புறாக் குஞ்சுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,151 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேக்கா ஈரச் சந்தைக்குப் பக்கத்தில் ஓர் அடுக்கு மாடி குடியிருப்புதான் பாரதியின் வீடு. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அங்குதான் அவள். காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை அலுவலக வேலை பார்க்கும் கணவன், தொடக்கநிலை ஆறு படிக்கும் மகன் சுந்தர். இதுதான் பாரதியின் குடும்பம். பாரதிக்கு வீடுதான் அலுவலகம். பாரதிக்கு சம்பளம் என்று கொடுத்தால் இரண்டாயிரம் வெள்ளி கூட குறைவுதான். அந்த மின் விசிறி எப்போது பார்த்தாலும் அன்று வாங்கியது போல் இருக்கும். சாளரக் கண்ணாடிகளில் விரல் வைத்தால் வழுக்கும். ஒரு தூசு பார்க்க முடியாது. துணி துவைப்பது இயந்திரம்தான். அவள் அதை உலர்த்தும் அழகே தனி. சுத்தமாக உதறுவாள். மூலைக்கு மூலை சரியாகச் சேர்த்து உள்ளாடைகளை ஒளித்து அவள் உலர்த்தும் அழகில் அவளின் கலை உள்ளம் பிரதிபலிக்கும்.

பத்தாவது மாடியில் தான் அவள் வீடு. ஒன்பதாம் மாடி சாளர வாரத்தில் ஒரு கருப்புத் துணி விழுந்து கிடந்ததை அன்றுதான் பார்த்தாள். அது என்னவோ ஓர் உயிரற்ற கருப்புப் பூனை போல் பயமுறுத்தியது.

‘யாருடையதாக இருக்கும்? நமக்கேன் வம்பு? உடையவர்கள் எப்படியும் எடுத்துக் கொள்வார்கள்.’

தனக்குள் சொல்லிக் கொண்டாள். அடுத்த சில நாட்கள் மழை, வெயில், மழை, வெயில். அந்தத் துணி அத்தனைக்கும் ஈடுகொடுத்து அங்கேயே கிடந்து பயம் காட்டிக் கொண்டிருந்தது. சுத்தத்தையும் ஒழுங்கையும் உயிராக நேசிக்கும் பாரதிக்கு அந்தத் துணியின் காட்சி அருவருப்பாகவே இருந்தது.

‘சரி. இனிமேல் யாரும் உரிமை கொண்டாட மாட்டார்கள். எப்படியாவது கீழே தள்ளி விடுவோம்.’

துணி உலர்த்தும் குச்சியை எடுத்தாள். எட்டினாள். இன்னும் பத்து சென்டிமீட்டர் நீளம் அதிகம் தேவைப்பட்டது. இதற்கு மேல் எகிறினாலும் ஆபத்து. சரி. பிறகு பார்த்துக் கொள்வோம்.

ஒரு நாள். மின் தூக்கி முகப்பில் ஒரு மூங்கில் குச்சி கேட்பாரற்றுக் கிடந்தது. அட இது எட்டுமே. முதன் முறையாக தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளை வீட்டுக்கு எடுத்துச் சென்றாள் பாரதி. இது நிச்சயமாக அந்தத் துணியை எட்டும். எட்டினாள். எட்டியது. அந்த வாரத்தை விட்டு நகருவேனா என்கிறது அந்தத் துணி. அப்படியே அடையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் வேகமாக முயற்சித்தாள். ஒரு புறா உள்ளிருந்து தலையை நீட்டியது. அட. திக்கென்றது பாரதிக்கு.

‘புறா அடை காக்கிறதா உள்ளே? என்ன பாவம் செய்ய இருந்தேன்?’

அந்தக் குச்சியை அப்படியே தூக்கி இருந்த இடத்திலேயே கொண்டுபோய் வைத்துவிட்டாள்.

ஒவ்வொரு நாள் காலையும் அந்தத் துணிக் கூடுதான் அவளின் முதல் தரிசனமாக இருந்தது. நாட்கள் நகர்ந்தன. ஒன்று. இரண்டு. மூன்று. இப்போது சில குஞ்சுகள். இன்னும் முடி முளைக்கவில்லை. அவ்வப்போது தலை காட்டின.

‘இந்தக் குஞ்சுகள் பெரிதாகி முழுப் புறாவாக ஆகும்வரை கடவுளே மழையை இறக்கிவிடாதே. அந்தப் புறாவுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிடாதே. ஒரு குஞ்சு செத்துப் பார்த்தாலும் நான் செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.’

உயிர்களின் மேல் இத்தனை ஈடுபாடு பாரதிக்கு இயற்கையிலேயே இருந்தது.

வெள்ளிக் கிழமைகளில் காலை பதினொரு மணிக்கு பாரதியை நிச்சயமாக சிராங்கூன் சாலை வீரமாகாளியம்மன் கோயிலில் பார்க்கலாம். அவள் பெயரிலோ, கணவர் பெயரிலோ, மகன் பெயரிலோ அர்ச்சனை செய்வாள். அன்று அர்ச்சகரிடம் தட்டை நீட்டியபோது அர்ச்சகர் கேட்டார்.

‘அர்ச்சனை யார் பெயருக்கம்மா?’

சட்டென்று சொன்னாள் பாரதி, ‘புறா’.

அர்ச்சகர் எந்த விளக்கமும் கேட்கவில்லை. புறா என்று பெயர் சொல்லி மந்திரம் ஓதி அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தார். பாரதி கண்களை பாதி மூடிக்கொண்டாள். வாய் மட்டும் முனுமுனுத்தது.

‘கடவுளே அந்தப் புறாவைக் காப்பாற்று. குஞ்சுகளுக்குச் சீக்கிரம் சிறகு முளைக்கட்டும். என் கண்ணெதிரே அவைகளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது.’

வேண்டுதல்களை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் பாரதி. இரண்டு மூன்று வாரங்கள் நகர்ந்தன.

அந்தத் துணி என்ன புறாவுக்காகவே இறைவன்போட்டதா? அது எப்படி ஒரு கூடு மாதிரியே விழுந்தது? காலை வெயிலும் தாக்கவில்லை. மாலை வெயிலும் தாக்கவில்லை. மழை கூட திசையை மாற்றிக் கொண்டது. ஒரு சின்ன உயிருக்கும் கடவுள் காட்டும் கருணை அப்பப்பா! அப்படியே கண்ணீர் விட்டு கதறினாள். தனியாக இருப்பதால் பல தடவை அப்படி கதறியிருக்கிறாள்.

ஒரு வழியாக பாரதி வெற்றி பெற்றுவிட்டாள். அந்தப் புறாக் குடும்பம் சுபமாக இடம் பெயர்ந்தது. அந்தத் துணி தானாக கீழே விழுந்து விட்டது.

பாரதிக்கு பதினோறு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவன்தான் சுந்தர். ஒரு மகளுக்கு அவள் ரொம்பவும் ஏங்கினாள். ஒவ்வொரு மாதமும் மருந்துக்கென்றே ஒரு தொகை செலவானது. ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் புறா போன அன்றுதான் பாரதி மானசீகமாக கடவுளை வேண்டினாள். இதுபோல் அவள் வேண்டியதேயில்லை.

‘கடவுளே அந்தப் புறாவுக்கு காட்டிய கருணையில் ஒரு தூசு அளவு எனக்குக் காட்டக் கூடாதா? என் ஆசை தவறா? தவறு என்றால் ஏன் தந்தாய்? அதை எரித்துவிடு. இப்போது ஆசைப்படாமல் நான் எப்போது ஆசைப்படுவது? புறாக் குஞ்சைக் காட்டி என்னை இத்தனை பாடுபட வைத்தாயே. அதற்காகவாவது என் வயிற்றில் ஒரு குஞ்சு உண்டாகக் கூடாதா? அது என்ன உனக்குச் சிரமமா?’

கண்ணீர்ப் புகை பட்டதுபோல் கன்னங்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிகிறது. ஒரு வழியாக மனதை இறுக்கிக் கொண்டாள். அவளுக்கிருந்த ஒரே சமாதானம்.

‘நமக்கு அது நன்மையாக இருந்தால் அது நடக்காமல் போகாது.’

அந்த மாதம் தீட்டு தள்ளிப் போனது. இது அடிக்கடி நடக்கும் பிரச்சினைதான். அவள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வாடிக்கையாகப் பார்க்கும் சியோங் மருத்துவமனைக்குச் சென்றாள். சிறுநீர் சோதனையைப் பார்த்துவிட்டு அந்த மருத்துவள் சாவகாசமாகச் சொன்னாள்,

‘நீ கருவுற்றிருக்கிறாய்.’

பாரதிக்குள் ஒரு வானம் விரிந்தது. பல நட்சத்திரங்கள் சிரித்தன. அடுத்த பத்து மாதங்கள். தேவதை போல் ஒரு பெண் குழந்தை. சுகப் பிரசவம்.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *