பூவண்ணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 623 
 
 

“சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில் இருந்த என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் பமீலா. கண்ணீரைத் தன் கைகளினால் துடைத்துவிட்டாள். இரவு முழுவதும் நான் உறங்கவில்லை என்பதை அவள் அறிவாள்.

“இண்டைக்கு கனடாக் கோல் வருமெண்டு ராஜன் அண்ணா சொன்னவரா?”

“ஓம் சாகித்தியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை வந்து சொல்லிட்டுப் போனவர். நான் மாத்திரம் போய்க் கதைச்சிட்டு வாறேன்.”

நான் சென்றால் அழுது ஒப்பாரி வைப்பேன் என்பதால், என்னைக் கூட்டிச் செல்வதைத் தவிர்த்தாள் பமீலா. அவள் படிகளில் இறங்கிக் கீழே போகவும், நான் படுக்கையில் இருந்து எழுந்து மாடிமுகப்புக்குப் போனேன். கீழே நின்று, கையைக் காட்டிவிட்டு நடக்கத் தொடங்கினாள் பமீலா.

பமீலா என்னைவிட மூன்று வயது சிறியவள். என்னுடன் கணினித் துறையில் செயல்முறைப் பயிற்றாசிரியராக வேலை செய்கின்றாள். நான் இந்த வாடகை வீட்டில் இரண்டு வருடங்களாக இருந்து வருகின்றேன். எட்டு மாதங்களுக்கு முன்னர் தான், நான் பமீலாவை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்.

மூன்று நாட்களுக்கு முன்னர், கனடாவில் இருந்து ரமணனின் கடிதம் வந்தது முதல் நான் செயலற்றுப் போனேன். என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. வேலைக்கும் போகவில்லை. இந்த மூன்று நாட்களில் ரொயிலற் பாத்றூம் என நான்கு தடவைகள் தான் நான் அறையைவிட்டு வெளியே போனேன்.

`என்னை மறந்துவிடு சாகித்தியா’ கடிதத்தில் இருந்தது இதுதான்.
உடனே ரமணனுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவனுக்கான ரெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் பல தடவைகள் `கொமியூனிக்கேசன் சென்ரர்’ சென்று முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. எமது வீட்டுக்கு இடப்புறமாக, இரண்டு வீடுகள் தள்ளி, ஒழுங்கையின் கடைசி வீட்டில் இருக்கும் ராஜன் அண்ணா கொமியூனிக்கேசன் சென்ரரில் வேலை செய்வதால், அவரும் பல தடவைகள் முயற்சித்துப் பார்த்துவிட்டார்.

“உன்ரை தங்கைச்சிமாரை, அம்மாவை யோசிச்சுப் பார். நீதானே வீட்டிலை மூத்த பிள்ளை… உன்னோடை கதைக்கப் பிடிக்காதவனை, வாழப் பிடிக்காதவனை நினைச்சு ஏன் வருந்துகிறாய்? சில மாதங்களாகப் பழகிப் பிரிந்தவனை நினைச்சுக் கலங்காதை! விட்டுத்தொலை!” என்கின்றாள் பமீலா.

இப்பிடிச் சொன்ன பமீலா தான், பின்னர் எனக்கு உதவ முன் வந்தாள். அவளுக்கு கனடாவில் உறவினர்களும் சில நண்பர்களும் இருந்தார்கள். நண்பி ஒருவர் மூலம் ரமணனைப் பற்றி அறியும் முயற்சியில் தொடர்பு கொண்டாள். அவள் ரமணனைப் பற்றி அறிந்துவிட்டு தொலைபேசி எடுப்பதாகச் சொல்லியிருந்தாள்.

பமீலா என்ன செய்தியுடன் வருவாள்? என் இருதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது. மண்டை வெடித்துவிடுமாப் போல தலை விட்டுவிட்டு வலித்தது.

வெளியே எட்டிப் பார்த்தேன். பமீலா, எங்களது ஒழுங்கையில் இருந்து `பிக்கறிங்ஸ் வீதிக்கு’ அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பிக்கறிங்ஸ் வீதியிலிருந்து வலதுபுறம் திரும்பி, கொட்டகேன வீதிக்குச் சென்றால் `கொமியூனிக்கேசன் சென்ரர்’ வரும். அங்கு சென்றுவர குறைந்தது அரை மணி நேரமாவது எடுக்கும்.

என் மனம், ரமணனை முதன் முறையாகச் சந்தித்த நிகழ்விற்குத் தாவியது.

எமது குடியிருப்பு `பிக்கறிங்ஸ்’ வீதியிலிருந்து ஒரு கிளையாக நீட்டிக்கொண்டிருக்கும் ஒழுங்கையில் இருந்தது. சில மாடிவீடுகள் உட்பட, இருபத்தி இரண்டு வரை வீடுகளுக்கு இலக்கங்கள் இடப்பட்டிருந்தன. சிங்களவர் தமிழர் என பலரது குடியிருப்புகள். ஒரு வாகனம் இன்னொரு வாகனத்தை விலத்த முடியாத `நோ எக்‌ஷிற்’ ஒழுங்கை.

அப்பெல்லாம் நாட்டுச் சூழ்நிலையினால் மக்கள் – இத்தாலி, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று வெளிநாடுகளுக்குப் போகத் தொடங்கி, முழத்துக்கு முழம் `கொமியூனிக்கேசன் சென்ரர்கள்’ உருவாகியிருந்தன. வீடுகளில் தொலைபேசி இருந்தாலும் `இன்கமிங்’ அழைப்பு மாத்திரம் தான் இருந்தது. வெளிநாட்டில் உள்ளவருடன் கதைக்க வேண்டுமாயின் கொமியூனிக்கேசன் சென்ரருக்குத்தான் போக வேண்டும். `உலகத்திற்கு அதிகளவு அகதிகளை உற்பத்தி செய்த நாடு இலங்கை தான்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார்.

இன்னொரு பக்கம் பொலிசும் இராணுவமும், தலைநகர் கொழும்பிலும் அதைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும் புலிகளைத்தேடி தமிழ் மக்களை வேட்டையாடித் திரிந்தார்கள். நள்ளிரவில் கொட்டகேன பொலிஸ் ஸ்ரேசனுக்கு அண்மையாகக் கிழம்பும் நாய்க்குரைப்பு, மெல்ல விசாலித்து ஊருக்குள் பவனி வரும். விடியப் பேப்பரைப் பார்த்தால் `இத்தனை பேரைப் பிடிச்சிருக்கினம்’ என்று நியூஸ் வரும். எங்கள் ஒழுங்கையில், இரண்டாம் நம்பர் வீட்டில், ஒரு `காக்கும் கடவுள்’ இருக்கின்றார். அவர் ஒரு தமிழ்ப் பொலிஸ். ஒழுங்கையில இருக்கிற அத்தனை வீடுகளையும், தன்னுடைய கண்காணிப்பில வைச்சிருக்கின்றார். அவரின் கருணையாலை எங்கட ஒழுங்கைக்குள்ளை தேடுதல் வேட்டைக்கு ஒருத்தரும் வாறதில்லை. நானும் பமீலாவும் மூசி மூசி இரவு நித்திரை கொள்வோம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. மொட்டைமாடியிலிருந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். மொட்டை மாடியில் சில பூச்சாடிகளும் இரண்டு பிளாஸ்ரிக் கதிரைகளும் இருக்கின்றன. தூரத்தே பர்ணசாலையில் இருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்குமளவுக்கு சுற்றாடல் அமைதியாக இருந்தது. பமீலா இன்னும் நித்திரை விட்டு எழவில்லை. தூரத்தே ஒரு முச்சக்கரவண்டி வந்துகொண்டிருந்தது. எமது வீட்டுக்கு நேர் எதிராகவிருந்த வீட்டின் முன்பாக நின்றது. அதற்குள்ளிருந்து ஒரு தாயும் மகனும் சில பொதிகளுடன் இறங்கினார்கள். அவர்களது தோற்றங்கள் எனக்கு அப்படித்தான் உணர்த்தின. கடந்த மூன்று மாதங்களாக அந்த வீடு பூட்டிக் கிடந்தது. கேற்றின் சங்கிலியில் தொங்கிய பூட்டை அந்தப் பெண்மணி திறந்தார். பின்னர் குதிக்கால் எத்தலுடன், கழுத்தை உயர்த்தி பறவை போல சுற்றுமுற்றும் பார்த்தார். உள்ளே போய்விட்டார். மகன் ஒவ்வொரு பொதிகளாக உள்ளே எடுத்துச் சென்றான். அவர்கள் கண்களுக்கு நான் மொட்டை மாடியில் இருந்தது தெரியவில்லை. அந்த வீட்டில் பெரும்பாலும் ஆக்கள் இருப்பது குறைவு. உரிமையாளர் புத்தளத்தில் ஒரு கடை வைத்திருப்பதாகவும், கொழும்பு வரும் வேளைகளில் அங்கு வந்து தங்கிக் கொள்வார்கள் எனவும் அறிந்தேன். சில வேளைகளில் அவர்களின் உறவினர்கள் வந்து தங்கிச் செல்வதுண்டு.

சற்று நேரத்தில் உள்ளே சென்ற பையன் ஒரு தேநீர்க் கோப்பையுடன் வெளியே வந்தான். கேற்றைப் பிடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் தேடுதல் செய்தான். கருகருவென்று அடர்ந்த மீசை, தலைமுடியையை கோடை காலத்துக்கு ஏற்றவாறு அளவாக வெட்டியிருந்தான். அவனைப் `பாஸ்போர்ட்’ அளவில் படம் பிடித்தால் நடிகர் அரவிந்தசாமி போலவும், முழுப்படத்தில் அகத்தியர் போலவும் இருப்பான்.

அந்த நேரத்தில் மொட்டைமாடியிலிருந்த றோசாச்செடியிலிருந்து ஒரு பூவை இழுத்து முகர்ந்து கொண்டிருந்தேன். கேற்றில் `டங் டங்’ என்று சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசை நோக்கிப் பார்க்கையில் அவன் என்னையே பார்த்தபடி நின்றான். லேசாகச் சிரித்தான். திடீரென்று என் கைகளைப் பிடித்த பமீலா, என்னை உள்ளே அறைக்குள் இழுத்தாள். நான் அந்தப் பையன் பற்றி பமீலாவிடம் சொன்னேன்.

“அதற்குள்ளேயே கண் போட்டு விட்டாயா?” கேலி செய்தாள் பமீலா. பின்னர் இருவருமாக வெளியே வந்து பார்த்தபோது, தன் வீட்டு முற்றத்தில் ஒரு கதிரையைப் போட்டு புத்தகம் ஒன்றை விரித்துப் பார்த்தபடி இருந்தான் அவன்.

மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த அவன், நானும் பமீலாவும் வேலைக்குப் போவதைப் பார்த்தபடி நின்றான். இரண்டாம் நாள் எங்களைப் பின் தொடர்ந்தான். மூன்றாம் நாள் எங்களுக்கு முன்பாகவே போய், பஸ் ஸ்ராண்டில் காத்து நின்றான். நாங்கள் ஏறிய பஸ்சிலே அவனும் ஏறிக் கொண்டான். பமீலா என்னைப் பார்த்துச் சிரித்தாள். நாங்கள் இருவரும் விறுவிறெண்டு பின்புறம் நகர்ந்து சென்று, பின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். தூரத்தே நின்று எங்களைப் பார்த்தான். எனது இருக்கைக்கு அருகில் ஒரு வெற்றிடம் இருந்தது. மெதுவாக நகர்ந்து வந்து அதில் அமர்ந்து கொண்டான். அவன் உடல் என்னைச் சிறிது நெருக்கியது. பமீலா என் தொடையில் பலமாகக் கிள்ளினாள்.

“வேலைக்குப் போகின்றீர்களா?” என்னைப் பார்த்துக் கேட்டான் அவன். நான் பேசாமல் வாய் மூடி மெளனமாய் இருந்தேன்.

“கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டுமோ?” பமீலா எரிந்து விழுந்தாள்.

நான் பமீலாவின் கையை அழுத்தி, பேசாமல் இருக்குமாறு ஜாடை செய்தேன். அதன் பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. `கிராண்ட்பாஸ்’ வீதிக்கு அருகாமையில் இறங்கிக் கொண்டான்.

வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, தனது வீட்டு வாசலில் நின்று எங்களைப் பார்த்தபடி நின்றான். இருவரும் நேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றோம். அப்போது அவனது கண்கள் மொட்டை மாடி நோக்கி விரிந்திருந்தன. பமீலா தன் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து, குழந்தை ஒன்றைத் தாலாட்டுவது போல அபிநயித்து `உனக்குக் குழந்தை வேண்டுமா?’ என்று சைகையால் கேட்டாள். அவன் வெட்கம் தாளாமல் வீட்டிற்குள் ஓடினான்.

அந்தக் காலங்கள் கொஞ்சம் அட்டகாசமானது. இளம் கன்று பயமறியாது அல்லவா? ஆனாலும் பமீலா இதில் சூடு கண்ட பூனை. அக்கறையுடன் அவதானமும் கொண்டவள் அவள்.

“சாகித்தியா… அவன் உன் மீதுதான் கண் போட்டிருக்கின்றான். நான் உள்ளே போகின்றேன்.”

பமீலா உள்ளே சென்றதும், அவன் மீண்டும் வெளியே வந்தான். கைகளில் அபிநயம் பிடித்து ஏதோ கேட்டான். என்னை நடனம் ஆடச் சொல்கின்றானா? பூவைப் பறித்து தன்னிடம் எறியச் சொல்கின்றானா? புரியாதது போல நின்றேன். உள்ளே சென்றவன் புத்தகம் ஒன்றுடன் திரும்பி வந்தான். அதைத் தொட்டுக் காட்டி, வேண்டும் என்றான். உள்ளே நின்று எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்த பமீலா `C புறோகிறாமிங்’ புத்தகம் ஒன்றை உள்ளிருந்து நீட்டினாள். அதை பமீலாவிடம் இருந்து வாங்கி, கைகளில் தூக்கிப் பிடித்து `இது வேண்டுமா?’ என்று சைகையால் கேட்டேன். அவன் அடக்கமுடியாமல் சிரித்தபடி வீட்டிற்குள் திரும்பவும் ஓடினான்.

மறுநாள் வேலை முடிந்து வரும்போது எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான்.

“சாகித்தியா… உனக்கு விருப்பம் எண்டாக் கதை. நான் தடையாக இருக்கவில்லை” சொல்லிவிட்டு மாரியம்மன் கோவிலுக்கு அருகினில் இருந்த கடைக்குள் புகுந்து கொண்டாள் பமீலா. அவள் சென்றதும், அவன் விரைவாக நடந்து வந்து என்னுடன் இணைந்து கொண்டான். இப்படித்தான் ரமணனும் நானும் ஒருவருக்குள் ஒருவராக உள்ளிளுக்கப்பட்டோம்.

முதல்நாள் பஸ்சில் கேட்ட கேள்விக்கு அப்போதுதான் நான் பதில் கூறினேன். பதிலுக்கு, “நான் draftsman ஆக யாழ்ப்பாணத்திலை வேலை செய்தனான். கனடா போக எண்டு வந்து நிக்கிறன்” என்றான்.

“நேற்று கிராண்ட்பாஸ் வீதியில் இறங்கிக் கொண்டீர்களே?” – நான்.

“அதுவா…? பழைய புத்தகங்கள் வாங்கப் போனனான். எனக்குக் கதைப்புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.” – அவன்.

”உங்களுக்கு கொட்டகேன லைப்பிரரி தெரியாதா? அங்கே நிறையைத் தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றனவே!”

“தெரியும். போய் இருக்கிறன். எனக்கு நிரந்தர வதிவிட முகவரி இஞ்சை இல்லாததாலை புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வரேலாது.”

“என்னென்ன புத்தகங்கள் என்று எழுதித் தாங்கோ. நான் எடுத்துத் தாறன். என்னட்டை லைப்பிரரி மெம்பசிப் இருக்கு.”

சனிக்கிழமை ஒரு பெரிய பட்டியல் தந்தான். அவனையும் கூட்டிக்கொண்டு நூலகத்திற்குச் சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து நூலகத்திற்குச் செல்ல ஒரு குறுக்கு வழி—ஒற்றையடிப் பாதை— இருந்தது. ஐந்து நிமிடத்தில் போய் விடலாம். ரமணனுக்கு அந்த மனித சஞ்சாரமற்ற கள்ளப்பாதையைக் காட்டிக் குடுத்தேன். “இதில் போவதால் எனக்குப் பத்து நிமிடங்கள் மிச்சம். அதைவிட இந்த வழியில் ஒரு அழகியுடன் வருவது என்றால் இரட்டிப்புச் சந்தோசம்.” நான் அவனுக்கு கள்ளப்பாதையைக் காட்டிக் குடுக்க, அவன் மனதில் கள்ள எண்ணங்கள் உதயமாயின.

திரும்பி வரும்போது, ஒழுங்கை வந்தவுடன் பிரிந்து கொண்டோம். நான் முன்பாகவும், ரமணன் சற்றுப் பின்பாகவும் வந்தான். எங்களின் இந்த நாடகம் இன்னமும் ஒழுங்கைக்குள் அரங்கேறும் அளவுக்கு முன்னேறவிலை. ரமணனின் அம்மாவுக்கு மகனை வெளிநாட்டுக்கு அனுப்பும் பரபரப்பு. எங்கள் கீழ் வீட்டில் இருக்கும் வீட்டின் உரிமையாளர், சூரியன் உதிக்க முன்னர் வேலைக்குச் சென்று மறைந்த பின்னர் தான் வீட்டிற்கு வருவார். வீட்டிற்கு வெளிப்புறமாக படிகள் இருப்பதால், அவருக்கு எங்களால் எதுவித தொல்லைகளும் இல்லை. மாதாமாதம் வாடகைப்பணம் போய்ச் சேர்ந்தால் சரி.

ஒருநாள் மாலை, வேலையால் வந்து முழுகிவிட்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்றேன். பமீலா கிறிஸ்தவ மதம் என்பதால் கோவிலுக்கு வருவதில்லை. கோவிலின் அருகில் இருந்த கடையில் பால் பழம் தேங்காய் வாங்கும் போது, “அப்பா கனடா போய்ச் சேர்ந்துவிட்டாரா?” என்று கடைக்காரர் கேட்டார்.

“இல்லை… நைரோபியில் தங்கி நிற்கின்றார். இந்தமுறையும் அவருக்கு பயணம் சரிப்பட்டு வரவில்லை,” என்றேன்.

“பாவம் மனிசன்,” என்றார் அவர்.

கற்பூரத்தைக் கொளுத்திவிட்டு, கோவிலின் முன்பிருந்த கல்லில் தேங்காயை ஓங்கி எறிந்தேன். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாகச் சிதறி, தமிழரின் வாழ்வு போலப் பறந்தன. கோவிலை வழிபட்ட பின்னர், எதிரே இருக்கும் சைவச் சாப்பாட்டுக்கடையில் எனக்கும் பமீலாவுக்குமாக – இடியப்பம், பருப்பு, சொதி பார்சல் வாங்கினேன். வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, ரமணன் வீட்டு முகப்பில் நின்றுகொண்டிருந்தான்.

“எனக்கு வாற புதன்கிழமை ஃபிளைட். நாளைக்குப் பின்னேரம் `சென் லூசியாஸ் கதீட்ரல்’ சேர்ச்சுக்கு முன்னாலை என்னைச் சந்திப்பாயா?” கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் வீட்டிற்குள் ஓடி மறைந்தான் ரமணன்.

ரமணன் சீக்கிரம் என்னைவிட்டுப் பிரிந்துவிடப் போகின்றானே என்ற கலக்கத்தில் கண்ணீர் வந்துவிட்டது. கடந்த ஆறுமாதங்களில் எத்தனை தடவைகள் அருகருகே இருந்து கதைத்திருப்போம்? ஒரு கைவிரல் எண்ணிக்கைகள்? அனேகமாக அபிநயத்தினால் தானே பேசித் தீர்த்திருப்போம்!

மறுநாள் வேலை முடிந்த கையோடு, நேரே தேவாலயத்திற்குப் போனேன். ரமணன் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான். பெருமரமொன்றின் நிழல் ஒன்று படிக்கட்டுகளில் குவிந்து பயம் காட்டிக் கொண்டிருந்தது. நான் சென்று அவனுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தேன். அவன் மெதுவாக நகர்ந்து உடலும் உடலும் முட்ட நெருங்கி இருந்தான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தான். என் தோள்மீது மெதுவாகச் சாய்ந்தபடி, என் கைகளைப் பற்றினான். கடின உழைப்பை அறியாத அவனது கைவிரல்கள் பசுந்தாக இருந்தன.

“என்னைத் திருமணம் செய்து கொள்வாய் தானே?” உணர்ச்சி மேலிட என்னை இறுக அணைத்தான்.

நெடுநேரம் கதைத்தபடி இருந்தோம். இருள் சூழ்வதற்குள் வீட்டிற்குக் புறப்பட்டோம். ஒற்றையடிப்பாதை வந்தவுடன், ரமணன் என்னுடைய கையைப் பிடித்து ஆட்டிக்கொண்டு நடந்தான். எங்கள் முன்னே அசைந்தாடிய நிழல், திடீரென்று ஒரு ஆக்டோபஸ் போன்று விரிந்து என்னை நெருக்கியது. உடம்பு சிலிர்க்க முத்தமிட்டான். உதடும் உதடும் சந்தித்ததில் ஆன்மாக்கள் ஐக்கியமானது. நான் அவனது முதுகை வருடினேன். பள்ளமும் திட்டியுமாக ஆயிரம் கிழிசல்களுடன் அவன் அணிந்திருந்த பெனியன் என் வருடலைத் தடை செய்தது.

மறுநாள் வேலை முடிந்து வரும்போது, அவனுக்கு சில ஆடைகளும், சிறிது பணமும் குடுத்தேன்.

“சாகித்தியா… இதெல்லாம் எதற்கு?”

“பரவாயில்லை… வைத்திருங்கள்.”

ரமணன் போவதற்கு முன்னர் மகிழ்ச்சியைத் தந்தான். வருங்கால நம்பிக்கையைத் தந்தான். நான்கு மாதங்கள் தாய்லாந்தில் தவித்துவிட்டு, கனடா போய் சேர்ந்தான். அப்பா புறப்பட்டுப் போய் ஒன்பது பெளர்ணமிகள் கடந்துவிட்டன. இன்னமும் கனடா போய்ச் சேரவில்லை.

ரமணன் கனடா போய்ச் சேர்ந்த மறுநாள், அவனது அம்மா எங்கள் வீட்டின் கதவைத் தட்டினார். எனக்கு தேகம் நடுங்கித் தலை சுற்றியது. சரியாகப் பயந்து விட்டேன்.

“உள்ளே வாருங்கோ… இதிலை இருங்கோ.”

“ஒரு விசயம்… ரமணன் சொன்னவன் பிள்ளை. உமக்கு இருபத்தி நாலு வயசுதானே ஆகுது? இரண்டு தங்கைச்சிமார் வேறை இருக்கினம் என்ன? உங்கடை யாழ்ப்பாண முகவரியை ஒருக்காத் தாங்கோ. அம்மாவோடை ஒரு விஷயம் கதைக்க வேணும்.”

நான் மாமிக்கு—ரமணனின் அம்மாவுக்கு—ரீ போட்டுக் குடுத்தேன். பின்னர் முகவரியையும் குடுத்தேன். அவர் என்னை வடிவாகப் பார்த்தார். கிட்ட நெருங்கி பாசத்துடன் அரவணைத்தார். நல்லகாலம் பமீலா வெளியில் போய்விட்டாள். இல்லாவிடில் என்னை அறுத்தே கொன்றிருப்பாள்.

ரமணன் கனடாவில் அகதிகள் வரிசையில் ஒன்றானான். மாமியார் ஊருக்குப் போவதற்கு முன் கோயிலுக்குச் சென்று, எனக்கும் பிரசாதம் கொண்டுவந்து தந்தார். ஊர் சென்றவுடன் எங்கள் வீட்டிற்கும் போயிருந்தார்.

அம்மா கடிதம் போட்டிருந்தார். `உன்னைப் பெண் கேட்டு ஒருவர் வந்திருந்தார். உங்கட வீட்டுக்கு முன்னாலை இருந்தவையாம். குடும்பத்தை பொறுப்பாகக் கவனிக்கக்கூடிய அருமையான பிள்ளை எண்டு உன்னைப் புழுகினார். எதுக்கும் அப்பா கனடா போய்ச் சேரட்டும் என்று சொல்லியிருக்கின்றேன். சீதனக் காசு வேண்டுமல்லவா?’

`விசா எடுத்திட்டன்’, `அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துவிட்டன்’ ரமணனின் கடிதங்கள் மகிழ்ச்சியான செய்திகளைத் தாங்கியபடி இடைக்கிடை வருகின்றன.

`குளிர் வைப்பறையில் மைனஸ் 23 இல் வேலை செய்கிறேன். உறைபனி ஆடைகளும், தடித்த கிளவ்ஷும் அணிகின்றேன். என்றாலும் அதற்குள்ளாலும் குளிர் குத்திக் குத்தி ஊடுருவுகின்றன.’

`இப்ப இரண்டு வேலைகள் செய்கின்றேன். முதல் வேலை முடிய, பின்னேரம் ஐஞ்சு மணியிலிருந்து இரவு பதினொண்டு வரை றெஸ்ரோரண்டில் வேலை. ரெலிபோன் அடிக்கடி எடுக்க முடியாது.’

படவரைஞராக வேலை செய்தவனின் கைகள், கடும் குளிர் பிழக்கும் தேசத்தில் போத்தல்கள் அடுக்குகின்றன, பாத்திரங்கள் கழுவுகின்றன. என் கண்களில் நீர் முட்டி மோதிக்கொண்டிருந்தது.

`இரண்டு பிள்ளைச் சீதனத்தை’ விழுங்கிவிட்டு, அங்குமிங்குமாக இழுபறிப்பட்டு, கடைசியில் அப்பா கனடா போய்ச் சேர்ந்தார். அப்பா கனடா போகவென்று கொழும்பு வந்து ஒன்றரை வருடங்கள் உருண்டோடியிருந்தன. அவர் கொழும்பில் இருந்ததை விட, பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களும் இருந்திருக்கின்றார். ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும் அவர், இந்தமுறை கனடா போய்ச் சேர்ந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

மகிழ்ச்சி நிலைத்திருக்கவில்லை. அப்பா கனடா போய் மூன்றாம் நாள், ‘கார்ட் அற்றாக்’கினால் இறந்து போனார். உடல் உதற உள்ளம் உடைந்து போனோம். அப்பாவிற்கு இதற்கு முன்னால் ஒருபோதும் `கார்ட் அற்றாக்’ வந்ததில்லை. உடல்நலம் சரியில்லை என்றுகூடப் படுத்தது கிடையாது. இப்படித் திடீரென்று இறந்து போவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. ரமணனே முன்னின்று செத்தவீட்டையும் நடத்த வேண்டியதாயிற்று.

அதற்குப் பிறகு மாமியார் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து போனார். மகன் அனுப்பும் காசைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நான் தான் வலிய அவரிடம் போய்க் கதைத்தேன்.

“நீயும் கொஞ்சம் யோசிச்சுப் பார் பிள்ளை. உனக்கும் சுய அறிவு இருக்கு. பணம் இல்லாட்டி இந்தக் காலத்திலை ஒண்டும் செய்யேலாது. ரமணன் வெளிநாடு போறதுக்குச் செலவழித்த காசை அடைக்க வேணும். அவனுடைய அக்காவையும் கரையேத்த வேணும். அதுக்குப் பிறகும் காத்திருப்பாய் எண்டா இரு. இல்லாட்டி ரமணனை மறந்துவிடு…” சூறாவளி அடித்தது போல பேசி முடித்தார் மாமி. என்ன சொல்லியும் அவர் சமாதானம் கொள்ளவில்லை. ருத்திரதாண்டவம் ஆடிவிட்டு ஊருக்குப் போய்விட்டார். அவர் மீது எனக்கு எந்தவித கோபமும் வரவில்லை. அவரின் நிலையில் அவரால் இதைத்தான் சொல்லமுடியும், செய்ய முடியும்.

`தகப்பன் செத்து இரண்டாம்நாளே பூசி மினுக்கிக் கொண்டு வேலைக்குப் போகிறாள் சாகித்தியா’ என்று ரமணனுக்குச் சொல்லியிருக்கின்றார் மாமி. எத்தனை குரூரமான பேச்சு அது. `சாகித்தியா நல்ல பிள்ளை… பொறுப்பான பிள்ளை’ என்றெல்லாம் சொல்லித் திரிந்த அவர், இப்ப அப்பா இறந்துபோன பின்னர் இப்படிச் சொல்கின்றார்.

ரமணன் எனக்கு ரெலிபோன் செய்தான். பொறுமையாக இருக்கும்படி ஆறுதல் சொன்னான். குலுங்கி அழுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும். வீட்டை ஈடு வைத்து, காணி நகை எல்லாவற்றையும் விற்று வெளிநாடு போய் இறந்த அப்பாவை நினைத்து அழுதேன். அப்பாவின் இழப்புதான் என்னை மிகவும் வாட்டியது. இடைவழிகளில் அப்பா தேங்கி நின்ற போதெல்லாம், என்னுடைய சேமிப்பும் கரைந்து போய்விட்டது. வாழ்க்கையை நினைத்து பணம் தேடி வேலைக்குப் போனால் பூசி மினுக்குகின்றேன் என்கின்றார்கள்.

கடைசியாக வந்தபோது ரமணனின் அம்மா, “தயவு செய்து இனிமேல்பட்டு என்ரை மகனுக்கு ரெலிபோன் எடுத்துப் போடாதையப்பா” என்று என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார். நான் அவரின் இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரது நாக்கு இப்போது நீலம் சுவறிவிட்டது.

அதன் பின்பு அவர் கொழும்பு வரும் வேளைகளில், இங்கு வந்து தங்குவதைத் தவிர்த்துக் கொண்டார்.

கடந்த எட்டு மாதங்களாக `பொறுமையாக இரு’ என்று சொல்லிக்கொண்டிருந்த ரமணன், இப்போது ரெலிபோன் எடுப்பதைத் தவிர்த்து வருகின்றான். கடிதங்களின் வரவும் குறைந்துகொண்டு போனது. ரமணனும் மாறிவிட்டானா?

எல்லா நினைவுகளும் ஒரு பெரு வெள்ளத்தைப் போல பின்னால் துரத்துகின்றன. நானும் ரமணனும் இப்போது அவரவர் குடும்பங்களைக் காக்கும் அவதாரங்களை எடுத்துவிட்டோம். இயற்கையின் சீட்டாட்டம் இப்படி எங்கள் வாழ்வு மீது விளையாடுகின்றது.

கடைசியாக வந்த ரமணனின் கடிதம், அடிவானத்தில் ஒரு கீற்றாக இருந்த நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது. இவ்வளவு நாட்கள் காத்திருந்ததற்கு எனக்குக் கிடைத்தது இதுதானா?

`என்னை மறந்துவிடு சாகித்தியா’

மொட்டைமாடியில் இருந்த கதிரைக்குள், மனம் அந்தரப்பட்ட சீவன் போல ஊசலாட நினைவுகளுக்குள் மூழ்கிப் போயிருந்தேன். பமீலா வந்ததை நான் கவனிக்கவில்லை. திடுக்கிட்டுப் பார்த்தபோது, பமீலா சென்று இரண்டு மணி நேரம் கடந்திருப்பதை அறிந்தேன். திடீரென்று கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்தேன். நிலத்திலே குந்தியிருந்து, முகத்தை முழங்கால்களுக்கிடையே புதைத்தபடி இருந்தாள் பமீலா. என்னுடைய காலடிச்சத்தம் கேட்டதும் முகத்தை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். எழுந்து, ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்தாள்.

“ரமணன்ரை கை விரல்கள் எல்லாம் குளிரில விறைச்சு அழுகிப் போச்சாம்” சொல்லிவிட்டு பெரும் குரலெடுத்து அழத் தொடங்கினாள் பமீலா.

அடுக்கடுக்காக வந்த துயரத்தில் நான் செயலற்றுப் போனேன். அதற்காகத்தான் ரமணன் `என்னை மறந்துவிடு’ எனறானா? என் வாழ்க்கையின்மீது அவன் கொண்ட கரிசனம் என்னை அதிர்ச்சியடைய வைக்கின்றது. அவனின் தூய அன்பைத் தவறாக எடை போட்டேனே! துயரம் ஒருபுறம், சுமை மறுபுறம். குருவி தலையில் பனங்காய் போல, மனம் இரும்புக் குண்டாய்க் கனக்கிறது.

“சாகித்தியா… நீ உன்ரை குடும்பத்தையும் பாக்க வேணும். ரமணனின்ரை குடும்பத்தையும் பொறுப்பெடுக்க வேணும். உன்னால முடியும் எண்டாச் சொல்லு, நான் எப்பாடு பட்டாவது என்னாலான முயற்சிகளைச் செய்வன்.”

நான் பமீலாவை இறுக அணைத்துக் கொண்டேன். மெளனமாக அழுதேன். மெளனம் சம்மதம் என்பதை பமீலா அறிவாள்.

– அக்டோபர் 2022

Print Friendly, PDF & Email
கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். நோர்வே தமிழ் சங்கம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *