புரியாத புதிர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,294 
 
 

சுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது,. அதை, அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள். பின்னர் அவளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

இப்போது சுந்தரிக்கு வயது , முப்பது தாண்டி விட்டது. படிப்பு கொஞ்சம் கம்மி. வேலை இல்லாமல் வீட்டோட இருப்பவள். அப்பாவின் சொத்து சுகம் , சுமார் தான் ! அதனால் , யாரும் பெண் கேட்டு வரவில்லை. அதனால், கல்யாணம் ஆகாமல், சுந்தரி மனம் சோர்ந்து போனாள்.

இதை பார்த்து, மனம் பொறுக்க முடியாமல் , நந்தகுமார், தன் மகளுக்கு ஒரு வரனை, கணேஷை ,தேடி பிடித்து விட்டார்.

மாப்பிள்ளைக்கு வயது என்னவோ கொஞ்சம் அதிகம் தான். 37. அதனால் என்ன ? ஏதோ சுமாரான வேலை. அவன் குடும்பத்தில் , அவன் ஒரே பிள்ளை. மாப்பிள்ளை வீட்டிலும் சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

***

பெண் சுந்தரியின் கல்யாணம் நடந்தேறியது. காலம் ஓடியது. சுந்தரி – கணேஷ் வாழ்க்கையில் ஆறு வருடம் போனதே தெரியவில்லை. சந்தோஷம் சந்தோஷம் தான்

ஆனால், கொஞ்ச நாளாக , கணேஷுக்கு ஒரு ஆசை. தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என. மனைவியிடம் நச்சரித்தான்.

தனது குறையை , சிறு வயதில் பெல்விக் எலும்புக்கு பக்கத்தில் வந்த கட்டி பற்றி, அவனிடம் சொல்ல பயந்து கொண்டு , அவனது ஆசைக்கு ஒப்புக்கொண்டு, சுந்தரியும் கரு தரித்தாள். அப்போது ஆரம்பித்த பிரச்னைகள் !அப்பப்பா! கடலலை தான் !ஓயவேயில்லை.

கரு தரித்த நாள் முதலே, சுந்தரியிடம் சுணக்கம். முன்னாளில் வந்த கட்டியின் பாதிப்பு. அவளுக்கு , அதை, வெளியில் சொல்லவும் தயக்கம்! தனது கருவை கலைத்து விடவும் தைரியமில்லை . மலடி என கணவன் தன்னை ஒதுக்கி விட்டால் ?

சுந்தரியின் பெற்றோர் நந்தகுமார் மற்றும் கல்பனாவிற்கு , முன்னாளில் வந்த, தங்கள் மகள் சுந்தரியின் வயிற்று கட்டி பற்றி, மாப்பிள்ளையிடம் பேச பயம். குழந்தை வேண்டாம் என சொல்ல தயக்கம். பாட்டி தாத்தா ஆக யாருக்கு தான் ஆசை இருக்காது? இறைவன் இருக்கிறார், பார்த்துக் கொள்வார். ! பிரச்னை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் ! ஒன்றும் ஆகாது ! எல்லாம் நல்ல படியாகத்தான் முடியும் !

இப்படியே பத்து மாதம் கழிந்தது. குழந்தை பிறந்தது. அழகான பெண் குழந்தை. தாத்தா பாட்டிகளுக்கு, கணேஷுக்கு ரொம்ப சந்தோஷம் . ஆசையாய் ‘சந்தோஷி ’ என்று பெயர் வைத்தனர். ஆனால், சந்தோஷிபிறந்த அன்றே , சந்தோஷியின் அம்மா சுந்தரியின் குஷி சுத்தமாக மறைந்தது. அவளால் நடக்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியவில்லை. இடுப்பு வலியால் துடித்தாள்.

நந்தகுமாரும், கல்பனாவும் எலும்பு மருத்துவரிடம், சுந்தரியை அழைத்துப் போனார்கள். குணமாக வில்லை. எம் ஆர் ஐ ஸ்கேன், மற்றும் பல டெஸ்ட்கள் எடுத்தார்கள். அவளுக்கு புற்று நோய் இருக்கக் கூடும் என்று ரிசல்ட் வந்தது. ஆடிப்போய்விட்டனர் நந்தகுமாரும் கல்பனாவும.

சந்தோஷி பிறந்தது தான் , சுந்தரியின் நோய்க்கு மூல காரணம் என்று நம்பினர். நந்தகுமாரும் கல்பனாவும், தங்கள் மருத்துவரிடம் சுந்தரியை அழைத்து சென்றார்கள். மெடிக்கல் ரிபோர்ட் பார்த்து விட்டு , டாக்டர் சொன்னது இது :“ உடனே அவளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் ! தேவைப் பட்டால், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் செய்ய வேண்டும். உடனே அவளை இங்கே அட்மிட் செய்யுங்கள் ! “

கல்பனா அழுதாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும் ? நந்த குமாரும் செய்வதறியாது விழித்தார். வேறு வழி ? உடனடியாக, சுந்தரியை , ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தனர்.மாப்பிள்ளை கணேஷ் , மெடிக்கல் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தான்.

பிறந்த சில நாட்களில், சந்தோஷி , அம்மா சுந்தரியை விட்டு பிரிந்தது. வீட்டில், பாட்டி கல்பனா தான், பேத்திக்கு எல்லாம். சுந்தரியும் நந்தகுமாரும் , மாதத்தில் பாதி நாள்,

ஆஸ்பத்தரி, கீமோதெரபி, ரேடியேஷன், ஸ்கேன் என்று அலைந்தனர். மீதி நாள், சுந்தரி தனது வீட்டு அறையில், நோயின் தாக்கத்தால் அவதிப்பட்டாள். நந்த குமார், மகளின் இதர செலவுக்காக பணம் திரட்ட அலைந்தார். வீட்டில் பேத்தி , மகள் இவர்களின் செலவுகளை சரிக்கட்ட வேண்டுமே!

***

இப்படியே ஒரு வருடம் போனது. இருபது லக்ஷம் செலவுக்கு பின்னர், சுந்தரி ஓரளவு எழுந்து நடமாடினாள். ஆனால், முழுக்க குணமடையவில்லை. அதிகப்படியான கதிர் வீச்சும், மருந்து மாத்திரைகளும், அவளை இயல்பு நிலைக்கு திரும்ப விடவில்லை.

நாளொரு நோய், பொழுதொரு வலி, இப்படி வாடி வதங்கினாள். சோர்ந்து சோர்ந்து படுத்தாள். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்ந்த குழந்தை சந்தோஷி, அம்மா பக்கமே போக முடியவில்லை. சுந்தரியும் குழந்தை பேரில் அக்கறை கொள்ள வில்லை.

இதற்கிடையில், நந்தகுமாருக்கும், கல்பனாவிற்கும் பயம் வந்து விட்டது. ஒரு வேளை, மகள் சுந்தரி நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவாளோ? புகுந்த வீடு

போகாமல்இருந்துவிடுவாளோ? ஐயோ, இந்தவயதில், சந்தோஷியையும்,

நோய்வாய்ப்பட்ட பெண்ணையும் எப்படி சேர்த்து சமாளிப்பது ? நந்த குமார் ஓய்ந்து விட்டார். அவருக்கும் வயதாகிறதே !

நந்தகுமாரும், கல்பனாவும், மீண்டும் மீண்டும் மாப்பிள்ளையை நச்சரித்தார்கள். சொல்லி சொல்லி பார்த்தார்கள். “ இதோ பாருங்க மாப்பிள்ளை ! சுந்தரியையும், உங்க மகளையும் உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் வெச்சிக்கோங்க. பாவம், உங்க பொண்ணு சந்தோஷி உங்களுக்காக ஏங்கரா! சுந்தரியும் பாவம், அவளுக்கும் உங்க கூட இருக்க ஆசை. . இப்போதைக்கு, குறைந்தது குழந்தையை உங்க கூட வெச்சுக்கோங்க! சுந்தரிக்கு உடம்பு சரியானவுடன், நாங்களே கொண்டு வந்து விட்டுடறோம் !“

மாப்பிள்ளை மசியவில்லை. திட்டவட்டமாக மறுத்து விட்டான். “ இதோ பாருங்க மாமா! சுந்தரிக்கு பூரண குணமாகும் வரை, என்னால் , அவளையும் சந்தோஷியையும் வைத்து பார்த்துக்க முடியாது, உங்களுக்கே தெரியும், எங்க அம்மாவும் அப்பாவும் உங்களை விட வயசானவங்க நிச்சயம் அவங்களாலே குழந்தையை பார்த்துக்க முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். சுந்தரியும், சந்தோஷியும் உங்க கூடவே இருக்கட்டும். அது வரை, நான் வாரா வாரம் வந்து பார்த்துக் கொள்கிறேன்.”

இதற்கு மேல், நந்தகுமாரால் எதுவும் சொல்ல முடியவில்லை. கணேஷ் வருவதையே நிறுத்தி விட்டால்? அல்லது, தன் பெண் , புகுந்த வீடு போனால், சமாளிக்க முடியாமல், சுந்தரி வாழா வெட்டி ஆகி , நிரந்தரமாக இங்கேயே வந்து விடுவாளே !

இப்படியே இன்னும் ஒரு வருடம் போனது. பெண்ணின் நோயில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. நந்த குமாருக்கு, நிதி பற்றாக்குறை.! மாப்பிள்ளையிடம் கேட்க பயம், தன்மானம் இடம் கொடுக்க வில்லை.

***

இன்று !

அன்பு மனைவியுடன் வாழ்க்கை நடத்த கணேஷுக்கு விருப்பம் தான். ஆனால், சூழ்நிலை அவனை விட வில்லை. தனி குடித்தனம் போக முடியாது. அவனுக்கு தாய் தந்தையர். வேலை, காசு பணம் , செலவு போக, ஏதோ இருக்கிறது ! ஆனால், அது போதுமா!? மனைவியின் நோய்க்கு வைத்தியம் பார்த்து கட்டுப்படி ஆகுமா? இது அவன் கவலை !

ஆனால், கணேஷ் ,சுந்தரி சந்தோஷியுடன் இருக்க, அவனை தடுத்த தோஷம் தான் என்ன? நோய் வயப்பட்ட பெண்ணை . திருமணம் செய்த மணாளன்,, ஒரு பாவமும் அறியாத, குணாளன், அவன் செய்த தவறு இதில் என்ன? அவன் தோஷம் தான் என்ன ?

மகள் சுந்தரி இப்போது தாய் வீட்டில். ! சுந்தரியின் நோய் சீரானலும், பக்க விளைவுகளால், அவளுக்கு , தினமும் ஏதோவொரு உடல் உபாதை.இள வயதில் , இல்லறத்தில் , இன்பம் காண முடியாத நோய். ஈரமற்ற இயற்கையின் கொடூரம் ! இதனால், சுந்தரிக்கு மனக்குமுறல். துக்கம்! எப்போதும் வெறித்த பார்வை. அவள் தன் குழந்தையை சட்டை கூட செய்வதில்லை ! அவள் தோஷம் என்ன ?

வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் கல்பனா பாட்டிக்கும், நந்தகுமாருக்கும், பணக்கஷ்டம், மனக்கசப்பு,வயோதிகம், இதற்கு இடையில் சந்தோஷி , அவர்களுக்கு ஒரு கால் கட்டு.. !!

“தன் வினை தன்னைச் சுடும்” இது இவர்களை பொறுத்த வரை உண்மையாயிற்று. ” இட்டார்க்கு இட்ட பலன்”!

தனது பெண் சுந்தரி கரு தரிப்பதில் சிக்கல் வரலாம் என்று டாக்டர்கள் என்றோ அரை குறையாய் சொன்ன ரிஸ்கை , நல்ல எண்ணத்தினால், நியாயமான பெற்றவர் ஆசையினால், எளிதாக எடுத்துக் கொண்டதின் பலன் ! தன் பெண்ணின் நலனை கருதி மறைத்த சின்ன விஷயம், இப்படி பூதாகாரமாக உருவெடுத்ததே! இவர்கள் தோஷம் என்ன ?

ஒரு தவறும் செய்யாத, கணேஷின் பெற்றோர், அவர்களும் தள்ளாத வயதில், தங்கள் பேத்தி அழகான சந்தோஷி, மகன் மருமகளுடன் சேர்ந்து இருக்க விடாமல் தடுத்த தோஷம் தான் என்ன ?

கொடுமையிலும் கொடுமை, சந்தோஷி , இரண்டே வயதான, வாழ்க்கையின் முதல் அத்தியாத்தில் இருக்கும் அந்த குழந்தை , என்ன பாவம் செய்தது ? அதன் தோஷம் என்ன ? தன் வினை தன்னை சுடும் என்ற வாசகம் சந்தோஷிக்கு பொருந்தாதே? கள்ளமில்லாமல், சிரிக்கிறதே ! அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் ?

அம்மா அப்பா, பாட்டி தாத்தா, இருந்தும், அவர்களுடன் ஒன்றாய் இல்லாமல், அதன் வாழ்க்கை எப்படியிருக்கும் ? ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’- இதுதான் காரணமோ? இதன் மறை பொருள் , முன் வினையோ ?

திருவள்ளுவர் சொன்னது போல “எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்”

(எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்)

இது குழந்தைக்கும் பொருந்துமோ ?

இருந்தால், இதுதான் சந்தோஷியின் முன் வினை பயனோ? அவள் அதை அனுபவித்து தான் ஆக வேண்டுமோ ?

அவளுக்கு என்று விடியும் ?

***

ஒன்று மட்டும் நிச்சயம் :

இறைவன் என்று ஒருவன் இருந்தால், அவன் ,

நம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் ஆட்டி படைக்கிறான் !

சிலருக்கு கேட்டதை தருவான் ! ஆனால், தந்ததை தொட விட மாட்டான் !

சிலருக்கு தொட விடுவான். ஆனால், ருசிக்க விட மாட்டான் !

சிலருக்கு ருசிக்க விடுவான் ! விழுங்க விட மாட்டான் ! விழுங்கு முன் பிடுங்கி விடுவான் !

ஒரு சிலருக்கு மட்டும் , அவர்கள் கேட்டது கிடைக்கும் ! நினைத்தது நடக்கும் !

ஒரு சிலரை கெஞ்ச வைப்பான் ! ஆனால், அவர்கள் கேட்டதை கொடுக்க மாட்டான் !

இறைக்கு ஏன் இந்த பார பக்ஷம் ? இயற்கை ஒரு புரியாத புதிர்தான்!

முரளிதரன் எனும் எனது இயற்பெயரில் நான் 2012 அக்டோபர் முதல் சிறுகதை எழுதி வருகிறேன். நான் அரசுடைமை வங்கியில், பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றவன். கோவன்சிஸ், மற்றும் வெளி நாட்டு வங்கிகளில், ரிஸ்க் ஹெட் மற்றும் ஆடிட்டராக பணி புரிந்த அனுபவம் உண்டு. மன வளம், கணிணி மற்றும் வணிக சம்பந்த கதை எழுத ஆவல். நல்ல கருத்து கூற விருப்பம். குங்குமம், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எனது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *