புழுக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 12,150 
 
 

உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒரு சேர எழுந்து அவளைக் கவ்வி , கோபத்தை உண்டாக்கின. எதிரே பலேகர் என்கிற அவள் கணவன் என்கிற புழு இருந்திருந்தால் நசுக்கி விடக் கூடிய கோப வெறி மனத்தில் பீரிட்டு எழுந்தது.சற்று முன்பு நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவான அதிர்ச்சியும் அவளை வெகுவாகத் தாக்கின . அன்று மாலை எம்மெஸ் பில்டிங்கில் மீட்டிங் இருந்தது. அரசாங்கத்தின் புதியதொரு திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் கைத்தொழில் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி அவர்கள் தயாரிக்கும் கைத்தொழில் பொருட்களை மாநிலம் பூராவும் விற்பனை செய்வது பற்றி முடிவெடுப்பதற்காகக் கூடிய கூட்டம் அது. ரத்னா அரசின் விற்பனைக் கம்பனியின் தலைமை நிர்வாகியாக இருக்கிறாள். மாநிலத்தில் மட்டுமல்ல, அவளது அலுவலகம் நாடு முழுக்க கிளைகள் வைத்து, அரசு மற்றும் தனியார் துறையினர் தயாரிக்கும் பெரும்பாலான நுகர் பொருட்களை, வியாபாரம் செய்கிறது. அதனால் அவள் அந்த கூட்டத்துக்கு அழைக்கப் பட்டிருந்தாள். மாலை நாலு மணிக்கு ஆரம்பிக்கப் பட வேண்டிய கூட்டம் ஐந்தரை மணிக்குத்தான் ஆரம்பித்தது. அது முடிய ஏழு மணி ஆகி விட்டது. அவள் கிளம்பி வெளியே வந்தாள்.

அதே கட்டிடத்தின் நான்காவது மாடியில்தான் அவளது கணவனின் அலுவலகமும் இருந்தது. பலேகர் வனத்துறை இலாகாவில் முக்கிய அதிகாரி. ஆனால் அவன் அன்று மத்தியானமே சாமராஜநகருக்குக் கிளம்பிப் போயிருப்பான். வனத்துறை அமைச்சர் அடுத்த நாள் அங்கு செல்லப்போவதாகவும் அதற்கு முன்னால் அவன் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றுஅவளிடம் அவன் அன்று காலையில் சொல்லியிருந்தான். அவன் திரும்பி வர இரண்டு நாளாகும் என்றும் சொன்னான்.

ரத்னா லிப்ட் அருகே சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த பியூன் லிப்ட் காலையில் இருந்தே சரியாக வேலை செய்யவில்லை என்றும் ரிப்பேராக இருக்கிறது என்றும் தெரிவித்தான் சரியென்று அவள் படிகளில் இறங்கி நடந்தாள். இரண்டாவது மாடியிலிருந்து முதல் மாடியை அடையும் வரை பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் முதல் மாடியிலிருந்து கீழே செல்லும் வழியில் விளக்குகள் எதுவும் எரியவில்லை. வெளியே சாலையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளில் இருந்து வந்த வெளிச்சம் ஜன்னல்கள் வழியே பரவியதால் படிக்கட்டுக்களில் மங்கிய வெளிச்சம் தென்பட்டது. ரத்னா மெதுவாக ஜாக்கிரதையாகப் படிகளில் கால் வைத்து இறங்கினாள்.

அப்போது அவளுக்குச் சற்று முன்னால் ஜோடியாக நடந்து சென்ற இருவரின் பேச்சுக் குரல் அவள் கவனத்தைக் கவர்ந்தது.

“என்ன குரு, உன் பாஸ்தான் ஊர்ல இல்லையே ,எதுக்காக நீ இவ்ளோ நேரம் ஆபிசில உட்கார்ந்திருந்தே?”” என்று ஒருவன் கேட்டான்.

“அதாம்பா நம்ம தலை எழுத்துங்கிறது” என்று மற்றவன் சலிப்பான குரலில் சொன்னான். “இந்த வருஷத்திலே மார்ச் வரைக்கும் வரவேண்டிய பட்ஜெட் பணம் எவ்வளவு, இது வரை வந்தது எவ்வளவு, எப்படியெல்லாம் பணம் செலவு ஆகியிருக்குன்னு எல்லா விவரமும் ஒரு ஸ்டேட்மென்ட் போட்டு இன்னிக்கே பாஸ் அனுப்பச் சொல்லி உத்திரவு போட்டு விட்டு ஊருக்கு போயிட்டான். வேற வழி? எல்லாத்தையும் முடிச்சு கிளம்ப நேரமாச்சு.”

“நல்லா இருக்கய்யா கதே. சும்மா சொல்லக் கூடாது, டெண்டுல்கர் மஜா பண்ணறதுக்குன்னே பொறந்திருக்கான். மஜா பண்ண ஊருக்குப் போனாலும் அதையும் அபிஷியலா காமிச்சு… பெரிய கில்லாடி ஐயா உன் பாஸ்.” என்றான் முதலாகப் பேசினவன் . “உஷ், ஜாக்ரதையா பேசு. ” என்று மற்றவன் கண்டித்தான்.

” அடப் போய்யா, இன்னிக்கு இல்லாட்டாலும் என்னிக்காணும் வெளியில வர வேண்டிய விஷயம்தானே” என்று முதலாமவன் சிரித்தான். “ரொம்ப தைரியம்தான் அந்த பொண்ணுக்கும். பாத்தா எப்படி சாதுவா இருக்கா? பி.ஏ.ன்னு பேரு. ஆனா பாஸையே கைக்குள்ள போட்டுகிட்டாச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து தான் போறாங்களா, இல்லே தனித் தனியேவா?”

முன்பு ஜாக்ரதையாகப் பேசு என்று சொன்னவனை அந்த வம்புப் பேச்சு கவர்ந்து விட்டது போல் “இல்ல,அந்த அம்மா நேத்திக்கே போயாச்சு. இவரு இன்னிக்கி மத்தியான்னம் ” என்று சிரித்தான்.

ரத்னாவுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. முன்னால் சென்ற இருவரும் வாசல் அருகே சென்றதும் கை குலுக்கி விட்டுப் பிரிந்து சென்றனர். ஆனால் அவர்களின் பேச்சில் இருந்த விஷச் சொற்கள் ரத்னாவின் காதுகளிலும் மனத்திலும் ஒட்டிக் கொண்டன. அவர்கள் குறிப்பிட்ட நபர் அவளது கணவன்தான். அவன் நன்றாக கிரிக்கெட் விளையாடுவான் என்பதாலும் மராத்திக்காரன் என்பதாலும் அவனை ஆபிசர்ஸ் கிளப்பில் டெண்டுல்கர் என்றுதான் கிண்டலாகக் கூப்பிடுவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அது அவனது அலுவலகத்தில் பரவியிருப்பது ஆச்சரியமில்லை.

ரத்னா கட்டிடத்துக்கு வெளியே வந்து நின்றதும், டிரைவர் காரைக் கொண்டு வந்து அவள் பக்கத்தில் நிறுத்தினான். போகும் வழியில் மனது நிலை கொள்ளாமல் தவித்தது.

“ஆபிசுக்காம்மா?” என்று டிரைவர் கேட்டான்.

அவள் முதலில் ஆபிசுக்குத்தான் திரும்ப வேண்டும் என்று டிரைவரிடம் சொல்லியிருந்தாள்.

“ஆமாம்” . க்வீன்ஸ் ரோடில் அவள் அலுவலகம் இருந்தது. அதை அடைய பத்து இருபது நிமிஷம் ஆகலாம், சாலைப் போக்குவரத்தைப் பொறுத்து. காலையில் இருந்து அப்படி ஒரு வேலைப் பளு. உடம்பு வலி வலி என்று கெஞ்சிற்று. முதுகைச் சாய்த்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். ஆனால் மனது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் அலைந்தது. பலேகர் இப்படிச் செய்வான் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. அவர்களுடையது காதல் திருமணம். மொழி, ஜாதி , பழக்க வழக்கங்கள் என்று ஒவ்வொன்றிலும் வெளிப்பட்ட வித்தியாசங்கள் அவர்களைப் பிரிக்க முடியவில்லை. இருவரும் படித்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இருவரும் யூ.பி.எஸ்.ஸி. யில் தேறி வந்தவர்கள். பலேகர் வனத்துறையை எடுத்துக் கொண்டான். ரத்னா நிர்வாகம் பக்கம் சென்றாள்.

அவளை விரட்டி விரட்டி அல்லவா காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டான்? அவர்களின் வேலைப் பரீட்சார்த்தக் காலத்தில் அவள் மைசூரில் இருந்தாள். அவன் பங்களூரில் இருந்தான். ஒவ்வொரு சனிக் கிழமையும், மாலை ஐந்தரைக்கு ஆபிஸ் முடிந்ததும் அவனுடைய மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு நூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்து அவளைப் பார்க்க விட்டால் அவனுக்குத் தலை வெடித்து விடுவது போல் அல்லவா விரட்டி அவளைக் காதலித்தான்! ஒரு சனிக் கிழமை அவனது ஆபிஸில் இருந்து கிளம்பத் தாமதமாகி விட்டது. வழக்கமாக பலேகர் பத்து மணிக்கு வந்து அவளைப் பார்த்து விட்டு இரவு நண்பனின் வீட்டுக்குத் தங்கப் போய் விடுவான். அன்று பத்தரை வரைக்கும் வரவில்லை. அவனிடமிருந்து போனும் வரவில்லை என்று சற்றுக் கலக்கமாக இருந்தது. படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். பதினொன்றரை மணிக்கு அவள் அறைக் கதவு மெல்லத் தட்டப் படும் ஒலி கேட்டு அவள் எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். பலேகர் அவளைப் பார்த்துச் சிரித்தபடி நின்றான்.

ரத்னா அவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவன் எப்படி உள்ளே வந்தான்?. அவள் தங்கி இருந்த அரசாங்க பங்களாவைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் கட்டப் பட்டிருந்தன. பிரிட்டிஷ் காலக் கட்டிடம். வாசல் கேட்டுகள் , இரும்பினால் ஆனவை. நல்ல உயரத்துக்கு எழுப்பப்பட்டவை. அவள் படுக்கைக்குப் போன பின் இரவு வாட்ச்மேன் கதவுகளை இழுத்திச் சார்த்திப் பூட்டி விட்டு பின் புறம் இருக்கும் அவனது தங்குமிடத்துக்குப் போய் விடுவான். இப்படி இருக்கும் போது பலேகர் எப்படி உள்ளே வந்தான் என்று அவளுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது . அவள் அவனைக் கேட்டும் விட்டாள். அவன் சிரித்துக் கொண்டே பூட்டியிருந்த வாசல் கேட் மீது ஏறிக் குதித்து வந்ததாகக் கூறினான். அவள் வாயைப் பொத்திக் கொண்டாள். யாராவது பார்த்திருந்தால்? யாராவது சுவர் ஏறிக் குதிக்கும் திருடன் என்று எண்ணி அவனைப் பிடிக்கக் கூச்சலிட்டிருந்தால்? அவள் நடுக்கத்தைப் பார்த்து அவன் மேலும் சிரித்துக் கொண்டே அவளைக் கட்டிக் கொண்டான்… அந்த பலேகரா இன்று இப்படி? இப்போது எல்லாம் கசந்து விட்டதா? அல்லது அவள் அவனுக்கு அலுத்து விட்டாளா?

ரத்னாவுக்கு ரெஜினாவா இப்படிச் செய்தாள் என்று திகைப்பும் கோபமும் ஏற்பட்டன. பலேகரின் அந்தரங்கச் செயலர் என்று அவள் அவனது அந்தரங்க வாழ்க்கையிலும் நழைந்து விட்டாளா? வயதில் அவள் ரத்னாவைவிட சிறியவள். அது பலேகரைக் கவர்ந்து விட்டதா? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போலத்தானே அவள் இருந்தாள்! இளம் வயதில் கணவன் அவளை விட்டு ஓடி விட்டான் என்று ரத்னாவுக்கு அவள் மீது பரிவு இருந்தது. காவல் இல்லாத தோட்டம் என்று பலேகர் நுழைந்து விட்டானா அல்லது அவள் தன் வாழ்க்கையின் பாதுகாப்பு என்று அவனைச் சுற்றிக் கொண்டு விட்டாளா? ரத்னாவுக்கு அருவருப்பு ஏற்பட்டது…

கார் ஆபிஸ் போர்டிகோவில் நின்றது . டிரைவர் இறங்கி வந்து ரத்னா உட்கார்ந்திருந்த சீட்டுக்கு அருகில் இருந்த கதவைத் திறந்து நின்றான். அவள் இறங்கியதும், வாசலில் நின்றிருந்த அவளுடைய பி.ஏ. மேனன் அவள் கையில் இருந்த கோப்புக்களை வாங்கிக் கொண்டான். இருவரும் அவளுடைய அறைக்குச் சென்றார்கள்.

அவள் மேனனைப் பார்த்து ” மேனன் , ஸாபோட பி. ஏ. ரெஜினாவோட நம்பர் இருக்கா? லெட் மீ ஸ்பீக் டு ஹர்.” என்றாள்.

மேனன் எழுந்து அவனது அறைக்குச் சென்றான்.

அவள், கைப்பையை மேஜை மீது வைத்து விட்டு.பாத்-ரூமுக்குச் சென்றாள். முகத்தில் நீர் விட்டுக் கழுவி, தலையை வாரிக் கொண்டாள்.எதிரே இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். நாற்பத்தி இரண்டு வயதிலும் அவள் முகம் எடுப்பாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கிறது. ஏன் இந்த முகம் அவனுக்கு திடீரென்று பிடிக்காமல் போய் விட்டது? ரெஜினாவின் முகம் அவளுக்க ஞாபகம் வந்தது. அவளுக்கு இப்போது இருபத்தி ஐந்து அல்லது முப்பது வயது இருக்குமா? அந்த இளமையை முகம் காட்டத்தான் செய்யும். நாற்பது வயதுக்கு வரவேண்டிய நாய்க் குணம் பலேகருக்கு ஐம்பது வயதில் வந்து விட்டது

அவள் திரும்பவும் தன்னிடத்துக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

மேஜை மீதிருந்த டெலிபோன் அடித்தது. அதை அவள் எடுத்ததும், மேனன் ” மேடம், ரெஜினாவோட செல் ஆன்ல இல்ல. வீட்டு லைன் குடுக்கிறேன். அவளோட அம்மா லைன்ல இருக்காங்க ” என்றான்.

” ஹலோ ” என்றாள் ரத்னா. எதிர் முனையில் இருந்த வந்த குரலில் படபடப்பு தெரிந்தது. உயர் அதிகாரிகளிடம் காண்பிக்கும் மரியாதை அந்தப் படபடப்பில் இருந்தது.”வணக்கம் அம்மா. சொல்லுங்கம்மா. நான் ரெஜினாவோட அம்மாதான் பேசறேன்.”

“ரெஜினாவோட நான் பேசணும். இருக்கிறாளா?”

எதிர்முனைக் குரலின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. “ரெஜினா வீட்டில இல்லையேம்மா. அவ ஊருக்கு போயிருக்கா.”

“ஒ, அப்படியா?” என்றாள் ரத்னா.

“ஆமாம்மா. நாளன்னிக்கி வந்திடுவா. அவளை உங்களுக்கு போன் பண்ணச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள் ரெஜினாவின் அம்மா.

“இல்லை, வேண்டாம்” என்று ரத்னா போனைத் துண்டித்தாள்.

ஆக சற்று முன் எம்மெஸ் பில்டிங் அருகே கேட்டது வெறும் வதந்தி இல்லை என்பதை வலியுடன் உணர்ந்தாள் இதுவரை ரத்னாவுக்கு . உள்மனதின் ஒரு மூலையில், கேட்டது எல்லாம் பொய் என்று நம்பத் துடித்துக் கொண்டிருந்த நிலையில், ரெஜினா ஊரில் இல்லை என்ற செய்தி மிகுந்த போராட்டத்தையும் வலியையும் உண்டாக்கிற்று. அவளையும் மீறி, கற்பனைகள் கட்டறுத்துக் கொண்டு விரும்பாத திசையில் ஓடின. இப்போது பலேகரும்,ரெஜினாவும் சேர்ந்து இருப்பார்களோ? என்ன செய்து கொண்டு இருப்பார்கள்? மங்கிய விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில் , ஒருவர் எதிரே ஒருவர் உட்கார்ந்து கொண்டு, இல்லை, இல்லை, அருகருகே நெருங்கி உட்கார்ந்து கொண்டு பேசிச் சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டு…அல்லது தெரிந்தவர் எவராவது தென் பட்டு விடக் கூடுமோ என்ற பயத்தில், ஹோட்டல் ரூமில் இருந்து கொண்டு…..

ரத்னாவுக்கு சிந்தனை செல்லும் வழி பிடிக்கவில்லை. வீட்டுக்குப் போகலாம் என்று எழுந்தாள்.

அவள் அறையை விட்டு வெளியே வந்ததைப் பார்த்து விட்டு மேனன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். அங்கு நின்றிருந்த அவளுடைய டிரைவர் காரை எடுக்க வேகமாக வெளியே சென்றான்.

மேனன். மறுநாள் அவளுக்கு இருக்கும் அப்பாயின்டுமெண்டுகளைப் பற்றிச் சொல்லியபடி உடன் வந்தான். அவன் அவளுக்கு அவளுடைய வலது கை போல. அந்த அலுவலகத்தில் நடக்கும் நல்லதோ கெட்டதோ எல்லா விஷயங்களையும் அவளுக்குத் தெரிவித்து விடுவான். அவளது நண்பர்கள், எதிரிகள், உறவினர்கள் என்று எல்லாரைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பான். அவளுக்கு என்ன தேவையோ, அதை முன்னின்று செய்து விடுவான். அரசாங்க அலுவலகங்களில் கம்பனியின் கோப்புக்களில் அவள் விரும்பும்வண்ணம் ஒப்புதல்கள் வாங்கி வந்து விடுவான். அவனுக்குத் தெரியாது என்று ஒரு விஷயமில்லை.

ரெஜினாவைப் பற்றி மேனனுக்குத் தெரிந்திருக்குமோ என்று திடீரென அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவனிடம் ரெஜினாவின் நம்பரைக் கேட்ட போது அவன் முகம் எதையும் தெரிவிக்க வில்லையே என்று நினைத்தாள். அதற்குப் பிறகும் இது வரை அவன் ரெஜினாவைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. ஒருவேளை அவள் கணவனின் ஒழுக்கத்தைப் பற்றி எப்படிப் பேசுவது என்று….

அவனைக் கேட்டு விடலாமா என்று மனதுக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டது. ஆனால் அவளது ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. எப்படி அவளைப் போன்ற ஒரு சீனியர் ஆபிசர் தன் கீழ் வேலை பார்க்கும் குமாஸ்தாவிடம் கேட்க முடியும்? அவன் எவ்வளவுதான் அவளது முழு நம்பிக்கைக்கு உரியஅந்தரங்கச் செயலாளனாக இருந்தாலும் , அவளது கௌரவத்தைக் குலைக்கும் ஒரு செயலைப் பற்றிஅவளது உதவியாளனிடம் அவளால் கேட்க முடியாது. தன்னை இம்மாதிரி இக்கட்டில் சிக்க வைத்து விட்ட அந்த இருவரையும் அவள் ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை.

அவள் காரில் ஏறிக் கொண்டதும், மேனன் அவளை வணங்கினான். வீட்டில் அவளுக்காகக் காத்திருக்கும்தனிமையை நினைத்தால் எரிச்சலாக இருந்தது. இங்கு அவள் இம்மாதிரி மன உளைச்சலிலும், ஏமாற்றத்திலும் தடுமாறிக் கொண்டிருக்க, அதற்குக் காரணமான இருவரும் தங்களை மறந்து ,மற்றவரையும், மற்றவைகளையும் மறந்து கூத்து அடித்துக் கொண்டிருக்கக் கூடும். அவள் கைக் கெடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது இந்நேரம் இருவரும் டின்னரை முடித்து விட்டு படுக்கையில் சேர்ந்து படுத்துக் கொண்டு….. ஒருவரை ஒருவர் அணைத்தபடி….பலேகர் தினமும் தான் அருந்தும் மதுவை அவளுக்கும் கொடுத்துக் கொண்டு…ரெஜினா குடிப்பாளா ? இல்லாவிட்டால் கூட இப்போது அவள் பலேகர் சொன்னதை கேட்க வேண்டும். பாஸ் இல்லையா? பலேகர் குடித்தாலும் உடம்பைக் ‘கிண் ‘னென்று வைத்திருக்கிறான். அவனுக்கு ஐம்பது வயது ஆகப் போகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது என்பதையே , சந்தேகத்தோடுதான் கேட்டுக் கொள்வார்கள். விளையாட்டு,தேகப் பயிற்சி, உணவு முறை என்று எல்லாவற்றிலும் அவனுக்குக் கட்டுப்பாடு என்று அவள் பலமுறை வியந்திருக்கிறாள், அவனிடமே சொல்லிப் பாராட்டியிருக்கிறாள். கட்டுப்பாடு ! இப்போது அந்த வார்த்தை அவளைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அவளுக்குத் தான் ஏமாற்றப்பட்டதும் ஏமாந்ததும் , மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கிற்று. இவ்வளவு படித்து, உயர்ந்த பதவியில் இருந்து,சமூகத்தில் பெரிய அந்தஸ்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம் என்று அந்த உளைச்சல் கேட்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருபது வருஷங்கள்! பலேகருடன் வாழ்ந்த வாழ்க்கை !

கார் வீட்டை நெருங்கியது. வாசலில் நின்றிருந்த கூர்க்கா காம்பவுண்ட் கேட்டைத் திறந்தான். கார் உள்ளே சென்று நின்றது. ரத்னா இறங்கினாள். அவள் கவனத்தை அவள் காருக்கு முன்னால் நின்றிருந்த ஜீப் கவர்ந்தது.வனத்துறை வண்டி என்று பச்சைக் வண்ண நம்பர் போர்ட் தெரிவித்தது. வனத்துறையில் இருந்து யாராவது பலேகரைத் தேடி வந்து இல்லை என்று தெரிந்து கொண்டு அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்களா? இம்மாதிரி சில சமயங்கள் நடந்ததுண்டு,

உள்ளே நுழைந்த அவள் சட்டென்று நின்று விட்டாள். பலேகர் சோபாவில் படுத்துக் கொண்டு டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னல் அவள் நின்றதால் அவள் வந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

“……..சென்னப்பட்ணா கிட்டே போகும் போது மினிஸ்டரிடம் இருந்து போன். நாளைக்கு திடீரென்று ஒரு மீட்டிங் தில்லியில் நடக்கப் போவதால் சாமராஜநகர் விசிட்டை கேன்சல் செய்து விட்டதாகச் சொன்னார். சரி என்று திரும்பி விட்டேன்.திடீரென்று வழியில் கார் நின்று விட்டது. அரை மணி நேரம் டிரைவர் மன்றாடி விட்டு என்னைப் பார்த்துக் கையைப் பிசைந்தான். சரி என்று என் ஆபீஸுக்கு போன் பண்ணி ஒரு காரை அனுப்பச் சொன்னேன். உடனடியாக ஒரு ஜீப்தான் கிடைத்தது என்று அனுப்பி வைத்தார்கள். இங்கே வரும் போது ஏழு மணி ஆகி விட்டது. நாளைக்கு ஈவ்னிங் பெங்களூர் கிளப்பில் பார்க்கலாமா? ரத்னாவையும் அழைச்சிட்டு வரேன் . ஓ கே யா?” என்று போனைக் கீழே வைத்தான்.

சோபாவிலிருந்து எழுந்தவன் அவளைப் பார்த்தது “ஹாய் , நீ இப்பதான் வந்தியா?” என்று கேட்டு விட்டுப் புன்சிரிப்புச் சிரித்தான்.

“ஆமாம் . நான் போய் குளிச்சிட்டு வரேன். ஒரே புழுக்கமா இருக்கு. இன்னிக்கு பூரா” என்று கைப் பையை சோபா மீது போட்டு விட்டு உள்ளே சென்றாள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், அவளுக்குத் தான் தரையில் உருண்டு கொண்டேபோவது போலிருந்தது. நடக்கும் போது உடம்பில் ஆடை எதுவும் இல்லாமல் செல்வதான உணர்ச்சி மனம் பூராவும் பரவி பெரிய பந்தாக உருண்டு வெளிப்பட்டு , தொண்டையை அடைத்துக் கொள்வது போல் இருந்தது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *