா. கூடவே மானசரோவரில் வீசுறாப்ல ஒரு குளிர்ந்த காற்று வீசப் போறது…” என்றபடி, ஜோல்னா பையிலிருந்து இன்னொரு பொருளை எடுத்தார்.

“”பூச்செடி…”

வேரும், வேரடி மண்ணுமாய் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஓரடி உயரமேயிருந்த அந்தச் செடி, பாலிதீன் கவரில் சுற்றப்பட்டிருந்தது.
“”சாதாரண நித்தியமல்லிதான். மலையில, ஆசிரமத்துல வளர்க்கறது. இப்ப இது மந்திரச் செடியாய் பாவிக்கணும். இதை, இந்த ஜன்னலண்டை காத்தும், வெளிச்சமும் படற இடத்துல வச்சிருக்கேன். ஆச்சா… பத்து…

“”இதுக்கொரு மண் தொட்டி ரெடி பண்ணி அதுல நட்டு, இதே ஜன்னலோரம் வச்சு தினமும் தண்ணீர் விட்டு வரவேண்டியது உன் வேலை. இது பூத்துண்டு இருந்த செடிதான். மேல்பாகம் உடைச்சு கொண்டு வந்திருக்கேன். சீக்கிரமா துளிர் விட்டு, பூக்க ஆரம்பிச்சுடும். கவனமா பார்த்துக்கோ…” என்றபடி சுசீலாவிடம் வந்தார்.

“”இதோ பாரும்மா… நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணுதான். இந்தச் செடியில பூக்க ஆரம்பிச்சதும், உன் கையால ஒரே ஒரு பூவை மட்டும் கிள்ளி, அதோ அந்த மாடத்துல இருக்கிற மூர்த்தத்துக்கு போடணும். தினம் ஒரு பூ வீதம், இருபத்தோரு நாளைக்கு போட்டு வரணும். ஆரத்தி, நைவேத்தியம், பூஜைன்னு எந்த வேலையும் தேவையில்லை.

“”நித்தம் ஒரு பூ சாத்தினால் போதும். ஒரே ஒரு நிபந்தனை… உன் கையால், நீ மட்டும் தான் அந்தக் காரியத்தை செய்யணும். தவறினால் உன் புருஷனை ஆபத்துலருந்து காப்பாத்தவே முடியாதும்மா… அவன் மேல உனக்கு உண்மையான அன்பிருந்தால், பாசமிருந்தால், எப்படியாவது இந்தக் கடமையைச் செய்துரு… நான் வரேன்…” என்று கிளம்பினார்.

பின்னாலே, பத்மநாபன் விரட்டிக் கொண்டு வந்தான்.

“”என்ன மாமா… எனக்கு ஆபத்துன்னு சொல்லி மரணப் படுக்கையில இருக்கிற சுசீலாவை மேலும் கலவரப்படுத்தீட்டீளே! கை கால் அசைக்க முடியாம கிடைக்கிறவளை, எழுந்து போய் பூபறிச்சு சாமிக்கு போடுன்னு சொல்றேளே… இதெல்லாம் சுய நினைவோடுதான் சொல்றேளா…

“”வேடிக்கை பண்ண இதுவா சமயம்…! அப்படியே எனக்கு ஆபத்து வந்தால் அனுபவிச்சுட்டு போறேன். சுசீலாவின் உயிரை விட, என் உயிரா பெருசு. அவளைக் காப்பாத்த எதாவது செய்வேளோன்னு நினைச்சேன். நீங்க அவளை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லையே…” என்று பொரிந்தான்.

அவனை ஆழமாகப் பார்த்த நாராயண மூர்த்தி, “”நீ வேற, அவள் வேறயா; உன் உயிர் வேற, அவள் உயிர் வேறயா? தனக்கு ஆபத்துன்னால் தாங்கிக்க முடியற உன்னால், மனைவிக்கு ஒரு ஆபத்துன்னால் தாங்க முடியறதா… அப்படிதானே அவளுக்கும்.

“”உன்னை ஆபத்துலருந்து காப்பாத்த, அவள் முயற்சி பண்ணும் போது, அவள் தன்னையும் காப்பாத்திக் கொண்டவளாவாள். இது ஒரு யூகம்தான், நம்பிக்கைதான், வேண்டுதல்தான். நான் சொன்னதை மட்டும் நீ சரியாக செய்து வா…” என்று தட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

வீடு திரும்பியவரிடம் மனைவி, “”சுசீலாவ பாத்தேளா… சின்ன வயசுல அவளுக்கு இப்படியொரு துர்பாக்கியமா…! அவள் பெற்றோருக்கு இப்பவாவது பத்மநாபன் சேதி சொன்னானா… அவா வருவாளா…? நீங்களாவது ஒரு நடை அரக்கோணம் போய் அவள்ட்ட பேசறேளா…”

“”அவசரப் படாதே… பத்து நாள் போகட்டும்…”

“”டாக்டர்ஸ் ஏழுநாள் கூட, தாங்காதுன்னாளாமே…”

“”அரை நிமிஷம் கூட தாங்காதுன்னு சொல்லி கைவிட்ட கேஸ்லாம், ஜிங்குன்னு எழுந்து உட்கார்ந்ததை பார்த்திருக்கேன். நீ சுசீலாவுக்கு ஏதாவது உதவி பண்ணனும்ன்னு நினைச்சா… இப்படி புலம்பாம, பூஜையறைல உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணு. முடிஞ்சா உன் சினேகிதிகளை வரவழைச்சு கூட்டுப் பிரார்த்தனை பண்ணு…”

“”நீங்க சொல்லிதான் அதெல்லாம் நான் செய்யணுமா… ஊர்ல இருக்கிற அத்தனை தெய்வத்துக்கும் வேண்டிண்டிருக்கேன். தெரிஞ்சவாளுக்கெல்லாம் போன் போட்டு, “ப்ரே’ பண்ணச் சொல்லிட்டேன்…”

“”சந்தோஷம்…”

“”ஆமாம். ஊர்லருந்து வந்தேள்… விஷயம் கேள்விப் பட்டதும், தோட்டத்துலருந்து ஒரு செடியைத் தோண்டியெடுத்தேள்… பையில் வச்சுண்டேள். கூடவே ஒரு கல்லையும் எடுத்து போட்டுண்டு போனேள்… ஏன்னு கேட்க கேட்க, பதில் சொல்லாமேயே போயிட்டேளே…”

மனைவியை எச்சரித்தார் நாராயண மூர்த்தி.

“”அது பிரம்ம ரகசியம். நீ கேட்கவும் கூடாது; நான் சொல்லவும் கூடாது. இப்படி ஒண்ணு நடந்ததே வெளி உலகத்துக்கு தெரியப்படாது… குறிப்பா பத்மநாபனுக்கு… சரியா…”

தலையாட்டிக் கொண்டாள்.

மறுநாள் பத்மநாபன் வந்தான்.

“”என்னடா நான் சொன்னது போல செய்தியா…?”

“”செஞ்சுட்டேன் மாமா. மண் தொட்டி வாங்கிவச்சு செடியை பதியவச்சு, தண்ணி விட்டேன்…”

“”சுசீலாவுக்கு மருந்தெல்லாம் கொடுத்தியோ…?”

“”ம்… டவல்பாத் பண்ணி, ஆகாரம் ஊட்டி, மருந்தும் கொடுத்துட்டுதான் வந்தேன்…”

“”பக்கத்திலிருந்து கவனிச்சுக்காம ஏன் வந்தே…”

“”எதிர் வீட்டு அக்காவை துணைக்கு வச்சிட்டு வந்தேன். ஒரு சேதி சொல்ல…”
“”சொல்லு…”

“”எப்பவும் ஒரே போஸ்ல கிடந்த சுசீலா… இப்ப தலையை அசைச்சு ஜன்னலண்ட இருக்கிற செடியையும், மாடத்துலருக்கிற மூர்த்தத்தையும் மாறி மாறி பார்க்கறா மாமா…”

“”இதையே பெரிய விஷயம்ன்னு சொல்ல வந்துட்டியே… போடா… நேத்திக்கு வந்த கனவுல, நீயும் சுசீலாவும் சேர்ந்து கோவிலுக்கு போனேள் தெரியுமா… கலகலன்னு பேசி சிரிச்சுண்டு… அந்த நாள் வரும் பார்…” என்றார்.

தினமும் வந்து…

“”செடி துளிர்க்கறது, இலை விரிக்கறது… குச்சியில் பச்சை திரும்பறது… மொட்டு வைக்கறது…” என்று தகவல் சொன்னவன், அன்று வேகமாக வந்து, “”செடி பூத்திருக்கு…” என்றான்.

“”அது தெரிஞ்சதுதான். சுசீலா அதை பறிச்சு சாமிக்கு போட்டாளா…?”

“”அதை சொல்லதான் வந்தேன் மாமா… பூ பறிக்க முயற்சி செய்தாள். கைதாங்கலாய் எழுப்பி, நடத்தினேன். தன் கையால் பூ கொய்து மாடத்துல வச்சுட்டு என்னைப் பார்த்தாள் மாமா…! உடம்பு சிலிர்த்து போச்சு… வந்து பாருங்கோ மாமா…!”

“”நான் இப்ப வரமாட்டேன்… இருபத்தோரு நாள் முடிஞ்சப்பறம் வறேன்… ஏழுநாள் தான் தாங்கும்ன்னு சொன்ன டாக்டரையும் கூட்டிண்டு வறேன்…” என்றார்.

அவன் சிரித்தபடி நகர்ந்தான்.

“நம்பிக்கை எதையெல்லாம் சாதிக்கறது…!’ என்று வியந்தபடியே, பத்மநாபனை பார்த்தபடி நின்றார், நாராயண மூர்த்தி.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *