புரியாதவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 1,853 
 

நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…. அக்காஆ… பத்துரூவாக்கு மூனு, நாலா தரேன்கா, எலுமிச்ச…. வாங்குறீகளா…. வாங்கக்கா….’

நடை நீண்ட பழையபாணியில் அங்கிருந்த எல்லா வீடுகளும் அமைந்திருந்தன. ஆகவே அவர் பெரியதாக கூவவேண்டியிருந்தது. பன்னிரெண்டு மணிக்குள் எல்லா தெருக்களுக்கும் சென்றுவிடவேண்டும் என்கிற வேகத்தில் சிலரை மட்டுமே தேர்தெடுத்திருக்கிறார் போலும் எல்லா வீடுகளிலும் நிற்பதில்லை. நான்காவது முறை குரல் எழுப்புவதற்குள் போய்விடவேண்டும் என்கிற அவசரம் கொல்லையிலிருந்த சுபாசினிக்கு வந்து கால்களை எட்டி வைத்து நடந்தாள். இரு குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பும் அவசரமான வேளை, காலை ஒன்பது மணிக்கு யார் எலுமிச்சையை வாங்கப் போகிறார்கள் என்கிற எரிச்சல் உதட்டில் துடித்தது. புடவை சரசரக்க வந்து மூடிய கதவை வேகமாக திறந்து “வேண்டாங்க அக்கா…” என்றாள். வாய்தவறி அழுத்தமாக சொல்லியது, இனி வேண்டவே வேண்டாம் என்பதுபோல இருந்தது. மீண்டும் வாயெடுக்க வந்தவர், ‘சரிம்மா’ என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். பதில் கிடைத்தபின் அவர் நடையில் தயக்கம், கோபம் அல்லது வெறுப்போ எதுவும் இல்லை. அதனாலேயே என்னவோ அவர்மேல் எரிச்சலாக இருந்தது சுபாசினிக்கு. ஒரு கையில் இரண்டு கட்டைப்பைகள் இருந்தன. கிழே சற்று உப்பலாகக் காய்கள் கிடந்தன. ஒரு கையில் மூன்று பழங்கள் இருந்தன. ஐம்பதிற்கு மேற்பட்ட வயதில், இந்த சுறுசுறுப்பு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து வேர்த்து கொட்டும் முகத்தோடும், மண்படிந்த கால்கள் கொண்ட உட்பக்கமாக தேய்ந்த செருப்போடும் தினம் வருபவர். அவர் வேகமாகச் செல்வதை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த சுபாசினி விரைவாகக் குழந்தைகளுக்கு உடைகளை அணிவித்தாள். பையில் இருக்க வேண்டிய எழுதுபொருட்கள், அடையாளஅட்டை, காலுறை, காலணி போன்றவைகளைக் கவனமாகப் பார்த்துச் சரியென உறுதி செய்துகொண்டாள். காலையுணவிற்குப் பின் பால் குடிக்க வைத்து வேனில் ஏற்றவிட கணவனிடம் அவர்களை கையபடுத்திவிட்டு உள்ளே சென்றபோது லேசாக மூச்சிரைத்தது. நெஞ்சின் நடுவே ஈரமாக வியர்வை பிசுபிசுத்தது. வாரநாட்களில் காலைநேரத்தைக் கடத்துவது பெரும்பாடாகவே முடிகிறது அவளுக்கு. பசியை அப்போதுதான் உணர்ந்தாள். டம்ளர் தண்ணீருடன் தட்டும், ரிமோட்டும் எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள். காலையுணவைத் தொலைக்காட்சியைப் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தாள். காலைநேர பரபரப்புகள் நீங்க தொலைக்காட்சியின் காட்சிகள் தேவையாக இருந்தன. அதில் வந்த இரண்டு செய்திகள் அவளுக்கு பிடித்திருந்தன. ஒன்று ஒரு பெண் தன்னை ஆண் என்று கூறி மூன்று திருமணங்களை செய்துக் கொண்டது. மற்றொன்று ஒரு பலமாடி ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகரித்ததால் மாடிப்படி சரிந்து பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த இரண்டு செய்திகளும் அபத்தமான செய்தியாக இருந்தாலும் சுவாரஸ்யமாக தோன்றின.

