புவனாவால் வந்த வினை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 7,215 
 

“கல்யாணி, கல்யாணி” கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த கோபால், கல்யாணியைக் காணாததால் புவனாவின் கையில் ஸ்விட்டையும், பூவையும் கொடுத்து “அக்காகிட்டே கொண்டுபோய்க்கொடு” என்றான்.

அடுக்களையிலிருந்து வந்த கல்யாணிக்கு அந்தச் செயல் ஆத்திரமூட்டியது.

“என்ன இப்பவெல்லாம் சீக்கிரம் வந்திடுறீங்க?” என்றாள் கிண்டலும் கோபமுமாக.

“வேலையில்லை வந்தேன். ஏண்டா சீக்கிரம் வருகிறாய்? என்று கேட்பாய் போலிருக்கிறதே? பார்த்தாயா புவனா உங்க அக்காவை! ஒவ்வொருத்தி புருஷன் சீக்கிரம் வரவில்லையே என்று கவலைப்படுவாள். உன் அக்காவோ இப்படிக்கேட்கிறாள்?”

“ஊக்கும்… எதற்கெடுத்தாலும் புவனா ஒருத்தி அகப்பட்டாள் உங்களுக்கு. “ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
இந்தப் பத்து தினங்களாகக் கல்யாணிக்கு இருந்த நிம்மதியும், துhக்கமும் அறவே ஒழிந்து போய்விட்டன.

எல்லாம் இந்தப் புவனாவால் வந்த வினை! அவள் ஏன் லீவிற்கு ஊரிலிருந்து வந்தாள் என்று கூட நினைக்க ஆரம்பித்துவிட்டாள்.
கணவனை மாற்றியதே இந்தப் புவனாவின் வரவுதானே! பின் என்ன?
அலுவலகம் முடிந்து ஆறுமணிக்கு வருகிறவர்… ஏன் லேட் என்று கேட்டால் கடுகடுக்கிறவர் இப்பொழுது சீக்கிரம் வருவதேன்? கடுகடுப்பு, சுறுசுறுப்hபக மாறியிருப்பதேன்?

வெறுங்கையோடு வருகிறவர் தினமும் பூவும் ஸ்வீட்டுமாக வருவதேன்? சதா அறுவை ஜோக் அடித்து வீட்டையே வளைய வளைய வருவதேன்? எல்லாவற்றிற்கும் காரணம் என் தங்கை புவனா! அவளது அழகு!

கருமியாக இருந்தவர் தினம் ஒரு சினிமா என்று கூப்பிடுவது அவளைத் திருப்திப்படுத்த; தன்வசப்படுத்த… கூடாது. இதற்கு இடங்கொடுக்கக் கூடாது. நாளையே புவனாவை ஊருக்கு அனுப்பிவிடவேண்டும். கல்யாணி திட்டவட்டமாகத் தீர்மானித்துக் கொண்டாள்.

அடுத்தநாள் அலுவலகம் முடிந்து வந்த கோபாலிடம் புவனா ஊருக்குப் போய்விட்ட விவரத்தை ச் சொன்னாள் கல்யாணி.

அவனிடம் நிம்மதிப் பெருமூச்சு கிளம்பியது. “அப்பாடா, இந்தப் பத்து தினங்களாக உன்னிடம் நெருங்கக் கூட முடியாமல்… நல்லவேளை அவளை அனுப்பினாய்” என்று சொல்லிக்கொண்டே கல்யாணியை அணைக்க முற்பட்டான்.

“ஆமா, ஒண்ணும் தெரியாதவள்னு என்னை நினைச்சுட்டீங்களா? பத்துநாளா நானும் உங்க நடவடிக்கையைப் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். இனிமே பழைய குருடி கதவைத் திறடின்னு நேரங்கழிச்சு வரலாம்; வெறுங்கையோடு வரலாம்; கடுகடுன்னு இருக்கலாம்” கிண்டலாக சொற்களைக் கொட்டினாள் கல்யாணி.

“அட, பைத்தியம். உனக்கு என் மீது நிஜமாகவே சந்தேகமா? நீ சந்தேகப்படணும்கிறதுக்காகத்தான் அப்படியெல்லாம் நடிச்சேன்.”

“அப்ப, சீக்கிரம் வந்ததெல்லாம் கூட நடிப்புன்னு நான் நம்பணுமா? ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யா?” கோபமாகக் கேட்டாள் கல்யாணி.

“பொய்யில்லே கல்யாணி, உண்மையைத்தான் சொல்றேன். என் தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டியிருந்ததால் ஓவர்டைம் வேலை செய்தேன். அதனால்தான் நேரங்கழிச்சு வந்தேன். ஈவினிங் காப்பிகூடக் குடிக்காமல் சிக்கனமா இருந்தேன். அந்தக்கடன்கள் எல்லாம் போன மாதம் முப்பதாம் தேதியோடு முடிந்துவிட்டது. ஒண்ணாம் தேதியிலிருந்து நான் சுதந்திரப்பறவை ஆனேன். ஆசையோடு இங்கே வந்தால்… நீ உன் தங்கையை வரவழைத்திருந்தாய். அவளை சீக்கிரம் ஊருக்கு அனுப்பத் தான் இந்த நாடகம் ஆடினேன், என் எண்ணப்படியே நீயும் சந்தேகப்பட்டு அவளை அனுப்பிவிட்டாய். நன்றி கல்யாணி! ஆனால்… நீ நிஜமாகவே என்னை மட்டமா நினைச்சுட்டியே!” கோபால் ஆழ்ந்த வருத்தத்துடன் சொன்னான்.

உண்மையை உணர்ந்த கல்யாணி “என்னை மன்னிச்சுடுங்க அத்தான்! என்னதான் புவனா என் தங்கைன்னாலும், பெண்களுக்கே இருக்கிற இயல்பான சந்தேகம் என்னையும் தொத்திக்கிட்டுது, என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்லியபடியே அவன் தோள்களில் தோய்ந்தாள்.

– மின்மினி 20-06-1987

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *