பூட்டாத பூட்டுகள்…!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 5,513 
 
 

போன் அடித்தது.

வீட்டில் தினசரி வாசித்துக்கொண்டிருந்த மாசிலாமணி வயசு 55. எடுத்தார்.

” அப்பா..! ” மகன் ஹரி அiழைத்தான். சென்னைவாசி. தகவல் பரிமாற்றம் கம்பெனி ஒன்றில் வேலை.

” சொல்லுப்பா….? ”

” நாளைக்கு நீயும் அம்மாவும் சென்னைக்கு வரனும். நான் சொன்ன இடத்துக்கு வந்து நிக்கனும்.! ” கட்டளை கறாராக இருந்தது.

” என்ன ஹரி ! திடுப்திப்புன்னு அழைப்பு. ஏதாவது அவசரமா..? ” மாசிலாமணி பதற்றப்படாமல் நிதானமாகவேக் கேட்டார்.

” …….அ….ஆமாம்.! ”

” அப்படி என்னப்பா அவசரம்…? நானும் அம்மாவும் வந்து தலையிட்டு முடிக்கும் முக்கிய வேலை..? ”

”………………அ….அப்பா ! இத்தனை நாளாய் உங்ககிட்ட மூடி மறைச்ச விசயத்தைச் சொல்றேன். நான் சென்னையில என்னோடு வேலை செய்யிற பொண்ணை காதலிக்கிறேன். நட்பாய் அவுங்க வீட்டுக்குப் போய் வர்ற பழக்கம். அது நாளடைவில் காதலாய் மாறி…ரெண்டு பேரும் உயிருக்குயிராய் ரெண்டு வருசமா காதலிக்கிறோம். பெண்ணோடு அப்பா அம்மாவுக்கு அரசல் புரசலாக சேதி முதல்லேயேத் தெரிந்தாலும் இப்போதான் முழுசா தெரிஞ்சு என்னை மாப்பிள்ளையாய் ஏத்துக்க சம்மதம் சொல்லி இருக்காங்க. அதனால அவுங்க உங்களைச் சந்திச்சு பேச விரும்புறாங்க. நீயும் அம்மாவும் நாளைக்கே இங்கே வந்தால் கலந்து பேசி வேலையை முடிக்கலாம். நாள் நட்சத்திரம் பார்த்து தேதியும் முடிவு செய்யலாம்.” சொன்னான்.

மாசிலாமணிக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது.

” என்ன ஹரி ! திண்ணையில் இருந்தவனுக்குத் திடுக்குன்னு கலியாணம்….’ அடிடா மேளம். கட்டுடா தாலியை! ‘ என்கிற கதையாய்த் திடுதிப்புன்னு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறே..? ” என்றார்.

” ஆமாம்ப்பா! இது நிஜம். பெண்ணோட அம்மா அப்பா சம்மதத்துக்காகத்தான் நான் இத்தனை நாள் உங்ககிட்ட சேதி சொல்லாம இருந்தேன். மன்னிச்சுக்கோங்க. ” என்றான்.

பெற்றப்பிள்ளை. முப்பது வயது நெருக்கம். என்ன செய்ய…? மாசிலாமணி காதில் வைத்த போனை எடுக்காமல் அப்படியே இருந்தார்.

ஹரி தொடர்ந்தான்.

” அப்பா..! நாளைக்கு நீங்க அம்மாவை அழைச்சிக்கிட்டு காரை எடுத்துக்கிட்டு வீட்டை விட்டுப் புறப்படுங்க. பாண்டிக்கும் சென்னைக்கும் மூன்றரை மணி நேரம் பயணம். காலையில ஆறு மணிக்குப் புறப்பட்டால்…ஒன்பதரை, பத்து மணிக்கெல்லாம் சென்னைக்கு வந்துடலாம். மடிப்பாக்கத்தில் காமராஜர் சாலை. எண் 7 தான் பெண்ணோட வீடு. நானும் அங்கே இருக்கேன். எனக்கு… அங்கே வந்து உங்களோட உட்கார்ந்து ஆறஅமர பேசி…அழைச்சு வர எனக்கு நேரமில்லே. கையில விடுப்பும் இல்லே. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை. எங்களுக்கு விடுப்பு என்பதால்தான் இப்படி ஒரு திடீர் ஏற்பாடு. நான் விலாசத்தை வாட்ஸ்அப்புல அனுப்பறேன். கண்டிப்பா வந்துடுங்க. வைச்சிடுறேன்.” அடுத்தப் பேச்சுப் பேசாமல் துண்டித்தான்.

‘ சேதி சொன்னதோடு மட்டுமில்லாமல் நிறுத்தாமல்.. சென்னைக்குக் கிளப்பி விட்டும் கிடுக்கிப்பிடி…! ‘

கைபேசியைக் கீழே வைத்த மாசிலாமணி சிறிது நேரம் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தார். பின் மெல்ல எழுந்து மனைவியிடம் சென்றார்.

அடுப்படியில் ஏதோ…வேலையாய் இருந்த மல்லிகா….நிறுத்தி, ” என்ன… ? ” என்றாள்.

இவர் அவளிடம் மகன் சொன்ன சேதியைச் சொன்னார்.

அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. அமைதியாய் இருந்தாள்.

கொஞ்ச நேரம் அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த மாசிலாமணி சிறிது நேரம் கழித்து.

” என்ன யோசனை…? ” கேட்டார்.

” அவன் விருப்பம். நம்பளால தடங்கல் வேணாம். முடிச்சுடலாம். ” என்றாள்.

மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் கார் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டது. காரை மாசிலாமணிதான் ஓட்டினார். அருகில் மனைவி அமர்ந்திருந்தாள்.

சரியாய்ப் பத்து மணிக்கெல்லாம்….மடிப்பாக்கம் காமராஜர் சாலை வீட்டு எண் 7 முன் கார் நின்றது.

வாசலில்.. ஹரி ஒரு அழகான பெண்ணோடு; காத்திருந்தான்.. பெண் பார்க்க லட்சனமாய் இருந்தாள். மல்லிகாவிற்குப் பிடித்திருந்தது.

” வாங்கப்பா..! வாங்கம்மா..! ” காரிலிருந்து இறங்கிய பெற்றோர்களை ஹரி ஓடி வந்து வரவேற்றான். அதோடு மட்டும் நிறுத்தாமல், ” இவள்தான் ஹரணி. என் காதலி. உங்க வருங்கால மருமகள்! இந்த வீட்டுப் பெண் ! ” தன்னோடு இருந்தவளை முற்றிலுமாக அறிமுகப்படுத்தினான்.

அவளும் வெட்கப்பட்டு கைகூப்பி, ”வாங்க மாமா, வாங்க அத்தை ! ” அழைத்தாள், வரவேற்றாள்.

இதுவும் அவர்களுக்குப் பிடித்திருந்தது.

” வாங்க உள்ளே போகலாம். ! ” இருவரும் சொல்லி திரும்பி நடந்தார்கள்.

மாசிலாமணி, மல்லிகா… அவர்களைத் தொடர்ந்தார்கள்.

வீடு ஆடம்பரமாக இருந்தது. கூடத்து சோபாவில்…ஹரணியின் அப்பா அரிச்சந்திரன் அமர்ந்திருந்தார்.

மாசிலாமணி, மல்லிகாவைப் பார்த்ததும் எழுந்து கை கூப்பி, ” வாங்க..! வாங்க..! ” வரவேற்றார்.

” உட்காருங்க…” எதிர் உள்ள சோபாவைக் காட்டி அமர்ந்தார்.

அமர்ந்தார்கள்.

” அம்மா எங்கேப்பா..? ” ஹரணி அவரைக் கேட்டாள்.

” இப்போதான் உள்ளே போனாள். பார்.” சொன்னார்.

அவள் அகன்றாள்.

நின்றிருந்த ஹரி அப்பா அம்மாவோடு அமர்ந்தான்.

சில வினாடிகளில்….ஹரணி தாய் விசாலத்துடன் வந்தாள்.

அவளைப் பார்த்த மாசிலாமணிக்கு அதிர்ச்சி.

அதே போல்….இவரைப் பார்த்த அவளுக்குள்ளும் இடி.

இருவர்க்குள்ளும் அலை அலையாய் நினைவுகள். முகங்களில் நுணுக்கமான மாற்றங்கள்.

விசலாம் இறுக்கமான முகத்துடன் கணவன் அருகில் அமர்ந்தாள். அவள் அருகில் ஹரணியும் அமர்ந்தாள்.

எதிர் எதிரில் முவ்மூவர்களாக இரு குடும்பங்கள்.

சில விநாடிகள் அங்கு அசாதாரண மௌனம். யார் எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாற்றம்.

” அப்பா..! அவுங்க ரெண்டு பேரும் ஹரணி அம்மா, அப்பா. சார்! இது என் அம்மா, அப்பா! ” என்று ஹரி அறிமுகப் படலத்;தைத் தொடங்கி அந்த அசாதாரண மௌனத் தடையை உடைத்தான்.

மாசிலாமணியும் விசாலமும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் உம்மென்றிருந்தார்கள்.

மீண்டும் ஹரியே பேச்சைத் தொடங்கினான்.

” எங்களைப் பெத்த உங்க நாலு பேருக்கும் சொல்றேன். நானும் ஹரணியும் ரெண்டு வருசமா உயிருக்கு உயிராய்க் காதலிக்கிறோம். நீங்க…. எங்கள் காதலை ஏற்று எங்களுக்குக் கலியாணத்தை முடிச்சு வைக்கனும்.” சொன்னான்..

இரு பக்கத்திலிருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை.

” நீங்க நடத்தி வைக்கலைன்னாலும் எங்கள் திருமணம் நடக்கும், நடத்தி காட்டுவோம்! ” ஹரி அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

அவன் சொல்லி முடித்த அடுத்த விநாடி….

” இந்த கலியாணம் நடக்காது! நடக்கக் கூடாது ! ” மாசிலாமணி வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக உதிர்த்தார்.

ஹரி எதிர்பார்க்கவில்லை.

” அப்பா…!! ” அதிர்ந்தான்.

” என்ன சார் சொல்றீங்க…? ” அரிச்சந்திரனுக்கும் அதிர்ச்சி;.

” ஆமாம். இந்தக் கலியாணம் நடக்காது. நடக்கக் கூடாது ! ” மாசிலாமணி சொன்ன அதே வார்த்தைகளை விசாலமும் அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொன்னாள்.

” என்னம்மா சொல்றீங்க..?! ” இப்போது ஹரணி அலறினாள்.

” ஆமாம் ஹரணி. உங்க திருமணம் நடக்காது. நடக்கக் கூடாது ! ” விசாலம் சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொன்னாள்.

” ஏன்ன்ன்…? ”

” ஏன்னா….நீயும் ஹரியும் அண்ணன் தங்கச்சிங்க. ” மாசிலாமணி சொன்னார்.

” சார்ர்hர்…! ” அரிச்சந்திரன் அலறி துணுக்குற்றார்.

ஹரி, ஹரணிக்குள் பேரிடி.

” ஆமாம் சார். நானும் உங்க மனைவி விசாலமும் முன்னால் கணவன் மனைவிகள். ஹரி பொறந்த ஒரு மாசத்திலேயே… எங்க ரெண்டு பேருக்கும் மனமுறிவு, உடன் சட்டப்படி நடவடிக்கை எடுத்து விவாகரத்து. நான் மகன் ஹரியோடு பிரிவு. அதன் பிறகு….நான் இந்த மல்லிகாவைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன். விசாலம் உங்களைத் திருமணம் செய்து ஹரணியைப் பெத்திருக்காங்க. சரியா…? ” கேட்டு மாசிலாமணி எதிரில் அமர்ந்திருந்தவள் முகத்தைப் பார்த்தார்.

அவள், ” சரி ! ” மெல்ல சொல்லி தலையை அசைத்தாள்.

” ஹரி! ஹரணி…! உறவு முறையில் நீங்க ரெண்டு பேரும் அண்ணன், தங்கை. இப்போ சொல்லுங்க. உங்களுக்கு எப்படி நாங்க திருமணம் செய்து வைக்க முடியும்..? ” கேட்டு அவர்களைப் பார்த்தார் மாசிலாமணி.

பெரிய சிக்கல்.!! அரிச்சந்திரனும் மல்லிகாவும் இதை எதிர்பார்க்கவில்லை.

ஹரிக்கும் ஹரணிக்கும் இடி. காதல் இப்படி கட்டாந்தரையில் மோதுமென்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. ஆடிப்போனார்கள். அந்த ஆட்டமும் ஆக்கிரமிப்பும்…அவர்களுக்குள் ஒரு சில விநாடிகள்தான் நீடித்தது. அடுத்து இருவரும் ஒரு முடிவிற்கு வந்து ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

மாசிலாமணிக்கு அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.

” மல்லிகா கௌம்பு! ” எழுந்தார்.

” அப்பா உட்காருங்க. ” ஹரி இருந்த இடத்தை விட்டு எழாமல் அமைதியாய்ச் சொன்னான்.

” இல்லே ஹரி. எனக்கு இருக்கப் பிடிக்கலை. போகலாம். ” மனைவியைப் பார்த்தார்.

அவள் எழவில்லை.

” அப்பா..! போறதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசலாம்.! ” மீண்டும் அதே அமைதியில் சொன்னான்.

” என்ன பேசப்போற…? ” நின்றவர் அமர்ந்தார்.

” அவசரப்படாதீங்க. மொதல்ல நாங்க எங்களைத் தெளிவு படுத்திக்கிறோம்.! ” என்று சொன்ன ஹரி எதிரில் அமர்ந்திருப்பளைவப் பார்த்தான்.

” ஹரணி ! இந்த அண்ணன், தங்கை சிக்கல் இப்போ மொளைச்சது. இந்த உறவு முறையை ஏற்றால் நாம காதலை மறக்கனும், துறக்கனும். அது உன்னால முடியுமா..? ” கேட்டான்.

ஹரணிக்குள் கொஞ்சமாய்க் குழப்பம். தரையைப் பார்த்தாள்.

” இது நம்ம வாழ்க்கைப் பிரச்சனை. அவசரப்படாமல் யோசிச்சு பதில் சொல் ? ” சொன்னான்.

ஹரணி நிமிரவில்லை. இன்னும் யோசனையில் இருந்தாள். எல்லார் முகங்களும் மனங்களும் அவளை மொய்த்திருந்தது.

சில விநாடிகளில், ” முடியாது! ” சொல்லி நிமிர்ந்தாள்.

” ஹரணி..! ” கோபம்…. விசாலம் அதட்டினாள்.

” அதட்டாதேம்மா.. உனக்கும் அவருக்கும்தான் விவாகரத்து. விவாகரத்துன்னாலே திருமணம் முறிவு. திருமணம் முறிவுன்னாலே…அந்த நிமிசத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி கிடையாது. அப்படி பார்க்கும்போது அந்த நிமிசத்திலிருந்து உனக்கும் ஹரிக்கும் அம்மா மகன் உறவு கிடையாது. நீ விவாகரத்தக்குப் பிறகு…அப்பாவைத் திருமணம் செய்து என்னைப் பெத்திருக்கே. எனக்கும் ஹரிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இப்போ சொல்லு…? நானும் ஹரியும் எப்படி அண்ணன் தங்கச்சி ? நாங்க ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ? ” எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லி கேள்வி எழுப்பினாள்.

ஹரி தொடர்ந்தான்.

” அப்பா! மனித இனம் ஆதாம் ஏவாலாள் உருவானது உண்மைன்னா….அந்த ஆதாம் ஏவாள் மட்டும்தான் சுயம, உண்மையான கணவன், மனைவி. அடுத்துத் தோன்றியவர்களெல்லாம் அவர்களால் பிறந்த ஆண் பெண் குழந்தைகளால் ஏற்பட்ட இனப்பெருக்கம், மனித கூட்டம். அப்படிப் பார்க்கும்போது…மனித இனம் மொத்தத்துக்கும் அண்ணன் தங்கச்சி முறையே கிடையாது.!

அடுத்து சொல்றேன். பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மனித இனம் தோன்றிதாய் சரித்திரம் சொல்லுது. அப்படிப் பார்த்தால்…அந்த இனம் இன்னைக்கும் தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுமுறை இல்லாமல் புணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கு. அந்த வகையில் பார்த்தாலும் நம்ம யாருக்கும் எந்த உறவும் கிடையாது !

இன்னும் ஒரு சரித்திர சேதியைச் சொல்றேன். மனித இனத்தில் பிற்பாடு தோன்றியதுதான் ஆணாதிக்கம். அதுக்கு முன் பெண்ணாதிக்கம்தான் மனித இனத்தை முழுமையாய் ஆட்சி செய்திருக்கு. பெண்… பிள்ளைகளைப் பெற்று , சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றி எதையும் முடிவெடுத்து நடத்துபவளாய் இருந்திருக்காள். அவள் புருசனோடு மட்டும் கூடாமல்…பெற்ற மகன்களிடமும் புணர்ந்து வாழ்ந்திருக்காள். புருசனாலும், பிள்ளையானாலும்…இரவு தன்னோடு படுக்கும் ஆண் மகனைத் தேர்ந்தெடுப்பவளாய் இருந்திருக்கிறாள். இதை நான் சொல்லலை. சரித்திரம் சொல்லுது. இன்னைக்கு நாம எப்படித்தான் முறை வைச்சி பழகி, திருமணம் முடிச்சி குடும்பம் நடத்தினாலும்… அந்த வகையிலும் நாம யாரும் சகோரதன் சகோதரிகள் கிடையாது. இப்போ நீங்க எல்லாரும் சொல்லுங்க. நாங்க ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ? ” முடித்து எல்லாரையும் பார்த்தான்.

ஹரணியைத் தவிர எவர் முகத்திலும் ஈயாடவில்லை.

மாசிலாமணிதான் சிறிது நேரத்தில் சுதாரித்தார்.

” மன்னிச்சிக்கோ ஹரி. சரித்திரம், ஆதிகாலமெல்லாம் பேசி….உங்க காதல், கலியாணத்தை நியாயப்படுத்த வேணாம். இன்னைக்கு நாம அதையெல்லாம் கடந்து…பல நுற்றாண்டுகளாய் ஒருவனுக்கு ஒருத்தி, அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்கிற முறைகளோடு வாழ்ந்து வர்றோம். அதனால இப்போ நாங்க உங்க காதலை ஏத்துக்க முடியாது. திருமணத்துக்கும் சம்மதிக்க முடியாது.! ” அடித்துச் சொன்னார்.

”சும்மா இருங்கப்பா. எதையும் யோசிக்காம…ஒருதலைப்பட்சமாவே… உங்க முடிவைச் சொல்றீங்க!. இந்த நாகரீக காலத்தில் நாம எல்லாம் சித்தப்பா குடும்பத்தை ரத்த சம்பந்தம்;ன்னு ஒதுக்கி.. அப்போவோடு பிறந்த அக்கா தங்கசிங்க பிள்ளைகளை அத்தை, மாமன் முறை சம்பந்தம் போட்டுக்கிறோம். அதே சமயம்…. முஸ்லீம்கள் நேர்மாறாய்….அப்பாவோடு பிறந்த அக்கா தங்கைகளை ரத்த சம்பந்தம்ன்னு ஒதுக்கி…சித்தப்பா மக்களோடு சம்பந்தம் வைச்சிக்கிறாங்க. இப்போ சொல்லுங்க….இந்து முஸ்லீம்களில் யார் செய்யிறது சரி. ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் ஒரே வயித்துல பொறந்த எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே ரத்த சம்பந்தம்தானே இருக்க முடியும். அப்புறம் ஆண் பெண்ணில் மாற்றம்….?. மனுச இனத்தில் எல்லாரும் ஒரே மாதிரியான உறவு முறைகளைக் கடைபிடிக்கலை. அப்பா, அண்ணன் தங்கச்சி முறை என்பதெல்லாம் மனசைப் பொறுத்த விசயம், நாமளா ஏற்படுத்திக்கிட்ட உறவுமுறை. செல்லாது. நானும் ஹரணியும் மனித இன நெறிப்படி..நான் ஒரு ஆண். அவள் ஒரு பெண். எங்களுக்குள் எந்தவித ஒட்டும் உறவும் கிடையாது. நாங்க காதலிச்சிருக்கோம். கலியாணம் பண்ணனும் என்ன முடிவு ? ” கேட்டு அவர்களைப் பார்த்தான்.

எல்லாரும் முகங்களிலும் இறுக்கம். அப்படியே ஆணி அடித்ததுபோல் அமர்ந்திருந்தார்கள்.

சிறிது நேரத்தில்….

” நீங்க யாரும் சம்மதிச்சாலும் சம்மதிக்காவிட்டாலும் எங்கள் திருமணம் நிச்சயம் நடக்கும். இதுதான் எங்கள் முடிவு.! ” சொல்லி ஹரணியைப் பார்த்தான்.

அவள் மறுப்பு ஏதும் சொல்லாமல் கம்மென்றிருந்தாள்.

மறுபடியும் அங்கு ஒரு மயான அமைதி.

” ஹரணி ! அப்போ…. உங்களுக்குக் கலியாணம் உறுதி, முடிவுல மாத்தமில்லே. சரிதானே ? ” கேட்டு விசாலம் மகளைப் பார்த்தாள்.

” ஆமாம்மா. உங்க விவாகரத்து உறவு முறைக்கெல்லாம் நாங்க பலியாக முடியாது.” அவளும் அடித்துச் சொன்னாள்.

” அப்போ…இதுக்கு இதுதான் முடிவுன்னா… இனி பேசி பிரயோஜனமில்லே. நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். ” என்றார் மாசிலாமணி.

” என்ன……? ” ஹரி அவரைப் பார்த்தான்.

” இது அதிரடியான முடிவு. இது யாருக்கும் பிடிக்கலை, சரி இல்லேன்னா விட்டுடலாம். ” – எல்லாரையும் பார்த்தார்.

யாரும் வாயைத் திறக்கவில்லை.

” ஹரி ! ஹரணி ! உங்களுக்குக் காதல், கலியாணம் முக்கியம்ன்னா….நீங்க ரெண்டு பேரும் ஒரே அறையில் ஒன்னா தங்கி கணவன் மனைவியாய் இருந்து வாங்க. நாங்க உங்க திருமணத்துக்குச் சம்மதிக்கிறோம். இதுதான் முடிவு. என்ன சொல்றீங்க..? ” கேட்டு அவர்களைப் பார்த்தார்.

எவரிடமிருந்தும் எந்த பேச்சு, மறுப்புக் குரலும் வரவில்லை.

தொடர்ந்தார், ” உங்களுக்குக் கால அவகாசம்… ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு வார காலம். அதை இன்னைக்கே.. இந்த நிமிசத்திலிருந்து தொடங்கலாம். வீட்டில் இல்லாமல் விருப்பப்பட்ட விடுதி, இடங்களில் தங்கி முடித்து வரலாம். அந்த உறவு முடிஞ்சா உங்களுக்குத் திருமணம். என்ன சொல்றீங்க…? ” கேட்டு மாசிலாமணி இருவரையும் பார்த்தார்.

ஹரியும் ஹரணியும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

சிறிது நேரத்தில்… ” .சரி ! ” என்ற மெல்ல சொல்லி தலையசைத்து தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

” சரி ஹரி.! நானும் உன் அம்மாவும் ஊருக்குப் போகாம ஒரு வாரம் இங்கேயே ஒரு ஓட்டல்ல அறை எடுத்து தங்கி உங்க முடிவுக்குப் பிறகுப் புறப்படுறோம். வா மல்லிகா ! ” அழைத்து எழுந்தார்.

உடன் மனைவுயுடன் வெளியேறினார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில்… நட்சத்திர ஓட்டல் அறை ஒன்றில்….உள்ள பெரிய கட்டிலில்…..ஹரியும் ஹரணியும் கொஞ்சம் இடைவெளி விட்டு அருகருகில் அமர்ந்திருந்தார்கள்.

மணித் துளிகள் மெல்ல கரைந்தது.

இருவரும் பேசவில்லை. இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின்….

” ஹ….ஹரணி…! ” ஹரி அவளை மெல்ல அழைத்தான்.

அவள் குனிந்த தலை நிமிராமல்….” என்ன….? ” கேட்டாள்.

” நாம…. பிரிஞ்சுடலாம்….! ”

”…………………………….”

”…என்னதான் புத்திசாலித்தனமா பேசி நாம இந்த நாலு சுவத்துக்குள்ள வந்தாலும்…. இந்த அண்ணன் தங்கை உறவு முறையை காதால் கேட்டபிறகு…உன்னை ஒரு பெண்ணாவோ, காதலியாவோ நெனைக்க மனசு மறுக்குது. தொட நெஞ்சு நடுங்குது. எப்படி முயற்சி செய்து முடியலை. என்னை மன்னிச்சுடு. ” எழுந்தான்.

” எனக்கும் அப்படித்தான். அந்த சொல்… நெஞ்சில் பதிஞ்சு, மனசில் ஊடுருவி…பாடாய்ப் படுத்துது. உன்னை வேறொருத்தனாய் நினைச்சி நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாய் இருக்கு. பிரிஞ்சடலாம். போகலாம்.!” சொல்லி ஹரணியும் எழுந்தாள்.

அவர்கள் முகங்கள் தெளிவாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “பூட்டாத பூட்டுகள்…!

  1. ஆதாம் ஏவாள் என்பதெல்லாம் கப்சா. அந்தக் கட்டுக் கதைகளை வெள்ளைக்க்காரர்களே நம்புவது கிடையாது.நமக்கு இன்னும் அந்த மூட நம்பிக்கை தேவையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *