வாசல் தெளித்து கோலம் போட்ட பாரதி விளக்கேற்றி வைக்கும் எண்ணத்துடன் முகம் கழுவுவதற்காக கொல்லைப்புறம் சென்றாள். தண்ணீரைத் திறந்தவள் விநோதமானதொரு சப்தம் காதில் விழ நிமிர்ந்தாள். மெல்லியதாய் கீச்சுக்குரலாய் ஒரே சீரான இடைவெளியில் வந்த சப்தம் என்னவாக இருக்கும் என்பதை அறிய காதைத் தீட்டிக்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்றவள் தேக்கு மரத்தின் அருகே துணி உலர்த்தும் கொடி கட்டுவதற்காக நடப்பட்டிருந்த பனஞ்சாத்தின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து அந்த சப்தம் வருவதை அறிந்து நின்றாள். பானைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சாக்கு தூள்களும், நார்களும் அது ஓர் அணில் கூடு என்பதையும், அதனுள்ளேயிருந்து வந்த சப்தம் தாயை அழைக்கும் குட்டி அணிலின் குரல் என்பதையும் உணர்ந்தவள் கோபவயப்பட்டதுடன் அந்தப் பானையை எங்காவது தூக்கி எறிந்து விடலாமா என்பதாய் நினைக்கவும் செய்தாள். அடுத்த நிமிடமே அந்தப் பாவம் நமக்கெதற்கு? என்பதாய் அவ்விடத்தை விட்டு அகன்று வந்து முகம் கழுவத் தொடங்கினாள். உள்ளே குட்டி இருக்கிறது என்பது தெரிந்தும் அதை தூக்கி எறிய அவள் நினைத்ததற்கு அணில்கள் மீதான கோபமே காரணமாகும்.
திருமணமாகி கணவனின் இந்த வீட்டிற்கு அவள் வந்தபோது விசாலமான வீடும், வீட்டைச் சுற்றிய தோட்டமும், தோட்டத்தில் வளர்ந்திருந்த மரங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போயின. வாடகை வீட்டில் அதுவும் பத்துக்கு இருபது அளவிலான ஓட்டு வீட்டில் பிறந்து வளர்ந்தவளுக்கு சொந்த வீடும் விசாலமான தோட்டமும் மகிழ்ச்சி தரத்தானே செய்யும்? போதாக்குறைக்கு அவ்வப்போது வந்து மரங்களில் அமர்ந்து இன்னொலியை எழுப்பிச் சென்ற பலதரப்பட்ட பறவைகளும், குறுக்கும் நெடுக்குமாக ஓடிய அணில்களும் அவளுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.
ஒருநாள் மிச்சம் மீதியாக இருந்த உணவு வகைகளை எடுத்துச் சென்று ஓரிடத்தில் வைக்க சிறிது நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளும், இருபதுக்கும் மேற்பட்ட அணில்களும் திரண்டு வந்து போட்டி போட்டுக் கொண்டு தின்னத் தொடங்கின. இந்த காட்சி அவளுள் பரவசத்தை ஏற்படுத்திற்று. வீணாகும் இத்தனூன்டு உணவில் இவ்வளவு உயிர்களின் பசி தீர்க்க முடிந்திருக்கிறதே என்ற நினைப்பும் அதைச் செய்ததால் ஏற்பட்ட லேசான கர்வமும் அனுதினமும் அப்படி செய்யத் தூண்டியதுடன் அதைப் பழக்கமாகவும் மாற்றியது. இதனால் புதிது புதிதாகப் பறவைகளும், அடுத்தடுத்த வீட்டு அணில்களும் வரத் தொடங்கின. வெட்டப்பட்ட பனை மரத்தின் வட்டமான அடிப்பகுதியை அதற்கான இடமாகத் தேர்வு செய்ததுடன் அருகிலேயே ஒரு தட்டில் நீர் வைக்கவும் செய்தாள்.
உணவை உண்டு, தண்ணீரைக் குடித்து விட்டு நன்றி சொல்வது போல தலையாட்டிச் செல்லும் பறவைகளை ரசித்தவள், அந்தச் செயலை தன்னுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும் அதற்கான மனநிலையை அவர்களுக்குள் உருவாக்கவேண்டும் என்பதற்காக பிள்ளைகளையும் அருகில் அமர்த்திக் கொண்டு அக்காட்சியை காணச் செய்தாள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஓர் அணில் அதற்கு தடைபோட தொடர்ந்து பல அணில்கள் ஒன்று சேர்ந்து அதற்கொரு முற்றுப் புள்ளியை வைத்தன.
மரங்களையே உறைவிடமாகக் கொண்டு வாழும் அணில்கள் கர்ப்பத்தின் பின்னர் ஈன்றெடுக்கும் குட்டிகளை வளர்த்தெடுக்க ஏதுவாக பாதுகாப்பான இடங்களில் கூடுகள் அமைக்கும். இப்படிபட்ட கூடுகளை மரங்களில் மட்டுமின்றி, அருகாமையிலுள்ள வீடு, கட்டடம், கொட்டகை ஆகிவற்றிலும் அமைப்பதுண்டு. குட்டிகளுக்கு உறுத்தல் தராத பொருட்களைக் கொண்டு வந்து பரப்பி அதில் குட்டிகளை ஈன்றெடுக்கும். அதற்காக முதலில் வீட்டிற்குள் வந்த அணில், பாரதி பிறந்த வீட்டு சீதனமாகக் கொண்டு வந்த பஞ்சு மெத்தையைக் கடித்து பஞ்சை எடுத்துவிட பாரதி பதறிப் போனாள். இந்தக் கோபம் தணிவதற்குள் தொடர்ந்து பல அணில்கள் தலையணை, ஹேண்ட்பேக், பிறந்த நாள் பரிசாக கணவன் வாங்கி தந்த புடவை என ஒவ்வொன்றாய்க் கடித்துக் குதற, அணில்கள் மீதான பாசமும் பரிவும் போய் கோபம் தலை தூக்கிற்று. மீந்த உணவுப் பொருட்கள் வைப்பதை நிறுத்தி அவற்றைக் குப்பையில் கொட்டினாள். இதை எதிர்பார்த்திராத பறவைகளும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றன. போகும்போது தலையை மேலும் கீழுமாக ஆட்டி இனி வருந்தி அழைத்தாலும் வரமாட்டோம் என்பதாய் சபித்துச் சென்றன. கோபத்தின் வெளிப்பாட்டை ஆற்றாமையாய் வெளிப்படுத்துவது அனைத்து உயிர்களுக்கும் இயல்புதானே?
எப்பவாவது வீட்டிற்குள் நுழைந்து வசமாக மாட்டிக் கொண்டால் அடிக்கவும் செய்தாள், அவள் கையால் அடிவாங்கி செத்த அணில்களும் உண்டு. மயிரிழையில் தப்பித்து மரத்தின் மீதேறி அவளை திட்டித்தீர்ப்பதுபோல ஒலியெழுப்பிய அணில்களும் உண்டு.
பதற்றத்துடன் வெளிப்படும் அதன் குரல் கேட்டு பிற அணில்கள் அதற்கு ஆதரவாக குரல் எழுப்ப அதை பொறுக்கமாட்டாமல் கையில் இருக்கும் கழியை விட்டெறிவாள் பாரதி.
இரவு பத்துமணிக்கு கணவன் பாஸ்கர் வரவே, அவனுக்கு ஒத்தாசையாய், முகம் கழுவி வந்தவனுக்கு துண்டு தந்து, தோசை வார்த்துக் கொடுத்து அன்றைய நிகழ்வுகளைப் பேசி முடித்த போது மணி பதினொன்றேகால் ஆகியிருந்தது, இப்பொழுது தூங்கினால் தான் காலையில் எழுந்து வேலை பார்க்க முடியும் என்ற முடிவுடன் பாத்ரூம் சென்றாள். அப்பொழுதும் அதே சப்தம் அணில் குட்டியின் குரல் கேட்கவே திடுக்கிட்டாள்.
இன்னுமா அந்த அணில் வரவில்லை? அந்த பனஞ்சாத்தின் மீது வாலை ஆட்டிக் கொண்டு மேலும் கீழுமாகச் சென்று, குட்டியை யாரும் அண்டவிடாமல் பாதுகாக்கும் அந்த அணில் எங்கே போயிற்று? இரை தேடிச் சென்றிருந்தால் கூட இத்தனை நேரம் வந்திருக்குமே? ஒருவேளை யாராவது அடித்திருப்பார்களோ? அல்லது கழுகு, வல்லூறு போன்றவை தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? அல்லது மத்தியானம் வந்துவிட்டுப் போனானே அணில் குத்துபவன் அவன் ஈட்டிக்கு இரையாகி செத்துப் போயிருக்குமோ?
செத்து ஒழியட்டும் சனியன். வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் எப்படி நாசம் செய்கிறது என்று நினைத்தவள் குட்டியின் குரலில் இழையோடிய தவிப்பைக் கேட்டு பச்சாதாபப்பட்டாள். எத்தனை குட்டிகள் இருக்குமோ? என்ன செய்கின்றனவோ? என்று நினைத்தவள் அவற்றை அப்படியே விட்டுப் போக மனமின்றி அங்கேயே நின்றாள். அடுத்த நிமிடமே அணிலைத் தேடும் நினைப்பு எழ பாத்ரூமிற்கு வெளியே இருந்த லைட்டைப் போட்டு எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தாள். எங்கும் காணாததால் விசுக்கென்று ஒடிவந்து கூட்டுக்குள் ஏறக்கூடாதா? என்ற எதிர்பார்ப்பு மேவியது. எல்லா நினைப்பும் எல்லா நேரங்களிலும் கைகூடி வருவதில்லையே… கால் மணி நேர தேடுதலுக்குப் பின்னும் அணில் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என யோசித்தாள்.
குட்டிகளை எடுத்து கொஞ்சம் பால் ஊற்றலாமா? பாலைக் குடிக்கின்ற நிலையில் இருக்குமா? கண் திறந்திருக்குமா? பாலைக் குடிக்குமா என்று பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தபோதிலும் ஏதாவது செய்து அதன் பசியைப் போக்காமல் தூங்க முடியாது என்று நினைத்தவள் உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் பாலும் இங்க் பில்லருமாக வெளியே வந்தாள். பாலை செப்டிக் டாங்கின் மீது வைத்துவிட்டு குட்டிகளை எடுப்பதற்காக செப்டிக் டாங்கின் மீது ஏற, வீட்டுக்குள்ளிருந்து மகன் அழுது கொண்டே வெளியே வந்தான். மகனைப் பார்த்ததும் அணில் குட்டியை மறந்துவிட்டு கீழே இறங்கிச்சென்று அவனைத் தூக்கி அழுகையை நிறுத்தினாள்.
“”ஏன்டி செல்லம் தூங்கலே?”
“”நீ ஏன் என்னை விட்டுட்டு வந்தே?”
“”அம்மா தோட்டத்துக்கு வந்தேன். இப்போ வந்துடுவேன். உன் கூட தம்பி இருக்கான். அப்பா இருக்காங்க. நீ தூங்க வேண்டியதுதானே?”
“”நீ இல்லையே”
“”தோ வந்துடறேன். நீ போய் படுத்துக்கோ’
“”நீயும் வா”
“”ஒரு அம்மா அணிலு குட்டி அணில்களை விட்டுட்டு எங்கேயோ போய்ருச்சு. அம்மா அணிலை காணாம குட்டி அணில் பசியிலே கத்துது. அதுக்கு பாலு போட்டுட்டு வர்றேன்”
“”அம்மா அணில் எங்கே போச்சும்மா?”
“”தெரியலையே. தேடினேன் காணலே”
“”சரி பாப்பா அணிலைக் காட்டு நான் பார்த்துட்டுப் போய் தூங்கறேன். நீ அம்மா அணிலை கண்டுபிடிச்சு கொடுத்துட்டு வா”
சளைக்காமல் கேள்வி கேட்கும் மகனுக்கு சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே அணில் குட்டியை எடுக்க முற்பட்டவள், செப்டி டேங்க் அருகேயிருந்த சிமெண்ட் தொட்டியிலிருந்து சலசலப்பு வர திரும்பிப் பார்த்தாள். வீடு கட்டும் போது கட்டுமான பணிக்கு நீர் தேக்குவதற்காக அமைக்கப்பட்ட அந்த தொட்டி தற்பொழுது உபயோகத்தில் இல்லாததால் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் அவ்வப்போது பெய்யும் மழைநீர் நிரம்புவதுண்டு, அழுக்கான அந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி விடக்கூடாது என்பதற்காக மாதத்திற்கொரு முறை மண்ணெண்ணெய் ஊற்றுவாள். பாதியளவு அழுக்கு நீருடன் இருந்த அந்த தொட்டிக்குள் ஏதோ ஒன்று நீந்திக் கொண்டிருந்தது. செப்டிக் டாங்கின் மீது ஏற வந்த பாம்பு தொட்டிக்குள் வீழ்ந்திருக்குமோ என்று நினைத்தவள் விருட்டென இறங்கி பிள்ளையைத் தூக்கிக் கொண்டதுடன் விரைந்து சென்று டார்ச் லைட்டும் எடுத்து வந்தாள். டார்ச் லைட் வெளிச்சத்தில் அணில் தெரிய நிம்மதியுற்றாள்.
“”அம்மா அணில் இதோ இருக்கும்மா” மகன் கூற அவனை கீழே இறக்கிவிட்டு அணிலை வெளியே எடுக்கும் முயற்சியை மேற்கொண்டாள். அது மேலே ஏறி வருவதற்கு வசதியாக பக்கத்தில் கிடந்த மரச்சட்டத்தை எடுத்து நீட்ட மகன் அவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“”பாவம்மா. அதை அடிக்காத. குட்டி அணில் அழுதுன்னு சொன்னேல்ல”
“”அடிக்கலேடா அது மேலே ஏறி வர வழிகாட்டறேன்”
சட்டத்தை வைத்ததைப் பார்த்த அணில் முதலில் சற்றே பயந்தாலும் பின்னர் பயம் தெளிந்து மெல்ல மெல்ல மேலேறியது.
தண்ணீர் குடித்ததால் வயிறு உப்பியிருந்த அணில் மெதுவாக நகர, அதைக் கைகளில் எடுத்து லேசாக அழுத்தினாள். ஒரு சில அழுத்தல்களில் தண்ணீர் வெளியேற அணில் கைப்பிடியிலிருந்து வெளியே வர முயற்சித்தது. கொடியில் கிடந்த பழைய துணியை எடுத்து துடைத்து விட்டவள் கொல்லை அடுப்பில் கிடந்த சாம்பலை அதன் மீது தேய்த்தாள். செப்டிக் டாங்கில் உட்கார்ந்து குட்டிகளுக்காக எடுத்து வந்த பாலை அதற்குப் புகட்டினாள். மகன் தன் பங்குக்கு உள்ளே சென்று பிஸ்கட்டுடன் வர, பிஸ்கட் வாசனையை முகர்ந்த அணில் அவள் கைகளிலிருந்து விசுக்கென்று விலகி உடலை உதறிக் கொண்டு பிஸ்கட்டை தன் பற்களால் சுரண்டித் தின்றது. இரண்டு பிஸ்கட்டுகளைத் தின்ற அணில் பின்னர் குட்டிகள் இருக்கும் பனஞ்சாத்தின் மீது ஏறத் தொடங்கியது. பாரதி அதை மீண்டும் கைகளில் பிடித்து கூடு இருக்கும் பானை வாயருகே கொண்டுச் செல்ல அணில் லாகவமாக உள்ளே சென்றது. சிறிது நேரத்திற்குப் பின் குட்டிகளிடமிருந்து சப்தம் வருவது நின்றுபோக பாரதி நிம்மதியுற்றாள். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“”கழியை எடுத்ததும் அணிலை அடிக்கப் போறியோன்னு பயந்துட்டேம்மா. ஏம்மா வீட்டை சுத்தி நிறைய அணில்கள் இருக்கே. அணில் வாழ்ந்த இடத்திலே அப்பா வீட்டை கட்டிட்டாறோ. அது இடத்திலே இருந்துகிட்டு அதுகளை அடிக்கறது தப்பு இல்லியாம்மா”
மகனின் வாயிலிருந்து அதுவும் ஐந்து வயது நிரம்பிய சிறுவனிடமிருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்பதை எதிர்பாராத பாரதி திகைத்தாள். கதவைத் தாழிட முனைந்தவள் அதை மறந்து அவனையே இமை கொட்டாது பார்த்தாள்.
இத்தனை சின்ன வயதில் இப்படியொரு சிந்தனையா இவனுக்குள் தோன்றியது. ஏன் எனக்குத் தோன்றாமல் போனது, என் வீடு, என் தோட்டம் என்று நினைக்கத் தோன்றியதே தவிர அணில்கள் வாழ்விடம், பறவைகள் வந்து போகுமிடம் என்று ஏன் என்னால் யோசிக்க முடியவில்லை.
அனைவருக்கும் பொதுவான உலகில் அனைத்து உயிரினங்களும் சேர்ந்தும் ஒருவருக்கொருவர் இடையூறு தராமல் ஒன்றுகூடி வாழ்வதுதானே உயர்ந்த வாழ்க்கையாக இருக்க முடியும்? இது எப்படி எனக்கு புரியாமல் போனது? எனக்கு மட்டுமா என் போன்ற பலருக்கும் புரியாமல் போனது? ஏன் ஆறாம் அறிவு என்கிற கூடுதல் தகுதியும், அனைத்தையும் அடக்கியாளும் திறமையும் கண்ணையும் கருத்தையும் மறைத்துவிட்டதா? பிற உயிரினங்கள் தன் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கும்போது மனிதர்கள் மட்டும் பிற உயிரினங்களின் வாழ்வில் குறிக்கிடுவதும், அடக்கியாள நினைப்பதும் சரியா?
சக உயிரினம் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மையைக் கொண்டு, தன்வாழ்வின் மூலம் மற்றவர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதுடன் பிரபஞ்ச இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறது என்பது ஏன் புரியாமல் போனது? உயிர்களிடத்தில் அன்பு கொள்வதை வாழ்க்கை கல்வியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தானே அதை சிறுவயதில் ஏட்டுக் கல்வியாக போதித்தார்கள். அதைப் படித்துமா நான் இப்படி?
தூங்க நினைத்தும் தூங்கவிடாமல் பலவிதமான சிந்தனை அவளை ஆட்கொண்டு அலைகழித்தன. தன்னை இப்படி தவிக்க வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த மகனை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தவள் நெடுநேரத்திற்கு பின் தூங்கியும் போனாள்.
மறுநாள் காலை நேற்றைய சிந்கனைகளை விலக்க முடியாத மன அழுத்தத்தில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தவளை பாஸ்கர் அழைத்தான்.
“”சீக்கிரம் வா. பூஜை ரூம்லே ஒரு அணில் பூந்துகிட்டுருக்கு. ஜன்னல்களை சாத்திட்டேன். கதவை திறந்துட்டுப்போய் மெதுவா அடிச்சுப் போடு”
பதில் சொல்வதற்குள் தரதரவென்று அவளை அழைத்துச் சென்று ஒரு கழியையும் திணித்த கணவனைப் பார்த்தவள் கழியை கீழே போட்டுவிட்டு பூஜை ரூம் கதவையும், ஜன்னலையும் திறந்துவிட்டாள்.
“”அதுவும் நம்மோட இருந்துட்டுப் போகட்டும் விடுங்க”
திறந்த ஜன்னல் வழியாக பாய்ந்து சென்ற அணில் தன் எதிர்ப்பைக்காட்டும் விதமாக குரல் கொடுக்கத் துவங்கியது. அதன் குரலில் இருந்த பதற்றத்தைக் இனம் கண்டு கொண்ட மற்ற அணில்கள், அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்க மனைவியிடம் இப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்திராத பாஸ்கர் அதற்கான காரணம் புரியாமல் அவள் கீழே போட்ட கழியை எடுத்து அவளை திட்டிக்கொண்டே அணில்கள் கத்திக் கொண்டிருந்த மரத்தை நோக்கி வீசினான். அவளுக்குப் புரிந்தது, அவனுக்குப் புரிய இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமோ?
– ஜூன் 2014