முதன்முதலாக நானொரு சாவிக் கொத்தைக் கையில் வாங்கியது, கல்லூரிக்குச் சென்றபிறகுதான்.
அதற்குமுன்பே சைக்கிள் சாவியொன்று என்வசமிருந்தது. என்றாலும், அது வெறும் சாவி மட்டுமே, சொல்லப்போனால், அதைவிட மீச்சிறியதானதொரு இரும்புத் துணுக்குதான். காந்தத்தைக் கண்டு இரும்பு நகர்வதுபோல, எப்படியோ அந்த உலோகத் துண்டுக்கு பயந்து எங்கள் சைக்கிள் திறந்துகொண்டிருந்தது.
அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்கிறவர்கள்தான். ஆனால், எங்களோடிருந்த அத்தை எந்நேரமும் வீட்டில்தான் இருப்பார் என்பதால், நானும், என் தம்பியும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோதுகூட, எங்களிடம் வீட்டுச் சாவியைத் தரவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை.
ஆகவே, எங்களைப்பொறுத்தவரை, வீடென்பது எந்நேரமும் திறந்திருப்பது. அல்லது, கதவைத் தட்டினால் திறந்துகொள்வது. பூட்டுகளுக்கான அவசியமே எங்களுக்குத் தென்படவில்லை.
ப்ளஸ் டூ முடித்து, கோயம்பத்தூருக்கு வெளியே ஒரு கல்லூரியிலும், அதையொட்டிய விடுதியிலும் சேர்ந்தபோது, அந்த முதல் நாள் கொசுக்கடி இரவுக்குப்பின், அப்பா என்னிடம் ஒரு பெரிய பூட்டையும், விநாயகரோடு துணையாகத் தொங்கும் ஒரேமாதிரியான நான்கு சாவிகளையும் கொடுத்தார்.
வார்ப்பிரும்பினால் செய்யப்பட்ட நன்கு கனமான பூட்டு அது. கிட்டத்தட்ட அரைக் கிலோ எடையேனும் இருக்கும், சாவிகளும் நல்ல நீளம்தான். பூட்டின் கீழ்ப்பகுதியில் சாவியை நுழைத்து இருமுறை திருப்பினால், மளுக்கென்று பூட்டு இரண்டாகப் பிளந்துகொள்ளும்.
கொள்கையளவில், ஹாஸ்டல் என்பதும் வீட்டுக்குச் சமம்தான். பணத்தில் தொடங்கி, படுக்கைவரை ஒற்றை அறைக்குள் எல்லாச் சொத்துகளையும் அடுக்கித் தீர்த்தாகவேண்டிய கட்டாயம். அதன்பிறகு, அவை எதுவும் வேற்றாள் கைகளில் தட்டுப்படாமலிருக்கவேண்டுமே. இதற்காக, தங்கள் பிள்ளைகளை விடுதிகளில் சேர்க்கும் அப்பாக்களெல்லாம் பூட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தியபடிதான் ஊருக்குத் திரும்புகிறார்கள்.
ஆனால், அவர்களுக்குத் தெரியாத விஷயம், விடுதியறைகளின் வாசல்களில் பொருத்தப்பட்டிருப்பவை, ‘சும்மா’ பெயரளவில்தான் கதவுகள். ஸ்விஸ் வங்கியிலிருந்து ஒரு பூட்டைக் கடன் வாங்கிப் போட்டாலும்கூட, பிழையற்ற அந்தப் பூட்டின் வலிமையை மெச்சியபடி, மிச்சமிருக்கிற கதவைச் சுலபமாகப் பெயர்த்தெடுத்துவிடலாம்.
இந்த உண்மையை எல்லா அப்பாக்களுக்கும் தெரிவிப்பதிலிருக்கும் மன வருத்தத்தைக் கருத்தில்கொண்டுதான், விடுதியறைக் கதவுகளில் மௌனமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டுகள்.
ஆனால், இந்த விஷயமெல்லாம் எனக்குப் பின்னாளில்தான் புரிந்தது. அன்றைக்குக் கல்லூரி விடுதி வாசலில் முதன்முதலாக அந்தச் சாவிக்கொத்தை ஏற்றுக்கொண்டபோது, ஏதோ ஒரு பெரிய பொறுப்பைத் தாங்குகிறவனின் மனநிலையில்தான் நானிருந்தேன். அதற்காக நான் கர்வப்பட்டு முடிப்பதற்குள், இந்தச் சாவிகளைத் தொலைத்துவிடாமலிருக்கவேண்டுமே என்கிற படபடப்பு தொடங்கியது.
அந்த நான்கு சாவிகளில் ஒன்று என் அறை நண்பனிடம் சென்றது. இன்னொன்று, அறைக்குள்ளிருக்கும் என் படுக்கைக்குக் கீழே, மூன்றாவது, சுவர் அலமாரியில், நான்காவது சாவியைமட்டும் விநாயகர் கொத்தோடு நானே வைத்துக்கொண்டேன்.
இப்படி ஒற்றைச் சாவியாகதான் தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு சாவியாகச் சேர்ந்துகொண்டது.
முதலாவதாக, அப்பா வாங்கித் தந்த புது சூட்கேஸினுள் எங்கோ கிடந்த சின்னஞ்சிறு சாவிகள் இரண்டைத் தேடி எடுத்து அதோடு கோர்த்துக்கொண்டேன். மற்ற சாவிகள் அடுத்த வருடம் தொடங்கிப் பெருகின.
ராக்கிங் தொல்லைகளெல்லாம் மெல்லமாகக் கழிந்து, எல்லோருக்கும் தேர்வு பயம் பெருகிக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கல்லூரி வளாகம் மிகப் பெரியது என்பதால், அங்குமிங்கும் உலவிச் செல்வதற்கென ஊரிலிருந்து என் சைக்கிளை ஹாஸ்டலுக்குக் கொணர்ந்தேன்.
காந்திபுரம் பஸ் நிலையத்தில் அந்த சைக்கிளைக் கீழிறக்கத் தயாரானவன், முண்டாசை இறுகக் கட்டியபடி இருபது ரூபாய் கேட்டான்.
‘எங்க ஊர்ல இதை ஏத்திவைக்கிறதுக்கு அஞ்சு ரூபாய்தானே கொடுத்தேன் ?’, தர்க்கம் கலந்த ஆச்சரியத்தோடு கேட்டேன் நான்.
‘அப்போ உங்க ஊர்லயே போய் இறக்கிக்கோ’, என்றபடி இரும்புப் படிகளிலிருந்து இறங்கிவிட்டான் அவன். அதன்பின் அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, பதினைந்து ரூபாய்க்கு பேரம் படிந்து, சைக்கிளை இறக்கி, பின் காரியரில் பயணப் பையை வைத்தபடி கல்லூரியை நோக்கி ஓட்டினேன். அன்றைய மதியம், விநாயகர் கொத்தில் சைக்கிள் சாவியும் சேர்ந்தது.
அதன்பிறகு மூன்றாம் ஆண்டில், எங்களுடைய கணினி அறையின் சாவியும், விடுதியின் தொலைக்காட்சி அறைச் சாவியும் அவற்றுக்குரிய பொறுப்புகளோடு என்னிடம் வந்து சேர்ந்தன. வேறொரு ஆய்வறையிலிருந்த இயற்பியல் தராசின் கண்ணாடிப் பெட்டிச் சாவிகூட வந்தது. இப்படியே மேலும் சில சாவிகள் சேர்ந்துகொண்டன. அவை எதையெதைத் திறப்பவை என்றுகூட நினைவில்லாதபடி ஏகப்பட்ட சாவிகள்.
இத்தனை சாவிகளின் கனத்தில், முன்பு ஒல்லிப்பிச்சியாக இருந்த விநாயகர் கொத்து, இப்போது நன்கு கொழுத்துவிட்டது. ‘அட்லீஸ்ட் கால் கிலோவாச்சும் இருக்கும்’, என்று நண்பர்கள் கிண்டலடித்தார்கள். அத்தனை கனமான சாவிக்கொத்தை எந்நேரமும் கால்சட்டைப் பையிலேயே வைத்திருப்பதால், மென்மையான பாக்கெட் துணிகள் கிழிந்துபோய், பல பேன்ட்கள் பாதி உபயோகமற்றுப்போயின.
சாவிகளின் கனத்தைப்பற்றிப் பேசும்போது, ஒரு வேடிக்கையான விஷயம் நினைவுக்கு வருகிறது. முன்பே சொன்னதுபோல், என்னுடைய விடுதி அறைப் பூட்டு, மிகப் பெரியது. தவறுதலாக அதைக் காலில் போட்டுக்கொண்டால், ரத்த காயம் சர்வ நிச்சயம்.
இன்னும் கொஞ்சம் குரூரமான விவரிப்பு வேண்டுமென்றால், நீரில் மூழ்கி தற்கொலைக்கு முயல்கிறவர்கள், அதைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு குதிக்கலாம். அதன் கனத்தில் உங்கள் பாக்கெட்மட்டும் கிழியாவிட்டால், அந்தப் பூட்டு சர்வநிச்சயமாக மூழ்கடித்துக் கொன்றுவிடும்.
அப்படியொரு கனமான பூட்டை, ஒருமுறை, ஒரே ஒருமுறை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறேன் நான். எனக்கு எரிச்சலூட்டும்படி ஏதோ பேசிய சக நண்பன் ஒருவனின் முகத்தில் அதை வீசியெறிந்துவிட்டேன்.
எல்லா வகுப்புகளிலும் என்னுடைய மேஜையிலேயே அமருகிற தோழன் அவன். கிஷோர் என்று பெயர். நிஜமான பெயரைச் சொல்லிவிட்டதால், இதற்குமேல் அவனைப்பற்றி எதுவும் சொல்வது உசிதமில்லை.
அவன் அப்படி என்ன பேசினான், ஏன் நான் கோபமடைந்தேன், ஈராக்கிலோ, ஈரானிலோ அமெரிக்கா தேடிய, அல்லது தேடிக்கொண்டிருக்கிறவைகளுக்குச் சற்றும் குறைபடாத அந்த நிச்சயமான ஆயுதத்தை, எதற்காக அவன்மீது வீசி எறிந்தேன் என்றெல்லாம் இப்போது சுத்தமாக நினைவில்லை. ஆனால், நல்லவேளையாக என் ஆயுதம் அவனுடைய நெற்றியோரத்தைச் சிராய்த்துக்கொண்டு சுவரில் மோதிக் கீழே விழுந்தது.
ஒருவேளை, அந்தப் பூட்டு குறி தவறாமல் அவனுடைய தலையில் மோதியிருந்தால், இந்தக் கதையை நான் ஜெயிலில் உட்கார்ந்துகொண்டுதான் எழுத நேர்ந்திருக்குமோ என்னவோ !
அந்த ஒற்றைச் சம்பவத்துக்குப்பின் வேறெந்த அசம்பாவிதங்களுமில்லாமல் ஒருவழியாகக் கல்லூரி முடிவடைந்து, ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்தபோது, என்னுடைய விடுதிப் பூட்டையும், அதற்கான மூன்று சாவிகளையும் (நான்காண்டு காலச் சுழற்சியில் ஒரு சாவி எங்கோ தொலைந்துவிட்டது) கையோடு எடுத்துக்கொண்டுதான் சென்றேன்.
ஆனால், நான் அங்கு செல்வதற்குள், என்னோடு தங்குவதாகத் தீர்மானமாகியிருந்த இரு நண்பர்கள், வீட்டை ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் பளபளப்பான ஒரு புதுப் பூட்டு வாங்கி, கதவை அலங்கரித்திருந்தார்கள். அதற்கான சாவியும் நன்கு மின்னிக்கொண்டிருந்தது.
‘இந்தப் பூட்டு அடாசு’, என்று கடைசி முயற்சியாகச் சொன்னேன், ‘ஒரு தட்டு தட்டினா விழுந்துடும், தெரியுமா ?’
‘முடிஞ்சா தட்டிப்பாரேன்’, நக்கல் சிரிப்போடு சொன்னான் ஒருவன்.
இன்னொருமுறை அந்தப் பூட்டை நன்கு பார்த்துவிட்டு, மௌனமாக அவர்கள் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு என்னுடைய மூலைக்குச் சென்றேன். பையினுள்ளிருந்து எனது பழைய பூட்டு என்னைப் பார்த்து சிரித்தது, அல்லது அழுததோ என்னவோ, தெரியவில்லை.
அதன்பிறகு பல நாள்களுக்கு, எப்படியாவது இந்தப் புதுப்பூட்டின் தகுதியின்மையை நிரூபித்து, அதைத் தூக்கியெறிந்துவிட்டு, என்னுடைய கனமான பூட்டைப் பயன்பாட்டில் இடவேண்டும் என்றுதான் முயன்றேன்.
ஆனால், எனது அறை நண்பர்களுக்கு, அந்தப் பூட்டைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. என்னதான் கனமான, வலுவான பூட்டு என்றாலும், பல ஆண்டு உபயோகத்தின் அழுக்குப் படிந்த பூட்டை யார்தான் விரும்புவார்கள் ?
கடைசி முயற்சியாக, மின்சாரம் ஒழிந்த ஒரு இரவில், அந்தப் பூட்டை நான் ஆயுதமாகப் பயன்படுத்திய சந்தர்ப்பத்தை அவர்களிடம் விவரித்தேன். ஒழுங்காக இந்தப் பூட்டைப் பயன்படுத்துங்கள், இல்லாவிட்டால், அதைக்கொண்டே உங்களைத் தாக்கிவிடுவேன் என்று அவர்களை மிரட்டுவதாக என் எண்ணம்.
அவர்கள் மிரண்டார்களா, அல்லது பயந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதன்பிறகு அந்தப் பூட்டை என் கண்ணில் படாதபடி எங்கோ ஒளித்துவைத்துவிட்டார்கள்.
பின்னர், சில ஆண்டுகளுக்குப்பின் அந்த வீட்டை காலி செய்தபோது, அந்தப் பூட்டு எனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது. ஆனால், அதற்குள் நான் எளிய பூட்டுகளுக்குப் பழகிப்போயிருந்தேன்.
இப்போதும், ஒரு நினைவுச்சின்னம்போல், அந்தப் பூட்டும், அதில் பொருந்திய ஒரே ஒரு சாவியும் எங்கள் புது வீட்டுப் பரணில் கிடக்கிறது. முன்பைவிடக் கூடுதலாக அழுக்கு. ஆகவே, புறத்தூய்மை தேடுகிற உலகத்தில் அது பயனொழிந்துவிட்டது. இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், இன்னும் நன்றாகதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அது.
என்றாலும், இப்போதெல்லாம், அது பூட்டுவதைவிட, திறப்பதுதான் அதிகம், நினைவுகளைச் சொல்கிறேன்.
– என்.சொக்கன் [nchokkan@gmail.com] (நவம்பர் 2007)