வரப் போகிற தீபாவளி நமக்கு முதல் தீபாவளியா வரணும்” என்று தன் மச்சானான அன்புக்கனியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் நவமணி. அவள் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தான் அன்புக்கனி. உடைத்த தேங்காயைப் போலிருக்கும் அவன் பல் வரிசையின் வெண்மையில் மயங்கி நின்றாள் நவமணி. ஆள் அழகாக வாட்ட சாட்டமாக இருந்தால் கூட அந்த பல் வரிசையில் தான் தன்னை மறந்து மயங்கி நிற்பாள் நவமணி.
“”என்ன மச்சான் நானு சொல்லுற பேச்சு உமக்கு கேலி கூத்தா இருக்காக்கும். சிரிக்கீரு” என்று பொய்க் கோபத்தோடு சிணுங்கவும், “”சரி, சரி, இப்பத்தான ஆவணி பிறந்திருக்கு. இனித்தான ஊருக்குள்ள கல்யாணம் பேசி முடிப்பாக. நம்ம கல்யாணம் பிறந்த அன்னைக்கே எனக்குதேன் நீயின்னு பேசி முடிச்ச கல்யாணம். உன்னைப் பெத்தவகளும், என்னைப் பெத்தவகளும் சும்மாவா இருப்பாக. அதெல்லாம் பேசி முடிச்சிருவாக. நீ எதுக்கு இம்புட்டுக்கு அவசரப்படுதே?” என்றதும், “”உக்கும் உமக்கென்ன சொல்வீரு. நானு சீல கொண்டு வர்ற வேணு பெரியய்யா கிட்ட எனக்கு முதத் தீபாவளிக்கு ரோசாப்பூ கலர்ல சீலையும், ரவிக்கையும் நெஞ்சி கொண்டு வாருமின்னல்ல சொல்லிட்டேன்” என்றாள் பெருமையாக.
“”அப்போ உனக்கு மட்டுந்தேன் சொல்லியிருக்கே. எனக்கு சொல்லல அப்படித்தான?” என்று கேட்டவாறு முகத்தைச் சுளித்தான்.
“”அதைத்தான உம்மகிட்ட கேக்க வந்துருக்கேன். உமக்கு கோடு போட்ட சட்டை வேணுமா? கட்டம் போட்ட சட்டை வேணுமா? வேட்டி கரையில என்ன கலரு வேணும்” என்று கேட்டாள் ஆசை ஆசையாக நவமணி.
“”உனக்கு என்ன கலரு, என்ன கோடு பிடிக்குதோ அது எனக்கும் பிடிக்கும். அதனால உனக்குப் புடிச்சதையே சொல்லிரு” என்றதும் மனசுக்குள் சந்தோஷ மத்தாப்பூக்கள் சொரிந்தன.
வண்டி மாடுகளைக் கொண்டு போய் மூக்காண்டி வீட்டில் விட்டுவிட்டு அவர் அன்றையக் கூலியாகக் கொடுத்த இருநூற்று ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு வந்த அன்புக்கனிக்கு முகம் வெம்பிக் கிடந்தது. மகனின் முகத்தைப் பார்த்தே அவன் மனசை அறிந்து கொண்ட அவன் ஆத்தா முத்தரளி, “”என்னடா வண்டி அடிக்கப் போனவன் இப்படி சொடிஞ்சி போயி வாரே? முகத்தில செழும்பவே காணமே. மூக்காண்டி ஏதும் சொன்னாரா? இல்ல மேலுக்கு (உடம்பு) சேட்டமில்லையா?” என்று கேட்டதும் நொந்து போனான் அன்புக்கனி.
“”என்னத்த… நானும் விவரம் தெரிஞ்ச நாளையில இருந்து பாடுபடுதேன். ஒரு வண்டி மாடு வாங்க முடியல. விடியக் காலத்தில இருந்து பொழுது அடையும் தண்டியும் வேலை செஞ்சும் எரநூத்தி அம்பது ரூவாதேன் சம்பளமா தந்திருக்காரு. இதுவே நம்ம வண்டி மாடா இருக்கட்டும் அய்நூறு, அரநூறு ரூவாயில்ல. கூலியா கெடைக்கும்” என்றான் மனக்கசப்போடு.
“”என்னய்யா செய்றது? நம்மளும் பத்து வருசமா எப்படியும் வண்டி மாடு வாங்கிருவோமின்னுதேன் பாடுபடுதேன். வீட்டுக்குள்ள ஒரு ஆயிரம் ரூவா மிஞ்சமாட்டேங்கே. வயித்துக்கும், வாயுக்குமே இழுபறின்னு கெடக்கே. என்ன செய்றது?” என்றதும், “”என் காலத்திலதேன் வண்டியும் மாடும் வாங்க முடியலை. உன் காலத்திலயாவது வாங்குவேன்னு பாத்தா… அதுவும் முடியாது போலுருக்கே” என்றார் அவன் அய்யா மருது.
“”இன்னைக்கு கூட உன் ஒண்ணுவிட்ட அத்தை மாடத்தி வந்து எம்மவள உன் வீட்டு மருவளா ஆக்கிக்கோ. உனக்கு நல்ல சோடியா ரெண்டு காளை மாடும், புது வண்டியும் வாங்கித் தாரேன். என் மருமவனுக்கும் அரைப் பவுனுல மோதரமும் போடுதேன்னு கெஞ்சாத குறையா சொல்லிட்டுப் போறா. எனக்குக் கூட நம்ம நினச்சது நடக்கப் போவுதுன்னு ஆசைதேன். ஆனா உனக்குத்தேன் நவமணி பிறந்ததுமே அவளப் பேசி வச்சிட்டமே…” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே உரசிய தீக்குச்சியாக குறுக்கிட்டான் அன்புக்கனி.
“”எய்யா எனக்கும் நவமணிக்கும் சும்மா பேசித்தான வச்சீக. பருசம் போட்டு கல்யாணத்த, கில்யாணத்த ஒண்ணும் முடிச்சிரலயே” என்று கேட்டதும் திகைத்துப் போனார் மருது.
“”ஏன்டா அப்படி பருசம் போட்டு கல்யாணம் பேசியிருந்தா இன்னுமா அவள அவுக வீட்டுல விட்டு வச்சிருக்கோம். நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துர மாட்டோம்” என்று சொல்லும் முன்பே மீண்டும் குறுக்கிட்டான் அன்புக்கனி.
“”ரொம்ப நல்லதா போச்சி எய்யா, நானு மாடத்தி அத்தமவ பவளத்தவே கட்டிக்கிடுதேன்” என்று சொல்லவும் மருது மட்டுமல்ல, முத்தரளியும் திடுக்கிட்டுப் போனார்கள்.
“”என்னடா சொல்லுத? புத்தி உணர்ந்துதேன் பேசுதயா? பெறந்த நாளையில இருந்து உம்மேல உசுர வச்சி வளந்தவடா நவமணி. அவளவா நீ வேண்டாமின்னு சொல்லுதே”
“”ஆமா… உசுர வச்சிட்டா எனக்கு வண்டி மாடும் அம்புட்டும் வந்துருமாக்கும். வேண்ணா நவமணி வீட்டுல வண்டி வாங்கித் தரட்டும். நானு அவளையே கட்டிக்கிடுதேன்”
“”ஏன்டா அன்பு நீ அறியாத யோசனையா? உன் மாமனும், அத்தையும் படுத பாட்டுல வண்டி மாடு வாங்குத மாதிரியா இருக்காக? அவுகளும் நம்மள கணக்கா உழைச்சி சாப்பிடுறவக. நவமணி கல்யாணத்த எப்படி முடிக்கப் போறோமின்னு கதி கலங்கிக் கிடக்காக”
“”மவள கட்டித்தர வழி இல்லாத வீட்டுல நானு பொண்ணு கட்டமாட்டேன். நானு பவளத்ததேன் கட்டப் போறேன். இதுல ஏதும் கொந்தாங்கூறான வேல செஞ்சேங்கன்னா பொறவு நானு உங்களுக்குப் புள்ளையா இருக்கமாட்டேன்” என்று சொன்னதைக் கேட்டதும் நெருப்பைத் தொட்டதைப் போல் துடித்துப் போனார்கள் மருதுவும், முத்தரளியும்.
“நம்ம பய இம்புட்டுக்குப் பேராசைக்காரனா இருப்பான்னு நினைக்கலயே’ என்று நினைத்த மருது, “”சரி, நீ பவளத்தவே உன் இஷ்டப்படி கட்டிக்கோ. ஆனா இந்த விஷயம் வெளிய தெரிய வேண்டாம். நமக்குள்ளேயே கமுக்கமா இருக்கட்டும். நானு உன் மாமன் கிட்ட அன்புக்கு ரெண்டு வருசம் கழிச்சிதேன் கல்யாணம் முடிக்கப் போறோமின்னு சொல்லிருதேன். நானு சொன்னத நம்பி உன் மாமன் நவமணிக்கு வெளியே மாப்பிளை பாத்துக் கட்டிக் கொடுத்தருவாரு. அதுக்குப் பொறவு உன் கல்யாணத்தை முடிப்போம். அதுவரைக்கும் எப்பவும் போல நவமணி கிட்ட பேசிக்கிட்டு இரு” என்றார் மருது.
“”என்னடி நவமணி நானு நேத்து மிளகாத் தோட்டத்துக்குப் போறேன். உன் அத்த மவன் அன்பும் அந்தப் பவளமும் உரசுனவாக்குல நின்னுக்கிட்டு அப்படி பேசி பேசி சிரிக்காக” என்று நவமணியிடம் விண்மதி வந்து சொல்ல, நவமணிக்கு உடம்பெல்லாம் எரிந்தது. இந்த விண்மதி மட்டுமல்ல, இதோடு நான்கைந்துபேர் அன்பும், பவளமும் பேசுவதையும், ஒன்றாகச் சோளக்காட்டிலும், கத்தரித் தோட்டத்திலும் ஒட்டிக் கொண்டும், உரசிக் கொண்டும் அலைவதையும் சொல்லிவிட்டார்கள்.
நவமணிக்கு நெஞ்சுக்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதுமட்டுமில்லாமல், இப்போதெல்லாம் அன்பு இவளிடம் சரியாகப் பேசுவதுமில்லை. இவளைப் பார்த்தால் கூட பார்க்காததுபோல் ஒதுங்கி, ஒதுங்கிப் போகிறான். அவன் போக்கைப் பார்த்து நவமணி துடித்துப் போனாள். அன்றே தன் அய்யாவையும், அம்மாவையும் கல்யாணம் பேசுவதற்கு அனுப்பி வைத்தாள்.
கல்யாணம் பேசப் போனவர்கள் உடல் குறுகி வந்தார்கள். அவர்களின் முகம் களையிழந்து கிடந்தது. “”தாயீ அவுக அன்புக்கு கல்யாணம் முடிக்க ரெண்டு மூணு வருசம் ஆகுமாம்” என்று சொல்லும் முன்பே, “”பொய்யி, எல்லாம் பொய்யி‘’ என்று ஆங்காரத்துடன் கத்தினாள் நவமணி.
“”எதுக்குத் தாயீ நீ இம்புட்டுக்கு ஆத்திரப்படுதே. அன்பு போனா போறான். உனக்குன்னு ஒருத்தன் இந்த ஊருக்குள்ள பொறக்காமயா இருப்பான்?‘’ என்று அவள் அம்மா சொல்ல, அவள் மீது நஞ்சு கொண்ட நாகமாகச் சீறினாள் நவமணி.
“”எல்லாம் உங்களால வந்தது. நான் சின்னப்புள்ளையா இருக்கும்போதே அன்புக்குத்தேன் உன்ன கொடுக்கப் போறோம். அவன்தேன் உன் புருசன்னு சொல்லி, சொல்லி வளத்தீக. இப்ப அவன் என் மனசுக்குள்ல ஒரு புண்ணா புரையோடிக்கிடக்கானே… அந்தப் புண்ண நானு எப்படி ஆத்துவேன்? அதுவுமில்லாம அவன் அந்தப் பவளத்தவில்ல கட்டப் போறதாச் சொல்லுதாக”
“”நாங்களும் பராபரியா கேள்விப்பட்டோம். அவுக பணக்காரக. பணக்கார எடமா பாத்து இந்த அன்பு போறான் போலுக்கோ. அதுக்கு உன் அத்தையும் மாமாவும் ஒத்து இருக்காக. நம்மளால என்ன செய்ய முடியும்? நீ இனிமே அந்த அன்பை மறந்துரு” என்றாள் நவமணியின் அம்மா சங்கிலி.
தீபாவளி வந்துவிட்டது. தீபாவளிக்கு முதல் வாரம் ஊர் அம்மனுக்கு விழா எடுப்பார்கள். ஊரில் உள்ள இளவட்டங்கள் அம்மன் ஊர் சுற்றி வரும்போது, தங்களுக்குப் பிடித்த வேஷங்களைப் போட்டுக் கொண்டு குதித்து, குதித்து ஆடியவாறு அம்மனோடு ஊர் சுற்றி வருவார்கள். அவர்களின் களைப்பு நீங்க, பால், மோர், பானைக்காரம், இளநீ என்று விருப்பம் உள்ளவர்கள் கொடுக்க வாங்கி, வாங்கிக் குடித்தவாறே இளவட்டங்களும் ஆட்டம் போடுவார்கள். இது அந்த ஊரில் காலத்துக்கும் நடக்கும் திருவிழா.
அந்த வருசம் அன்புக்கனி புலிவேசம் கட்டியிருந்தான். அவனுக்கு அது ரொம்ப பொருத்தமாக இருந்தது. வெட்டுக் கிழங்காக துள்ளித் தெறித்தவாறு அம்மனுக்கு முன்னால் ஆடிக் கொண்டு வந்தான் அன்புக்கனி. அவன் பக்கத்திலேயே பட்டுப்புடவையோடு, காது, மூக்கு, கழுத்து என்று நகைகள் மினுக்கத்தோடு பவளம் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கல்யாணப் பூரிப்பு நன்றாகவே தெரிந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க நவமணிக்கு வயிறு எரிந்தது.
அன்புக்கனி நவமணி வீட்டுக்கு முன்னால்தான் ஆடிக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் போன நவமணி பளபளவென்று விளக்கிய வெண்கலச் சொம்பில் பாலை நிறைத்தாள். கூடவே பொட்டலம் ஒன்றைப் பிரித்து அதில் இருந்ததை கொஞ்சம் கலந்தாள். சிரித்த முகத்தோடு வந்து அன்புக்கனியிடம் கொடுத்தாள். ஆவலோடு பால் சொம்பை வாங்கி கட, கடவென்று குடித்தான் அன்புக்கனி.
– விஸ்வநாதன் வீஜே (நவம்பர் 2012)