பாதி சாப்பாட்டின்போது தூரத்தில் காமாட்சிப் பாட்டியின் குரல் கேட்க ஆரம்பித்தது. அவரின் பெயரை மற்றவர்கள் சொல்லி அழைப்பதை வைத்து அவள் அறிந்திருந்தாள். அவளையுமறியாமல் அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள். தினசரி கடமைகளில் இவர்களை பார்ப்பதும், சமாளிப்பதும் ஒரு வேலையாக ஆகிவிட்டது அப்போது நினைவிற்கு வந்தது. சலிப்பற்று பின்தொடரும் இவர்களை நினைக்கும்போது விடாமல் துரத்தலால் உண்டாகும் பீதி நாளும் மனதில் ஊறி வளர்ந்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். “முருங்க்கீரமா முருங்கக்கீர…”. அந்த ஒலி பலம்பெற்று அருகே வரதொடங்கியிருந்தது. இங்கு வந்து கத்தாமல் சென்றுவிடவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அது அவநம்பிக்கைதான் என்கிற மற்றொரு குரல் மனதின் மூலையில் பூனையின் மெல்லிய அழைப்புபோல கேட்டது. சட்டென தண்ணீரைக் குடித்துவிட்டு தட்டை தொட்டியில் போட்டுக் கைகழுவிவிட்டு வெளியே வந்தாள்.

சரியாக வீட்டு வாசலில் வந்து நின்றார் “முருங்ககீர இருக்கு பாப்பா… வேணுமா ஏம்.. பாப்பா…”. வாசல் வரை வந்து சற்று சிரித்த முகத்துடன் “வேண்டாம் பாட்டி” என்று கூறினாள். அவரை பேசவிடாமல் பதில்சொல்லி அனுப்பிவிடும் எண்ணம் மனதில் இருந்தது. “இந்தமாறி நல்ல முருங்ககீர உனக்கு கிடைக்கவே கிடைக்காது ஆயி… பாரு” என்று நீட்டினாள். தன்மையாகச் சொல்லி சமாளித்து அனுப்பிவிட சிரித்தபடி, “எனக்கு எங்க வீட்டுக்காரருக்கு இரண்டுபேருக்கும் முருங்ககீர ஒத்துகிறதில்ல பாட்டி. அது பித்தம் அதிகமா இருக்கு, தல வலிக்குது பின்னாடி.” கதவின்மேல் அவள் கையிருந்தது, லேசாக பாட்டி முகம் திருப்பினாலே பட்டென கதவை சாத்திவிடலாம் என்றிருந்தாள்.

காமாட்சி பாட்டியின் முகம் பொய்கோபம் காட்டுவது போலாகி, பேச்சு குழைந்து “முருங்ககீர சாப்பிட்டா பித்தம் போயிடுமே ஆயி. பொரியலா இருந்த கொஞ்ச தேங்காய அதிகமா சேத்துக்கமா, கூட்டா இருந்துன்னுவையி கொஞ்சம் புளிய சேத்துக்க அவ்வளவுதாம்மா”.

உண்மையில் அப்படி எதுவுமில்லை, எப்படிச் செய்தாலும் பித்தம் தலையை தாக்குவதை அறிந்திருந்தாள். சமாளிக்க வேண்டிய பார்வையோடு அந்த பெண்மணியைப் பார்த்தாள். அவள் அதை புரிந்துக் கொண்டதாகவோ, கவனித்ததாகவோ தெரியவில்லை. “முருங்கக்காய் இருந்தா வாங்கிறேன் பாட்டி.” “காய்தானே, இருக்குமா கொண்டாறேன். நல்ல நல்ல காயா எடுத்தாரேன் பாப்பா. நல்ல நாட்டுக் காய், எங்கேயும் கிடைக்காது நீயே சொல்லுவே,” என்று நகர்ந்தார். அவரின் பெரிய இடை நடக்க சிரமப்பட்டது. ஒரு கட்டுக் கீரை இருந்த கை, காற்றில் எங்கெங்கோ அழைந்து திரிந்தது. “அப்பாடா” என்று ஆசுவாசமாக இருந்தது.

பொறுமையாக யூடிபில் நேற்று அடையாளக் குறி வைத்திருந்த காணெளியை தேடித் திறந்து, இன்றைக்குச் செய்ய வேண்டிய கறிக்குத் தேவையான சாமான்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிரபலமான ஒரு பெண்மணியின் சாப்பாட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்திருந்ததால் புதிய வகை உணவுகள் வந்தால் உடனே அது சொல்லிவிடும். அதை செய்தும் பார்த்துவிடுவாள். நேற்று வாழைக்காயில் ஒரு கறியை அதிலிருந்துதான் செய்திருந்தாள். வாழைக்காயும், கேப்சிகமும் சேர்ந்த வித்தியாசமான உணவு. இன்று மற்றொரு புதியவகை முயற்சி செய்ய இருக்கிறாள்.

தூக்கிவைக்க முடியாத பலமற்ற கால்களை தேய்த்துத் தேய்த்துப் பறவைக் கூவல் போலச் சொல்வது ஊதுபத்தி தாத்தாவாகதான் இருக்கும் என நினைத்துக் கொண்டாள். பேச்சைவிட சின்ன குரலில்தான் அவரால் ஒலி எழுப்பமுடியும். வாசலில் நிற்பதைப் பார்த்தால் வந்துவிடுவார். ஊதுபத்தி, சாம்பிரானி, என்று சிலபொருட்களை சில கைகளிலும் சில மணிக்கட்டில் மாட்டியிருக்கும் பையிலும் இருக்கும். தன் இரக்கமான பார்வையால் வாங்கச் சொல்லும் வேண்டுதல், தள்ளாட்டத்தினால் கவனம் பெறும் முறைமையும் இருக்கும். தரமானவை என்று சொல்ல முடியாதவைகளை எப்படி வாங்குவது என்கிற கேள்வி அவள் மனதில் இருந்தது. ஆகவே அவர் தவிர்க்க அவர் கண்களை அவர் பார்ப்பதேயில்லை. வேறு ஏதோ அவசர வேலை இருப்பதுபோன்ற பாவனையோடு இருப்பாள்.

காலிபிளவருடன் இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொருட்களை எடுத்துவைத்தாள். வெளியே பரபரப்பு கூடிய கூச்சல் போன்று சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. பூ விற்கும் முண்டாசு அண்ணன் மதியம் தான் வருவார். ஆனால் கேட்டிற்கு பின் கைகளை அசைத்து குரலெழுப்புவது ஊதுபத்தி தாத்தா என தோன்றியது. கிட்ட போனபோது காமாட்சி பாட்டியேதான் திரும்ப வந்திருக்கிறார்.

“என்னங்க பாட்டி”

“முருக்ககாய் எடுத்து வந்திருக்கமா”.

சட்டென அடிவயிற்றிலிருந்து கனல் ஒன்று சுழன்றெழுந்தது. “என்னங்க அவசரம்… மெதுவாக இன்னொருநாள் எடுத்துவரக்கூடாதா?”

“இல்ல பாப்பா… இப்பவே கொண்டாந்தாதானே சரியாக இருக்கும். இன்னைக்கே சமைச்சு பார்த்துடுமா.”
நீண்ட கேட்டின் முன் குள்ளஉருவம் கொண்ட காமாட்சி பாட்டி அங்கே வாசலில் நிற்பதே சற்று வெறுப்பாக இருந்தது. ஒரு முறை மாமியார் சொன்னார் என்பதற்காக அவர் தோட்டதில் விளைந்தது என்று வாங்கிய அவரைக்காய் வேகவேயில்லை. ஆனால் அவளிடம் அதைச் சொல்லி அதற்கு ஒரு காரணத்தை கேட்டுக் கொண்டிருக்க பிடிக்கவில்லை. “இருக்குங்க… இன்னோரு முறை வாங்கிக்கிறேன்” சற்று கோபமாகவே பதிலளித்தாள்.

ஆனால் பதிலை எதிர்கொண்ட விதத்திலிருந்தே காமாட்சி பாட்டி இன்று எளிதில் விடப்போவதில்லை என தெரிந்தது.. “நல்ல காயீமா… நா உனக்கு பொய்யா சொல்லுவன், கையில எடுத்துப்பாரு, எம்மா பெருசா இருக்குன்னு பாரு பாப்பா” என்றாள். “வேலையாக இருக்கேன், அப்புறம் இன்னொருநாள் வாங்கிக்கிறேன், இப்ப வேணான்னு சொல்றேன்” என்று வார்த்தையை வளரவிடாமல் செய்ய கோபத்துடன் சத்தமாக பதிலளித்தாள். எதிரே ரோட்டில் சென்று கொண்டிருந்த வச்சலா அக்கா, இருசக்கரவாகனத்தை இறக்கிக் கொண்டிருந்த எதிர்வீடு பாலா மாமா, யாரையோ வரவேற்க வாசலில் காத்திருந்த பக்கத்துவீட்டு லதா ஒரே நேரத்தில் அவளை திரும்பிப்பார்த்தார்கள். சற்று மாறுபட்டு நடந்துக் கொண்டாலே மனிதர்களுக்கு தெரிந்துவிடுகிறது. கூட்டமாக வந்து நின்று “ஏம் பாப்பா… அமைதியா போ அம்மணி” என்று அறிவுரை வேறு சொல்வார்கள்.

சங்கடத்துடன் “இல்ல… இன்னைக்கு சமையல ஆரம்பிச்சுட்டேன் அதான்” லேசாக வார்த்தை இழுப்பட்டது. அதற்குபின்னும் காமாட்சி பாட்டியின் கண்களில் அதே பாவம் இருந்தது. “இன்னைக்கு வாங்கி வையி பாப்பா, நாளைக்கு என்ன, இன்னும் நாளு நாளைக்கு கேடாது. பிரிஜ்சுல வெச்சுக்க. உன் மாமியாருக்கு ரொம்பப் பிடிக்கும். ஆமா உம் மாமியா எப்படி இருக்காங்க, வேளா வேளைக்கு சாப்பிடறாங்களா,” என்றாள்.

நடக்க இருக்கும் மற்ற வேலைகள் இனி எதுவும் நடக்கப்போவதில்லை என்கிற அலுப்பு தோன்றியது சுபாசினிக்கு. “ம்… பரவாயில்லை. முன்னைக்கு இப்ப கொஞ்ச பரவாயில்லை.” “நல்லா பாத்துக்கம்மா, பாவம், சாமி ஏந்தான் இப்படி சோதிக்கிறானோ.” வாங்குவதைவிட பேச்சிலிருந்து தப்புவது கடினம். கேட்ட பணம் கொடுத்து அனுப்பிவிடவேண்டும் என அவசரமாக உள்ளே சென்று எடுத்துவந்தாள். “அப்பறம்கூட கொடு ஆயி, அப்படி எங்க போயிடப்போறேன். இந்த தெரு மொகனைலதானே கெடக்கேன்”. அங்கே சின்ன காய்கறிக் கடை இருக்கும். ஆனால் புதியதாக காய்கறியாக எதுவும் இருக்காது. அதை வாங்கி எப்படிதான் சாப்பிடுகிறார்களோ என நினைத்துக் கொண்டாள்.

பணம் கொடுத்த பிறகும் மாமியாரைப் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டார். மாமியாரைப் பற்றி அவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்கிற எண்ணமே முதலில் எழுந்தது. ஏனெனில் மாமியார் இப்போது எதுவும் சாப்பிடமுடிவதில்லை. மாமியாருக்குக் காலையிலேயே கொஞ்சம் கஞ்சியை கொடுத்து, மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் படுக்க வைத்துவிட வேண்டும். அதற்காக கணவர் அருள் சிரத்தையாக முக்கிய வேலைபோல செய்து கொண்டிருப்பார். பக்கவாதம் வந்த கைகளை ஆட்டி கோணலான வாயில் நீர்வடிய கண்களால் கேட்பதை அருள் புரிந்து கொண்டு சரியாகச் செய்துவிடுவது ஆச்சரியமாக இருக்கும். மீண்டும் மாலை வரும்வரை அவர் தூங்கிவிடுவது அவளுக்கு சற்று ஆறுதல். குழந்தைகளை அவர் முன் விடுவதில்லை. தனியறையில் படுக்க வைத்து வைத்தியம் பார்க்க இருநாட்களுக்கு ஒருமுறை என்று ஒரு டாக்டர் வருவார்.
வெளியே ஓடிய சாக்கடையின் நாற்றத்தை பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்துவிட்டார் காமாட்சி பாட்டி. அவரின் நீலவண்ணச் சேலை ஓரம் லேசாக காற்றில் ஆடியது. அக்கப்போர்களை ருசிக்க என்றே கலை தேவையாக இருக்கிறது. எல்லா வேலைகளையும் தன் காய்கறிக் கடைவேளையையும் விட்டுவிட்டு அமர்ந்து விலாவரியாக கேட்கமுடிகிறது. “கடைவேலைகளைப் பார்க்கப் போகவில்லையா பாட்டி” என கேட்க நினைத்தாள்.

“ரொம்ப உடம்பு சரியில்லாததால, யாரையும் பார்க்க விடுறதில்ல பாட்டி. மாத்திரை கொடுக்கிறதால நல்லா தூங்கிடுவாங்க”.

“அப்பப்ப கொஞ்சம் சுத்திபோடும்மா. நானும் நல்லா போடுவேன், இதோ எங்கவூட்டு பக்கத்தில நாலுவூடு தள்ளி தங்கம் இருக்குல்ல அதுகிட்ட சொன்னீன்னா போதும். செவ்வா வெள்ளி வந்து சுத்தி போட்டுரும்”. கண்களை சற்று இடுக்கி, கண்கள் மாறாமல் தலைமட்டும் லேசாக திருப்பி “இருவது முப்பது ரூவா கொடுத்தேன்னா போதுமா”.

“இம்மாம் ஈருகுச்சி, இவ்வளவு மண்ணு, கொஞ்சம் மிளகா போதும், கிழக்க பாத்து ஓக்கார வையி, தங்கத்த கூப்பிட்டு வந்துடு தோளுபட்ட, தல, காலு இப்படி ஒரு மூனு சுத்து அப்படி ஒரு மூனு சுத்து அவ்வளவு தாம்மா. கொண்டுபோயி அடுப்பிலயோ இல்ல கரிநெருப்பு வெச்ச தூபகால்ல போட்டா அப்படி வெடிக்கும். இப்படி ஒரு மாசம் பண்ணு, கண்ணுபட்டதெல்லாம் போயி எழுந்திருச்சு ஒக்காராங்கலா இல்லையான்னு பாரு”.
“அவங்களுக்கு பாராலிஸிஸ்ந்னு வியாதி பாட்டி, அவ்வளவு சீக்கிரம் குணமாகாது”. சொல்லும்போது சுபாசினியின் நாக்கு ஓட்டிக் கொண்டது.

உற்று நோக்கிய கண்களோடு பார்த்தார் பாட்டி. “அவங்க ஜாதகப்படி இன்னும் பத்து வருசம் இருக்குமா. இது ஏன் உன் புருசன் சின்ன வயசுல உடம்புக்கு முடியாம இருக்கிறப்போ, இப்படிதாம் அம்மா சுத்திபோடுவாங்க. செவ்வா வெள்ளி இல்லாம, விசாழக்கிழம புள்ள அருளு தம்பிய இருப்புல தூக்கி வெச்சுக்கிட்டு ரெட்டமஸ்தானுக்கு இங்கேந்து நடந்தே போவாங்க, கூட நா போவேன்”.

“அப்ப நீங்க இங்க இருந்தீங்களா?” ஆச்சரியமாக கேட்டாள்.

பாட்டிக்கு பேச்சு ஆர்வம் கூடிவிட்டது. “ஆமா…. பின்ன, அருளு தம்பிக்கு அப்ப கால் சரியா நடக்க முடியாம இருந்திச்சி… அருளு தம்பியோட அண்ணனையும், அக்காவையும் எங்க வீட்டுல விட்டுட்டு, எங்க அம்மாவ பாத்துக்கச் சொல்லிட்டு, வாடி காமாச்சின்னு என்னைய கூட்டிட்டு போவாங்க அம்மா”. அவள் பக்கம் திரும்பி, உடம்பை சுவற்றிற்கு முட்டுகொடுத்த பாட்டி, கீழ்தாடை தோலாட, கண்கள் மாறுபட, தளர்ந்த கைகள் அசைத்து பேசினார்.

“இப்படி மனுஷாள நாம பாத்துக்கிட்டாலே போதும்மா. மனுசாளுக்கு பாசத்த தவுர வேற என்ன வேணும் சொல்லு, வியாதி தன்னாலே போகும்மா. இங்கேயே இருந்து அம்மாவ பார்த்துக்கங்க, எழுந்து நல்லா நடக்க ஆரம்பிச்சிடுவாங்க பாரு பாப்பா”

“இல்ல பாட்டி, மூனு வருசதான் கேட்டுருக்கோம். அதுல்லாம பேங்கே மாத்திடும், நாங்க மாமியாருக்காக பேங்குல கேட்டுக்கிட்டதால தஞ்சாவூருக்கு வந்திருக்கோம், அப்புறம் புள்ளைங்கள படிக்க வைக்க வேண்டாமா”.

அனுப்பிவைக்க பெரும் சிரமமாக இருந்தது சுபாசினிக்கு. எந்தநாளும் இல்லாத வேகத்தோடு சமைத்து அவர் தின்ற நேரங்களை சமன் செய்ய வேண்டியிருந்தது. மதியம் சாப்பிட வந்த அருளிடம் காமாட்சி பாட்டி வந்ததை கூறினாள். “ஒரு முறை சுத்திதான் போடேன்” என்றார் அருள். “நீங்களும் இதெல்லாம் நம்புறீங்களா” ஆழமான பார்வையுடன். அருளால் பேசமுடியவில்லை. அம்மா இன்னும் கொஞ்ச நாள்தான் என்று மருத்துவ அறிக்கைகள் எல்லாம் தெளிவாக தெரிவிக்கின்றன என்பதை பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்தித்தார்.
மதியம் சொல்லிவைத்ததுபோல முண்டாசு பூக்காரண்ணன் வந்துவிட்டார். மதியம் தூங்கும் அரைமணி நேரத்தை விடாமல் மணியடித்து எழுப்பினார். “செவந்திப் பூ வாங்கிக்க ஆயி, நாளைக்கு முகூர்த்த நாளு கிடைக்காது பார்த்துக்கா” என்றார். மாமியார் செய்துவிட்ட பழக்கம். மாற்றிவிடமுடியாது ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறது.. முகம்கூட கொடுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டு பணம் கொடுத்து அனுப்பினாள்.
வருடத்திற்கு அரிச்சபுளி, கொட்டபுளி என்று ஒருவர் வந்துவிடுவார். மாவடுவிற்கு ஒருவர் வந்துவிடுவார். வெங்காயத்தை மொத்தமாக விற்க ஒருவர் வருவார். மாமியார் யாரையும் விடாமல் எல்லாரிடமும் வாங்கிவிடுவார். எல்லாவற்றையும் வாங்கி வைத்து வீணாவது குறித்து அவர் கவலைப்படுவதில்லை.
இன்னும் சில மாதங்கள் பழகிக்கொள்ள தான் வேண்டியிருக்கும். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாமியார் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களின் கணிப்பு. பின் ஓராண்டு இருந்துவிட்டு வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு ஊர் சென்றுவிடலாம். இம்மாதிரி வீடாக இல்லாமல் ப்ளாடாக பார்த்து செல்லவேண்டும். வாங்க வேண்டியவைகளை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேவையற்றவர்களை நாம் தவிர்க்கவும் முடியும். வழக்கம்போல சுபாசினி சற்று நேரம் தூங்கச் சென்றாள்.

நல்ல பனி அடர்ந்த மார்கழி மாத இரவில் மாமியார் இறந்தார். வைகுண்ட ஏகாதேசியில் இறந்து சொர்க்கம் சேர்ந்தார் என்று மகிழ்ந்தார்கள் சுற்றியிருந்தவர்கள். எல்லா காரியங்களும் முடித்து நல்ல முறையில் அவரை அனுப்பிவைக்க அவரது பிள்ளைகள் மற்ற இருவரும் தூரத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் விருப்பப்படி 11ஆம் நாள் 12ஆம் நாள் காரியங்கள் விமர்சையாக செய்யப்பட்டன. காரியம் முடிந்து வீடெல்லாம் கழுவி அவர் பயன்படுத்திய பொருட்களை விலக்கி தூய்மை செய்யப்பட்டது. மரத்தில் அமர்ந்த பறவைகள் ஒவ்வொன்றாக எழுவதுபோல பால்ய வீட்டைவிட்டு வந்தவர்கள் வெளியேற மெல்ல தன்நிலையை அடைந்தது வீடு.

அதன்பின் எப்போதுபோல நாட்கள் நகர்ந்தன. வெளியே ஊதுபத்தி தாத்தா, எலுமிச்சை அக்கா, காமாட்சி பாட்டி, முண்டாசு அண்ணன் தினம் வீதி வழியாக சென்றார்கள். ஆனால் அவர்கள் யாரும் வீட்டுப் படி மிதித்து “வேணுமா பாப்பா“ என்று ஒருநாளும் கேட்கவில்லை.

– சொல்வனம், இதழ்-191, ஜூலை 2, 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *